Thursday, July 09, 2009

வாழ்த்துகள்!--கவிதை







வாழ்த்து சொல்லத் தோன்றினால்
உடனே சொல்லிவிடு
இல்லையேல்
விட்டுவிடு
ஒரு பாதகமுமில்லை
கயமையும் இல்லை
கோபமில்லை
வஞ்சனையில்லை
பொறாமையில்லை
சூழ்ச்சியில்லை
அதனால்
நேசங்கள்
பட்டுப்போகப்போவதில்லை
தாமதமாய்ச்
சொல்லப்பட்டவாழ்த்துகள்
வாழ்த்துகளாவதில்லை
சில பொழுதுகளில்



அவை
வன்முறை வண்ணம்
பூசப்பட்டு
வாழ்த்தப்படுபவரின்
காலடி நிலத்தை
நழுவச்செய்யும்
வல்லமை பெற்றவையாக
ஆகிவிடுகிறன



இடிமின்னலில்
சுழிக்காற்றில்
அமிலமழையில்
எரிகல் வெடித்தலில்
பூமிநடுக்கத்தில்
நதிப்பெருக்கில்
புதைச்சேற்றில்
ஏதோ ஒன்றில்
மாட்டிக்கொண்டு
வாழ்த்தப்படுபவர்
தவிக்கும் நேரத்தில்
போய்ச்சேருகின்றன
தாமத வாழ்த்துகள்
குதூகலத்துடன்


நாம்- ஜூன் 2009

Friday, July 03, 2009

இதுவரை,...

என்னிலிருந்து
எழுந்தது
என்னுடையதில்லையாம்


உன்னுடையதில்லை
ஆனால்
உன்னுடையதாகிக் கொண்டிருக்கிறது


சட்டபுத்தகங்கள்
கர்ஜிக்கின்றன.


கலவரத்தில் நான் தொலைத்தது
உன்னால் கண்டெடுக்கப்பட்டு
நான்கு வருடங்களாக உன்னிடமே
இருந்து வருகிறது


அடுத்த அமரல் வரை
வாரம் ஒரு முறை
உன்னுடையதாக
பிரகடனப்படுத்தப்பட்ட
என்னுடையதை
தரிசனம் செய்யக்காட்டுவாய்
களவாடப்படும்
அச்சப்பின்னல்கள் ஊடே


அமரல்களாலும்
முகதரிசனங்களாலும்
பரிசுகளாலும்
பெற்றுத்தரவியலாத
ஒரு
சொல்
இன்னும்
ஆழத்தைத் தேடி
பூமிக்கடியில்
போய்க்கொண்டிருக்கிறது

Thursday, June 11, 2009

சன்னல் இடுக்கு வெளிச்சத்தை நம்பி

சன்னல் இடுக்கு வெளிச்சத்தை நம்பி
வளரும் மணிப்ளாண்ட்டுக்குப்
பக்கத்தில்
சாப்பிட்ட மாம்பழத்தின் கொட்டையைப்
பிடிவாதமாக
ஒரு மண்தொட்டியில்
நட்டுவிட்டது குழந்தை.


என்ன செய்வது
என்று தெரியவில்லை
ஒன்றரை அடி உயரத்திற்கு
வளர்ந்துவிட்ட மாங்கன்றை

Friday, May 29, 2009

30-05-2009

சிவப்பு விளக்கில் ஓடும்
மனிதனைக் கேட்டேன்
பச்சை வந்தபின்
போனால் என்ன


ஓடிக்கொண்டே சொன்னான்
எனக்கு முன்
ஓடியவனைக் கேட்கத்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
உன்னைப்போல


அநங்கம் மலேசியா
மே 2009

Thursday, May 28, 2009

தொலைக்காட்சி எதிரில்






விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்
அருகில் இருப்பவர்
தோளைத் தட்டுகிறார்கள்


கேவிக்கேவி அழுகிறார்கள்
பக்கத்தில் இருப்பவரைப் பார்த்து
கௌளி சொல்கிறார்கள்


வாயைக்குவித்து வியக்கிறார்கள்
இப்படிப் பார்த்ததே இல்லையெனப்
பகிர்ந்துகொள்கிறார்கள்


பூரித்துப் போகிறார்கள்
கைகளைக் கொட்டுகிறார்கள்
இப்படித்தான் இருக்கவேண்டும்
அல்லது இருக்கப்போகிறேன்
என்கிறார்கள்


பதறி நடுக்குறுகிறார்கள்
ஒருவரை ஒருவர் ஆதரவாய்ப்பிடித்துக்கொள்கிறார்கள்


சீச்சீ என்கிறார்கள்
லஜ்ஜையுடன் பக்கத்தில் இருப்பவரைப் பார்க்கிறார்கள்
அல்லது கையை விரிக்கிறார்கள்


பல்லைக் கடிக்கிறார்கள்
நானாய் இருந்தால்
இப்படிச் செய்திருக்கமாட்டேன்
என்கிறார்கள்

விசையை அணைத்தபின்
தானியங்கிபோல்
நடக்கிறார்கள்
தொங்கிய முகத்துடன்
மௌனித்தவாறே
வெவ்வேறு பாதைகளில்



அநங்கம், மலேசியா
மே2009 இதழ்