Monday, October 31, 2005

பல நாள் சந்தேகம் பஹேலியால் தீர்ந்தது--

பல நாள் புதிராக இருந்ததை பஹேலியில் உடைத்துவிட்டார்கள்.


கதைகளில் பூதம் அல்லது பேய் செயற்கரிய செயல்களையெல்லாம் செய்யும் ஆனால் ஒரு குடுவையில் புகுந்தபிறகு மூடிவிட்டால் வெளிவர முடியாது. முரண்பாடாக இருக்கிறதே என்று நினைப்பேன். பஹேலியில் இதை உடைத்துவிட்டார்கள்.


ஹிந்தி திரைப்படம் பஹேலியில்- பணத்தில் குறியாய் இருக்கும் வியாபாரத் தந்தை திருமணமான (இளைய மகன்) மறுநாளே மகனை வியாபார நிமித்தம் 5 ஆண்டுகள் வெளியூருக்கு அனுப்பிவிடுகிறார்.


கிடைத்த சிலமணிநேரங்களில் மனைவியை தூங்கச்சொல்லிவிட்டு கணக்குகளை கண்விழித்து பார்க்கிறான் மகன். புது மனைவிக்கு ஆறுதல்- கைக்குழந்தையுடன் வீட்டில் இருக்கும் அண்ணி (மூத்த மகனின் மனைவி) புது மனைவியின் காதல் கொள்ளும் ஒரு பேய் கணவன் உருவத்தில் வருகிறது. ஆனால் மிகவும் கண்ணியமான பேய் மனைவியிடன் உண்மையைச் சொல்லி பின்னர் அவள் சம்மதத்துடன் வாழ்கிறான். (வாழ்கிறது?)எனக்குத் தோன்றிய எண்ணங்கள்

1. கணவன் எப்படி கல்யாணத்திற்குப் பின்னும் மனைவியிடம் காதலனாக இருக்க முடியும் என்று பேய் சொல்லித் தருகிறது.

2. நகைச்சுவைக் காட்சிகள் படு யதார்த்தம்.

3. எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது அண்ணி ஜூஹி சாவ்லா கண்களில் தெரியும் ஏக்கம்--நல்லதொரு தோழனைத் தொலைத்த சோகம்-


இந்தப் படத்தில் வசனத்திலோ, காட்சிகளிலிலோ மிக எளிதாக ஆபாசத்தை புகுத்தியிருக்கலாம். அந்தத் தப்பை அமொல் பொலேக்கர் செய்யவில்லை- கச்சி தூப் எடுத்தவராயிற்றே.


ஆஸ்காருக்கு போகப்போகிறதாம். வசனம் இல்லாமலே புரிந்துகொள்ளலாம் கவிதை போல் எடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் கூட்டுக்குடும்பம், பந்தயத்தில் தோற்ற அவமானத்தில் வீட்டைவிட்டு போகும் கணவன் இதெல்லாம் கச்சிதமாக சப்டைட்டிலில் புரிந்து கொள்ளலாம்.


கடைசியில் அமிதாப் டென்ஷன் இல்லாமல் தீர்ப்பு கூறி பேயை பையில் அடைத்துவிட்டார். அதுதான் எந்த உருவமும் எடுக்கும், தங்கக்காசு, மழை எல்லாம் வரவழைக்கும், ஆனால் எப்படி பையில் அல்லது குடுவையில் அடைத்தால் மட்டும் வெளிவராது என்ற முரணை உடைத்துவிட்டார்கள்.
முடிவு: அதான், அதேதான்

Friday, October 21, 2005

பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள் - சிறுகதை

சிங்கப்பூரின் அந்த மிகப்பெரிய மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த யுகனேஸ்வரி, விரைவாக நடந்து நொவீனா நிறுத்தத்தில் எம். ஆர். டி. யில் பயணித்து தெம்பனீஸில் இறங்கி ப்ளோக் 320 தின் இரண்டாவது தளத்தில் இருந்த அந்த ஈர றை வீட்டில் நுழைந்த போது தொலைபேசி மணி ஒலித்தது. உடனே எடுத்து பேச,

அவள் அறைத்தோழி அலின் வாங்கின் தந்தைதான். அவரிடம் மரியாதை நிமித்தமாகப் பேசி, அன்று அலினின் ஷிப்ட் நேரம் மாற்றப்பட்டிருப்பதை பணிவுடன் தெரிவித்தாள். அவளுக்கு நன்றி தெரிவித்த திரு டேவிட் வாங், "ஹவ் ஆர் யூ மை சைல்ட்?" என்று அவளை விசாரித்துவிட்டு, அவளுடனும் இரண்டு வார்த்தை அன்புடன் பேசிவிட்டுத்தான் தொலைபேசியை கீழே வைத்தார். அந்த கரிசனம் கூட கிஷ்கிந்தனுக்கு இல்லையே. அவனால் தானே நிரந்தரமாக வெளியே வர நேர்ந்தது. அது சார்ஸ் சிங்கப்பூரில் துவக்கத்தில் இருந்த நேரம். மருத்துவமனையிலிருந்து கிளம்புவதற்கு முன் தாதியர்(நர்ஸ்) அறைக்குச் சென்று சுத்தமாக குளித்து வேறு உடை அணிந்து வந்தாலும், மீண்டும் குளித்தாள். கவலைகளையும் அழுக்குகள் போல் நினைத்து கழுவி விட வேண்டும். சூடாக தேனீர் தயாரித்துக் கொண்டு, குடிக்கையில் தன் சொந்த வீட்டில் கூட இல்லாத உரிமை இங்கு இருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது.
சில காலம் முன்புவரை சார்ஸ் பாதிப்பில் இருந்த பிரிவில் அல்லாது வேறு பிரிவில் அவள் பணி செய்து கொண்டிருந்தாள்; இருந்தாலும் பல தாதியர் செய்தது போல் போல் வீட்டில் குழந்தைகள் இருப்பதால், பொறுப்புணர்வுடன் தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொண்டு தாதியர் குடியிருப்பில் தங்கத் துவங்கினாள். பெயருக்குக் கூட கிஷ்கிந்தன் அவளை ஏன் போகிறாய் என்று கேட்கவில்லை. தனக்கு வரும் வருமானத்தில் பெரும்பகுதியை தங்குமிடம் மற்றும் உணவு முதலியவற்றுக்கு பெற்றுக்கொண்டவனுக்கு பாசம் எங்கிருந்து வரும்.
சார்ஸ் நோயாளிகளை கவனிக்கும் பிரிவில் தாதியாக பணிபுரிந்த மோளி கருவுற்றிருந்ததால், யுகனேஸ்வரி தானாகவே விருப்பம் தெரிவித்து அந்தப் பகுதிக்கு பணிகளை மாற்றிக்கொண்டாள். அன்று மனதை உருகவைக்கும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஸார்ஸினால் தீவிர பாதிப்படைந்த ஒரு அம்மையாருக்கு சிகிச்சை செய்ய முதலில் அவரது தொண்டைச் சளியை எடுத்து பரிசோதனை சாலைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு முந்திய நாள்தான் சிகிச்சை அளித்த ஒரு மருத்துவரும், இரு தாதிமார்களும் நோய் தொற்று ஏற்பட்டு உயிர் துறந்திருந்தனர் என்ற நாளிதழ்ச் செய்தி உலகில் அனைவரையும் கலங்கச் செய்தது.
"தொண்டையிலிருந்து சளியை யார் உறுஞ்சு குழாய் மூலம் எடுக்க முன் வருகிறீர்கள்?" என்று தலைமை மருத்துவர் ஜான் டேவிட் லாம் கேட்டபோது அடுத்த வினாடி கையுயர்த்திய அந்த வார்ட் தாதியர் அனைவரையும் பார்த்து மருத்துவர் லாம் கண்கலங்கிவிட்டார். அந்தத் தாதியரில் பலருக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் வேறு இருந்தது.
கடமையுணர்வுடன் ஒரு துளி முகஞ்சுளிப்போ அருவறுப்போ இன்றி செயல்பட்ட அந்த அந்த தாதியரும், பரிசோதனைச்சாலை பணியாளர்களும், துப்புரவு பணியாளர்களும் , மருத்துவர்களையும் பற்றி சார்ஸ் நோய் தீவிரமடைந்த அந்த அம்மையாரின் உணர்வுபூர்வமாக நன்றியைக் காட்டிய முகத்தை மறக்கத்தான் முடியுமா. "நீங்கள் எல்லோரும் மனிதர்களே அல்ல, கடவுளின் பிரதிநிதிகள்," என்று பல முறைசொல்லி அவர் விட்ட கண்ணீர் அவர் உயிர் பிரியும் முன் அவரது கண் தேங்கியிருந்தது அன்பும் நன்றியும் மட்டுமே.
ஞாயிறு அன்று வீட்டிற்கு சென்றபோது அம்மாவிடம் மனம் பொங்கி சொன்னாள். அண்ணன் கிஷ்கிந்தன் ' ரௌத்திரமடைந்தான். " யூகி, முட்டாள் பெண்ணே, இந்த மருத்துவமனையில் வேலையை விட்டுவிடு" என்று கடுமையாக கூச்சலிட்டான்."இதெல்லாம் எதிர்பார்க்காமலா தாதிப்பயிற்சியில் சேர்ந்தேன்" என்ற அவளை அவன் பேச விட்டால்தானே. " என் வீட்டில் நான் சொல்வதைக் கேட்டு கீழ்படியாவிட்டால், வீட்டைவிட்டு நிரந்தரமாக வெளியே போ, என்று கூச்சலிட்டான். அப்போது கூட அவளுக்கு போகவேண்டும் என்ற உந்துதல் வரவில்லை ஆனால் காரணமேயில்லாமல் உதவி மருத்துவர் அரவிந்தனை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்தினான்.
"இவளை தாதியர் பயிற்சியில் மேல் படிப்பு படிக்க வைத்துவிட்டானில்லையா, அவன் சொல்லுக்குத்தான் இவள் ஆடுவாள். திருமணத்திற்குப் பிறகு இவளை அமெரிக்காவோ ஐரோப்பாவோ வேலைக்கு அனுப்பி நிறைய சம்பாதிக்க வைப்பான், இவள் பணத்தை அள்ளிக்கொள்வான். பணத்திற்குத் தானே காதல் , கத்தரிக்காய் என்று பேசுகிறான்". தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவராகவும், அவள் மனம் கவர்ந்தவனாகவும் இருந்தான் அரவிந்தன்.
தாதியாகச் சேர்ந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தன் வருமானத்தைப் பெற்றுக்கொண்ட அண்ணன் இன்னும் இரு ஆண்டுகள் கழித்துதான் திருமணம் என்று கூறியதைக்கூட ஒப்புக்கொண்டிருந்தாள். அரவிந்தனைக் கேவலப்படுத்திப் பேசியதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சற்று நேரத்திலே தன் உடைமைகளை எடுத்து, எஸ். எம் எஸ் சில் சகக் கூட்டாளியான அலைனை தொடர்பு கொண்டு அலன் வீட்டில் இருப்பதை உறுதி செய்து கொண்டு அம்மாவிடம் விடைபெற்றபோதுகூட கிஷ்கிந்தன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஊடான் புட்டிலிருந்து கூட பார்வையை விலக்கவில்லையே,கனத்தமனதுடன் நடந்து அருகில் இருந்த பேரங்காடிக்கு முன் இருந்த வாடகைகாடி நிறுத்துமிடத்திற்கு வந்து, காடியில் பயணித்து இறங்குகையில் அவள் ஒரு தாதியாக சார்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த மருத்துவமனையில் பணிபுரிகிறாள் என்பதை அறிந்துகொண்ட அந்த ஓட்டுனர் அவளிடம் அவள் நீட்டிய பத்து வெள்ளியை வாங்க மறுத்ததுமட்டுமன்றி, அவள் சேவையைப் பாராட்டினார். அவளும் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, காடியிலே குறிக்கப்பட்டிருந்த அவரது முழுப் பெயரைப்பார்த்தாள் மகம்மது ந'சீம் ஹ¤சைன் என்று அது தெரிவித்தது. அவர் பெயர் மற்று காடி எண் குறிப்பிட்டு நன்றி பாராட்டி, மின்மடலில் தேசியப் பத்திரிகையான தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்க்கு மறுநாள் அனுப்பி வைத்தாள்.
அதற்கு பின் அவள் அரவிந்தனிடம் அடிக்கடி தொலைபேசியில் பேச நேரம் கிடைக்கவில்லை, எஸ். எம். எஸ் அல்லது மின் மடல்தான். அரவிந்தன் அவளது தொண்டிற்கு மிகவும் உற்சாகம் அளித்தான்.
சிரித்த முகத்துடன் பணி புரிபவளுக்கு நோயாளிகளைக் கையாள்வதோ ஆக்கபூர்வமாகவோ ஆறுதலாகவோ பேசிவது புதிதல்ல, ஆனால் கடுமையான தொற்றுநோய் என்பதால், மிக நெருங்கிய உறவினர் கூட பார்வையாளராக வர இயலாத சூழல், இது மருத்துவர்உலகுக்குக்கே சவாலாக இருந்தது. "நீ என் தாய், என் மகள், என் சகோதரி என்று ஒவ்வொரு நோயாளியின் கதறலும் கண்ணீரும், அவளுக்கு சில புதிய சிந்தனைகளை தோன்றுவித்தது. பணிகளைச் செவ்வனே செய்து வந்த அவள் போன்றவர்களுக்கு மனைதெம்பை அளித்தது எம். ஆர். டி. நிலையத்தில் நன்றி தெரிவித்து பொதுமக்கள் எழுதிக்குவித்த கையெழுத்துக்கள், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துக்கள், மலர்க்கொத்துக்கள், அதிலும் ஒரு ஆறு வயது சிறுமி தானே தயாரித்து வண்ண அட்டையில் fly fly letter fly for all your service no money can buy என்று தாதியர் படம் வரைந்து அதில் மருத்துவ உபகரணங்களின் படங்கள் வரைந்து அலங்கரித்து அனுப்பியது அந்த மருத்துமனையின் அறிவிப்புப் பலகையிலிருந்து எடுக்க யாருக்கும் மனம் வரவில்லை.
உண்மையில் முதலிய தயங்கிய ஒருசிலர் கூட வெகுவிரைவில் மருத்துவத்துரை, மற்று சுகாதாரப் பணியாளர்களின் சேவையை பார்த்து மனம் மாறினர், ஆனால் கூடப்பிறந்த சொந்த ரத்தம், ஒரு வினாடிதான் நினைத்தாள், மறுகணம் பொதுச்சேவையில் இருக்கும் நான், சொந்த பிரச்சனைகள் இருந்தாலும் , கடமையை உற்சாகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அனைவரிடமும் பேசுவேன் என்று உறுதி பூண்டது நினைவுக்கு வர, சிந்தனையை மாற்றினாள். இந்த மூன்று மாதங்களில் சார்ஸ் மட்டுமா உலக நாடுகளை உலுக்கியது, ஈராக் போர், இந்தோனிய கலவரங்கள், மற்றும் அங்கங்கே தீவிரவாதிகளின் தாக்குதல்கள், வெள்ளம், பூகம்பம் என்று இயற்கையில் சீறல்கள், மூன்று மாதங்கள் மூன்று நொடிகளாகப் பறந்தன.
சிங்கப்பூர் சீரடைந்து வந்தது அறிவிக்கப்பட்டது. அரவிந்தன் அன்று அவளை தன்னுடன் உணவுக்கு அழைத்திருந்தான். அரவிந்தன் ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்று வேறு கூறியிருந்தான். எல்லாம் அவர்களது வருங்கால நடவடிக்கைகளை பற்றி பேசுவதற்காக என்றான்.
அன்று தன்னை எளிமையாக ஆனால் அழகாக அலங்கரித்துக் கொண்டாள். அவளுக்கும் ஒரு முக்கிய நோக்கம் இருந்தது. சார்ஸ் பிடியிலிருந்து நாடு விலகி "கூல் சிங்கப்பூர்", "சிங்கப்பூர் இஸ் ஓகே" என்ற வாசகங்கள் அங்கங்கே முழங்கிக்கொண்டிருந்தன. அதோ, அரவிந்தன் அங்கு ஒரு காலி மேசையருகில் அமர்ந்திருந்தான். இருவரும் சுருக்கமாகப் பேசி உணவு உண்டு முடித்தனர்.
"யூகனேஷ்வரி, வாழ்வின் உச்சகட்டத்தில் நாம் உள்ளோ¡ம், இப்போது நம்மிடம் ஒரு பெரிய சொத்து உள்ளது அது நம் இளமை , கல்வியில் மேம்படுத்திக்கொண்டோம், இதோ இது நம் வாழ்வில் பல பல சாதனைகளுக்கும் புரட்சிகளுக்கு நம்மை அழைத்துச் செல்லப்போகிறது, இளையரான நமக்கு மிகச் சிறந்த உடல் நிலை, ஆரோக்கியம், மனத்திண்ணம் நினைத்ததை செயல் படுத்தும் ஆற்றல், இதெல்லம் இந்த பருவத்தின் உச்சகட்டத்திலிருக்கும், அந்த சக்தி வீணாகக்கூடாது, நாளைய உலகை வளமாக அமைதியாக ஆக்குவது இளையரான நம் கையில்தான் இருக்கிறது. ஆக்கபூர்வமாகச் செயல் படலாம். இந்தக் கவிதையைப் பார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் எழுதியது,

"தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு,
சம்பாத்தியம், இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளம்கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்
கன்னலடா என் சிற்றூர் என்போன் உள்ளம்
கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்திரத்தால் பிற நாட்டைத் துன்புறுத்தல்."


"மருத்துவமனையில் என் பணியில் இரண்டு ஆண்டு விடுப்பு பெற்றுக் கொண்டு, தொண்டூழியராக பதிவு செய்து கொண்டு வியட்நாம் செல்லப்போகிறேன், மருத்துவ உதவி குழுவினருடன். அங்கு என் பணி நிரந்தரம் அன்று, கம்போடியா , நேப்பாள், எங்கெல்லாம் தேவைபடுகிறதோ அங்கு செல்லும் குழுவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளேன். அவன் பேசிக்கொண்டே போனான், யுகனேஸ்வரியின் இரண்டு கண்களிலுருந்து தாரை தாரையாக கண்ணீர், வாயிலிருந்து ஒரு கேவல் சத்தம் கூட இல்லை, அப்படியே அவன் கையைப் பிடித்துக்கொண்டு எழுந்தாள். பேசு யூகனேச்வரி எதாவது பேசு, என்று எனக்குத் தெரியும் , இதோ பார் என்று அவள் முகத்தை மெல்லத்திருப்ப, அவள் தன் கைப்பையிலிருந்து அதே தொண்டூழியத்திற்கு (volunteer) விருப்பம் தெரிவித்து தான் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை எடுத்து அவன் முகமெதிரில் காட்டிவிட்டு கண்ணீரோடு சிரித்தாள் யுகனேஸ்வரி. அரவிந்தன் அவளுக்காக கொண்டு வந்த விண்ணப்பம் அவன் சட்டைப்பையிலிருந்து மேசைமீது விழுந்தது.

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ஆம் ஆண்டு மூன்றாம் பரிசு பெற்றது.

Thursday, October 06, 2005

விழிப்பு

-மாதங்கி

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் வந்திறங்கும் தளத்தில் உள்ள வெயிட்டிங் லவுஞ்சில் அமர்ந்திருந்தவாறே மேலே இருந்த தட்டைத் திரை தொலைகாட்சிப்பெட்டியில் சென்னையிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் காலை ஏழரைக்கு குறித்த நேரத்தில் வந்துவிடும் என்பதை அறிந்து கொண்ட பின், பரவாயில்லை, இன்னும் அரை மணி இருக்கிறது என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் பாலகுருநாதன்.
ஸ்வென்சனில் குளிர்ந்த பால் குடித்து விட்டு பூக்கொத்துக் கடையில் ஹாலந்திலிருந்து தருவிக்கப்பட்ட டூலிப் மலர்க்கொத்தை வாங்கிக்கொண்டார்; அருமைத்தங்கை நீருவும் குட்டி நீருவும் வருகிறார்களே; நீரு கல்யாணமான புதிதில் ஒருமுறை கைலாஷ¥டன் வந்தாள். குட்டி நீரு வருவது முதல்முறை.
இந்த சாங்கி விமான நிலையத்திற்கும் அவர் வாழ்க்கைக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதாகவே நம்பினார். வருடத்தில் எத்தனை முறை தான் இங்கிருந்து இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், சீனா, ஜப்பான், மற்று விடுமுறை ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா என்று இதனுடன் பிணைத்துக்கொண்ட வாழ்வு இன்னும் தொடர்ந்து வருகிறது.
முதன்முதலாக அவர் கையில் மிகசொற்பமான டாலரோடு ஆனால் நெஞ்சு நிறைந்த தன்னம்பிக்கையுடனும் சீரான பழக்க வழக்கங்களுடனும் இளம் இஞ்சினியராக இதே விமான நிலையத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வந்திறங்கியதை நினைத்துக்கொண்டார்.
இன்று சாங்கி விமான நிலையம் டர்மினல் ஒன்று, இரண்டு என்று பிரம்மாண்டமாக விரிவடைந்து, மூன்றாவதை நோக்கி வெற்றிநடை போடுகிறது- அதே சீரான ஒழுங்கு முறை மற்றும் தரக்கட்டுப்பாட்டுடன்.
நல்ல ஒற்றுமைதான், தனக்குள் சொல்லிக்கொண்டார். கடுமையான உழைப்பு, பகுதி நேர மேல் படிப்புக்கள், அவரை இன்று பொருளாதாரத்தில் உச்சாணிக்கொம்பில் உயர்த்திவிட்டது. தலைசிறந்த அமெரிக்க கம்பெனிகளுக்கு, கண்ட் ரோல் ஸிஸ்டம்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அவரே மிக இளைய வைஸ் ப்ரெசிடெண்ட். காப்பி, தேநீர், புகை, மது, அசைவ உணவு என்று எந்தப் பழக்கமும் இன்றி அன்று போலவே இன்றும் மாறாமல் தாம் இருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டார். ஆரம்பகாலத்தில் சிறிது கேலி கிண்டல் முதலியவற்றை அவர் சந்தித்தது உண்மைதான் என்றாலும் நாட்பட எல்லோரது நன்மதிப்பையும் பெற்றதுநிஜம்.
"இன்னோரு பெரிய ஒற்றுமை, அதை முதலில் சேர்த்துக்கோங்க, சாங்கியும் ராத்திரி முழுக்க பகல் போல இருக்கும், உங்களுக்கும் ராத்திரி என்பதே கிடையாதே" என்று ரேவதி சொல்லி வருத்தத்துடன் சிரிப்பதை எண்ணிக்கொண்டே வெவ்வேறு விமானங்களில் தூக்ககலக்கத்துடன் இறங்கி வரும் பயணிகளிடையே குழந்தைகள் முகம் மட்டும், எந்த ஒப்பனையும்மின்றி பூத்த பூ போல இருப்பதை எண்ணி நூறாவது முறையாக ஆச்சரியப்பட்டார். பெரிய பதவியும் பொறுப்பும் வந்த பிறகு இரவு படுத்தவுடன் தூக்கம் என்பது அவருக்கு எட்டாத கனவாகியது. படிப்படியாக அவர் பதவி உயர்வு பெற்று, இன்று கிட்டத்தட்ட ஐம்பது ப்ராஜக்ட் மானேஜர்கள் வெவ்வேறு நாட்டைச் சார்ந்த நிறுவனங்களுக்குத் கண்ட் ரோல் சிஸ்டம்ஸ் செய்து தர, ஒவ்வொரு ப்ராஜக்ட்டின் லாப நஷ்ட கணக்குகள், மற்றும் பொறியியல் சோதனைகள் அனைத்திற்கும் இவரே பொறுப்பு. ஒவ்வொரு ப்ராஜக்ட் மேனேஜருகும் அவர்கள் கீழே திறமைவாய்ந்த பொறியிலலாளர்கள் இருந்தாலும் அவர்கள் இந்திய, சீன மலாய், பிலிப்பைன்ஸ், ஐரோப்பியர், ஐப்பானியர் மற்றும் ஆப்பரிக்கர் என்று பல மத, இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கையில், பொறியியல் அறிவோடு நிர்வாகத்திறமையும் மிகச் சிறப்பாக இருந்தால் தான் நிறுவனத்தை போட்டிக்கம்பெனிகளைவிட சிறப்பாக கொண்டுவர இயலும்.
கைத்தொலைப்பேசி கிணுகிணுக்க, முதலில் ரேவதி- வெல்கம் பார்ட்டிக்கு குட்டி நீருவிற்கு எல்லாம் தயார் நிலையில் உள்ளது தெரிவிக்கப்பட்டது. அடுத்து பரி என்ற பரிமேலழகன், சென்னையில் இருவரும் ஒரே கல்லூரி; இவர் இயந்திரவியல் பரி மின்னணுபொறியியல் வெவ்வேறு நிறுவனம் ஆனாலும் இன்னும் அதே கல்லூரி இளமையைக் கட்டிக்காக்கும் தோழன்.
"பாலா , உனக்கு ஒரு குட் குட்மார்னிங் நியூஸ், உன் தூக்க ப்ராபளம் தீர்ந்தது,.." "கமான் பரி, பி சீரியஸ், ஒரு பெக் போடு, தாய்மசாஜ்ஜுக்குப் போன்னு எல்லாம் கடிக்காதே;"
" பாலா, அடுத்த வாரம் நேராக டோக்கியோ போ, ஜப்பான்காரன் கடை திறக்கப்போறான், அரை மணியில தூங்க வைக்கறாங்களாம், ஜஸ்ட் நாற்பத்தேழாயிரம் சிங்கப்பூர் டாலர் "
"வரவர ரொம்ப கிண்டல் பண்ற பரி" பேசிக்கொண்டே வரவேற்குமிடத்தில் தயாராக நின்று கொண்டார்.
"கமான் பாலா சுத்த சந்நியாசி ட்ரீட்மெண்ட், படுக்கை நெட்டுகுத்தா இருக்குமாம், காட்டுல ஆறு ஓடுறதை பெரிய டிவீல காட்டுவானாம்; அப்படியே ரூம் வெளிச்சம் மெல்லக்குறையுமாம், டிவியும் அணையுமாம், ஆறுமட்டும் ஓடுற சத்தத்தை நிறுத்த மாட்டானாம், படுக்கையும் மெல்ல சாஞ்சுகிட்டே, முதுகெலும்ப மசாஜ் பண்ணுமாம்; எட்டு மணிநேரம் இரவுத் தூக்கம் விற்பனைக்கு ;காபி ஷாப் மாதிரி தூக்க ஷாப் எப்படி; செமமூளைடா"
"தூக்கம் கூட விற்பனைக்கு வரும் நிலைமை. கிரியேடிவ் இன்வென்ஷன் என்று கூறிக்கொண்டு பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டு மறுநாள் தொடருவதாக கூறி முடித்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து ட் ராலியில் சாமானுடன் நீரு தள்ள, குட்டி நீரு ஒரு முயல் குட்டி போல துள்ளி வருவதை பார்த்து அவர் மனமும் துள்ளியது.
செல்லத் தங்கை நீரு கல்யாணமாகி பத்துவருடம் ஆகியும் குழந்தைக்காக பர்டிலிடி ட் ரீட்மெண்ட் ஒரு பக்கம் , சகல தெய்வங்களுக்கு மனமுருகி பிரார்த்தனை ஒரு பக்கம், என்று எல்லாம் போராடிகொண்டிருக்கையில் திடீரென்று அவருக்கு அவளிடமிருந்து கச்சிதமாக ஒரு இ மெயில் வந்தது, "அண்ணா, பத்துநாள் பெண்குழந்தையை தத்து எடுத்துகொண்டிருக்கிறேன் நம் அம்மா பெயரையும் என் மாமியார் பெயரையும் இணைத்து ஸ்வர்ணபூரணி என்று பெயரிட்டிருக்கிறோம்; உன் ஆசீர்வாதம் தேவை, என்றவுடன் ஏகப்பட்ட பரிசுகளுடன் குடும்பத்துடன் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தார், அதிலும் அவர் மகன் காஷ்யப், ஸ்வர்ணா என்றால் கோல்ட் இந்த பேபியும் நம்வீட்டு கோல்டன் ட் ரெஷர் என்றபோது எல்லோர் கண்களும் பனித்தது. இப்போது காஷ்யப் இங்கில்லை, ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறான். அத்தையும் ஸ்வர்ணாவும் வரும்போது தான் அங்கு இல்லை என்பதில் அவனுக்கு மிகவும் கோபம்; என்ன கோபத்தை வழக்கம் போல் படிப்பதில் தீவிரம் காட்டில் ஏ ஸ்டார் வாங்குவது அவன் வழக்கம். இந்த செமஸ்டர் பரிட்சை முடியும் தருவாயில் இருப்பதால் அடுத்தவாரம் விடுமுறையில் வருவதாகக் கூறியுள்ளான்.
தொலைபேசியில் அடிக்கடி பேசுவதிலும், கணிணியில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பார்ப்பதாலும் குழந்தை அவரிடம் தாவி வந்தது. தயாராக வைத்திருந்த மலர்க்கொத்தையும் சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற லிண்ட் இனிப்புப் பெட்டியையும் அவர்கள் கையில் தந்து பரஸ்பர விசாரிப்புக்கு பின், தான் முன்யோசனையுடன் வாங்கி வைத்திருந்த கார் சீட்டரில் குழந்தையை உட்கார்த்தி பெல்ட் கட்டினார். நீருதான் சற்று காது வலி என்று காதை பிடித்துக்கொண்டிருந்தாள் தங்கையையும் அமரச் செய்து சாமான்களை பின்புறம் வைத்து விட்டு தானும் பெல்ட் அணிந்து கவனமாக கிளப்பிய கார் நகரை நோக்கி வழுக்கிக்கொண்டு சென்றது.
காபி ஷாப், 24 மணி நேரமும் இயங்கும் மினிமார்ட், டென்னிஸ் கோர்ட், நீச்சல்குளம், ஜிம், கன்வென்ஷன் ஹால், ஸ்பேஸ் ஆப்சர்வேட்டரி, ஸ்பா, கச்சிதமான ஆனால் பாதுகாப்பான நவீன திறந்த குழந்தைகள் விளையாட்டுக் கூடம் என்று சகல வசதிகளும் கூடிய காண்டோமினியத்துள் நுழைந்து அவர்கள் அபார்ட்மெண்டை அடைந்தபோது ரேவதியின் திட்டப்படி, பொம்மை, பலூன், என்று ஒரு குட்டி வரவேற்பு பார்ட்டி நடந்தது.
அண்ணா, அண்ணிக்காக தான் ஆசையுடன் செய்து மற்று வாங்கி வந்த பொருட்களைக் கொடுத்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றாள் நீரஜா. அதன் பின் குழந்தையை குளிப்பாட்டுவது, அவள் குளிப்பது, எல்லோரும் உணவு உண்பது என்று அவர்களுக்கும், புதிய இடம் புது சூழ்நிலை புது பொம்மைகள் என்று குழந்தை ஸ்வர்ணாவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்க எல்லாரும் செந்தோசாவிற்கு கேபில் காரில் போய் வந்தார்கள். இரவு சைவ உணவகமான மெட்ராஸ் வுட்லாண்ட்ஸ் கங்காவில் இண்டர்காண்ட்டினட்டல் பூபே சாப்பிட்டார்கள்.
மதியம் சற்று நேரம் ஸ்வர்ணா அயர்ந்து தூங்கிவிட்டதால் இரவு வீட்டுக்கு வந்தபிறகுகூட குழந்தை நல்ல உற்சாகத்துடன் இருந்தாள். விழித்திருக்கும் நேரத்தில் வாய் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்காது; அப்படி ஒரு துறுதுறுப்பான பேச்சு. ஏன் எப்படி என்று ஏகப்பட்ட கேள்விகள். சிறு குழந்தைதானே என்று எண்ணாமல், மெழுகு அருங்காட்சியகம், டால்பின் லாகூன், ஆழ்கடல் உலகம், பட்டுப்பூச்சி உலகம், மெர்லையன் என்று ஒவ்வொரு இடத்தையும் பொறுமையுடன் விவரித்தார்கள்.
பாலா மாமா, பாலா மாமா, ரேவதி மாமி என்று நொடிக்கொரு முறை அழைத்து பாசத்துடன் ஒட்டிக்கொண்டாள் குழந்தை ஸ்வர்ணபூரணி.
"இன்னிக்கு நான் தூங்கினாப்பலதான்" என்று நீரு பிரயாண அலுப்புடன் கூற, பாலகுருநாதன் உற்சாகமடைந்தார்.
"நீரு, இன்னிக்கு நீ ரொம்ப களைப்பா இருக்கே, நீ தூங்கு, மத்த இடங்களையெல்லாம் நீயும் ரேவதியும் உங்கள் சௌகரியப்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஸ்வர்ணாவை நான் தூங்கவைக்கப் பார்க்கிறேன்." என்றார்
"அண்ணா உங்களுக்கு நாளை அலுவலகம் இருக்கு, ஏற்கனவே தூக்கம் வராமல் கஷ்டப்படறீங்க"
"அதுக்கென்னம்மா பண்ணறது, மூலிகைமணி, ஹெல்த் எக்ஸ்ப்ரஸ் லேந்து யாஹ¥, கூகில் (google) ன்னு நெட்டுலயும் வலைவீசித் தேடி ஓரளவு எல்லாம் பண்ணிப்பாத்தாச்சு, உடற்பயிற்சி, சரியான உணவு எல்லாம் கடைபிடிக்கிறேன்; இரண்டு மூன்று மணியானும் ஆகணும்; பேசாம நீங்க இரண்டு பேரும் இங்க தூங்குங்க நான் குழந்தைய பாத்துக்கறேன் என்றவாறு அவர் ஆசையுடன் கூப்பிட்டவுடன் ஓடி வந்த குழந்தையை தூக்கிக்கொண்டு, பல் தேய்த்துவிட்டு, பாத்ரூம் அழைத்துப்போய், இரவு உடை போட்டு, பால் குடிக்க வைத்து தங்கள் படுக்கையில் குழந்தையின் படுக்கையை விரித்து தலையணை போட்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.
"ம் கதை சொல்லுங்க மாமா" என்று அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்சியது.அவரும் காக்கா கதை என்று ஆரம்பிக்க, கஜேந்திர மோட்சம், நோவாஸ் ஆர்க், குரான் கதைகள் எல்லாம் எனக்குத் தெரியுமே என்று அசத்திக்கொண்டே போக என்ன கதை சொல்வது என்றே அவருக்குத் தெரியவில்லை; புராணக் கதைகள், பல சமயங்களைச் சார்ந்த பெரியவர்களின் கதைகள், புதுமைக் கதைகள் என்று எல்லாமே ஓரளவுக்கு அதற்குத் தெரிந்திருக்க பாலகுருநாதன் திணறிப் போனார்."தெரியாத கதை தான் வேணும்" என்று செல்லம் கொஞ்சியது.கண்களை உருட்டி மிரட்டியது.என்ன சொல்லலாம் சட்டென்று யோசித்தார்;
தொழில் நிர்வாகத்தில் முதுகலைப்பட்டம் பெற்று பின் அவரது நிறுவனதிலேயே அவரது இயந்திர இயல் துறை பணியைத் தவிர சில சமயங்களில் நிர்வாக வகுப்புகளும் எடுப்பார். நிர்வாக வகுப்புகளின் சுவாரசியத்திற்காகவும் எளிமையாக புரியவைப்பதற்காகவும் குட்டிகுட்டி கதைகள் சொல்லுவார். எனக்கே சவாலா. அதிலிருந்து சிலதை எடுத்துவிட்டு அசத்தலாம் என்றவாறு முதல் கதையைத் துவங்கினார்.
"ஊஹ¥ம் நீங்களும் என்னோடு என்னை பாத்துகிட்டே படுத்துக்கணும் ; பிஞ்சுக்கை அவரை இழுத்தது.
"ப்ரான்சு நாட்டில் ஒரு குட்டிப்பையன் இருந்தானாம்; அவனுக்கு ரெயின்போ ஐஸ்காண்டி தின்ன ஆசையாக இருந்ததாம். அவனிடம் கொஞ்சம் ரூபாய் இருந்ததாம்,..""தப்பு தப்பு மாமாவுக்கு ஒண்ணுமே தெரியலே, ப்ரான்சுல ப்ராங்குதான் சொல்லணும்;" அவர் தலைமுடியை கையால் ஆட்டி தோளில் தட்டி குதூகலித்தது.அவருக்கு பெருமை தாங்கவில்லை ,வாயாற குழந்தையை மெச்சிவிட்டு, "ஆமாம் ப்ராங்குதானே, அப்புறம்,அவன் ஒரு காண்டி கடைக்குப் போனானாம். ஒரு டேபிளில் உட்கார்ந்தவுடன் மெனு கார்டை வெயிட் ரஸ் கொண்டு வந்தாளாம். ரொம்ப அழகான கலர்படம் போட்ட ரெயின்போ காண்டி ஒன்றரை ப்ராங்க் என்று இருந்ததாம். சாதாரண காண்டி ஒரு ப்ராங்க் என்று போட்டிருந்ததாம்"வெயிட் ரஸ் " வாட் வுட் யூ லைக் ஸர் என்று கேட்டாளாம்"
அவள் சட்டை ரொம்ப பழையதாக இருந்ததாம்
ஐயோ பாவம் மாமா நாம எதாவது வாங்கித் தரலாமா"
கேளு கதையை; குட்டிப்பையன் தன் சட்டைப்பையிலிருந்த காசுகளை என்ணிப்பார்த்தானாம்ஒன்றரை ப்ராங்க் இருந்ததாம் உடனே ஒரு ப்ராங்க் சாதாரண காண்டியை ஆர்டர் செய்து வெயிரஸ் கொண்டு வந்தவுடன் அதை சாப்பிட்டுவிட்டு அரை ப்ராங்கை டிப்ஸாக வைத்துவிட்டு எழுந்தானாம்,.."
"குட் பாய், குட் பாய்" என்று கத்தியபடி படுக்கையிலிருந்து உற்சாகத்துடன் குதித்தெழுந்து கைகளைத் தட்டியது குழந்தை.
"படு, படு கதை முடிஞ்சுபோச்சு""மாமா, மாமா, ப்ளீஸ், ப்ளீஸ் கதை சொல்லுங்கோ சமத்தா தூங்கறேன்," மீண்டும் படுத்துக்கொண்டது.சரி என்று வெற்றிப்புன்னகையுடன்," ஒரு ஊரில் ஒரு வியாபாரி செறுப்பு விக்க ஒரு தீவுக்கு போனாராம் என்று ஆரம்பிக்க குழந்தை" இது வேண்டாம் இன்னிக்கு ரெயின்போ ஐஸ்கிரீம் கதைதான் திருப்பித் திருப்பி வேணும் குழந்தை கட்டளையிட்டது.பாலாவும் சரியென்று மீண்டும் அதை ஆரம்பித்தார். முடிந்தவுடன் மீண்டும் அதையே சொல்லு என்று ஆணையிட்டது. சரியென்றார்; தொடர்ந்தார். இப்படியே போய்க்கொண்டிருந்தது.
நீருவுடன் அவள் அறையில் பேசியவாறே படுத்துத் தூங்கிவிட்ட ரேவதிக்கு சிறிது நேரம் கழித்து தூக்கம் கலைந்தது. மணி பதினொன்றுதான். ஏஸி குளிர்ச்சியில் தொண்டை வரள தண்ணீர் குடிக்க சமையலறைக்கு வந்த போது மாஸ்டர் பெட் ரூமில் ஏதோ சத்தம் கேட்கவும், கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.
குழந்தை ஸ்வர்ணபூரணி இரவு விளக்கு வெளிச்சத்தில் படுக்கையில் உட்கார்ந்துகொண்டு மாமாவின் செல்போனை ஹலோ கிட்டி பொம்மைகள் முதலியவற்றை தலையணை மீது வைத்து ஏதோ பேசிக்கொண்டு தானாகவே விளையாடிக்கொண்டிருந்தாள்.
பாலகுருநாதன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.

oooOOOooo

தமிழ் முரசு/ திண்ணை

துறவியாக மாறிய அரக்கன் (சிறுவர் கதை)

-----மாதங்கி


அமைதிப்பட்டினம் என்ற ஒரு ஊரின் பக்கத்தில் இருந்த ஒரு காட்டில் அரக்கன் ஒருவன் புதிதாக வந்து சேர்ந்தான். அவன் வந்த நாள் முதல் அந்த ஊர் மக்கள் அமைதியை இழக்கலாயினர். காரணம் இதுதான். தோன்றியபோதெல்லாம் அந்த அரக்கன் ஊருக்குள் நுழைவதும் ஊரில் உள்ள ஆடு, மாடு முதலியவற்றையோ, மனிதர்களையோ எடுத்து காட்டிற்குச் சென்று உண்ணுவதுமாக இருந்தான்.
அந்த ஊரில் துறவி ஒருவர் இருந்தார்; அவர் அந்த ஊரில் இன்னொரு பக்கத்தில் உள்ள நதிக்கரை அருகில் இருந்த ஒரு வனத்தில் வசித்து வந்தார். அவரிடம் ஊர்மக்கள் தம் குறையைச் சொல்லி வருந்தவும் உடனே தான் உதவி செய்வதாக வாக்களித்தார் துறவி. அடுத்த முறை அந்த அரக்கன் யாரையாவது பிடிக்க வந்தால் உடனே தன்னிடம் அனுப்புமாறு பகர்ந்தார்.
துறவி அமைதியே உருவானவர். பொறுமையும் சிறந்த தவ ஒழுக்கமும் உடையவர்; அவர் எப்படியும் தங்களைக் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையுடன் ஊர்மக்கள் வீடு திரும்பினர்.
ஓரிரண்டு நாட்களில் அந்த அரக்கன், மாயன் அதுதான் அவன் பெயர், ஆடுமாடுகள் சிலவற்றை பிடிக்க, அவர்கள் துறவியின் வேண்டுகோள்படி அவனை அவரிடம் செல்லுமாறு வேண்டினர்.
மக்களின் புதிய துணிவைக் கண்டு மாயனுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், சரி எப்படியும் நமக்கு உணவு இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் துறவி இருக்கும் வனத்திற்குப் போனான்.
அவனை கண்டுகொண்ட துறவி "வா நண்பனே, உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் " என்று அன்புடன் இயம்பினார்.
தன்னைப் பார்த்தவர்கள் அஞ்சுவதையும் நடுங்குவதையும் கண்டு பழகிய மாயனுக்கு துறவி தனது ஆசிரம வாயிலில் அமர்ந்தவாறு எந்த பதட்டமுமின்றி பேசியது வியப்பைத்தந்தது.
" எனக்கு வரவேற்பா, நான் உங்களை இங்கேயே தின்று விடப்போகிறேன்", மாயன் ஆர்ப்பரித்தான்.
"தாராளமாக நீ என்னை தின்னலாம்; அது ஒன்றுதான் உன்னால் முடியும்; இன்னொன்று உன்னால் முடியாதே " என்றார் புன்னகையுடன்.
"என்ன என்னால் முடியாத இன்னொரு காரியாமா? என்ன அது?"
"நான் சொல்லுவேன், ஆனால் பாவம் நீ திண்டாடி திணறிப் போய்விடுவாய், அதனால் நீ என்னைத் தின்பதே எளிதான வேலை"
"இப்போதே அதை என்னிடம் சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் உங்களை இங்கேயே நசுக்கிவிடுவேன்,என் பலம் உங்களுக்குத் தெரியாதது"
"ஓகோ அப்படியா, சரி உன் பலத்தையும்தான் பார்க்கிறேன்; நீ ஒரு நாள் என்னைப் போன்ற துறவியாக இருந்து பார்; அதற்குண்டான மனவலிமை உனக்கு உள்ளதா"
"பூ, இவ்வளவுதானே, நாளை முழுவது நான் துறவியாக இருக்கிறேன். நீங்கள் எழுந்து கொண்டதிலிருந்து என்னவெல்லாம் செய்வீர்களோ அதை சொல்லித்தந்து கொண்டே இருங்கள். இரவு வந்தவுடன் உங்களை உடனே தின்று விடுவேன்;"
"சரி இன்றிரவு நீ இங்கேயே படுத்துக்கொள்; நாளைகாலை நான் உன்னைத் துயில் எழுப்புகிறேன். நான் செய்யும் எல்லாக் காரியங்களையும் பார்த்துக்கொண்டு அப்படியே செய்ய வேண்டும். எந்த சிறு செயலையும் முடியவில்லை என்று சொல்லக்கூடாது, புரிந்ததா; ஊர் மக்கள் யாராவது வரும் நேரத்தில் மட்டும் திரை மறைவில் நீ இருந்துகொள்"
" ம்,ம், அப்படியே"
"பசியோடு இந்த ஆசிரமத்துள் நுழைந்தாய்; இதோ இந்தக் கனிகளை உண்டு பசியாறி இதோ இந்த இடத்தில் படுத்து உறங்கு; காலை எழுப்புகிறேன்," துறவி பழங்களை அரக்கனிடம் கொடுத்துவிட்டு உண்ணச் சென்றார். மாயனும் தூங்கிவிட்டான்.
சிறிது நேரத்தில் ஊர்மக்களில் சிலர் பயந்தவாறு துறவியின் ஆசிரமம் அருகில் எட்டிப் பார்த்தனர்.
"சுவாமி அரக்கனை வேறு தங்களிடம் அனுப்பிவிட்டோம், அதனால்,....
" நீங்கள் எல்லோரும் நிம்மதியாக உங்கள் இல்லங்களில் உறங்குங்கள் மாயனால் இனி தொல்லை இருக்காது; அவன் இனி யாருக்கும் உபத்திரவம் தர மாட்டான், "
"சுவாமி அவன் போய்விட்டானா ஊரைவிட்டு"
துறவி சிரித்துக்கொண்டே "இறைவன் நம்மை என்று கைவிடமாட்டார்; சென்று உறங்குங்கள், நாளை வழக்கம் போல் வருபவர்கள் வரலாம். இந்த அரக்கன் விஷயத்தை இத்தோடு விட்டுவிடுங்கள்,".மக்கள் துறவியின் வனத்தை விட்டு நீங்கி தங்கள் ஊருக்குள் சென்றுவிட்டனர்.******************
மறுநாள் அதிகாலை துறவி மாயனை எழுப்பினார். காலைக்கடன்களை முடித்துக்கொள்ள அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அதுவரை ஒருநாள் காலைகூட எழுந்து பழகியிராத மாயன் தூக்கக் கலக்கத்துடன், அவர் பின் சென்றான்; அவர் செய்த செயல்கள் அனைத்தையும் செய்யவேண்டுமே.
துறவி காலையில் யோகப்பயிற்சி, செய்தார்; தூய ஆற்றுநீரை அருந்தினார்;
இரவு முதல் நண்பகல் வரை தூங்கி, விழித்தெழுந்ததும் இரையைத் தேடி உண்டுவிட்டு மீண்டும் உறங்கச் செல்லும் அரக்கனுக்கு துறவியின் செயல்கள் வியப்பைத் தந்தன. அவனால் ஒரு சிறு உடற்பயிற்சி கூட செய்ய முடியவில்லை. கழுத்து, இடுப்பு என்று சுளுக்கிக்கொண்டுவிட்டது.
தன்னைப் போன்ற பூதாகரமான உடல் இல்லாத துறவி எந்தவித ஆயாசமும் இன்றி உடற்பயிற்சி செய்த அதிசயத்தை எண்ணி வியந்தான். நதி நீரில் துறவி தன்னை குளிக்கச் சொன்னபோது அரக்கனுக்கு அழுகை வந்துவிட்டது; பின்ன என்னவாம் இந்த பொல்லாத துறவி உணவைப் பற்றி இன்னும் எதும் சொல்லவில்லையே.
குளித்து முடித்து, இறைவனை, வணங்கிய துறவி, பின் ஞாயிறு, நதி, வானம், பூமி, நெருப்பு என்று பஞ்சபூதங்களையும் வணங்க மாயன் சரி எப்படியும் நாளை இந்தத் துறவியை தின்று விடுவோம். தேவைப்பட்டால் கூட ஓரிரு மனிதர்களைத் தின்று விடலாம் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டான்.
எல்லாம் முடிந்த பின், ஆசிரமத்துள் சென்ற துறவி மாயனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்து அவன் கைகளில் இரண்டு கனிகளைக் கொடுத்தார்.
"உணவு வேளை துவங்கிவிட்டது மகனே; இனி பசியாறுவோம்"
" மதிய உணவு எங்கே? யார் கொண்டு வருகிறார்கள்; உள்ளே சென்று எடுத்துவரவேண்டுமா? உணவு உண்ட பின் இந்தப் பழங்களைச் சாப்பிட்டுக் கொள்கிறேன்"
"என் உணவே இதுதான் மகனே"
அரக்கனுக்கு மயக்கமே வந்துவிட்டது; என்ன செய்வது நாளை இந்தத் துறவியைத் தின்று பின் சில மனிதர்கள், ஆடு மாடுகளையும் ஒரு கை பார்க்கவேண்டியதுதான்.
அந்த பழங்கள் அரக்கனுக்கு போதவில்லை. சரி சற்று கண்ணயரலாம் என்றால், அதுவும் முடியாது போலிருக்கிறது. இந்தத் துறவி படுத்துத் தூங்கினால்தானே.
சிறிது நேரத்தில் ஆசிரம வாயிலில் ஊர்மக்கள் சிலர் துறவியைப் பார்ப்பதற்கும் அவரிடம் ஆலோசனை பெறுவதற்கு கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.
சிலர் தங்கள் பிரச்சனைகளை அழுதுகொண்டும், சிலர் சொல்லத் தெரியாமல் திக்கித் திணறி சொல்வதும், சிலர் உணர்ச்சி வயப்பட்டு பேசுவதையும் திரைக்குப் பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருந்த அரக்கனுக்கு துறவி அவர்களை மென்மையான குரலில் ஆறுதல் சொல்வதும், ஆலோசனை சொல்வதும் கேட்க கேட்க, மாயனுக்கு துறவி தன்னை உண்ண வந்தவனிடமும் மென்மையான புன்சிரிப்புடன் பேசியதை நினைத்து வெட்கமாக இருந்தது. தன்னை மட்டும் இந்த மக்கள் தப்பித்தவறி நேரில் கண்டால் நடுநடுங்கி போய்விடுவார்கள். இந்தத் துறவியும் ஆகட்டும் ஆசிரமத்துள் எந்த பொருளும் இல்லை, இந்த நேரத்தில் இப்படியா இருப்பது?
பின்ன என்னவாம், இந்த மக்கள் கொண்டு வந்த ஏராளமான காணிக்கைகளில் துறவி எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை; சில பழங்களை மட்டும் எடுத்துக்கொண்ட அவர் அதையும் அங்கு வந்த குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டார்.
சரி இந்த வேலை ஆயிற்றா, மீண்டும் இறை வணக்கம், ஆசிரம தோட்டத்தை சுத்தப்படுத்துவது, அங்கு சுற்றித் திரிந்த மான், முயல் பசு முதலியவற்று ஏதேனும் அளிப்பது என்று விடாது ஏதோ செய்துகொண்டிருந்த துறவி, மாயனுக்கு சில கிழங்குகள், கனிகளை அளித்தார்.
மீண்டும் மாலை மக்கள் சிலர் துறவியின் ஆலோசனைக்கும் ஆறுதலுக்கும் வந்தார்கள்.
" ஆகா இந்தத் துறவி எவ்வளவு நல்லவர், பொறுமையாக நம் பிரச்சனைகளைக் கேட்டு, ஆறுதலும் ஆலோசனையும் சொல்கிறாரே"
" எவ்வளவு எளிய வாழ்க்கை; உயர்ந்த குணங்கள்"
" கடவுளை மட்டும் நேரில் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தத் துறவி நூறாண்டு காலம் வாழவேண்டும் என்று பிரார்த்திப்பேன்"
" மனிதர்களிடம் மட்டுமா இவருக்கு அன்பு, பறவைகள், விலங்குகளிடம் கூட என்ன கரிசனம்; எந்த ஒரு உயிரையும் கூட இளப்பமாக எண்ணமாட்டார்"
" எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தான் என்று என்ன பரந்த உணர்வு"
திரைமறைவில் நின்று மக்கள் பேசுவதைக் கேட்ட மாயனுக்கு துறவியின் மேன்மையும், மக்களின் பேச்சுக்களும் மனதில் தைத்தது. இதுவரை அவன் மனிதர்களது பேச்சை அருகில் கேட்டதில்லை ; அவன் ஊருக்குள் காலடி வைத்தால் எல்லோரும் பயந்து ஓட, கையில் அகப்படுபவர்களை அலற அலற தூக்கிக்கொண்டு குகைக்குள் சென்று தின்பது.
மாயனுக்கு தான் எவ்வளவு பெரிய தவறு செய்கிறோம் என்பது மனதோரத்தில் தோன்றியது. இத்துணை நல்லவரை நாளை தின்பதாவது.
" உம் என்ன செய்வது எனக்கு மட்டும் இந்த துறவி போல சக்தி இருந்தால் நம் ஊருக்கு பக்கத்துக் காட்டில் புதிதாக நுழைந்துள்ள அந்த மாயன் அரக்கனை ஒரு நொடியில் அழித்தோ அல்லது நாய் பூனை என்று வேறு உருவத்திற்கோ மாற்றி இருப்பேன்; அவர் அவனைக்கூட கொல்லாமல் திருத்தியிருப்பார்; பார்த்துக்கொண்டேயிரு; அவர் பெரிய மகான்.,"
" என் அருமை தம்பியைத் தின்று விட்டான்" இது ஒருவர்
"உயிருக்குரிரான என் தாயையும் தின்று விட்டான்"
"என் அண்டை வீட்டாரின் குழந்தைகள் இன்று பெற்றோரின்றி இருக்கின்றன; அவந்தான் தன் பசிக்கு அவர்களை இரையாக்கிவிட்டானே,".
" வாயில்லாத சீவன்களான என் பசுக்களும் ஆடுகளும் அவனுக்கு சென்ற வாரம் பலியாகிவிட்டன"
"ஒரு உயிரைக் கொல்கிறானே ஒரு உயிரை அவனால் உண்டாக்க முடியுமா? இதைச் செவிமடுத்த மாயன் உண்மையாகவே திடுக்கிட்டுப் போனான்; ஆம் மனிதர்களையும் மாக்களையும் தின்கிறேனே இவற்றில் எதாவது ஒரு உயிரை என்னால் உண்டாக்க இயலுமா?
மாயனுக்கு பெருத்த அவமானம் ஆகிவிட்டது. இதுநாள்வரை தன்னை எவ்வளவு பெரிய வீரன் என்று மக்கள் அச்சத்தோடு வியந்துகொண்டிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தவன், அவர்கள் அனைவரும் பேசியதைக் கேட்டு வெட்கித் தலை குனிந்தான்; அவர்கள் அனைவரும் சென்ற பிறகு நேராக துறவியின் கால்களில் வீழ்ந்தான்.
"சுவாமி, என் உயிரைப் பறித்துவிடுங்கள்; நான் மகாபாவம் செய்துவிட்டேன்; பலரின் இன்பமான குடும்பத்தையும் அப்பாவி விலங்குகளையும் என் பேராசையால் அழித்துவிட்டேன்; திரைமறைவில் மக்களிடம் நீங்கள் பேசுவதையும், பின்னர் அவர்கள் தங்களுக்குள் அளவளாவுவதைக் கேட்டு விட்டேன்; எத்தனை மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள்; உங்களைப் போய் தின்ன வேண்டும் என்று நினைத்தேனே," கண்ணீரோடு அழுதான்.
துறவி அமைதியுடன் "உன் நேரம் முடிய இன்னும் ஒரு நாழிகை இருக்கிறது மகனே" என்றார் அதே புன்னகையுடன்.
"ஆம் சுவாமி அதற்குள் என்னை மனித உருவிற்கு மாற்றிவிடுங்கள்; இந்த உருவத்தில் நான் சென்றால் மனிதர்களும் குழந்தைகளும் அஞ்சுவார்கள்; நான் செய்த பாவத்திற்கு நான் என் உழைப்பின் மூலம் பிராயசித்தம் செய்துகொள்ள வேண்டும்"
துறவி சொன்ன சொல் தவறாதவர், அவர் உடனே மாயனை மாற்றிவிடவில்லை, அந்த ஒரு நாழிகை நேரம் முடியக் காத்திருந்துவிட்டு பின் மாயனை மனித உருவாக்கினார்.
அன்று முதல் மாயன் மனிதநேயம் மிக்க ஒரு சிறந்த உழைப்பாளியாக மாறினான்.

oooOOOooo

கோகுலம் - செப்டம்பர் 2005

முடிச்சு

----மாதங்கி

கழுத்துப் பட்டை அழகாய் கட்ட
இழுத்து கப்பலை நிறுத்திக் காட்ட
அழகாய் பின்னி கூந்தலை முடிய
நுழைந்து குகையில் நுணுகி செல்ல
அரங்கில் பட்டம் விட்டம் பறக்க
சுரங்கம் தோண்ட மலையேற முடிச்சு
மலர்தார் முடிக்க பலநிற முடிச்சு
விலங்கை ஆற்றிடை சற்றே நிறுத்திட
கவண்கடி செய்ய முடிச்சு மூப்பில்
சவமான பின்பும் ஓரிரு முடிச்சு
சிறிய பணியோ பெரிய பணியோ
சிறிது பெரிதாய் முடிச்சு கள்பல
ஆர்வம் பொங்க ஆக்கக் கற்போம்
முத்தாய் முடிச்சு முடிய முதற்கண்
முத்திரை பதிப்போம் முனைந்து முயல்வோம்
சேர்ந்தே அவிழ்க்க வேண்டிய முடிச்சு
சேட்டை செய்யும் கெட்ட முடிச்சு
அரட்டி கவலை கோபம் சோம்பல்
அரந்தை ஏழ்மை உரிமை மீறல்
அறிவீனம் ஐயம் சாதிப் பகைவெறி
நோய்பல பிடித்த தேகம் நலக்கேடு
மெய்வெறி நிறவெறி தனவெறி போர்வெறி
மதவெறி பிடித்த முட்டாள் முடிச்சே
கடிதோ தடித்தோ முடிச்சு இருப்பின்
அடியுடன் அறுப்போம் வேருடன் எரிப்போம்
முட்டுக் கட்டைப் போடும் முடமான
முள்முடிச் சுகளை முறித்து
முடிவிலா இன்பம் பெற்றிடு வோமே

oooOOOOooo

இலக்கியப்பணி இதழ் - ஆடி 2005