Monday, January 19, 2009

சேகரிக்கப்பட்ட ப்ரியங்கள்

தளும்பி நிற்கும்

ப்ரியங்களின் கலயத்தைக்

கொணர்ந்தது

பிசாசுகளின் இருள்

நீ நீயாகவும்

நான் நானாகவும்

இருக்கக் கேட்டுக்கொண்டு





இக்குவனங்களில்

சேகரித்த ப்ரியங்கள் அவை



கொடுபல்லியாய் நீண்ட

நேசத்தின் கரங்கள்

உன்னை நானாகவும்

என்னை நீயாகவும்

ஆக்கத் துடித்துப்

பிணைத்துக்கொண்ட

தருணங்களில்

தள்ளாடிய கலயங்கள்

காலியாகிவிட்டன



வேறு இடங்களில்

வேறு வனங்களில்

ப்ரியங்களை

சேகரித்துக்கொண்டிருக்கின்றன


பிசாசுகள்


வடக்குவாசல் டிசம்பர் 2008


இக்குவனம்-கரும்புத்தோட்டம்

Friday, January 16, 2009

ஒரு தகவல்

அன்புள்ள வலைப்பதிவர்களே

வணக்கம்.
இப்போது நடந்துகொண்டிருக்கும் சென்னை
புத்தகக் கண்காட்சியில் என் முதல் கவிதைத் தொகுப்பு இருக்கிறது.

வெளியிட்டுள்ள பதிப்பகம்: உயிர்மை

புத்தகத்தின் பெயர்

நாளை பிறந்து இன்று வந்தவள்

என் மின்னஞ்சல் முகவரி
mathangihere@gmail.com

நன்றி

மாதங்கி



Wednesday, January 14, 2009

மலைகளின் பறத்தல்

முன்னொரு நாளில்

தோன்றியபோதெல்லாம்

இறக்கைகளை விரித்துக்கொண்டு

பறந்து கொண்டிருந்த மலைகளைக்

கெஞ்சிக் கேட்டேன்

பறப்பதை நிறுத்திவிடுங்களேன்



நிமித்த காரணம் சொல்லலாமே

அவை கேட்டன



எங்கள் குழந்தைகள்

தூக்கத்தில் எழுந்து அலறுகிறார்கள்

எங்களுக்கே சோறு

பலசமயங்களில்

இறங்குவதில்லை

சில பறவைகள்

உங்களைக் கண்டு

பறத்தலையே மறக்கத் துவங்கிவிட்டன

எங்கள் குழந்தைகள்

வெட்டவெளிகளில்

விளையாட மறுக்கின்றனர்

பயிர்த்தொழில் பாதிப்படைகிறது

எங்கள் நிம்மதி

உங்களால் போய்க்கொண்டிருக்கிறது



தங்களால் யாரும்

உயிரிழக்காத போதும்

எங்களுக்காக

தாமே தம் இறக்கைகளை

இற்றுப்போகசெய்து

பறத்தலை நிறுத்திவிட்டன மலைகள்



இன்று

யுத்த பேரிகைகளும்

போர்ச்சாவுகளும்

உறக்கத்தை கவ்வும் இவ்வேளையில்

மலைகள் சிரிக்குமோ அழுமோ



வடக்குவாசல் டிசம்பர் 2008

Tuesday, January 13, 2009

சன்னல் இல்லாத வீடு

எலியட்ஸ் பீச் மணலில்
மகனுடன் கோட்டை கட்டும்போது
அருகிலேயே விரலால்
வரைந்தாள் ஒரு சிறுமி,
பக்கத்தில் தங்கை.


வீடு வரைகிறாயா?


ஓம்.

அம்மா அதுக்கு கதவு சன்னல் எதுவுமே இல்லை


இருந்தால் திறந்து சுட்டுவிடுவார்கள்
சிறுமி சொனாள்.


அவள் தங்கை சொன்னாள்
சன்னல் கதவு இல்லாவிட்டால்
தெருவில் செத்துப்போன
அப்பாவைப் பார்த்து
எப்படிக் கூட்டிவார ஏலும்?