Thursday, July 31, 2008

ஓர் உன்னத தினம்

வீட்டை மோப் போட்டு முடித்து மோப் ஸ்டிக்கையும் பக்கெட்டையும் கவிழ்த்தி வைத்துவிட்டு மீண்டும் முன்னறைக்கு வந்தபோது சன்னலருகில் ஒரு கரப்பான் பூச்சியைப் பார்த்தேன். சட் இது எங்கிருந்து வந்தது. இப்பவும் நாங்கள் இருக்கும் ப்ளோக்கில் குப்பைத் தோம்புகூட பழைய ப்ளோக்குகளைப் போல வீட்டினுள் இல்லையே, ஒவ்வொரு தளத்திலும் ஓரமாக இடம் ஒதுக்கி வைத்துவிட்டார்களே; ஒருவேளை டவுன் கவுன்சில் ஆட்கள் நீர்த்தாரை இருக்கும் இடங்களை ப்யுமிகேட் செய்வார்களே அதுபோல் செய்துவிட்டார்களோ; வீட்டில் பேகான் கூட இல்லையே. மறு நிமிடம் சே, நாம் ஏன் இந்த விசயத்திற்கு இப்படி அலட்டிக்கொள்கிறோமோ என்று தோன்றியது. பேகான் இருந்தாலும் நான் அதைப் பயன்படுத்துவதில்லை, ஒரு பழந்துணியில் அதை பிடித்து சன்னல் வழியே விட்டுவண்ட்டு, கண்ணு எங்காவது ஓடிப்போய் பொழச்சிக்கோ, நீ எங்களைப் போல இல்ல எங்களை விட பெரிசா இருந்தா மிதிப்போமா, மதிப்போமில்ல, . சேகரைப் போல எனக்கு பயமோ அருவருப்போ அதைப் பார்த்தால் ஏற்படுவதில்லை. என்ன இதே அவர் வீட்டில் இருந்தால் வீட்டை இரண்டு பண்ணிவிடுவார். அவர் அதை எந்த அளவிற்கு வெறுக்கிறாரோ அந்த அளவுக்கு எனக்கு அதை மிகவும் பிடித்தது. அதுவும் இந்த புதிய ப்ளோக் வந்த இரண்டு வருடங்களில் ஒரு கரப்பானைக்கூட நான் பார்த்ததில்லை. அதனால் எனக்கு அதைக் காண ஒரு விதத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தது. அதுக்கு எதாவது சர்க்கரை கிக்கரை தந்திட்டு, மெல்லத் துணியால தூக்கி வெளியில விட்டுவிடலாம்.
சமையலறைக்குள்ளே போனேன். துணியை ஒரு கையிலும் சர்க்கரையை இரண்டு விரல் இடுக்குகளிலும் எடுத்து முன்னறைக்கு வந்தவள் அப்படியே நின்றுவிட்டேன். முன்னறை சோபாவில் ஒரு கரப்பான் பூச்சி வக்கணையாக ஐந்தடி நீளத்தில் உட்கார்ந்திருந்தது.

சட்டென்று கண்களை நன்றாக விரித்து உற்றுப்பார்த்தேன். சற்றுமுன் இங்கிருந்த குட்டிக்கரப்பானா, இல்ல இது வேறயா, வாசல் கிராதிகளை வேறு பூட்டியிருக்கிறேனே, இது எப்படி உள்ளே வந்தது.
ஹலோ
அட யார் சொல்வது, கரப்பானா, ஏன் இப்படி பெரிசாக இருக்கிறது. நேற்று மகள் சொல்லிக்கொடுத்த கணினி விளையாட்டை விடாமல் விளையாடினேனே, கண்ணு கிண்ணு கோளாறு ஆகி, இரண்டிரண்டாக தெரிவதுபோல் ஒருவேளை உருவம் பெரிதாக தெரிகிறதா? இல்லையே காலையிலிருந்து வீட்டுவேலைகளை எல்லாம் ஒழுங்காத்தானே செய்துவந்தேன். இதென்ன கலாட்டா?
வணக்கம், நீங்க திருவாட்டி சந்திரிக்கா தானேகரப்பான்பூச்சி விஸ்வரூபம் எடுத்தது மட்டுமன்றி தமிழிலும் பேசுகிறதே. இதை இப்போதே என் தோழி ரங்கமணியிடம் சொல்லாம் போல் தோன்றுகிறதே, இல்லை ஒருவேளை வாசலில் யாராவது நிற்கிறார்களா,கரப்பானை நன்றாகப்பார்த்தேன். ஒருவேளை ஏதேனும் தமாஷ்நிகழ்ச்சிக்காக இப்படி மெஷின் செய்து அனுப்பியிருக்கிறார்களா? ஐயோ வாசல் கதவுதான் பூட்டியே இருக்கிறதேஉங்களிடம் தான் பேசுகிறேன், வணக்கம் திருவாட்டி சந்திரிக்கா
சே, வணக்கத்திற்கு பதில் வணக்கம் சொல்ல வேண்டாம், நம் பண்பாடு என்ன கலாச்சாரம் என்ன
வணக்கம் கரப்பான், சாரி, திரு....திருமதி....மிஸ் கரப்பான்பூச்சி தட்டுத்தடுமாறி உளறினேன்
திருவாட்டி சந்திரிக்கா, இப்படி திடீரென்று வந்ததற்கு முதலில் மன்னிப்பு கோறுகிறேன்
நீ, .... நீங்கள் உள்ளே நுழைந்ததெப்படி,
தயவுசெய்து நீங்கள் முதலில் அமருங்கள்.
எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன், என் கால்கள் வெடவெட என்று நடுங்கியதை என்னாலே பார்க்கமுடிந்தது. மெருகேற்றிய சாக்லெட் ஹாட்டாக் நிறத்தில் இருந்த கரப்பான் பூச்சியை உற்றுப்பார்த்தேன்


பரவாயில்லை, தைரியமாகவே இருக்கிறீர்கள்நாற்காலியில் தொங்கிக்கொண்டிருந்த என் துவைத்த சாரோங்கை எடுத்து முகத்தை தேவையில்லாமல் துடைத்துக்கொண்டேன்.


கரப்பான்பூச்சி பேச ஆரம்பித்தது.ஒரு சிறு நேர்காணலுக்காக உங்களைத் தேடி வந்துள்ளேன். உங்கள் ஒத்துழைப்பு எங்கள் ஆவணங்களைத் தயார் செய்வதற்கு உதவியாக இருக்கும்.
நீங்கள் இடமாறி வந்துவிட்டீர்கள். பேட்டி கொடுக்கும்படிக்கு நான் பிரபலமான நபர் இல்லை. ஒரு நடுத்தரக்குடும்பத்து பெண்மணி அவ்வளவுதான்கரப்பான் தன் உடலை லேசாக அசைத்தது. பூமியில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மனிதரைத் தேர்ந்தெடுத்து, பின் அவரை நேர்காணல் செய்யவேண்டும். எங்கள் குழுவினருக்கு இடப்பட்ட பணி இது. எனக்கு ,சிங்கப்பூரில், உங்களைக் கண்டு பேச உத்தரவு
அப்படியானால் நீ.....நீங்கள் பூமியைச்சேர்ந்தவரில்லையா?
இல்லை. எனக்கு சுற்றிவளைத்துப் பேசிப் பழக்கமுமில்லை, அது என் அமைப்பிலும் இல்லை. நான் வலாரியாவிலிருந்து வருகிறேன். எங்கள் கப்பல், பூமியின் நிலவான சந்திரனை எடுத்துச்செல்லப்போகிறது. அதற்குமுன் பூமிபுத்திரர்களிடம் சில கேள்விகள் கேட்க நினைத்தோம்

எல்லா நாட்டிற்கும் கரப்பான்பூச்சியை அனுப்பியிருக்கிறார்களா,உங்கள் ஊரில்
இங்கு இந்த உருவம், அமெரிக்காவிற்கு பருந்து உருவில் என் நண்பர் சென்றிருக்கிறார். மற்றொருவர் மனித உருவில் சென்றிருக்கிறார், வேலையைக்கொடுத்துவிட்டார்கள். சிங்கப்பூரில் உள்ள நான்கு மில்லியன் மக்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். வெவ்வேறு கல்விநிலை, பொருளாதார நிலை வாழ்க்கை முறை கொண்ட மனிதர்களை இதற்குத் தேர்ந்தெடுத்துள்ளோம். உங்களைப்பற்றிய விவரங்கள் தெரிந்துகொண்டபின் நான் எடுத்த உருவம் இது. நீங்கள் சந்திரனை இழக்கப்போகிறீர்கள். இதைக்கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?சந்திரனைக் களவாடப் போகிறார்களா, ஏதேனும் வலுத்த நாட்டின் அதிபரிடம் சொன்னாலும் பலன் இருக்கும். இதைக்கேட்டவுடன் என்ன தோன்றுகிறதா? சந்திரனைப்பற்றி எழுதி எழுதி களைத்த கவிஞர்களிடமும், பேசிப்பேசி களைத்த காதலர்களிடம் கேட்டாலாவது உருப்படியாகட் சொல்வார்கள். நான் என்னத்தைச் சொல்ல, சந்திரன் இல்லாவிட்டால் என்ன, மின்சார வசதி இருக்கிறது, அது ஒரு பெரிய இழப்பாக இருக்காது. வேண்டுமானால் கவிஞர்களும் காதலர்களும் கஷ்டப்படலாம்
கடகடவென்ற சிரிப்பொலியுடன் தொடர்ந்து அதன் உடல் அசைவதையுமே நான் கேட்கவும் பார்க்கவும் முடிந்தது. பேசும்போதெல்லாம் அதன் உணர்கொம்புகள் ஆடிக்கொண்டே இருந்தன
எதாவது சாப்பிட குடிக்க கொடுக்கலாமா, என்ன கொடுப்பது, என்ன சாப்பிடுகிறீர்கள், வேறு கிரகம் என்பதால் ஒருவேளை மின்சாரம் அல்லது சூரிய வெளிச்சம் இப்படி எதாவது சாப்பிடுமோஎதுவேண்டுமானாலும் கொடுங்கள்ரைபீனா பழத்தின் சிரப் இருக்கிறது, அதைக் கலந்து கொடுக்கலாம், ஒரு நிமிடம் என்றவாறு எழுந்து போனேன். சமையலறை மேடையின் மேல் இருந்த சிறுப்ளாஸ்டிக் வாங்கில் பிஸ்கட் டப்பாக்களில் ஒன்றைத்திறந்து இரண்டுஎடுத்து ஒரு தாம்பாளத்தில் வைத்துக்கொண்டு வந்தேன். முன்னறைத் தொலைபேசி ஒலித்தது. தோழி ரங்கமணிதான் இந்த நேரத்தில் அழைப்பாள் . வாரம் ஓரிரு முறையாவது நான் பேசிக்கொள்வோம்.
ஹலோ, ..... ஓ என் கணவர் சேகர், இரவுச்சாப்பாடு கூட்டாளியுடனா, நோ ப்ராப்ளம், ....... கையில் பிஸ்கட்டும் ரைபீனாவும் வைத்திருக்கிகிறேன்,... முதலாளி கூப்பிட்டிருக்காராம், செல்லை அணைச்சி வச்சிறப்போறாராம். ...... என்.யூ. எஸ்ஸிலிருந்து காஞ்சு நேரா இன்னிக்கு வந்திருவா,... இல்லை நாளைலேந்துதான் ..... சரி வச்சிடறேன்
அதேநேரத்தில் என் செல் அடித்தது, .... ரங்கமணியாகத்தான் இருக்கும், கரப்பானிடம் சைகை காட்டிவிட்டு படுக்கையறையிலிருந்து மணி அடித்துக்கொண்டிருந்ததை அமைதிபடுத்தி அங்கேயே பேசத்துவங்கினேன், ரங்காதான், .ரங்கா, ஒரு அதிசயம்.. இங்க ஒரு அஞ்சடியில ஒரு கரப்பான்பூச்சி விருந்தாளியா வந்திருக்கு, அதுக்கு ஜூஸ¤ம் பிஸ்கட்டும் கொண்டுபோயிட்டிருக்கேன்னு சொல்லுவோமா,.... குரலை சன்னமாக்கிக்கொண்டேன், ரங்கா இங்க ஒரு கரப்பான்பூச்சி ஹால் சோபாவுல,.என்று ஆரம்பித்தேன், அடுத்த வினாடி.... என் கண்ணெதிரில் கொட்டை எழுத்தில் அச்சடிக்கப்பட்ட தாள் நீட்டப்பட்டது.
'தயவுசெய்து நேர்காணல் முடிந்தபின் சொல்லவும், ரகசியம் காக்கவும்' என்று எழுதப்பட்டிருந்தது. .... திடுக்கிட்டுப்போனேன்.

கரப்பான்தான், இது என்ன மாயவித்தை தெரிந்ததா, சாக்கிரதையாக இருக்கவேண்டும், ஒரு வேளை போலிசுக்கு நான் தகவல் தெரிவிக்க வேண்டுமோ, சிறையிலிருந்து தப்பி வேறு நாட்டுக்கு ஓடிவிட்டதாகக் கூறப்படும் மாஸ் சலாமத்தைக் கண்டுபிடித்தால் ஒரு மில்லியன் யாரோ பெயர் சொல்லாத நபர் தருவாராம், இதுபோல் நிலாத்திருடன் வருவதை சொன்னால் பைத்தியம் என்பார்களோ, செல்லில் போட்டோ பிடித்து வைக்கலாமென்றால், என் செல்லில் அந்த வசதி இல்லை, காமிராவை இந்த காஞ்சு எங்கே வைத்துத் தொலைத்தாள். சென்ற மாதம் கண்பாதுகாப்பு வாரியத்திலிருந்து வீடுவீடாக அடையாள அட்டையுடன் வந்து கண் பாதுகாப்பு பற்றி குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி ஒரு சர்வே எடுக்கிறோம் என்றார்கள், எங்கள் தளத்தில் உள்ள பத்து வீடுகளில் வீட்டிலிருப்பது நானும், திருமதி வோங், மற்றும் திருமதி லீலா வீட்டு பணிப்பெண்கள்தான். வேறு எல்லா வீடுகளும் பகலில் பூட்டியே இருக்கும். மற்ற தளங்களில் இந்த அளவு கூட நடமாட்டம் இருக்குமா தெரியவில்லை. அரைமணிநேரம் பேசிய பின் ஐந்து வெள்ளிக்கு நியாயவிலைக்கடை பற்றுச்சீட்டும், ஒரு டார்ச் பேனாவும் கொடுத்தார்கள். என் அரைமணிநேரத்தை எடுத்துக்கொண்டதற்கு ஈடாம். இது எதாவது கொடுக்குமா, பாவம் வேறு கிரகத்திலிருந்துவேறு வந்திருக்கிறது, நான்தான் அதற்கு எதாவது தரவேண்டும். சாப்பாட்டுக்கடையில் வாங்கித்தரலாமா, வீட்டில் இனிப்பைத் தின்றுவிடுகிறேன் என்று இனிப்பு எதையும் வைத்துக்கொள்ளவில்லைதிருவாட்டி சந்திரிகா, எனக்கு ஏதேனும் தர நீங்கள் விரும்புவதை நினைத்து மிக்க நன்றி. நம் பேச்சைத் தொடர்வோம்

இது என்ன யட்சிணியா, டெலிபதி வித்தையா, மனதில் எண்ணுவதை அப்படியே சொல்கிறதேஉங்கள் எண்ணங்கள் படிக்க ஏதுவான மைண்ட் ரீடர் என்னிடம் இருக்கிறது, இதுவே என் முதல் ஆங்கிலச் சொல்லின் ஊடுநுழைவு என்று நினைக்கிறேன்
என் பேச்சில் ஆங்கில வார்த்தைகள் இருக்கும். தேசிய நூலகத்தையே தமிழ்வாசிப்புக்கு பெரும்பாலும் நம்பியிருக்கும் என் போன்றவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை நூலகம் நடத்தும் பழைய புத்தக விற்பனையே கதி,
பாதகமில்லை, சரி நம் பேச்சைத் தொடர்வோம்,....சரி நீங்கள் ஒற்றுமையாக இருக்கிறீர்களா? இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ஒற்றுமையா, யாருடன் , கணவருடனா, இல்லை எங்கள் இருவரின் சொந்தபந்தங்களுடனா, அண்டைவீட்டினருடனா? சே இதெல்லாம் கேட்க வந்திருக்காது, இந்த கரப்பான்பூச்சி. சிங்கப்பூரின் முக்கிய சொலவடையே இனமத ஒற்றுமைதானே, அதைப்பற்றித்தான் கேட்கிறதோ என்னவோ,
ரொம்ப ஒற்றுமையாகவே இருக்கிறோம், யாரும் எந்த மதத்தைப்பற்றியோ இனத்தைப்பற்றியோ தவறாக பேசவோ எழுதவோ கூடாது
மன்னிக்கவும் நான் நீங்கள் என்றது பூமிவாசிகள் அனைவரையும்தான்.பூமிவாசிகள். சரிதான். ஒரு நாட்டில் வெள்ளம் வந்தால் உடனே பல நாடுகள் உதவிப்பொருள்கள், உதவிக்குழுக்கள் அனுப்பும். இதுபோலத்தான், பூகம்பம் வந்தால், உடனே உதவ எல்லோரும் வருவார்கள்.

அப்படியா, மிக்க மகிழ்ச்சி. ஆமாம் பசி பட்டினி பஞ்சம் உள்ள நாடுகளின் படங்கள் இவை, பாருங்கள் எலும்பும் தோலுமாய் உள்ள மனிதர், உலர்ந்து வெடித்த நிலத்தில் சுருண்டிருக்கிறார். பத்தடி தொலைவில் கழுகு காத்திருக்கிறது. ஒரு பக்கம் அதிக விளைச்சல் என்று பழங்களையும் தானியங்களையும் கொட்டிக்கொண்டிருக்கிறீர்கள், ஆயிரம் கோடிகள், மில்லியன்கள் ஆயுதங்களுக்கும் அணுகுண்டுகளுக்கும் செலவழிக்கிறீர்கள். பாருங்கள், அணுகுண்டு விஷவாயு இவை இரண்டும் இன்னும் பல வினோத ரசாயனங்களால் பாதிப்புக்குள்ளானவர்களின் படங்கள், பஞ்சம் தலைவிரித்தாடும் நாடுகளில் உள்ள குழந்தைகளின் படங்கள்,...

இது என்ன கொடுமை, .... வேண்டாம் தயவு செய்து காட்டாதீர்கள், ..... இது என்ன பயங்கரம் நினைத்தால் சோறுதண்ணி இறங்காது. பொல்லாத பணக்கார நாடுகள் பலவிதக்களில் சுரண்டுகிறார்கள். தனிமனிதர்கள் அல்ல.


தனிமனிதர்களைப்பற்றிச்சொல்கிறேன். முன்பு எப்போதும் இல்லாத அளவு மனித உரிமை மீறல், வன்முறை, பாலியல் வன்முறை இதற்கு ஒவ்வொரு நாட்டிலிருந்தும் புள்ளிவிவரங்கள் எடுத்து கடந்த சில ஆண்டுகளாக கண்காணித்து வருகிறோம். இதில் இனவேறுபாடின்றி ஒற்றுமையாக இருக்கிறீர்கள். சிரிக்கமுடியாத நகைச்சுவை
இவ்வளவு சொல்கிறீர்களே, உங்களால் எளியோருக்கு நல்வாழ்வு அளிக்க முடியுமா, முடியும் என்றால் நிலவென்ன, ஏதேனும் நிலத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்
நிலங்கள், நீர்நிலைகள் எல்லாம் தூய்மையாக வைத்துக்கொண்டிருக்கிறீர்களா
ஆமாம், நாங்கள் ரொம்ப சுத்தம் குப்பை போடுவதற்கென்றே ஒரு தீவை ஒதுக்கிவிட்டோம்
வெகு அழகு. நீங்கள் என்பது சிங்கப்பூரர்கள் மட்டுமல்ல, பூமிவாசிகள் எல்லோரையும் சேர்த்து என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டவேண்டியிருப்பதற்கு மன்னிக்கவும். நாங்கள் கேள்விப்படும் செய்திகள் வேறு மாதிரி இருக்கின்றனவே. நீங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஒரு ஆதிக்கவாதியின் வீட்டின் மின்னணுக்குப்பைகளை ஏமாந்தவர், இளைத்தவர் வீட்டின் கரைப்பகுதியில் கொட்டுவது, அவர்கள் தயாரிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் வலுக்கட்டாயமாக மற்றவர் மீது பயன்படுத்துவது இதெல்லாம் நாசகார வேலையில்லையா, நாங்கள் நிலாவை மட்டும் எடுத்துகொண்டுவிடுகிறோம். பூமியின் சீர்கேடுகளை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறோம். வருங்காலத்தினர் எல்லோரும் எல்லாம் பெறுவார்கள்

தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் ஏதேனும் நல்லது நடக்குமானால் நடக்கட்டும். என்ன, இனி நாங்கள் நிலவைப்பார்க்க முடியாது. இருக்கட்டுமே. நிலாவையும் நட்சத்திரத்தையும் காட்டி யார் குழந்தைகளுக்கு சோறூட்டுகிறார்கள். அதற்குதான் டிவி வந்துவிட்டதே, நிலாவாவது ஒன்னாவது, நான் சிறுமியாக இருக்கும்போது, வானத்தில் எண்ணமுடியாமல் நட்சத்திரங்கள் இருக்கும். அம்மா புடவையை மடிக்க முடியாது, அப்பா பணத்தை எண்ணமுடியாது என்று என் தாத்தா வானத்தையும் நட்சத்திரத்தையும் விடுகதையில் ஒளித்துவைத்து கேட்பார். மற்ற நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை சிங்கப்பூரில் நான் இரவெல்லாம், பல ப்ளோக்குகளின் ஊடாக சன்னல் மூலம் வானத்தில் தேடித்தேடி களைத்துப்போகும் முன் போனால் போகிறது என்று வாரம் ஓரிரு நாட்கள் ஒரு நட்சத்திர தரிசனம் கிடைக்கும்

நன்றி திருவாட்டி சந்திரிக்கா, நேர்காணல் முடிந்தது. இதில் நிலவை எடுத்துக்கொள்ள ஒரு பூமிவாசியாக உங்கள் கையெழுத்தை இந்த விண்ணப்பத்தில் போட்டால் போதும். இதன் ஒளிசிட்டையும், இந்த சீட்டையும் இப்போதே வலாரியாவிற்கு அனுப்பிவிடுவேன். மிக்க நன்றி. பூமிவாசியில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினரின் ஒப்புதல் கிடைத்தால் இன்னும் எங்களுக்கு மனநிறைவு கிடைக்கும். நாங்கள் தேர்ந்தெடுத்தவர்களில் ஒருவரின் கை ஒப்பம்
இருந்தால்கூட போதும், செயல்படுத்திவிடலாம்
என்ன தருவது. என்ன இருக்கு, அவருக்கு ஐம்பத்தைந்து வயதாகிவிட்டதால் மசேம நிதியில் பணம் எடுக்க முடியாது; காஞ்சுவே எங்கள் சமூக நிலையம் தரும் உதவித்தொகையில் படிக்கிறாள். படிப்பு முடிந்த பின் வேலைக்குப்போய் அதன் பாதியை அடைக்கவேண்டும். மகன் தேசிய சேவையில் இருப்பதால் ஏதோ குடும்பம் நடக்கிறது. சாப்பாட்டு கடையில் வேலைபார்த்த காலத்தில் சேர்த்துவைத்ததில் மருத்துவ செலவு போக நூறு வெள்ளி இருக்கிறது. அடுத்த மாதம் ஐம்பதாவது பிறந்த நாளைக்கு பிள்ளைகளுக்கு ஏதேனும் வாங்கிக்கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். நூறு வெள்ளியில் பாதியை ஏதேனும் தர்ம நிதிக்கு கொடுக்கச்சொல்லிவிட்டு, பாக்கி பணத்துக்கு தமிழகத்திலிருந்து நல்ல தமிழ்ப்புத்தகங்கள் வாங்கி அனுப்ப யாரிடமாவது சொல்லலாமா? என்றென்றும் புத்தகங்கள் வீட்டிலேயே இருந்தால் பிள்ளைகள் படிக்க ஏதுவாக இருக்குமேதங்கள் அன்புக்கு மிக்க நன்றி திருவாட்டி சந்திரிக்கா, நிலவைத்தான் எடுத்துக்கொள்ளப்போகிறோமே. இதைவிட இனி என்ன வேண்டும். புத்தகங்களை அனுப்புவதில் ஏதும் பிரச்சனையில்லை. தர்மநிதிக்கு உடனே சேர்ப்பித்துவிட இயலும், ஆனால் அவை இனி பயன்படாது
ஓ, நீங்கள் இதைவிட அதிக அளவில் பண உதவிசெய்வீர்கள், தெரியும்; இருந்தாலும் என்னால் ஆனதைக் கொடுக்கிறேன், தயவு செய்து மறுக்காதீர்கள். சரி, புத்தகங்கள் வேண்டுமானால் நான் தமிழகம் செல்லும் யாரிடமாவது வாங்கிவரச்சொல்கிறேன்
திருவாட்டி சந்திரிக்கா, அவையும் இனி உங்களுக்கு பயன்படா.ஏன் எனக்கு கண் தெரிகிறது. நான் நிறைய புத்தகங்கள் படித்துவருபவள்தானே
திருவாட்டி சந்திரிக்கா, நாங்கள் நிலவை எடுத்துக்கொண்ட பின் ஏற்படும் விளைவுகளை உங்கள் வாழ்க்கையை திசை திருப்பி விடும். சங்கிலித்தொடர் போல் பல சம்பவங்கள் நடக்கும். ஏற்றவற்றங்கள் மறையும்ஏற்றவற்றம் என்றால் ,.....ஆங்கிலத்தில் tides என்பார்களே, பூமியின் ஏற்றவற்றங்களில் பெரும் பங்கு வகிப்பது நிலவுதான். அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துவிடும். பருவநிலை மாறுதல் ஏற்படும், ஆனால் அவை சாதாரண மாறுதலாக இல்லாமல் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரே வாக்கியத்தில் சொல்லவேண்டும் என்றால் பூமி அழிந்துவிடும்.

ஐயோ கடவுளே, நெஞ்சைப்பிடித்துக்கொண்டேன், நாக்கு உலர்ந்தது;பூமி முழுதும் அழிந்துவிடும்; கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு வாருங்கள் திருவாட்டி சந்திரிக்கா
சமையலறைக்கு ஓடினேன். கைகள் நடுங்கின. அப்படியே மேடையில் ஓரம் சாய்ந்துகொண்டேன். என் நெஞ்சு படபடத்ததை என்னாலேயே கேட்க முடிந்தது. கல்லூரியில் இருக்கும் மகளின் முகம், தேசிய சேவையில் இருக்கும் மகன், கணவரின் பிம்பங்கள் தோன்ற, கூடாது, நான் கையெழுத்து போட்டால்தானே, அந்த பேப்பரையே கிழித்துவிடுகிறேன். நன்றாக இருக்கிறது கதை, வலாரியாவாம், நிலவை மட்டும் எடுப்பார்களாம், பூமியே அழிந்துவிடுமாம் ஆறஅமர சொல்கிறார்கள், பின் பக்கத்தில் துணி உலர்த்தியிருக்கும் காலாக்கம்புகளை எடுத்து இந்த கரப்பானை அடித்து நொறுக்கிவிடட்டுமா, ஐயோ அது மனதை வேறு படித்துத்தொலைக்குமே, கெட்டவர் அழிய அப்பாவிகள் உயிரைவிடவேண்டுமா, இது அநியாயம் அக்கிரமம், கூடாது, கூடவே கூடாது, ஒருத்தர் கையெழுத்துப்போட்டால்கூட செயல்படுத்தி விடுவார்களாம்; என்ன துணிச்சல், இவர்கள் யார் நமக்கு சட்டம் பேச, கையெழுத்து போட மாட்டேன் என்று அடித்துச்சொல்லிவிடலாம். அந்தந்த நாட்டின் தலையெழுத்து யார் மாற்ற முடியும், எனக்கென்ன அதிகாரம் இருக்கிறது, நான் என்ன நாட்டின் பிரதம மந்திரியா, இல்லை அதிபரா, இல்லை அப்படி இருப்பவர்கள்தான், வலிய நாடுகளை பகைத்துக்கொள்கிறார்களா, நானா சொன்னேன், அணுகுண்டு போடு, ரசாயனங்களை அப்பாவிகள் மீது சோதித்து பார் என்று அவரவர் தலையெழுத்து, ஏதோ முடிந்ததைக் கொடுக்கலாம். மறுகணம் அந்த பத்து புகைப்படங்கள், ஐயோ கோரம், பயங்கரம், எனக்கு இங்கு என்ன பிரச்சனை, குழாயைத் திறந்தால் தண்ணீர், தொண்ணூறு விழுக்காட்டினருக்கு அரசே வீட்டுவசதிக்கடன், யாருமற்றவருக்கு ஆதரவு இல்லங்கள், வியாதி வராதவரை ஒன்றும் பிரச்சனையில்லை, ஆனாலும் அந்தப் புகைப்படங்கள் மனதை என்னவோ செய்தன, ஒரு நாடு மட்டுமா, பல நாடுகளில்அணுகுண்டு வீச்சுகள் இப்படியா தலைமுறைகளை பாதிக்கும்; விஷவாயுக்கசிவு இவ்வளவு நாசகரமானதா, அந்த பஞ்சப்பரதேசி மனிதன் எதைத்தேடி போகிறான் தெரியுமா, ஐயோ இதற்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்க எனக்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது, கிடைத்திருக்கிறதே, யாருக்கும் கிடைக்காதது எனக்கு கிடைத்திருக்கிறதே, ஒரு கையெழுத்து ஒரு கையெழுத்து மட்டும்


தண்ணீரை கடகடவென்று குடித்துவிட்டு, முன்னறைக்கு ஓடி வந்தேன். வெடுக்கென்று கரப்பானிடமிருந்து விண்ணப்பத்தைப்பிடுங்கி எங்கே கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டேன்.
ஒரு பின்குறிப்பு


மாலையின் சேகர் மாற்று சாவியை மூலம் வீட்டைத் திறந்துகொண்டு வந்தபோது, முன்னறையில் மயங்கிக்கிடந்த சந்திரிக்காவைதண்ணீர் தெளித்து எழுப்பியவுடன் வானத்துல நிலவு தெரியுதா என்று ஏன் கேட்டாள் என்பது சேகருக்குப் புரியவில்லை.

Thursday, June 19, 2008

ஜுரோங் பறவைப்பூங்காவில் பொதுக்கூட்டம்

அன்னம் எழுந்தது
குயிலின் பாட்டுத்தான் பாட்டு,
வானம்பாடி
எங்கோ வானத்தில் பாடுவது
யாருக்குப் புரிகிறது?

புறா சிலிர்த்தது
வானம்பாடியின் கவிதை உயிர்விதை

குயில்நல்லதொருபாடகி
அவ்வளவே

கூக்குரல்கள் நெருக்க
தீப்பொறி பறந்தது

குயிலும் வானம்பாடியும்
பேசிக்கொண்டே
தண்ணீர்குடிக்கப் போனதை
யாரும்கவனிக்கவில்லையுகமாயினி 2008 மே


Saturday, June 14, 2008

அனைவருக்கும் நன்றி

என் முதல் கவிதை நூல் (நாளை பிறந்து இன்று வந்தவள் ) வெளியீடு 1.6.2008 அன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நல்லபடியாக நடந்தது.

வந்து கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும்,

வர இயலாமல் போனாலும் வாழ்த்து தெரிவித்த உள்ளங்களுக்கும், அறிவிப்பை வெளியிட்ட இணையதளங்கள்,
சிங்கப்பூர் தமிழ் முரசு ஆகியவற்றிற்கும்,

நூல் வெளியீட்டு நிகழ்வை படம்பிடித்து
விவரங்களுடன் வெளியிட்ட
தினமலர், தினமணி நாளிதழ்களுக்கும்

என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
அன்புடன்
மாதங்கி

Wednesday, May 28, 2008

Tuesday, May 13, 2008

எ·ப். கெ. லிம்மின் மூன்றாவது கண்

சிறுகதைஜேனட்டின் முன்குறிப்பு:


இந்தக் கதையில் வரும் எ·ப்.கெ. லிம் அவர்களை நான் நேர்காணலுக்காகச் செல்லும்வரை அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. நேரில் பார்த்தபோது அவர் எல்லோரையும் போலவே இருந்தார். மத்திம உயரம், சுத்தமாக வெட்டப்பட்ட தலைமுடி, சிறிய ஆனால் ஊடுறுவும் கண்கள், சுத்தமான கசங்கலில்லா ஆடைகள் ,பளபளக்கும் காலணிகள். அவர் வீட்டில் உரையாடினோம். அவர் நடத்தும் பேக்கரியின் கிளமெண்ட்டிக் கிளையைச் சுற்றிக்காட்டினார்.

ரா·பிள்ஸ் கல்விக்கூடத்தின் முன்னாள் மாணவர், பள்ளி,கல்லூரி படிப்பில் தங்கப்பதக்கங்கள் வாங்கியவர். சிங்கப்பூரின் பிரபல பெரிய உணவு தயாரிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கூடத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பத்தாண்டுகள் இருந்த பின் கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்தமாக பேக்கரி நடத்துகிறார். அவரை நேர்காணல் செய்ய வேண்டும் - என் தலைமையதிகாரி எனக்கு இவ்வளவே கூறியிருந்தார். நான் உற்சாகத்துடன் திரு எ·ப்.கெ.லிம்மைத் தொடர்பு கொண்டபோது, மிகுந்த தயக்கத்திற்குப்பின்னர்தான் ஒப்புதல் தந்தார். மிக மிக நிதானமாகப் பேசினார். நிதானம் என்றால் இதுவரை இத்துணை நிதானத்தை நான் பார்த்ததில்லை. நானும் பத்திரிகைக்கு கொடுக்கவேண்டிய நேர்காணலின் ஒரு நகலை மின்மடல் மூலம் அனுப்பியிருந்தாலும் என்னை ஒரு கேள்வி உறுத்திக்கொண்டிருந்தது. அவருடன் நான் நடந்து சென்றபோது, அவர் பெரும்பாலும் தன் காலணியைப் பார்த்தவாறு நடந்தார். ஒருவேளை அதன் பளபளப்பை உறுதி செய்துகொள்கிறாரோ என்று முதலில் நினைத்தேன். ஆனால் காரணம் அதுவன்று வேறு ஏதோ ஒன்று என்று மனதில்பட்டது. அதுகுறித்து தனியாக அவரிடம் பேசநினைத்து மீண்டும் அவரைச் சந்தித்தேன். இதை அவர் விரும்பினால் ஒழிய வெளியேசொல்லமாட்டேன் என்று சொன்னேன்.என் கைபேசியை அணைத்துவிட்டு கைப்பையில் வைக்கும்போது என் வாலட் (பர்ஸ்) கீழே விழுந்தது. இது உங்கள் ஆண்ட்டி கொடுத்தது அல்லவா என்றார். யு.எஸ்ஸில் லாரா ஆண்ட்டி எனக்கு பரிசளித்த வாலட் அது. ஆண்ட்டி இப்போது உயிரோடு இல்லை. பல மாதங்களுக்குப் பிறகு சென்றவாரம்தான் அதை உள்ளிருந்து எடுத்துப் பயன்படுத்தத் துவங்கியிருந்தேன்.
அவரிடம் கேட்டேன். நீண்ட மௌனத்திற்குப் பின் பேசத்துவங்கினார்.
இனி கதைக்குச் செல்லலாம்: இதோ அவர் வார்த்தைகளில்:என் இளமைக்காலம், அச்சம், குழப்பம், துணிவு, தனிமை,பாசம் இவற்றின் கலவையாகவே இருந்தது. அப்பா அரசுப்பணியில் முதனிலை அதிகாரி, அம்மா சட்டம் பயின்று சொந்தமாக சட்ட ஆலோசனை நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தார். என் ஆ-மா தான் (பாட்டி) வீட்டில் என்னைப்பார்த்துக்கொண்டிருந்தார்.
வீட்டில் பணிப்பெண் யாருமில்லை. பெற்றோர் இரவு உணவு மட்டும்தான் வீட்டில் உண்பார்கள், அதுவும் சில நாட்கள் மட்டுமே. படிப்பில் முதல் மாணவன், பாட்டியின் செல்லப்பேரன், வெரி கொயட் என்று பள்ளியிலும், அக்கம்பக்கத்தினரும் சொல்வார்கள். மிகக் குறைவான நண்பர்கள். இப்படித்தான் என் இளம் பருவம் இருந்தது.


எனக்கு அப்போது பத்து வயது இருக்கும். ஒரு முறை என் ஆமாவுடன் அவர் தோழி ஒருவர் வீட்டிற்கு போயிருந்தேன். அவர் வீட்டிற்கு ஆமா பலமுறை சென்றிருந்தாலும் நான் அவர்கள் வீட்டிற்குப்போவது அதுவே முதல் முறை. நான் ஒரு புத்தகத்தைக் கையில்எடுத்துக்கொண்டு நகர்ந்தேன்.ஆ-மா தோழியுடன் மாஜோங் விளையாட்டு ஆடத் துவங்கியிருந்தார். இனி சில மணி நேரங்களுக்கு அவர்கள் அதிலேயே மூழ்கிவிடுவார்கள் என்பதை நான் அறிந்திருந்தேன். அவர்கள் வீட்டு பின்புறத்தில் தோட்டம் இருந்தது. வேலி போட்டு வைத்திருந்த அந்த தோட்டத்தைப் பார்க்க எனக்கு ஆவலாக இருந்தது. சிறிய இடமாயிருந்தாலும் ஆமாவின் தோழி அதை மிகச் சுத்தமாக வைத்திருந்தார். பப்பாளி மரத்தில் பல காய்கள் கொத்தாகத் தொங்கிக்கொண்டிருந்தன. அவற்றை எண்ணத்துவங்கினேன். ஏதோ பேச்சுக்குரல் கேட்க, ஆமா அழைக்கிறாரோ என்று திரும்பினேன். பழுப்பு நிற 'சியோங்சாம்' அணிந்த இரு பெண்மணிகள் ஏதோ சுருக்குப் பைகளைக் காணோம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். என் அம்மா வயது இருக்கலாம். அவர்கள் தலையலங்காரம் மிகவும் பழங்காலத்ததாக எனக்குத் தோன்றியது. இருவரில் இடது பக்கம் நின்றிருந்த பெண்மணி மிகவும் கவலையுடன் இருந்தார், என்னைப் பார்த்து, கொஞ்சம் தேடித் தருமாறு வேண்டிக்கொண்டார். சரியென்று, நானும் தேடுகிறேன் என்று கூறியவாறு பின்புறம் இருந்த துடைப்பான், முறம் இவற்றையெல்லாம் திருப்பிப் பார்த்து நானும் தேடத்துவங்கினேன். செடிகளுக்கு உரமிடும் உரக்கூடை, வீடு கழுவும் உதவும் பக்கெட்டுகள், துடைக்கும் துணிகள், தட்டுமுட்டுபொருள்களை போன்றவைதான் அங்கங்கே தட்டுப்பட்டன.


ஆமாவிடன் கேட்டு உதவச்சொல்லலாமே என்று தோன்றியது. ஓடிப்போய் ஆமாவிடம் சொல்ல ஆமா, தோழியுடன் வந்தார்.அந்தப் பெண்மணிகள் இன்னும் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களைச் சுட்டிக்காட்டினேன். நான் பப்பாளிகளை எண்ணிக்கொண்டிருநதபோது பார்த்தேன் என்றேன். ஆமாவும் தோழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். என்னை உள்ளே அழைத்துச்சென்று ஆமாவின் தோழி உள்ளிருந்து ஒரு தட்டில் துரியான் பழங்களையும், ஒரு கச்சாங் (கடலை) பொட்டலத்தையும் வைத்துக்கொடுத்தார். ஆமா என்னை தன் பக்கத்திலேயே இருத்திக்கொண்டார். என்னிடம் சில கேள்விகள் கேட்டார். ஆமாவிற்கு விளையாட்டில் கவனம் செல்லவில்லை. என்னை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.என் கண்ணுக்குத் தெரிந்த பெண்மணிகள் ஆமாவிற்கு அவர்தோழிக்கும் தெரியவில்லை என்பதை பின்னர் அறிந்து கொண்டேன். அதன் பின் இரண்டொருமுறை அந்த தோழி வீட்டிற்குப் போகும் வழியில் சில நேரங்களில் முழு உருவமாகவோ, நிழல் உருவமாகவோ, சில மனிதர்கள் என் கண்ணில் தென்படத் துவங்கினர்.
சில நாட்களுக்குப் பின்னர், என் ஆமா என்னை ஒரு சோதிடரிடம் அழைத்துச் சென்றிருந்தார். நான் மருத்துவர் ஆவேனா, ( என் தாத்தா அந்த காலத்து சீன பாரம்பரிய மருத்துவராம்) என் வருங்காலம் எப்படி இருக்கும், எனக்கு எத்தனை பிள்ளைகள், மனைவி, எப்படிப்பட்டவளாக அமைவாள், என்று பற்பல கேள்விகளை தயார்செய்துகொண்டு, என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்.


அன்று நான் அணிந்திருந்த உடை எனக்கு நினைவில்லை, ஆனால் ஆமா மூங்கில்தண்டு நிறத்தில் 'கெபயா' அணிந்திருந்தார். அவருக்குப் பாசாரில் (சந்தையில்) வாங்கிய வேலைப்பாடுகள் கொண்ட மரத்தாலான கொண்டை ஊசியை ஓடிவந்து எடுத்துக்கொடுத்ததுகூட நினைவிருக்கிறது. அந்த சோதிடர் கிரேட்டா ஆயர் பகுதியில் இருந்தார். போகும் வழியில் ஆமா வுடன் பேசிக்கொண்டே வந்தேன். முன்பு அந்த இடத்தில், தூய்மையான தண்ணீர் ஊற்றுக்கள் நிறைய இருந்ததால் சுற்றுவட்டாரத்தில் நிறைய பல இனத்தவரின் வழிபாட்டுத்தலங்கள் இருந்தன என்றும், வண்டியோட்டிகள், மாட்டுவண்டிகளில் நீர் நிரம்பிய அண்டாக்களை ஏற்றி, மற்ற பகுதிகளில் இருந்த மக்களுக்கு விநயோகித்தனர், என்று ஆமா சொல்லிக்கொண்டே வந்தார்.ஆங், சோதிடர் என்ன சொன்னார் என்று சொல்கிறேன், அவர் ஒன்றும் சொல்லமுடியாது என்று கூறி, கிட்டத்தட்ட எங்களை விரட்டிவிட்டார். ஆமா சோர்ந்து போகவில்லை, என்னை இன்னொரு சோதிடரிடம் அழைத்துச்சென்றார். அவர் ஆமாவிடம் அன்பாகப் பேசினார். ஆனால் எனக்கு சோதிடம் பார்க்க பணிவுடன் மறுத்துவிட்டார்.ஆமா, மௌனமாக என்னை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். இரவு அம்மா அப்பாவிடம் சொன்னேன். அவர்கள் நாத்திகர்கள் என்றபடியால் இது அவர்களை பாதிக்கவேயில்லை. ஆனால் அன்பின் காரணமாக அவர்கள் ஆமாவிடம் இதுகுறித்து ஏதும் கேட்கவில்லை.எனக்கோ அப்போதே பள்ளிக்கு ஓடிப்போய் என் யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற ஆவல் இருந்தது. இப்போதோ என் அவசரத்தை நினைத்தால் எனக்கே சிரிப்பாக இருக்கிறது.
நீண்டதூரம் காரோட்டிக்கொண்டு செல்வது என் அன்னைக்கு மிகவும் பிடிக்கும். ஆமாவும், நானும் என் பெற்றோருடன் எங்கள் வீட்டு காரிலேயே அண்டை நாடுகளுக்கு போய் வருவோம். கல்லூரி சென்றபின் நானும் ஓட்டத்துவங்கினேன். ஆமா என் பக்கத்திலும் என் பெற்றோர் பின்பக்கமும் அமர்ந்துகொள்வர். என் அம்மா, அப்பா, நான் என்று மாற்றி மாற்றி ஒட்டுவோம்.


மலாக்கா, சிங்மாய், டோக்கியோ, எங்கு சென்றாலும் இறந்தவர்கள் என் கண்களில் பட்டுக்கொண்டேதான் இருந்தார்கள்.


என் கண்ணுக்குப் புலப்பட்ட எந்த ஆவியுமே என்னை எந்த விதத்திலும் இதுநாள்வரை தொந்தரவு செய்ததில்லை. நான் ஆராய்ச்சித்துறையில் பணிபுரிந்த காலகட்டத்தில் எங்கள் மூத்த அதிகாரி ஒருவர்மூலம், ஆமாவின் தோழி குடியிருந்த பகுதிக்குச் செல்லும் வழி, சிங்கப்பூர், ஜப்பான் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், பிணக்கிடங்காக இருந்தது என்ற செய்தியைத் தெரிந்துகொண்டேன்.


என் அவதானிப்புகள் அதிகமாக ஆக , என் நண்பர்கள் குறைந்துகொண்டே வந்ததுதான் நடந்தது. ஏற்கனவே எனக்கு மிக மிக குறைவான நண்பர்களே, பல்கலையில் இருந்தனர். போததற்கு, முதுகலை இறுதியாண்டில் பயிலும்போது உடன் பயின்ற மாணவனின் தந்தை மாண்டு போனார். விடுப்பு எடுத்துக்கொண்டு அவனுடனே அன்று முழுவதும் இருந்தேன். முக்கியமான சில பத்திரங்களின் தகவல்களும் அவை எங்கே வைக்கப்பட்டிருந்தன என்பதும் தெரியாமல் அவன் தாயார் திண்டாடுவதாகக் கூறினான். மறுநாள் பின் அவன் தந்தையாரை நான் என் சோதனைகூட அறை முகப்பில் பார்த்தேன். அவர் பெட்டகச்சாவி இருக்கும் இடத்தை என்னிடம் கூறியதால், என் நண்பனை உடனே அழைத்து விவரத்தைச் சொன்னேன். நான் சொன்னது சரியான விவரமே என்று அவன் வீடு சென்றதும் உறுதி செய்து எனக்கு நன்றி தெரிவித்தான். அதன் பின் அவன் தந்தையாரின் வேக் நிகழ்விற்குக்கூட (இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கில் உறவினர் நண்பர் கலந்துகொள்ளும் நிகழ்வு) என்னை அழைக்கவில்லை. நான் தொலைபேசியில் ஓரிருமுறை அழைத்தபோது இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ஒருவேளை என்னுடன் நட்பு பாராட்டுவது அவனுக்கு அச்சமாக இருந்திருக்கலாம்.நெடுஞ்சாலையோரம் நிற்பவர்களையோ, நடப்பவர்களையோ கொஞ்சம் போக்குவரத்தை கவனித்துச்செல்லுமாறு கூறியிருக்கிறேன். அதன் மூலம் அவர்களுக்கு ஏற்படப்போகும் விபத்துக்களைக்கூடத் தவிர்த்திருக்கிறேன். மருத்துவமனைகளுக்குச் செல்லும்போதுகூட என் கண்களில் நிழல் உருவங்கள் தென்பட்டுக்கொண்டே இருந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் தாங்கள் இறந்ததைக்கூட அறியாமல் இருந்தனர். சிலர் ரோட்டிப்பராட்டா சாப்பிட்டுக்கொண்டோ, பீர் அருந்திகொண்டோ இருப்பார்கள். உனக்கு எதாவது சாப்பிட வேண்டுமா என்றுகூட கேட்டிருக்கிறார்கள்.


எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று எனக்கு சலிப்போ, பெருமிதமோ ஏற்பட்டதில்லை. எனக்கு எப்படி இப்படி ஆகிறது என்றோ, மருத்துவரைச் சந்திக்கவேண்டும் என்றோ , நான் நேரம் செலவழித்து ஆராய்ந்ததுமில்லை. இதை உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்றோ புகழுக்கோ, பணத்துக்கோ நான் ஆசைப்பட்டதுமில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக நான் படைக்கப்பட்டிருக்கிறேன். என் பிறந்த தேதி 6-6-1966 மாலை ஆறு மணி ஆறு நிமிடங்கள், நிறைய ஆறு வருகிறது. பதினைந்து வயதிலிருந்து யோகப்பயிற்சி செய்கிறேன். தனியாக நடக்கும் போது சிலசமயம் எனக்குள் நான் பேசிக்கொள்வேன். இப்போது சின்னஞ்சிறு கைபேசியை வைத்துக்கொண்டு பலர் தனியே பேசிக்கொண்டே நடப்பதால், என்னையும் அவ்வாறே எண்ணிக்கொள்ளலாம்.என்னை ஒரு பெண் டேட் செய்தாள், எங்கள் பணியிடத்தின் வேறொரு பிரிவில் வேலை செய்து வந்தாள். முதல் சந்திப்பு ஒரு உணவகத்திலும், அடுத்த சந்திப்பு புக்கிட் திமா பூங்காவிலும் நிகழ்ந்தது. என் அமைதியான குணம் தன்னைக் கவர்ந்ததாகச் சொன்னாள்.


நான் புத்திசாலித்தனமான ஒரு காரியம் செய்தேன். என் முன் தென்படும் நிழல்மனிதர்களைப் பற்றிஅவளிடம் சொன்னேன். அவர்கள் என்னைத் தொந்தரவு செய்யாவிட்டாலும், அவர்களைத் தவிர்க்க தரையைப் பார்த்து நடக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறேன் என்றும் இன்னும் சில நற்செய்திகளையும் சொன்னேன். அந்த சந்திப்பிற்குப்பின் அவள் என்னோடு தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டாள்.


இந்த 2008 ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களில் உச்சப்பயன்பாட்டை அறிந்து வைத்து பயன்படுத்தும் சிங்கப்பூரில் இப்படியும் ஒரு பிரகிருதியா என்று நினைத்தாளோ என்னவோ. அவள் ஜூரோங் அறிவியல் பூங்கா வளாகத்தில் வேறு வேலைக்குப் போய் விட்டாள் என்று பின்னர் கேள்விப்பட்டேன்.எனக்கு எந்தப் பெண்ணையும் பார்த்து காதல் உண்டாகவில்லை. காதல் என்பதே ஹார்மோன்களின் சேட்டை என்று ஒரு எழுத்தாளர் கூறியிருந்ததாகப் படித்தேன். மேலும், முழுக்க முழுக்க பாட்டியின் கவனிப்பிலும், வெளியுலகில், ஆம் , இல்லை போன்ற அத்தியாவசியமான பேச்சுக்களிலும், தனிமையிலும் இருந்ததாலோ என்னவோ, பெண்களிடம் பழகும் முறையை நான் அறியவில்லையோ என்னவோ.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், பாட்டி இறந்தபின்னர், ஆராய்ச்சித்துறை வேலையிலிருந்து விலகிக்கொண்டு, பேக்கரி ஒன்றைத்துவங்கினேன். அதன் ஆரம்பக் காலகட்ட பணிகளில் நான் சந்தித்த ஒரு பெண் நல்லதொரு தோழியானாள். அவள் என்னைத் திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினாள். என்னைப் பற்றி சொன்னபோது அவள் குதூகுலம் அடைந்தாள்.அவள் பெயர் ஆ ஹ¤வே. என் ஆமாவின் பெயர். என் கண்களுக்கு அவள் என் ஆமாவைப்போலத் தோன்றினாள். அதனால் அவளை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை.என் பேக்கரியின் ஏழு கிளைகளிலும் பணிபுரிய அனுபவமுள்ள பணியாளர்களுக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுத்தபோது, ஆட்டிசம், உடல் ஊனம், முதலியவற்றால் பாதிக்கப்பட்ட இளையர் சிலரையும் பணியில் சேர்க்கபோகிறேன் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பயிற்சி கொடுத்து வாழ்வில் காலூன்றவைக்க ஆசைப்படுகிறென் அவர்களுடன் இணைந்துபணிபுரிய வேண்டும் என்றபோது பெரும்பாலானோர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்கள்.


சின்னப்பையனாக நான் வாழ்ந்த காலத்தில் ஆ-மா அவர்கள் அங் கூ குவே, நிலவப்பம் போன்ற பலகாரங்களைச் செய்யும்போது கூட இருந்து, கழுவுவது, பொடிப்பது, அரைப்பது போன்ற வேலைகளை கூடமாட ஒத்தாசை செய்திருக்கிறேன்.


என் பெற்றோர் எப்படி இறந்தார்கள் என்று கேட்கிறீர்களா?


ஒரு விடுமுறை நாளில் பெற்றோருடன் ஜொஹ¤ருக்குக் கிளம்பினேன். நான் தான் ஓட்டினேன். பின் இருக்கையில் என் பெற்றோர் அமர்ந்திருந்தனர். சிங்கப்பூர் எல்லையைக் கடக்கும் முன் கனரக லாரி ஒன்று எங்கள் காரை மோத எனக்குச் சில சிராய்ப்புக்கள். காரின் பின்புறம் நொறுங்கிவிட்டது.


சிங்கப்பூர் இலக்கிய இதழ் 'நாம்' 2008 மார்ச்

Friday, April 25, 2008

சின்னஞ்சிறுகதை ஒன்று

அழகுப்பொருள்


"நம்ம குழந்தை கழுத்துக்கு இந்த அழகுசாமான் ரொம்ப பொருத்தமாக இருக்கும், என்ன வாங்கிடுவோமா "அவன் அவளைக் கேட்டான்.


"சுமாராத்தான் இருக்கு; வேணா குழந்தை ஆசைப்பட்டால் வாங்கிக்கொடுத்து விளையாடச்சொல்லலாம். இப்பெல்லாம் எல்லா பசங்களும் இதைத்தான் கழுத்தில் கோத்துகிட்டு விளையாடறாங்களாம்".


வாங்கினார்கள்.

அம்மா அதை அவன் கழுத்தில் மாட்டினாள்.


"அம்மா அம்மா ரொம்ப ஜோரா இருக்கு என் ப்ரெண்ட் கூட இதே மாதிரி போட்டிருக்கான், இது எதுலமா பண்ணினது?"


"மனுசனோட பல்லு கண்ணு", அம்மா தும்பிக்கையால் மகனைத் தடவிக்கொடுத்தாள்.

Thursday, April 24, 2008

வியாழன் விசிட்- ஒன்றேகால் திரைப்படங்கள், புக்கர்விருது, கரீபியன் கடலும் கயானாவும், கொளபொ

ஒரு திரைப்படம்

வேகம்= தொலைவு/ நேரம்

இந்த விதி மாறாது.
கதாநாயகி = ஒரு தாதா அல்லது அரசியல்வாதி (நாயகியின் தந்தை)/ ஏழையான கதாநாயகன்


இன்னும் யாரும் இந்த விதியை பயன்படுத்துவதை தடைசெய்யவில்லை போலிருக்கு, குறைந்த பட்சம் சம்பவங்களையாவது கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம். மக்களை கொஞ்சம் நெனச்சுப்பாருங்க.

கூடல் நகர் படம் பார்த்தேன்.


இந்தக்கதை தெரிந்தவர்கள் நான் சரியாகச் சொல்கிறேனா என்று பார்க்கலாம் அல்லது 'ஒரு ஆறுதல்' பத்திக்குத் தாவி விடலாம்.


பரத்துக்கு இரட்டைவேடம் முதல்முறையாக, சட்டை நிறத்தைத் தவிர வேறு வித்தியாசங்கள் இல்லை. அது கதைக்குத் தேவையாக இருக்கிறது. அதனால் மெய்ப்பாடு வேற்றுமையைக் காட்டவில்லை என்று யாரும் குறை சொல்லமுடியாது.


தம்பி பரத், அரசு மருத்துவமனை பிணக்கிடங்கு ஊழியர் கம் அரசியல்வாதியின் அடியாள் குழு உறுப்பினர்; பாப்பா பாப்பா என்று மரியாதையாக முதலாளி மகளை அழைக்கிறார்.


அண்ணன் பரத் பாரதி நூலகத்தில் வேலை பார்க்கிறார்; சைக்கிளில், பாப்பா கேட்கும் ஜெயகாந்தன், சுஜாதா புத்தகங்களைக் கொடுத்து வருகிறார், அடுத்தடுத்த காட்சிகளில் ஆ.வி. பிரசுரத்தின் காதல் படிக்கட்டுக்கள், (பாத்து தம்பி, வழுக்கிவிழுந்துராதே- அறிவுரை கொடுக்கும் இளவரசு (குழு உறுப்பினர்- வேலை படம் முழுதும் போஸ்டரும் கோந்துமாய்த் இருப்பது- படம் முடிந்த பின்னும் நினைவில் நிற்கிறார். ) ஒரு புளியமரத்தின் கதை (சு.ரா)எல்லாம் கொடுக்கிறார், தம்பி அக்கறையுடன் கோடிட்டு காட்டுவதை அசட்டை செய்கிறார், அவர்தான் அம்மா மெச்சும் நல்ல பிள்ளை, தம்பி போல் குடி கிடையாது, படம் முழுக்க சாதுவாகவே இருக்கிறார், எதிர்குழுவினர் ஆட்கள் காதலியை கலாட்டா செய்ய வரும்போது அவள் கைபிடித்து வேகமாகத் தப்பி ஓடி காப்பாற்றுகிறார்; சிறிது நேரத்தில் அவர்கள் நெருங்கி வரவும் ஒரு குடிசை வாசலில் கிடக்கும் அம்மிக்குழவியை தூக்கி ஆவேசத்துடன் காட்டுகிறார், இது நம்பும்படியாக இருக்கிறது. ஆண்கள் (காதலர்கள்) காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.


கதாநாயகி பாவனாவின் லட்சியம், நன்றாகப் படித்து (அப்படித்தான் தேவர் மகனில் கமல் சொல்லுவார் என்று ஆசிரியரிடம் சொல்லுகிறார்) சிறந்த ஆசிரியராக திகழவேண்டும், மிளிரவேண்டும், விளங்கவேண்டும் என்று அவ்வப்போது சொல்லுவதாகக் காட்டியிருப்பது நன்றாக இருக்கிறது. (பல படங்களில் எதுக்குடி படிப்பு ,....ஐக் கட்டிக்கிட்டா போதும் என்று கதாநாயகி தோழிகளிடம் சொல்லுவதாக வரும்)
கையைப்பிடித்த ஒருவனின் கரத்தை ஆள் வைத்து காலிசெய்த அப்பாவின் எதிர்வினையையும் மீறி ( இதையும் முன்பே பார்த்திருக்கிறோம்- அதுதான் காதல் என்பதா) காதலிக்கிறார்.

அப்பா, பைக், சைக்கிள் , எதிலும், எங்கும் போகக்கொடுக்கும் சுதந்திரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார். தம்பிப்பாப்பாவிடம் உயிரை வைத்திருக்கிறார்.

அம்மா கவனிக்கவில்லை என்று சொல்லக்கூடாது, அம்மாவுக்கு கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்ளவேண்டும்.
இதெல்லாம் எல்லாபடத்திலும் பார்ப்பதுதான்.
திருமணவீட்டில் சந்தியா பரத் சந்திப்பும், சந்தியாவின் அலம்பலும் சும்மா கலக்குது. சந்தியா கிடைச்ச ரோலை அளவா, மிடுக்கா செஞ்சிருக்காங்க. சந்தியா அப்பா (தம்பி பரத்தின் சக ஊழியர்) மனதில் நிற்கிறார், 18 வருசமா அப்பன் குடியினால அவதிப்பட்டிருக்கேன், நீ குடிப்பியா, எவ்வளவு காசு வச்சிருக்கே, எனக்கு கவரிங் நகை, பகட்டு எதுவும் வேணாம்,....சும்மா சுத்தி வராதே, நான் மோசமானவ, நிறைய பேத்த வெளக்கமாத்தால விளாசிருக்கேன், உனக்கு இங்கிலீசு தெரியுமாயாஅ,...( கோ, கோ, அப்புறம் கோஓஓஓ,... தம்பி பரத், திருப்பரங்குன்றத்தில் வந்து வழி கேட்கும் வெளிநாடுகாரர்களிடம்)


தம்பி பரத், அ. வாதியின் அடியாட்கள் (அண்ணன் பரத் என்று நினைத்து) வேற்றுமை தெரியாமல் அடிக்க, அண்ணனுக்காக அ. வா. யிடம் அவனை ஒண்ணும் பண்ணிடாதீங்க என்று கேட்டபின்பும், அவனை அ. வா போட்டுத்தள்ளிவிட ( பரத்தும், பாவனாவும் ஓடிப்போகும் பாதிவழியிலேயே மடக்கி, பாவனா, முதலில் அதிர்ச்சியடைந்து பின்னர் தானே தூக்கில்,...) அண்ணன் பரத்தின் உடல் பிணக்கிடங்குக்கு வருகையில் துடித்து அவரை சந்திக்க அனுமதி கேட்டு (தன்னை மறைமுகமாக ஆயுதங்களுக்காக சோதனை செய்வதை அறிந்து) எதிர்கட்சிக்காரங்க, நானுன்னு நெனச்சு போட்டுத்தள்ளிடாங்கண்ணே (இவர் எதிர்கட்சிகார ஆள் ஒருவரை செருப்பால் முன்பொருதரம் அடித்திருக்கிறார்) குமுறி, பிணக்கிடங்கிற்கு அவர் ஆறுதல் சொல்ல வருகையில் சந்தியா உள்ளறைக்கதவை வெளிப்பக்கம் தாள்போட அவரையும் இரண்டு அ. ஆ (அடியாட்களை) யும் போட்டுத்தள்ள, இறுதியில் காவல்துறை அவரை வேனில் அழைத்துச்செல்வதுடன் முடிகிறது.ஒரு ஆறுதல்:


இந்தப்படத்தில் அரசியல்வாதி தன் மனைவியை/மகளை பளிரென்று அடித்து, உதைத்து, பிடித்து தள்ளிவிட்டு, நீ உள்ளே போ தலையிடாதே என்றெல்லாம் கத்துவதில்லை.
காத்து கருப்பை நம்பும் பாவனாவின் பாட்டி அப்பாவியாக இருக்கிறார். நிஜப்பாட்டி இன்னும் கொஞ்சம் சுட்டியாக இருந்திருப்பார்.


சந்தியா ஏட்டறிவு இருப்பவராக காட்டப்படுவதில்லை; பளிச்சென்று பேசுகிறார், காதலினிடம் காதல் இருந்தாலும் தெளிவுடன் இருக்கிறார். குடிகார அப்பனை ஆவேசத்துடன் அடிக்கிறார், ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார், சம்திங் கேட்கும் சிப்பந்தியிடம், எங்களுக்கும் இங்க ஆளு இருக்காங்க, (கம்பவுண்டர் என்று பீலா விட்ட பரத்) தெனாவட்டாக இருக்கிறார் ( அதற்காக ஆளை ஏமாற்றுவதாகவோ, கெட்டவார்த்தைகளை சரளமாக பேசுபவராகவோ அவரைச் சித்தரிக்காததற்கு நன்றி- ) மிக நாகரிமாக பேசுகிறார், எந்த பிரச்சனையும் எதிர்கொள்கிறார், இறுதிக்கட்டத்தில் தம்பி பரத் அண்ணனைபோல் பிணமாக படுத்துகொள்ள, அ.வா, அ. ஆ நுழைந்தவுடன் வெளிப்பக்கம் தாள் போடுகிறார், காதலை காவல்துறை மதுரைக்கு வேனில் அழைத்துச்செல்லும்போது கூடப்போகிறார். அழவில்லை, தைரியமாக இருக்கிறார்.


என் கேள்வி ஒன்றுதான்.ஆசிரியர் ஆகும் லட்சியத்தையும் அடிக்கடி பரத்திடம் சொல்லும் பாவனா, ( தோழி ஹாஸ்டலுக்கு போய் கம்பைண்ட் ஸ்டடி பண்ணுகிறார்) ஏன் தற்கொலை செய்துகொள்கிறார். அவருக்கு பணம் இருக்கிறது, அப்பாம்மா இருக்கிறார்கள். எல்லார் அன்பும் இருக்கிறது, (காதலனைக்கொன்றார்கள்- அதிர்ச்சியாகத்தான் இருக்கும், கையையே வெட்டிய புண்ணியவான்கள்)சந்தியாவிற்கு படிப்பு இருப்பதாகத் தெரியவில்லை, பணம், சுத்தமாக இல்லை, குடிசையில் தன்னுடன் இருக்கும் குடிகார அப்பாவுக்கும் (மகள் என்ற பாசத்துடன் இருக்கிறார்) உடல்நிலை மோசம் என்று மருத்துவர் சொல்லிவிட்டார், அம்மா, பாட்டி, தாத்தா யாரும் கிடையாது, அவரை கல்யாணம் செய்ய ஆசைப்படுபவர் கொலைக்குற்றத்திற்றம் செய்திருக்கிறார்.


சந்தியா (கதாபாத்திரம்) எந்த சூழ்நிலையையும் தன்னம்பிக்கையுடன் சமாளிப்பாள். அவளிடம் நாணயம் இருக்கிறது, ( இரவலை உடனே திருப்பித்தருகிறாள்), தைரியம் இருக்கிறது, தனக்கு ஆறுதல் சொல்ல பெண்கள் இல்லையே என்ற கவலை இல்லை, நட்புவட்டம் அமைத்துக்கொள்கிறாள்.


படிப்பறிவு பாவனாவிற்கு என்ன வழியைக் காட்டியது?


இதுதான் யோசிக்கவேண்டியிருக்கிறது.


அடுத்தது கால் திரைப்படம். அவ்வளவுதான் பார்க்கக்கிடைத்தது.


சமூகசேவையில் நாட்டமுள்ள மென்பொருள் மேலாளர் மாதவன், நண்பன் வீட்டிற்குத் தன் பெற்றோரின் திருமணவிழாவிற்கு அழைப்புவிடுக்கச்செல்கிறார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே, மாடியிலிருந்து நண்பன் மனைவி வருகிறாr ( வான்னு சொல்லக்கூடாதா? அதான் வந்தாசுல்ல அப்புறம் என்ன? - புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.)
விழா நாளன்று முதியோர் இல்லத்தில் மாதவன் . ஓரத்து அறையில் ஒளிந்துகொண்டு நண்பனின் பெற்றோர்.

தனிமையில் மாதவனிடம் விக்கி விக்கி நடந்ததைச்சொல்லி அழும் நண்பன்.

நண்பன்:

நீ ஒன்பது மணிக்குதான் எழுந்துக்குற, எங்கம்மாதான் சமையல், வீட்டுவேலை எல்லாம் (கூட்டி மெழுகி) , அப்பா நம்ப குழந்தையை பார்த்துக்குறார், என்ன உனக்கு)


அவன் மனைவி:

அதெல்லாம் தெரியாது, ஒன்னு அவங்க இருக்கணும் இல்ல நான்)ஒன்னும் வலுவான காரணம் இருக்கறதா தெரியல; அவங்க இருக்கும் வீடு, பெரிய மாடி பங்களா; நண்பனுக்கு வேலை வாங்கிக்கொடுத்ததே மாதவன்தான் என்று சொல்கிறார்கள். அப்படியானால் வீடு?தொலைக்காட்சியில் பெண்கள் தினம் கொண்டாடுகிறார்கள். சிறப்பு நிகழ்ச்சியில் பெண் முன்னேற்றத்தை, சிறிய பாடலுடன் சின்னத்திரையில் காட்டுகிறார்கள். முதலில் கனிமொழி வருகிறார், அடுத்தது சல்மா, பிறகு தமிழச்சி. அடுத்து விவசாயக்கல்லூரி மாணவி பாவனாவின் நேர்காணல் ( அவர் துறையில் சிறப்பான சாதனை செய்ததற்காக)


பேட்டியின் போது, படிப்பிற்குப்பின் பாவனா, முதலில் கணவனுக்கு நல்ல மனைவியாக இருப்பேன், என் குழந்தைக்கு நல்ல தாயாக இருப்பேன், மாமியார் மாமனாரிடம் நல்ல பெண்ணாக இருப்பேன் என்று சொல்லும்போதே
( பின்னணியில் பிருமாண்டமான பங்களாவில் அம்மா, அப்பா, அண்ணன்கள், அண்ணிகள் (அகல பொற்கரைப்பட்டுசேலைகளுடன்) குழந்தை குட்டிகள் என்று பாசக்கார குடும்பத்தில் வளர்கிறேன் என்று விளக்கத்துடன்) எதேச்சையாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மாதவனிம் முகத்தில் பரவசம் (இந்த வசனம் அவரைக்கவர்ந்துவிட ) பாவனாவைத் தேடிக் கண்டுபிடித்து, நிழலாய்த் துரத்தி,துரத்தி(கால்கேட் புன்னகை மாறாமல்) பேச ஒரு நிமிடம் என்று கெஞ்சுகிறார்.பாவனாவுக்குப் பிடிக்கவில்லை. மாதவன் விடுவாரா, போடு, ஏகப்பட்ட போன்கால்கள் எல்லா நண்பர்களுக்கும். அப்புறம் என்ன, பாவனாவின் வகுப்பறையில் வந்து சொல்கிறார்கள்.


பாவனாவிற்கு வந்த கடித மூட்டையை, மன்னிக்கவும் மூட்டைகளை, அவிழ்த்தால் பாஸ்கெட்பால் மைதானம் பரப்பு முழுதும் நிறையும் அளவிற்கு முழநீள வாழ்த்து அட்டைகள். மாதவனுக்காக ஒரு நிமிடம் பேச விண்ணப்பித்து வாழ்த்து அட்டை அனுப்பியிருக்கிறார்கள் நண்பர்கள்.

பாவனாவின் தோழிகூட அவரை ஒருமாதிரி பார்க்கிறார்.அதன் பின் நான் படத்தைப்பார்க்கவில்லை.


அதனால் என்ன? இரண்டாவது பாதியை முழுதும் ஊகிக்காவிட்டாலும், இந்த மேட்டர் மட்டுமாச்சும் எப்படி போயிருக்கும் என்று கூறுகிறேன். இது முற்றிலும் என் சொந்தக் கற்பனையே.


சூழலியல் மீது மிகுந்த அக்கறை கொண்ட பாவனாவிற்கு எ4 அளவு வாழ்த்து அட்டைகள் ஆயிரக்கணக்கில் வந்தது கோபத்தை/வேதனை உண்டுபண்ணியிருக்கும்; அதற்கு விசிறி வீசினால்போல் மாதவன் ஆயிரக்கணக்கான இளைஞர்களை சிபாரிசுக்கு அழைத்து வந்தது, தொடர்ந்து கார்னர் செய்துகொண்டே இருப்பது எரிச்சலைக்கிளப்பி, கா என்று யார் ஆரம்பித்தாலும் ஒரு முறை முறைத்துவிட்டு ஆராய்ச்சித்துறையில் ஈடுபட்டு ஒரு பெரிய விஞ்ஞானியாகி நாட்டிற்கு பெருமை சேர்ப்பார். சரிதானே. அல்லது வேறு புதுமாதிரி ஆனால் வெறுப்பேத்தாத அணுகல் உள்ள வாலிபனை விரும்புவார். தொடர்ந்து தன் துறையிலும் சாதனை புரிவார்.


சரிதானே மக்களே!


படத்தை முழுவதும் பார்த்தவர்கள் முடிந்தால் திரைகதை என்ன என்று சொல்லவும்.


நான் பார்த்த இந்த திரைப்படத்தில் வசனத்தைப் பற்றிச்சொல்லவேண்டும்.


ஒரு உதாரணம்.


மாதவன் அம்மா:

எப்படா திருமணம் செஞ்சுக்கப்போறெ, இன்னும் நாலு வருஷம் போனா, பொண்ணுங்க, அண்ணேன்னு கூப்பிடப்போறாங்க


மாதவன்:

இப்ப எனக்குத் திருமணம் வேண்டாம்மா (இன்னும் பாவனாவைப் பார்க்காததால்)


மற்றொரு காட்சியில் குப்பாயக்கனவான்களுடன் (அதாங்க கோட் சூட்) உரையாடுகிறார்;

பிரும்மாண்டமான ஐந்து நட்சத்திர மென்பொருள் அலுவலகத்தில் ( கண்ணாடித்தரை) உதவியாளர் மாதவனிடம், இதோ உங்கள் பயணச்சீட்டு என்பார்.


படத்தில் ஒரு வார்த்தை மன்னிக்கவும் ஒரு சொல் கூட ஆங்கிலம் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.


வாழ்த்துக்கள் படத்தை எடுத்தவர்களே!


(இதுதான் படத்தின் பெயர்)


ஒரு ஆங்கிலச்சொல்கூட இல்லை. இது செயற்கையாக இருக்கிறதே, என்று எண்ணும்படியாகத்தான் இருக்கு படத்தைப்பார்க்கையில். ஆனால், ஒரு சொல்லை உள்ளே விட்டால், அது டெங்கி கொசுபோல் பல்கிபெருகிவிடும். அப்புறம் தமிழ் நிகழ்ச்சிகளில், மற்று தமிழ் உரையாடல்களில் ஒரு பத்தி பேச்சுக்கு ஒரு வார்த்தை தமிழ் என்று ஆகிவிடும், அப்புறம் அப்படிப் பேசுபவர்களை இந்தப் படத்தை முதலில் பார்க்கச்சொல்லலாம்.


எங்கெங்கோ சென்ற நம் தமிழும் நம் தமிழர்களின் நிலையையும் பற்றிப் பார்ப்போமா?


சும்மா சொல்லவில்லை. கரீபியன் கடலும் கயானாவும் புத்தகத்தைப் படித்த பின் இப்போதாவது படிக்க எடுத்தேனே என்று நினைத்தேன்.

தமிழ் தாய்மொழி ஆனால் எழுதப்படிக்கத் தெரியாது என்பவர்கள் தயவுசெய்து தெரிந்த யாரையாவது பிடித்து வாசிக்கச் சொல்லுங்கள்.


(மாணவர்கள் கூடப்படித்துக்காட்டலாம்)

எளிய நடை, ஆழமான ஆய்வு இரண்டும் கைக்கோர்க்காது என்று யார் சொன்னது.

ஆனால் இது தமாஷ் பண்ணும் நேரமில்லை.

பஹாமாத் தீவுகள், ஜமைக்கா, பிரிட்டிஷ் கயானா, கரீபியன் தீவுகள் இங்கெல்லாம் சென்று ஆய்வு செய்து எழுதப்பட்ட பயணநூல்.


பஞ்சம் பிழைக்கப்போய் அடிமையான தமிழர்களின் நிலை குலை நடுங்குகிறது.


(ஏமாற்றி/ வலுக்கட்டாயமாக)
பிரிட்டன், பிரான்ஸ் இங்கெல்லாம் இருந்த வெள்ளை முதலாளிகள் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் தீவுகளையே சொந்தமாக வைத்திருந்தார்களாம். அடிமை வேலை, விவசாயம் செய்ய வரவழைக்கப்பட்ட கறுப்பர்கள், சீனர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லையாம், (12 கப்பல்களில் அழைத்துச் செல்லப்பட்ட சீனஅடிமைகளில் %90 தற்கொலை செய்துகொண்டார்களாம்) கடுமையான குளிர், பூச்சிகளின் தொல்லை, ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்) உடனே இந்தியர் மீது பார்வையைத் திருப்பினார்களாம்.


தகுதிகள்: எழுதப்படிக்கத் தெரிந்திருக்கக்கூடாது, ஆரோக்கியமான உடற்கட்டு வேண்டும், கலகம் செய்யக்கூடாது- இதற்கு முற்றிலும் பொருந்தியவர்கள் தமிழர்கள். வங்காளிகள்கூடப் போயிருக்கிறார்கள் போலிருக்கு ஆனால் தமிழர்கள்தான் அதிகம்.

காய்ச்சலிலும் வேலைசெய்யாவிட்டால் கசையடி, எந்த நாட்டில் இருக்கிறோம் என்று கூடத் தெரியாது. பெண்கள் நிலை படுபயங்கரம், குழந்தைகள் நிலை கேட்கவே வேண்டாம். குடும்பத்தினரை வெவ்வேறு தீவுகளுக்குப் பிரித்து அனுப்புவது, அடையாளங்களை அழிப்பது, (பெயர் மாற்றப்படுவது, நம்பிக்கைகளை அழிப்பது) பின் மாற்றங்கள் வந்து அவர்கள் தாயகம் திரும்பிவர நினைத்தபோது தந்திரங்களை கையாள்வது,...
குழம்பை இன்னும் கொளம்போ என்கிறார்களாம்.பயணம் என்றால் ஏதோ உல்லாசப்பயணம் போல் அல்லாமல் வலுக்கட்டாயமாக மறுநடவு செய்யப்பட்ட வேர்களைத் தேடி 1953 ஆம் ஆண்டு ஆறுமாதங்கள் ஆய்வுப்பயணம் செய்த திரு ஏ.கே. செட்டியார் இன்னும் பல பயணநூல்கள்,
.
ஆய்வுப்படங்கள ஆக்கியிருக்கிறார். இவருக்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்ததா, தெரியவில்லை.


கரீபியன் கடலும் கயானாவும்-
வெளியீடு-அகல்

342, டி.டி.கே.சாலை,

இராயப்பேட்டை,
சென்னை 600 014
தொலைபேசி 28115584

ஆங், புக்கர் விருது என்று எழுதியிருந்தேனே, அது இங்கே எங்கே வந்தது?

புக்கர் குடும்பத்தினர், பிரிட்டிஷ் கயானாவில் ஆயிரக்கணக்கான அடிமைகளை வைத்து கரும்புப்பண்ணை நடத்தி வந்தார்களாம். எப்படியிருக்கு பாருங்கள்.

Tuesday, April 22, 2008

கவிதை


அச்சடிக்கப்பட்டச் சொற்கள்


மெல்ல ஆடத் துவங்கி
ஒவ்வொன்றாகக்
கீழே விழுந்தன

அவித்தவை
பொறித்தவை
வதங்கியவை
வெதுப்பியவை
வறுத்தவை
என குழுக்களாய்ப் பிரிந்து
பயணம் செய்தன

பாதி வழியில்
தட்பவெப்பத்தால் அழுகிப் போயின

சமைக்காத சொற்கள்
இன்னும் உயிரோடு இருக்கின்றன
இயற்கை வர்ணம் பூண்டு
குழந்தைகளின் சொற்களைப் போல

Wednesday, April 09, 2008

வியாழன் விசிட் ,...

நன்றி Bee Morgan, ஜோதிபாரதி, பாண்டித்துரை.

பயணத்தை நீட்டித்தார் என்று வரக்கூடாதாம், பணியை நீட்டித்தார் என்று வரவேண்டுமாம்.
இந்த வாரம் நடந்த சில நிகழ்ச்சிகள்

சிங்கப்பூரில் தமிழ் மொழி விழாவை ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 27 வரை பத்து அமைப்புகள் இணைந்து கொண்டாடுகின்றன.

அதன் துவக்க விழா கதோலிக் தொடக்க கல்லூரி உள்ளரங்கில் சனிக்கிழமை 5 ஏப்ரல் மாலை 6-40 க்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.


சிறப்பு விருந்தினர் மூத்த துணை அமைச்சர் திரு .ஈஸ்வரன் .


அப்சரா நடனக்குழுவினர், சிங்கப்பூர் இந்திய நுண்கலை நடனக்குழுவினர், ரவீந்திரன் நாடகக்குழுவினர் ( நகைச்சுவை நாடகம் -அதில் சந்தனசாமி சாம் சந்தானம் ஆன கதை) தெமாசெக் தொடக்கல்லூரி நாடகக்குழுவினர்(அரங்கம் நாடகப்போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம்), பாடும் பறவைகள் இசைக்குழுவினர், கச்சிதமாக தங்கள் படைப்புகளை அளித்தார்கள்.


வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி பண்பாட்டு கழகம், லிட்டில் இந்திய வர்த்தகர் மற்றும் மரபுடமை சங்கம், சிங்கபூர் தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழர் பேரவை, மக்கள் கழக நற்பனி பேரவை, தேசிய நூலக வாரியம் மற்றும் தாய் மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகியவையே இந்த பத்து அமைப்புக்கள்.

6.4.08 ஞாயிறு காலாங் சமூக மன்றத்தில் கவிஞர் திரு இலந்தை ராமசாமி மிகச் சிறப்பாகப் பேசினார். கலித்தொகை, திருக்குறள் முதலியவற்றில் சில பாக்களில் புதைந்து கிடக்கும் அர்த்தங்களை அடையாளம் காட்டியது புதிய செய்தி.

சர்க்கரை, சீனி தமிழ்ச்சொல் அல்ல, வெல்லம் மட்டுமே தமிழ்ச்சொல் என்று அன்று தெரிந்துகொண்டேன்.

மற்றொரு பேச்சாளர் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான திரு பாலன் அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூல் வெளியிட்டிருக்கிறார். இதில் புதுமை என்ன- அப்படியே இரண்டு வரி ஆங்கிலமாக மொழிபெயர்க்காமல், கூட கொஞ்சம் வரிகளில் ஒவ்வொரு திருக்குறளையும் மொழிபெயர்த்திருப்பதைச் சொன்னார்.
(A path to purposeful living- V. P. Palan)

தமிழைப் பற்றிய நிறைய செய்திகள் பார்த்தோம்.

அடுத்து ஒரு கதை

எ·ப். கெ. லிம்மின் மூன்றாவது கண்


ஜேனட்டின் முன்குறிப்பு:


இந்தக் கதையில் வரும் எ·ப்.கெ. லிம் அவர்களை நான் நேர்காணலுக்காகச் செல்லும்வரை அவர் யார் என்றே எனக்குத் தெரியாது.

நேரில் பார்த்தபோது அவர் எல்லோரையும் போலவே இருந்தார். மத்திம உயரம், சுத்தமாக வெட்டப்பட்ட தலைமுடி, சிறிய ஆனால் ஊடுறுவும் கண்கள், சுத்தமான கசங்கலில்லா ஆடைகள் ,பளபளக்கும் காலணிகள்.

அவர் வீட்டில் உரையாடினோம். அவர் நடத்தும் பேக்கரியின் கிளமெண்ட்டிக் கிளையைச் சுற்றிக்காட்டினார்.

ரா·பிள்ஸ் கல்விக்கூடத்தின் முன்னாள் மாணவர், பள்ளி,கல்லூரி படிப்பில் தங்கப்பதக்கங்கள் வாங்கியவர். சிங்கப்பூரின் பிரபல பெரிய உணவு தயாரிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கூடத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பத்தாண்டுகள் இருந்த பின் கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்தமாக பேக்கரி நடத்துகிறார். அவரை நேர்காணல் செய்ய வேண்டும் - என் தலைமையதிகாரி எனக்கு இவ்வளவே கூறியிருந்தார். நான் உற்சாகத்துடன் திரு எ·ப்.கெ.லிம்மைத் தொடர்பு கொண்டபோது, மிகுந்த தயக்கத்திற்குப்பின்னர்தான் ஒப்புதல் தந்தார்.

மிக மிக நிதானமாகப் பேசினார். நிதானம் என்றால் இதுவரை இத்துணை நிதானத்தை நான் பார்த்ததில்லை. நானும் பத்திரிகைக்கு கொடுக்கவேண்டிய நேர்காணலின் ஒரு நகலை மின்மடல் மூலம் அனுப்பியிருந்தாலும் என்னை ஒரு கேள்வி உறுத்திக்கொண்டிருந்தது.

அவருடன் நான் நடந்து சென்றபோது, அவர் பெரும்பாலும் தன் காலணியைப் பார்த்தவாறு நடந்தார். ஒருவேளை அதன் பளபளப்பை உறுதி செய்துகொள்கிறாரோ என்று முதலில் நினைத்தேன். ஆனால் காரணம் அதுவன்று வேறு ஏதோ ஒன்று என்று மனதில்பட்டது.

அதுகுறித்து தனியாக அவரிடம் பேசநினைத்து மீண்டும் அவரைச் சந்தித்தேன். இதை அவர் விரும்பினால் ஒழிய வெளியேசொல்லமாட்டேன் என்று சொன்னேன்.

என் கைபேசியை அணைத்துவிட்டு கைப்பையில் வைக்கும்போது என் வாலட் (பர்ஸ்) கீழே விழுந்தது. இது உங்கள் ஆண்ட்டி கொடுத்தது அல்லவா என்றார். யு.எஸ்ஸில் லாரா ஆண்ட்டி எனக்கு பரிசளித்த வாலட் அது. ஆண்ட்டி இப்போது உயிரோடு இல்லை. பல மாதங்களுக்குப் பிறகு சென்றவாரம்தான் அதை உள்ளிருந்து எடுத்துப் பயன்படுத்தத் துவங்கியிருந்தேன்.


அவரிடம் கேட்டேன். நீண்ட மௌனத்திற்குப் பின் பேசத்துவங்கினார்.

இனி கதைக்குச் செல்லலாம்:

இதோ அவர் வார்த்தைகளில்:


என் இளமைக்காலம், அச்சம், குழப்பம், துணிவு, தனிமை,பாசம் இவற்றின் கலவையாகவே இருந்தது. அப்பா அரசுப்பணியில் முதனிலை அதிகாரி, அம்மா சட்டம் பயின்று சொந்தமாக சட்ட ஆலோசனை நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தார். என் ஆ-மா தான் (பாட்டி) வீட்டில் என்னைப்பார்த்துக்கொண்டிருந்தார்.


வீட்டில் பணிப்பெண் யாருமில்லை. பெற்றோர் இரவு உணவு மட்டும்தான் வீட்டில் உண்பார்கள், அதுவும் சில நாட்கள் மட்டுமே. படிப்பில் முதல் மாணவன், பாட்டியின் செல்லப்பேரன், வெரி கொயட் என்று பள்ளியிலும், அக்கம்பக்கத்தினரும் சொல்வார்கள். மிகக் குறைவான நண்பர்கள். இப்படித்தான் என் இளம் பருவம் இருந்தது.


எனக்கு அப்போது பத்து வயது இருக்கும். ஒரு முறை என் ஆமாவுடன் அவர் தோழி ஒருவர் வீட்டிற்கு போயிருந்தேன். அவர் வீட்டிற்கு ஆமா பலமுறை சென்றிருந்தாலும் நான் அவர்கள் வீட்டிற்குப்போவது அதுவே முதல் முறை. நான் ஒரு புத்தகத்தைக் கையில்எடுத்துக்கொண்டு நகர்ந்தேன்.ஆ-மா தோழியுடன் மாஜோங் விளையாட்டு ஆடத் துவங்கியிருந்தார். இனி சில மணி நேரங்களுக்கு அவர்கள் அதிலேயே மூழ்கிவிடுவார்கள் என்பதை நான் அறிந்திருந்தேன். அவர்கள் வீட்டு பின்புறத்தில் தோட்டம் இருந்தது. வேலி போட்டு வைத்திருந்த அந்த தோட்டத்தைப் பார்க்க எனக்கு ஆவலாக இருந்தது. சிறிய இடமாயிருந்தாலும் ஆமாவின் தோழி அதை மிகச் சுத்தமாக வைத்திருந்தார். பப்பாளி மரத்தில் பல காய்கள் கொத்தாகத் தொங்கிக்கொண்டிருந்தன. அவற்றை எண்ணத்துவங்கினேன்.


ஏதோ பேச்சுக்குரல் கேட்க, ஆமா அழைக்கிறாரோ என்று திரும்பினேன். பழுப்பு நிற 'சியோங்சாம்' அணிந்த இரு பெண்மணிகள் ஏதோ சுருக்குப் பைகளைக் காணோம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். என் அம்மா வயது இருக்கலாம். அவர்கள் தலையலங்காரம் மிகவும் பழங்காலத்ததாக எனக்குத் தோன்றியது. இருவரில் இடது பக்கம் நின்றிருந்த பெண்மணி மிகவும் கவலையுடன் இருந்தார், என்னைப் பார்த்து, கொஞ்சம் தேடித் தருமாறு வேண்டிக்கொண்டார். சரியென்று, நானும் தேடுகிறேன் என்று கூறியவாறு பின்புறம் இருந்த துடைப்பான், முறம் இவற்றையெல்லாம் திருப்பிப் பார்த்து நானும் தேடத்துவங்கினேன். செடிகளுக்கு உரமிடும் உரக்கூடை, வீடு கழுவும் உதவும் பக்கெட்டுகள், துடைக்கும் துணிகள், தட்டுமுட்டுபொருள்களை போன்றவைதான் அங்கங்கே தட்டுப்பட்டன.


ஆமாவிடன் கேட்டு உதவச்சொல்லலாமே என்று தோன்றியது. ஓடிப்போய் ஆமாவிடம் சொல்ல ஆமா, தோழியுடன் வந்தார்.
அந்தப் பெண்மணிகள் இன்னும் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களைச் சுட்டிக்காட்டினேன்.


நான் பப்பாளிகளை எண்ணிக்கொண்டிருநதபோது பார்த்தேன் என்றேன். ஆமாவும் தோழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

என்னை உள்ளே அழைத்துச்சென்று ஆமாவின் தோழி உள்ளிருந்து ஒரு தட்டில் துரியான் பழங்களையும், ஒரு கச்சாங் (கடலை) பொட்டலத்தையும் வைத்துக்கொடுத்தார். ஆமா என்னை தன் பக்கத்திலேயே இருத்திக்கொண்டார். என்னிடம் சில கேள்விகள் கேட்டார். ஆமாவிற்கு விளையாட்டில் கவனம் செல்லவில்லை. என்னை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.


என் கண்ணுக்குத் தெரிந்த பெண்மணிகள் ஆமாவிற்கு அவர்தோழிக்கும் தெரியவில்லை என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.

அதன் பின் இரண்டொருமுறை அந்த தோழி வீட்டிற்குப் போகும் வழியில் சில நேரங்களில் முழு உருவமாகவோ, நிழல் உருவமாகவோ, சில மனிதர்கள் என் கண்ணில் தென்படத் துவங்கினர்.


சில நாட்களுக்குப் பின்னர், என் ஆமா என்னை ஒரு சோதிடரிடம் அழைத்துச் சென்றிருந்தார். நான் மருத்துவர் ஆவேனா, ( என் தாத்தா அந்த காலத்து சீன பாரம்பரிய மருத்துவராம்) என் வருங்காலம் எப்படி இருக்கும், எனக்கு எத்தனை பிள்ளைகள், மனைவி, எப்படிப்பட்டவளாக அமைவாள், என்று பற்பல கேள்விகளை தயார்செய்துகொண்டு, என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்.


அன்று நான் அணிந்திருந்த உடை எனக்கு நினைவில்லை, ஆனால் ஆமா மூங்கில்தண்டு நிறத்தில் 'கெபயா' அணிந்திருந்தார். அவருக்குப் பாசாரில் (சந்தையில்) வாங்கிய வேலைப்பாடுகள் கொண்ட மரத்தாலான கொண்டை ஊசியை ஓடிவந்து எடுத்துக்கொடுத்ததுகூட நினைவிருக்கிறது.


அந்த சோதிடர் கிரேட்டா ஆயர் பகுதியில் இருந்தார். போகும் வழியில் ஆமா வுடன் பேசிக்கொண்டே வந்தேன். முன்பு அந்த இடத்தில், தூய்மையான தண்ணீர் ஊற்றுக்கள் நிறைய இருந்ததால் சுற்றுவட்டாரத்தில் நிறைய பல இனத்தவரின் வழிபாட்டுத்தலங்கள் இருந்தன என்றும், வண்டியோட்டிகள், மாட்டுவண்டிகளில் நீர் நிரம்பிய அண்டாக்களை ஏற்றி, மற்ற பகுதிகளில் இருந்த மக்களுக்கு விநயோகித்தனர், என்று ஆமா சொல்லிக்கொண்டே வந்தார்.


ஆங், சோதிடர் என்ன சொன்னார் என்று சொல்கிறேன், அவர் ஒன்றும் சொல்லமுடியாது என்று கூறி, கிட்டத்தட்ட எங்களை விரட்டிவிட்டார்.

ஆமா சோர்ந்து போகவில்லை, என்னை இன்னொரு சோதிடரிடம் அழைத்துச்சென்றார். அவர் ஆமாவிடம் அன்பாகப் பேசினார். ஆனால் எனக்கு சோதிடம் பார்க்க பணிவுடன் மறுத்துவிட்டார்.


ஆமா, மௌனமாக என்னை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். இரவு அம்மா அப்பாவிடம் சொன்னேன். அவர்கள் நாத்திகர்கள் என்றபடியால் இது அவர்களை பாதிக்கவேயில்லை. ஆனால் அன்பின் காரணமாக அவர்கள் ஆமாவிடம் இதுகுறித்து ஏதும் கேட்கவில்லை.


எனக்கோ அப்போதே பள்ளிக்கு ஓடிப்போய் என் யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற ஆவல் இருந்தது. இப்போதோ என் அவசரத்தை நினைத்தால் எனக்கே சிரிப்பாக இருக்கிறது.


நீண்டதூரம் காரோட்டிக்கொண்டு செல்வது என் அன்னைக்கு மிகவும் பிடிக்கும். ஆமாவும், நானும் என் பெற்றோருடன் எங்கள் வீட்டு காரிலேயே அண்டை நாடுகளுக்கு போய் வருவோம்.

கல்லூரி சென்றபின் நானும் ஓட்டத்துவங்கினேன். ஆமா என் பக்கத்திலும் என் பெற்றோர் பின்பக்கமும் அமர்ந்துகொள்வர். என் அம்மா, அப்பா, நான் என்று மாற்றி மாற்றி ஒட்டுவோம்.
மலாக்கா, சிங்மாய், டோக்கியோ, எங்கு சென்றாலும் இறந்தவர்கள் என் கண்களில் பட்டுக்கொண்டேதான் இருந்தார்கள்.


என் கண்ணுக்குப் புலப்பட்ட எந்த ஆவியுமே என்னை எந்த விதத்திலும் இதுநாள்வரை தொந்தரவு செய்ததில்லை.

நான் ஆராய்ச்சித்துறையில் பணிபுரிந்த காலகட்டத்தில் எங்கள் மூத்த அதிகாரி ஒருவர்மூலம், ஆமாவின் தோழி குடியிருந்த பகுதிக்குச் செல்லும் வழி, சிங்கப்பூர், ஜப்பான் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், பிணக்கிடங்காக இருந்தது என்ற செய்தியைத் தெரிந்துகொண்டேன்.


என் அவதானிப்புகள் அதிகமாக ஆக , என் நண்பர்கள் குறைந்துகொண்டே வந்ததுதான் நடந்தது. ஏற்கனவே எனக்கு மிக மிக குறைவான நண்பர்களே, பல்கலையில் இருந்தனர்.


போததற்கு, முதுகலை இறுதியாண்டில் பயிலும்போது உடன் பயின்ற மாணவனின் தந்தை மாண்டு போனார். விடுப்பு எடுத்துக்கொண்டு அவனுடனே அன்று முழுவதும் இருந்தேன். முக்கியமான சில பத்திரங்களின் தகவல்களும் அவை எங்கே வைக்கப்பட்டிருந்தன என்பதும் தெரியாமல் அவன் தாயார் திண்டாடுவதாகக் கூறினான். மறுநாள் பின் அவன் தந்தையாரை நான் என் சோதனைகூட அறை முகப்பில் பார்த்தேன். அவர் பெட்டகச்சாவி இருக்கும் இடத்தை என்னிடம் கூறியதால், என் நண்பனை உடனே அழைத்து விவரத்தைச் சொன்னேன். நான் சொன்னது சரியான விவரமே என்று அவன் வீடு சென்றதும் உறுதி செய்து எனக்கு நன்றி தெரிவித்தான்.


அதன் பின் அவன் தந்தையாரின் வேக் நிகழ்விற்குக்கூட (இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கில் உறவினர் நண்பர் கலந்துகொள்ளும் நிகழ்வு) என்னை அழைக்கவில்லை. நான் தொலைபேசியில் ஓரிருமுறை அழைத்தபோது இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ஒருவேளை என்னுடன் நட்பு பாராட்டுவது அவனுக்கு அச்சமாக இருந்திருக்கலாம்.நெடுஞ்சாலையோரம் நிற்பவர்களையோ, நடப்பவர்களையோ கொஞ்சம் போக்குவரத்தை கவனித்துச்செல்லுமாறு கூறியிருக்கிறேன். அதன் மூலம் அவர்களுக்கு ஏற்படப்போகும் விபத்துக்களைக்கூடத் தவிர்த்திருக்கிறேன்.


மருத்துவமனைகளுக்குச் செல்லும்போதுகூட என் கண்களில் நிழல் உருவங்கள் தென்பட்டுக்கொண்டே இருந்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் தாங்கள் இறந்ததைக்கூட அறியாமல் இருந்தனர். சிலர் ரோட்டிப்பராட்டா சாப்பிட்டுக்கொண்டோ, பீர் அருந்திகொண்டோ இருப்பார்கள். உனக்கு எதாவது சாப்பிட வேண்டுமா என்றுகூட கேட்டிருக்கிறார்கள்.


எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று எனக்கு சலிப்போ, பெருமிதமோ ஏற்பட்டதில்லை. எனக்கு எப்படி இப்படி ஆகிறது என்றோ, மருத்துவரைச் சந்திக்கவேண்டும் என்றோ , நான் நேரம் செலவழித்து ஆராய்ந்ததுமில்லை.


இதை உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்றோ புகழுக்கோ, பணத்துக்கோ நான் ஆசைப்பட்டதுமில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக நான் படைக்கப்பட்டிருக்கிறேன்.


என் பிறந்த தேதி 6-6-1966 மாலை ஆறு மணி ஆறு நிமிடங்கள், நிறைய ஆறு வருகிறது. பதினைந்து வயதிலிருந்து யோகப்பயிற்சி செய்கிறேன்.

தனியாக நடக்கும் போது சிலசமயம் எனக்குள் நான் பேசிக்கொள்வேன். இப்போது சின்னஞ்சிறு கைபேசியை வைத்துக்கொண்டு பலர் தனியே பேசிக்கொண்டே நடப்பதால், என்னையும் அவ்வாறே எண்ணிக்கொள்ளலாம்.


என்னை ஒரு பெண் டேட் செய்தாள், எங்கள் பணியிடத்தின் வேறொரு பிரிவில் வேலை செய்து வந்தாள். முதல் சந்திப்பு ஒரு உணவகத்திலும், அடுத்த சந்திப்பு புக்கிட் திமா பூங்காவிலும் நிகழ்ந்தது. என் அமைதியான குணம் தன்னைக் கவர்ந்ததாகச் சொன்னாள்.


நான் புத்திசாலித்தனமான ஒரு காரியம் செய்தேன். என் முன் தென்படும் நிழல்மனிதர்களைப் பற்றிஅவளிடம் சொன்னேன். அவர்கள் என்னைத் தொந்தரவு செய்யாவிட்டாலும், அவர்களைத் தவிர்க்க தரையைப் பார்த்து நடக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறேன் என்றும் இன்னும் சில நற்செய்திகளையும் சொன்னேன். அந்த சந்திப்பிற்குப்பின் அவள் என்னோடு தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டாள்.


இந்த 2008 ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களில் உச்சப்பயன்பாட்டை அறிந்து வைத்து பயன்படுத்தும் சிங்கப்பூரில் இப்படியும் ஒரு பிரகிருதியா என்று நினைத்தாளோ என்னவோ. அவள் ஜூரோங் அறிவியல் பூங்கா வளாகத்தில் வேறு வேலைக்குப் போய் விட்டாள் என்று பின்னர் கேள்விப்பட்டேன்.


எனக்கு எந்தப் பெண்ணையும் பார்த்து காதல் உண்டாகவில்லை. காதல் என்பதே ஹார்மோன்களின் சேட்டை என்று ஒரு எழுத்தாளர் கூறியிருந்ததாகப் படித்தேன். மேலும், முழுக்க முழுக்க பாட்டியின் கவனிப்பிலும், வெளியுலகில், ஆம் , இல்லை போன்ற அத்தியாவசியமான பேச்சுக்களிலும், தனிமையிலும் இருந்ததாலோ என்னவோ, பெண்களிடம் பழகும் முறையை நான் அறியவில்லையோ என்னவோ.


ஐந்து ஆண்டுகளுக்கு முன், பாட்டி இறந்தபின்னர், ஆராய்ச்சித்துறை வேலையிலிருந்து விலகிக்கொண்டு, பேக்கரி ஒன்றைத்துவங்கினேன்.


அதன் ஆரம்பக் காலகட்ட பணிகளில் நான் சந்தித்த ஒரு பெண் நல்லதொரு தோழியானாள். அவள் என்னைத் திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினாள்.


என்னைப் பற்றி சொன்னபோது அவள் குதூகுலம் அடைந்தாள்.அவள் பெயர் ஆ ஹ¤வே. என் ஆமாவின் பெயர். என் கண்களுக்கு அவள் என் ஆமாவைப்போலத் தோன்றினாள். அதனால் அவளை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை.


என் பேக்கரியின் ஏழு கிளைகளிலும் பணிபுரிய அனுபவமுள்ள பணியாளர்களுக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுத்தபோது, ஆட்டிசம், உடல் ஊனம், முதலியவற்றால் பாதிக்கப்பட்ட இளையர் சிலரையும் பணியில் சேர்க்கபோகிறேன் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பயிற்சி கொடுத்து வாழ்வில் காலூன்றவைக்க ஆசைப்படுகிறென் அவர்களுடன் இணைந்துபணிபுரிய வேண்டும் என்றபோது பெரும்பாலானோர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்கள்.


சின்னப்பையனாக நான் வாழ்ந்த காலத்தில் ஆ-மா அவர்கள் அங் கூ குவே, நிலவப்பம் போன்ற பலகாரங்களைச் செய்யும்போது கூட இருந்து, கழுவுவது, பொடிப்பது, அரைப்பது போன்ற வேலைகளை கூடமாட ஒத்தாசை செய்திருக்கிறேன்.


என் பெற்றோர் எப்படி இறந்தார்கள் என்று கேட்கிறீர்களா?

ஒரு விடுமுறை நாளில் பெற்றோருடன் ஜொஹ¤ருக்குக் கிளம்பினேன். நான் தான் ஓட்டினேன். பின் இருக்கையில் என் பெற்றோர் அமர்ந்திருந்தனர். சிங்கப்பூர் எல்லையைக் கடக்கும் முன் கனரக லாரி ஒன்று எங்கள் காரை மோத எனக்குச் சில சிராய்ப்புக்கள். காரின் பின்புறம் நொறுங்கிவிட்டது.


சிங்கப்பூர் இலக்கிய இதழ் 'நாம்' 2008 மார்ச்

Thursday, April 03, 2008

தொடரும் புன்னகை

விருந்தினர்
தலை
மறைந்த பின்பும்
வழியனுப்ப வந்த குழந்தை
வாயிலில் நின்று
புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

போதும் சிரித்தது
அவர்கள் போய்விட்டார்கள்
இவர்கள் சொன்னபோது
சுவிச்சு எங்கே
என்று கேட்டாள்.

Wednesday, April 02, 2008

இந்த வியாழன் -நாம் புதிய இதழ், ஒரு தந்தையின் கடிதம், கணவன் மனைவிக்கு இருக்கக்கூடாத குணங்கள், ஆசிரியர் ஏன் வரவில்லை, கோ·பி அன்னான் பயணம்

நன்றி, கமலாவின் மூலத்தைக் கண்டுபிடித்து அறிவித்த ஆயில்யன், சொல்லையும், சொல்லை பொருளோடு இணைத்தும் ஆய்வு செய்து ஆர்வம் காட்டிய ஜோதிபாரதி, சூரி, ரசித்த வைகை, கீதா.


நாம் புதிய இதழ், ஒரு தந்தையின் கடிதம், கணவன் மனைவிக்கு இருக்கக்கூடாத குணங்கள், ஆசிரியர் ஏன் வரவில்லை, கோ·பி அன்னான் பயணம்

'நாம்' என்ற தமிழ்க் காலாண்டிதழ் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் மார்ச் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

நான் என்பது தனிமை, நாம் என்பதே பெருமை என்று தலையங்கத்தின் இறுதியில் ஆசிரியர் குழுவினர் எழுதியுள்ளனர்.

சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நூல் அறிமுகங்கள், நேர்காணல் (புதிய மாதவியின் பளிச் பதில்களுடன்) சில கலை இலக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகளுடனும், அழகான அட்டைப்படத்துடன் இதழைப் பார்த்தேன். (பார்க்க - வார்ப்பு இணையதளம்)

நாமுடன் கைகோர்த்து நம்பிக்கை தந்த படைப்பாளிகள் மும்பை, சிங்கப்பூர், துபாய், உப்பிலிக்குடி, கீழப்பெரும்மலை, புதுப்பட்டி, சிவகங்கை, காளாப்பூர், சென்னை, நெம்மக்கோட்டை, குஜராத், கல்பூண்டி, பெங்களூர், செங்குணம் மற்று புலிக்கண்மாய் என்று பல ஊர்களில் இருக்கிறார்கள்.

நீங்களும் உங்கள் படைப்புகளை யூனிகோட் வழியாக அனுப்ப
naaamagazine@gmail.com

நாமிலிருந்து இரண்டு கவிதைகள்

தோன்றி மறைகிறதென்றாலும்
மறக்கமுடியாத
வானவில்லின் வண்ணங்களைப்போல்
ஒவ்வொரு நாளும்
எனக்காக காத்திருந்து
சென்ற இடங்களிலெல்லாம்
உனது வாசனையை உணர்ந்தேன்
எதிர்பாராமல் நிகழ்ந்ததைவிட
நிகழ்விலிருந்தகாட்சிகள்
ஒவ்வொன்றும்
எனக்குள் ஆழமாக இறங்கிவிட்டன
அந்த இடத்தில் நிற்கும்போதெல்லாம்
நானாக இல்லாமல் நீயாகிறேன்
தேய்ந்துவிடாமல் என்னை விட்டு
அகலமறுத்து
கைரேகையாய் இணைந்திருக்கும்
அந்தக் கணத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய்
தீர்ந்துகொண்டிருக்கிறேன்
ஒளித்து வைக்கமுடியாத
அந்த நிமிடங்கள்
தூக்கத்தையும் கலைத்த நிலையில்
மீண்டும் மலர்ந்துகொண்டேயிருக்கிறது
புதிய மலர்களாய்
-
சுகுணா பாஸ்கர்


2. அம்மா
நம் வறுமைதான்
உன்னை பிழைக்கவைத்தது
இல்லையெனில்
மம்மியாகியிருப்பாய்-

கோட்டை பிரபு


A father's instructions for life (to his son) , 42 (அறிவுரைகள்) படிக்கக்கிடைத்தது.

ஆண்டுக்கொருமுறையாவது சூரிய உதயத்தைப்பார், வாழ்க்கையை வியாபாரம் ஆக்காதே, மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு walkout பண்ணாதே, கண்களைப்பார்த்து பேசு, அனைவரையும் சமமாக மதி, சிரித்தமுகத்துடன் இரு, ஏமாற்றாதே, தவறை ஒத்துக்கொள், கோபத்தில் முடிவெடுக்காதே வகைகள் ஏராளம், ஏராளம்,

42 ஆவது அறிவுரை phone your mother என்று முடிகிறது

மகனுக்கு கொடுத்த அறிவுரைகள் மகள்களுக்கும் பொருந்தும்.


மகள்கள் எனும்போது பாரிமகளிர் நினைவுக்கு வருகின்றனர்.

பாரிமகள்கள் என்று சொல்கிறோமா இல்லையே, பாரிமகளிர்தான். பேருந்தைத் தவிர வேறு எங்கும் மகளிர் என்ற பதத்தைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.


சரி இந்த மகனும், மகளும் தத்தம் வாழ்க்கையைச் சிக்கலில்லாமல் வாழ தமிழிலக்கியத்தில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்த்தபோது கண்ணில் பட்டது.


தலைமக்கட்காகாத குணங்கள் ( தலைவனுக்கும் தலைவிக்கும்)


நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழிவன்சொல் பொச்சாப்பு மடிமையடு குடிமைஇன்புறல் எழைமை மறப்போ டொப்புமைஎன்றிவை இன்மை என்மனார் புலவர்


- தொல்காப்பியம்


நிம்பிரி என்றால் பொறாமை

கொடுமை என்பது பிறருக்கு கேடு செய்தல்

வியப்பு- தன்னையே தான் வியந்து பெருமைப்படுதல்

புறமொழி- புறங்கூறுதல்

வன்சொல்- கடுமையான சொல்

பொச்சாப்பு- தம்மைத்தம் நிலையில் வைத்துக்கொள்ளாமல் சோர்வுபடுதல், மறதியும் கூட - depression என்று சொல்லலாமா?

மடிமை- முயற்சியின்றி இருத்தல்

குடிமை இன்புறல் - தன் குலத்தினாலும், தன்குடிப்பிறப்பினாலும் தன்னை உயர்வாக மதித்து இன்புறுதல்

ஏழைமை- நுண்ணறிவில்லாத பேதைமை நிலை

மறப்பு- கற்றது, கேட்டது , பயின்றது ஆகியவற்றை மறத்தல்

ஒப்புமை- பெரிய விளக்கமே கொடுத்திருக்கிறார்கள் , இணையை (spouse) comparison செய்யாமல் இருப்பது


பள்ளிக்கூடத்தில் காதில் விழுந்த ஆங்கில உரையாடலின் ஒரு பகுதி


ஒன்றாம் வகுப்பு


சிறுவன் 1 : ஏன் இன்னைக்கு சயின்ஸ் மாஸ்டர் வரல

சிறுவன் 2 : ஸிக்காம் , வேறு எதுவும் யாரும் சொல்லல

சிறுவன் 1 : ஆப்பரேஷனா இருக்கலாம், சிறுவன்2: முதல்ல எக்ஸ்ரே எடுக்கணும், எடுத்துகிட்டாரோ என்னவோ

சிறுவன் 1 : அப்புறம் ஸ்கான், பண்ணுவாங்க, ஜெல்லி தடவி, மானிட்டரில் போட்டுகாட்டுவாங்க


ஒரு குட்டிக்கதை

ட் ராபிக் ஜாம்


"லேட்டானாலும் பரவாயில்லை இந்த ஹைவே எடுக்கணுமா ட்ராப்பிக்கைப் பார்த்தால் பயமாயிருக்கு"


"அம்மா, அம்மா இன்னும் வேகமா போங்க; பாருங்க நமக்கு பிறகு கிளம்பிய வண்டி தாண்டி இப்ப எங்கயோ போயாச்சு, அனிக்குட்டி கார்சீட் பெல்ட்டுடனே குதித்தாள்".


"அப்படியோ இப்ப நான் யார் சொல்லுவதைக் கேட்கறது? அப்பாவா பெண்ணா?" புன்னகையுடன் கேட்டாள்.


"போங்கம்மா அப்பா இந்த ரூட்ல ஓட்டவே மாட்டாங்க அதான் பயப்படறாங்க"


"அப்பாதான் இன்னிக்கு வின்னர்; கியரை மாற்றி காரை ஐந்நூறு மீட்டர் உயரத்திலிருந்து தரையில் இறக்கி ஓட்டினாள்.


இந்த வாக்கியத்தைப் படித்துப்பாருங்கள்:


கோ·பி அன்னன் தமது பயணத்தை ஒருநாள் நீடித்தார்
இதில் பிழை இருக்கிறதாம். என்ன பிழை/பிழைகள்?

Wednesday, March 26, 2008

வியாழன் விசிட் ,...

வியாழன் விசிட் என்று போடலாமா, ம்,. வியாழன் விருந்து அல்லது மருந்து,...எல்லோரும் ஓடிப்போய்விடும் முன் இந்த வியாழன் என்று துவங்கிவிட்டேன்.


ஒரு புதினம், ஒரு கவிதை, கமலா ஆரஞ்சு, மூல்யம்

'கிடங்குத் தெரு' நாவல் படித்தேன். முழுக்க முழுக்க சென்னை கோடவுன் தெருவின் வியாபார நுணுக்கங்களும், அதன் பின் உள்ள மனித மனங்களின் நிழலாட்டமும் இணைந்த வித்தியாசமான பின்னணியில் எழுத்தப்பட்டிருக்கிறது.

எழுதியவர் ஜெகதீஷ்- தமிழினி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.

'ஹவாலா பற்றிய விவரங்கள்-' அட இவ்வளவு விவரமாகவா' என்று ஆச்சரியப்படவைக்கின்றன. இதுவரை யாரும் எழுதாத, பாகிஸ்தானிலிருந்து தமிழகத்திற்கு வசிக்க வந்த சிந்திக்குடும்பங்களின் கதை மிகவும் இயல்பான மொழியில் பின்னப்பட்டிருக்கிறது. தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டியது. பெண்களின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒரே ஆறுதல் ஒரு 85 வயது தாயாரின் பாத்திரம். சும்மா கலக்கியிருக்காங்க.


எனக்குப் பிடித்த கவிதை


குழந்தையின் தோசை


எதனாலோ அந்த தோசையைப்

பிடித்துப்போனது அந்தக் குழந்தைக்கு.

அப்பாவின் கையில் உட்கார்ந்துகொண்டு

அந்த தோசையைச் சுட்டிக்காட்டி

அது தன்னுடையது என்று

முன்பதிவு செய்துகொண்டது.

இதை கவனிக்காமல் அந்த தோசையை

என் பார்சலில் வைத்துக்

கட்டிக் கொடுத்தார் கடைக்காரர்.

மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு

வெளியே வரும்வரை

திருட்டுப் பொருளை வைத்திருப்பதைப் போல்

என் கை நடுங்கிக்கொண்டிருந்தது.


-முகுந்த் நாகராஜன்(ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது)உயிர்மை பதிப்பகம்

ஒரு மேற்கோள்: ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இருமுறை சரியான நேரத்தைக் காட்டுகிறது,..

தொலைக்காட்சியில் ஒரு நேர்காணல் பார்க்க நேர்ந்தது. பேசுபவர் அடிக்கடி, இது மூல்யமா, அது மூல்யமா என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

நர்மதாவின் தமிழ் அகராதியில் மூலம் என்றால், அடிப்பகுதி, கிழங்கு, தொடக்கம்,காரணம், பிற ஒன்று தோன்றுவதற்கான ஆதாரம், மிகுந்தவலியை உண்டாக்கும் சிறு புடைப்புகள், பத்தொன்பதாவது நட்சத்திரம் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது.

மூல்யம் என்ற சொல் மூலையில் கூட இல்லை. (814 பக்கங்கள்)

இதைத்தேடும்போது மூங்கா என்ற சொல் கண்ணில் பட்டது, ஒரு வகை கீரியாம்.

எல்லாவகை கீரிகளையும் கீரி என்றுதான் சொல்லிவந்துள்ளேன். கீரியைத் தனியாகப் பார்த்தால் அது கீரி என்று கண்டுபிடிக்கத் தெரியுமா என்பதே தெரியவில்லை.

பாம்புடன் சண்டை போட்டால், போட வைக்கப்பட்டால், விலங்கியல் தோட்டத்தில் பெயர்பலகை இருந்தால், கீரி என்று கண்டுபிடித்துவிடுவேன்.

மூங்கா வகையின் விலங்கியல் பெயர் தெரியவில்லை. பண்டைய தமிழர்கள் எல்லாவகைகளுக்கு தனித்தனி பெயர் வைத்திருப்பார்கள் என்று வியந்துகொண்டே மூங்காவை மறந்துவிடக்கூடாது என்று நினைத்துகொண்டேன்.

நகுலம், பிலேசயம், அகிபுக்கு, அராவைரி இந்தச் சொற்களுக்கு அரும்பொருள் கீரி என்று இருக்கிறது. இவற்றில் சில வேறு உயிரினங்களையும் குறிக்கின்றன.

தமிழில் மூல்யம் என்று ஒரு சொல் இருக்கிறதா?

தமிழ்ப்பண்டிதர் ஒருவர் அப்படி ஒர் சொல்லே கிடையாது என்று திட்டவட்டமாகச் சொன்னார். ஆனால் பல இடங்களில் இச்சொல்லைக் கேட்டுவருகிறேன். நண்பரிடம் பேசும்போது சொன்னேன். என்னை வினோதமாகப் பார்த்தார். இப்படித்தானே எல்லோரும் சொல்கிறார்கள் என்றார்.

கொட்டாவி போல் இதுவும் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு அனுமதி இன்றி தாவிவிடுமோ? இதன் மூலம் தெரிந்துகொண்டேன், அதன் மூலம் செய்யலாம் என்றெல்லாம் சொல்ல ஏன் தயக்கம். காரணம் மிக எளிது, மூலம் என்றால் பைல்ஸ் வந்துவிடும் அச்சத்தில் மூல்யம் என்ற சொல் ஆட்சி பெற்றுவிட்டதோ என்னவோ?

சீனப்புத்தாண்டு நெருங்கிவிட்டாலே இங்கு, சிங்கப்பூரில் காய்கனிச் சந்தையில் அட்டைப்பெட்டிகளில் ஆரஞ்சுப்பழங்கள், மாண்டரின் ஆரஞ்சு என்ற பெயரில் அடுக்கிவிடுகிறார்கள். நம் கமலா ஆரஞ்சுபோலவே தான் இருக்கிறது.

சீனப்புத்தாண்டின் விவரங்களுக்கும், அன்று செய்ய வேண்டிய/கூடாத செயல்களும் நம்பிக்கைகளும் விக்கிபீடியாவில் ஒரு புத்தகம் போடும் அளவுக்கு இருப்பதால் நான் எழுதவில்லை.

திருநெல்வேலி அல்வா, மங்களூர் போண்டா, இதெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது. யாராவது கமலா ஆரஞ்சின் மூலத்தைச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

Monday, March 17, 2008

பத்து மணியும் ஆறுமணியும்

இறுக்கப்பிடித்த விரலை
மெல்ல அவிழ்க்கிறாள் அம்மா
உடலோடு ஒட்டியிருந்த
காதுகளை இழந்த பொம்மையை
எடுத்து
மேசையில் வைக்கிறாள்
போர்வையைச் சரி செய்துவிட்டுப்படுக்கப்போகிறாள்.

கண்விழித்ததும்
முதல் வேலையாக
பொம்மையை
எடுத்து
குழந்தையிடம் வைக்கிறாள்
உடலோடு ஒட்டி

Saturday, March 08, 2008

வேறொரு வெயில் நாளில்உதவி மேலாளரைப்

பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு


உணவு இடைவேளையில்


விர்ரென்று ஓட்டி வந்தேன் உன்வீட்டிற்கு.என்னை எதிர்ப்பார்த்து


வரவேற்று


சமையலறை அலமாரியிடுக்கில்


ஒளித்து வைத்திருந்த கவிதையை


வாசித்துக்காட்டினாய்


கவிதையைப் பற்றி ஏதும் தெரியாதபோதும்


எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது


உன் ஆர்வம் கண்டு.இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பூக்கும்


இந்த ரோஜாச்செடி என்று காட்டி


இன்று பூத்ததை முகர்ந்துபார்க்கச் சொன்னாய்நீ

எழுதிய வாசகர் கடிதம்


பிரசுரமான பத்திரிகையைக் காட்டினாய்நல்லதொரு உணவை உண்டவாறே


கொடுக்காய்புளி


தின்றதையும்


நீர்ப்பறவைக்கூட்டத்தை


எதிர்பாராமல் பார்த்த கதையையும்


பேசிக்கொண்டோம்.வேறொரு வெயில் நாளில் சந்திக்கலாம்


என்று மிக்க நிறைவுடன்


விடைபெற்ற போது,


நீ'


சாரி, வீடு சுத்தமாக இல்லை'


என்று வருந்தினாய்அதை நான் எங்கே கவனித்தேன்?'நான் பார்க்கவந்தது உன்னைத்தான்


உன் வீட்டையில்லை'


என்றபோது உன் கண்ணில் தெரிந்த


பரவசம்


பத்துநாட்களுக்குப் போதுமானதாக


உனக்கு இருக்கலாம்இப்போது நான் யோசிக்கிறேன்


உறுத்தாத மௌனங்களின் மொழியை


நிழலின் அடியில் அசைபோட்டபடி


உன் பயங்களைக் களைவது எப்படியென்று


Monday, February 25, 2008

இசையும் நடிப்பும்

இசை நிகழ்ச்சிக்குத்
துள்ளி வந்தாள்
இசை கற்றுக்கொள்ளும்
ஏழு வயது மகள்;

மூன்று மணி நேரம்
முழுதாய் முடிந்தபின்னர்
விரும்பும் பாட்டொன்றைச்
சீட்டெழுதிக் கேட்டாள்

நானும் பெரியவளானால்
நிகழ்ச்சி செய்து
குழந்தைகளின்
சீட்டுக்கெல்லாம் பாடுவேன்
என்றாள் என்னிடம்.

தொடர்ந்து பலர் கொடுக்க
அவரும் பாடினார்;

நேரம் பதினொன்றாயிற்று
தூங்கிப்போனாள்.
அவள் கேட்டபாட்டைப்
பாடகர் பாடவேயில்லை

மறுநாள் காலை,
அடடா, பாடினாரா
கேட்டாள்

சீட்டுக் கொடுத்த
சின்னப்பொண்ணுக்குப்
பாடாமல்போவாரா-
நீதான்தூங்கிட்ட கண்ணு
என்றேன்.

Saturday, February 09, 2008

உங்களுக்கு வயதாகிவிட்டது

டப்பாவிலிருந்து

எங்களைத் தூக்கி எறிந்தார்கள்.

ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால்

எலும்புமுறிவு இன்றி

கைக்கோர்த்தவாறு

இறங்கி அமர்ந்தோம்

புள்ளிகளாய்

எங்களைப் பிரித்துக்கொண்டு,

எங்கள் இடைவெளிகளை

நாங்களே தீர்மானித்தோம்

கோடுகளும் வளைவுகளுமாய்

எங்கள் உடல்களைநீட்டிக்கொண்டோம்

வளைத்துக்கொண்டோம்

கைகளால் இணைத்துக்கொண்டோம்

தள்ளாதவர்களைத் தூக்கிக்கொண்டோம்

யாவரும் வியக்கும் வண்ணம்

நாங்கள் பறக்கத் துவங்கினோம்

எங்களுடன் பறந்து வந்தது

நாங்கள் வளர்த்த

அவர்கள் மகிழ்ச்சியும்

Thursday, January 03, 2008

ஒரு உடனடி கதை

அம்மாவுக்கு காது கேட்கவில்லை


கொஞ்ச நாட்களாகவே எனக்கு மனசு சரியில்லை; அம்மாவுக்கு வரவர காது சரியாக கேட்பதேயில்லை;

தனியாகப் போகாதே எதாவது வண்டி கிண்டி மோதிவிடப்போகிறது என்று சித்தி எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்.

என் அப்பா பிரிந்ததிலிருந்து அம்மா தனியாகவே துணிந்து நின்று என்னை வளர்த்து வருகிறார். யாரிடமும் எதுவும் எதிர்பார்த்தது கிடையாது.

அம்மா தைரியசாலி, கடும் உழைப்பாளி.
காது கேட்பது குறைந்து வருவதுதான் எனக்கு கொஞ்சம் கவலை தருகிறது.

அம்மா வெளியே செல்லும்போது வண்டிகள் உரக்க ஹாரன் அடித்தாலும் அல்லது ஓட்டுனர்கள் கூவினாலும் அம்மாவுக்கு காதில் சரியாக விழுவதில்லையே.

நான் கவலைப் பட்டதற்கு ஏதுவாக ஒரு முறை வெளியே செல்லும்போது வழிதவறி போய்விட்டார். ரொம்ப நாழி வரவேயில்லை; ஒரு பக்கம் கவலைப்பட்டேன், மறுபக்கம் என்னையே நான் கொஞ்சம் திட்டிக்கொண்டேன்.

மதிய உணவுக்கு எனக்கு மீன் ரொம்பப் பிடித்திருந்தது, அதுவும் சாதாரண மீன் இல்லை; இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வகை, அதை அவ்வப்போது புதிசாக வாங்கி வரத்தான் அம்மா அடிக்கடி வெளியே போகவேண்டியிருக்கிறது. அது தின்பதற்கு சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும்.

சித்தி சொல்லிக்கொண்டிருந்தார், "இங்கே பக்கத்தில் கிடைக்கும் மீனை பிள்ளைக்கு வாங்கிக்கொடுத்தால் போதாதா, எதற்கு தினமும் தள்ளிப் போய் வாங்கி வரவேண்டும்? ஏ குட்டி, இதெல்லாம் உன் வேலையா?" என்னைச் செல்லமாக முறைத்துப் பார்த்தார்.

ஒரு முறை கடற்கரை அருகில் ஒரு இடத்தில் புதிதாகக் கிடைக்கிறது என்று யாரோ தெரியாமல் சொன்னதைக் கேட்டு வெறும் வயிற்றில் பட்டப்படைக்கிற வெய்யிலில் ஓடி, புடைக்கும் சூரிய ஒளியில் கண்கள் கூசி, காலருகில் இருந்த மீன் வலை கவனிக்காது போய் காலை இசைகேடாக மாட்டிக்கொண்டு காலை விடுவிக்க முடியாமல் திண்டாடி, பின் சில நல்லவர்கள் உதவியாக அம்மா தப்பித்துவிட்டார்.

இன்றும் அம்மாவைக் காணோம். கடவுளே இந்த ஒரு முறை என் அம்மாவைக் காப்பாற்றி விடப்பா. இதோ என்னைப் பார்த்துக்கொள்ள வந்த சித்தி புதுசுபுதுசாக ஏதோ சொல்லி என்னை வேறு கிலி படுத்துகிறார்.

காலம் கெட்டுக்கிடக்கிறதாம், பசி மயக்கத்தில் அம்மா சுருண்டுவிட்டால் யாராவது நாதியற்றவள் என்றோ பிணம் என்றோ நினைத்து அம்மாவின் உடல் உறுப்புக்களை யாராவது எடுத்துவிடாமல் இருக்க வேண்டுமாம்.

கடவுளே இப்படியுமா இருப்பார்கள் இவ்வுலகில்?
சே சே இருக்காது, இருக்கக்கூடாது, இந்தச் சித்தி அனாவசியமாக பீதி அடைகிறார் என்று எனக்கு அடிக்கடி தோன்றும் என்றாலும் அம்மா பத்திரமாக இருக்கவேண்டும் சாமி என்று கடவுளை வேண்டிக்கொண்டேன்.

சாமி எனக்கு இனி அந்த மீன் வேண்டாம் எதுவும் வேண்டாம் என் அம்மாதான் எனக்கு வேண்டும். இந்த ஒரு முறை அம்மா பத்திரமாகத் திரும்ப வேண்டும். சீக்கிரமாக நான் பெரியவனாக வேண்டும். அம்மா வந்து விடணும் சாமி என்று கண்ணை மூடிக்கொண்டு வேண்டிக்கொண்டேன்.

என் பிரார்த்தனை பலித்துவிட்டது. அம்மா பத்திரமாக வந்துவிட்டார். கடவுள் எவ்வளவு நல்லவர். என்னைப் போன்ற சின்னப் பையனின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு விட்டார். அம்மா என்னைத் தடவிக்கொடுத்தார்.

அம்மா வழக்கம்போல் முதலில் சாப்பாடு கண்ணு என்றார். அம்மா, நீங்களும் என்னோடு சாப்பிடுங்கள் என்றேன். சித்தி என் அம்மாவுக்கு வழக்கம்போல் அறிவுரை சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு போய்விட்டார்.

அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டி முடித்தபிறகு அம்மாவின் முதுகைக் கட்டிக்கொண்டேன். முதுகில் காயத்தின் தழும்புகள். எப்போது பட்டுக்கொண்டார் என்று தெரியவேயில்லை. ஓவென்று அழுதேன்.

கண்ணா அழாதே, என்னை யாரும் அடிக்கவில்லை கொஞ்ச நாளைக்கு முன்வெளியே போன போது தேடப்போனபோது ஒரு வண்டியில் துருத்திக்கொண்டிருந்த கூர் பிளாச்சு என்னைக் குத்திவிட்டது என்றார்.

வண்டிகளைப் பார்த்தால் என் நண்பன் ராசு குதிப்பான் குதூகலிப்பான், எனக்கோ கோபம் கோபமாக வருகிறது. "மருந்து போட்டீங்களா அம்மா?" என்றேன். அம்மா சிரித்தார். "சே இப்போதே நான் பெரியவனாகி அம்மாவுக்கு உதவி செய்ய முடியாதா. அம்மாவை தூக்கக்கூட என்னால் முடியவில்லை.

இயற்கை உபாதைகளைத் தவிர அம்மாவுக்கு பிரச்சனையே அம்மாவின் பருத்த உடம்புதான்;

இரண்டு மூன்று நாள் கரையோரமாக விழுந்து கிடந்தால் தன் உடல் எடையாலேயே நசுங்கி திமிங்கிலங்கள் இறந்துவிடும் என்று நீங்கள் படித்திருப்பீர்களே.


நன்றி
தமிழ்சி·பி.காம்2008 புத்தாண்டு மலர்