Wednesday, March 26, 2008

வியாழன் விசிட் ,...

வியாழன் விசிட் என்று போடலாமா, ம்,. வியாழன் விருந்து அல்லது மருந்து,...எல்லோரும் ஓடிப்போய்விடும் முன் இந்த வியாழன் என்று துவங்கிவிட்டேன்.


ஒரு புதினம், ஒரு கவிதை, கமலா ஆரஞ்சு, மூல்யம்

'கிடங்குத் தெரு' நாவல் படித்தேன். முழுக்க முழுக்க சென்னை கோடவுன் தெருவின் வியாபார நுணுக்கங்களும், அதன் பின் உள்ள மனித மனங்களின் நிழலாட்டமும் இணைந்த வித்தியாசமான பின்னணியில் எழுத்தப்பட்டிருக்கிறது.

எழுதியவர் ஜெகதீஷ்- தமிழினி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.

'ஹவாலா பற்றிய விவரங்கள்-' அட இவ்வளவு விவரமாகவா' என்று ஆச்சரியப்படவைக்கின்றன. இதுவரை யாரும் எழுதாத, பாகிஸ்தானிலிருந்து தமிழகத்திற்கு வசிக்க வந்த சிந்திக்குடும்பங்களின் கதை மிகவும் இயல்பான மொழியில் பின்னப்பட்டிருக்கிறது. தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டியது. பெண்களின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒரே ஆறுதல் ஒரு 85 வயது தாயாரின் பாத்திரம். சும்மா கலக்கியிருக்காங்க.


எனக்குப் பிடித்த கவிதை


குழந்தையின் தோசை


எதனாலோ அந்த தோசையைப்

பிடித்துப்போனது அந்தக் குழந்தைக்கு.

அப்பாவின் கையில் உட்கார்ந்துகொண்டு

அந்த தோசையைச் சுட்டிக்காட்டி

அது தன்னுடையது என்று

முன்பதிவு செய்துகொண்டது.

இதை கவனிக்காமல் அந்த தோசையை

என் பார்சலில் வைத்துக்

கட்டிக் கொடுத்தார் கடைக்காரர்.

மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு

வெளியே வரும்வரை

திருட்டுப் பொருளை வைத்திருப்பதைப் போல்

என் கை நடுங்கிக்கொண்டிருந்தது.


-முகுந்த் நாகராஜன்(ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது)உயிர்மை பதிப்பகம்

ஒரு மேற்கோள்: ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இருமுறை சரியான நேரத்தைக் காட்டுகிறது,..

தொலைக்காட்சியில் ஒரு நேர்காணல் பார்க்க நேர்ந்தது. பேசுபவர் அடிக்கடி, இது மூல்யமா, அது மூல்யமா என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

நர்மதாவின் தமிழ் அகராதியில் மூலம் என்றால், அடிப்பகுதி, கிழங்கு, தொடக்கம்,காரணம், பிற ஒன்று தோன்றுவதற்கான ஆதாரம், மிகுந்தவலியை உண்டாக்கும் சிறு புடைப்புகள், பத்தொன்பதாவது நட்சத்திரம் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது.

மூல்யம் என்ற சொல் மூலையில் கூட இல்லை. (814 பக்கங்கள்)

இதைத்தேடும்போது மூங்கா என்ற சொல் கண்ணில் பட்டது, ஒரு வகை கீரியாம்.

எல்லாவகை கீரிகளையும் கீரி என்றுதான் சொல்லிவந்துள்ளேன். கீரியைத் தனியாகப் பார்த்தால் அது கீரி என்று கண்டுபிடிக்கத் தெரியுமா என்பதே தெரியவில்லை.

பாம்புடன் சண்டை போட்டால், போட வைக்கப்பட்டால், விலங்கியல் தோட்டத்தில் பெயர்பலகை இருந்தால், கீரி என்று கண்டுபிடித்துவிடுவேன்.

மூங்கா வகையின் விலங்கியல் பெயர் தெரியவில்லை. பண்டைய தமிழர்கள் எல்லாவகைகளுக்கு தனித்தனி பெயர் வைத்திருப்பார்கள் என்று வியந்துகொண்டே மூங்காவை மறந்துவிடக்கூடாது என்று நினைத்துகொண்டேன்.

நகுலம், பிலேசயம், அகிபுக்கு, அராவைரி இந்தச் சொற்களுக்கு அரும்பொருள் கீரி என்று இருக்கிறது. இவற்றில் சில வேறு உயிரினங்களையும் குறிக்கின்றன.

தமிழில் மூல்யம் என்று ஒரு சொல் இருக்கிறதா?

தமிழ்ப்பண்டிதர் ஒருவர் அப்படி ஒர் சொல்லே கிடையாது என்று திட்டவட்டமாகச் சொன்னார். ஆனால் பல இடங்களில் இச்சொல்லைக் கேட்டுவருகிறேன். நண்பரிடம் பேசும்போது சொன்னேன். என்னை வினோதமாகப் பார்த்தார். இப்படித்தானே எல்லோரும் சொல்கிறார்கள் என்றார்.

கொட்டாவி போல் இதுவும் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு அனுமதி இன்றி தாவிவிடுமோ? இதன் மூலம் தெரிந்துகொண்டேன், அதன் மூலம் செய்யலாம் என்றெல்லாம் சொல்ல ஏன் தயக்கம். காரணம் மிக எளிது, மூலம் என்றால் பைல்ஸ் வந்துவிடும் அச்சத்தில் மூல்யம் என்ற சொல் ஆட்சி பெற்றுவிட்டதோ என்னவோ?

சீனப்புத்தாண்டு நெருங்கிவிட்டாலே இங்கு, சிங்கப்பூரில் காய்கனிச் சந்தையில் அட்டைப்பெட்டிகளில் ஆரஞ்சுப்பழங்கள், மாண்டரின் ஆரஞ்சு என்ற பெயரில் அடுக்கிவிடுகிறார்கள். நம் கமலா ஆரஞ்சுபோலவே தான் இருக்கிறது.

சீனப்புத்தாண்டின் விவரங்களுக்கும், அன்று செய்ய வேண்டிய/கூடாத செயல்களும் நம்பிக்கைகளும் விக்கிபீடியாவில் ஒரு புத்தகம் போடும் அளவுக்கு இருப்பதால் நான் எழுதவில்லை.

திருநெல்வேலி அல்வா, மங்களூர் போண்டா, இதெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது. யாராவது கமலா ஆரஞ்சின் மூலத்தைச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

Monday, March 17, 2008

பத்து மணியும் ஆறுமணியும்

இறுக்கப்பிடித்த விரலை
மெல்ல அவிழ்க்கிறாள் அம்மா
உடலோடு ஒட்டியிருந்த
காதுகளை இழந்த பொம்மையை
எடுத்து
மேசையில் வைக்கிறாள்
போர்வையைச் சரி செய்துவிட்டுப்படுக்கப்போகிறாள்.

கண்விழித்ததும்
முதல் வேலையாக
பொம்மையை
எடுத்து
குழந்தையிடம் வைக்கிறாள்
உடலோடு ஒட்டி

Saturday, March 08, 2008

வேறொரு வெயில் நாளில்



உதவி மேலாளரைப்

பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு


உணவு இடைவேளையில்


விர்ரென்று ஓட்டி வந்தேன் உன்வீட்டிற்கு.



என்னை எதிர்ப்பார்த்து


வரவேற்று


சமையலறை அலமாரியிடுக்கில்


ஒளித்து வைத்திருந்த கவிதையை


வாசித்துக்காட்டினாய்


கவிதையைப் பற்றி ஏதும் தெரியாதபோதும்


எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது


உன் ஆர்வம் கண்டு.



இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பூக்கும்


இந்த ரோஜாச்செடி என்று காட்டி


இன்று பூத்ததை முகர்ந்துபார்க்கச் சொன்னாய்



நீ

எழுதிய வாசகர் கடிதம்


பிரசுரமான பத்திரிகையைக் காட்டினாய்



நல்லதொரு உணவை உண்டவாறே


கொடுக்காய்புளி


தின்றதையும்


நீர்ப்பறவைக்கூட்டத்தை


எதிர்பாராமல் பார்த்த கதையையும்


பேசிக்கொண்டோம்.



வேறொரு வெயில் நாளில் சந்திக்கலாம்


என்று மிக்க நிறைவுடன்


விடைபெற்ற போது,


நீ'


சாரி, வீடு சுத்தமாக இல்லை'


என்று வருந்தினாய்



அதை நான் எங்கே கவனித்தேன்?



'நான் பார்க்கவந்தது உன்னைத்தான்


உன் வீட்டையில்லை'


என்றபோது உன் கண்ணில் தெரிந்த


பரவசம்


பத்துநாட்களுக்குப் போதுமானதாக


உனக்கு இருக்கலாம்



இப்போது நான் யோசிக்கிறேன்


உறுத்தாத மௌனங்களின் மொழியை


நிழலின் அடியில் அசைபோட்டபடி


உன் பயங்களைக் களைவது எப்படியென்று