Thursday, July 31, 2008

ஓர் உன்னத தினம்

வீட்டை மோப் போட்டு முடித்து மோப் ஸ்டிக்கையும் பக்கெட்டையும் கவிழ்த்தி வைத்துவிட்டு மீண்டும் முன்னறைக்கு வந்தபோது சன்னலருகில் ஒரு கரப்பான் பூச்சியைப் பார்த்தேன். சட் இது எங்கிருந்து வந்தது. இப்பவும் நாங்கள் இருக்கும் ப்ளோக்கில் குப்பைத் தோம்புகூட பழைய ப்ளோக்குகளைப் போல வீட்டினுள் இல்லையே, ஒவ்வொரு தளத்திலும் ஓரமாக இடம் ஒதுக்கி வைத்துவிட்டார்களே; ஒருவேளை டவுன் கவுன்சில் ஆட்கள் நீர்த்தாரை இருக்கும் இடங்களை ப்யுமிகேட் செய்வார்களே அதுபோல் செய்துவிட்டார்களோ; வீட்டில் பேகான் கூட இல்லையே. மறு நிமிடம் சே, நாம் ஏன் இந்த விசயத்திற்கு இப்படி அலட்டிக்கொள்கிறோமோ என்று தோன்றியது. பேகான் இருந்தாலும் நான் அதைப் பயன்படுத்துவதில்லை, ஒரு பழந்துணியில் அதை பிடித்து சன்னல் வழியே விட்டுவண்ட்டு, கண்ணு எங்காவது ஓடிப்போய் பொழச்சிக்கோ, நீ எங்களைப் போல இல்ல எங்களை விட பெரிசா இருந்தா மிதிப்போமா, மதிப்போமில்ல, . சேகரைப் போல எனக்கு பயமோ அருவருப்போ அதைப் பார்த்தால் ஏற்படுவதில்லை. என்ன இதே அவர் வீட்டில் இருந்தால் வீட்டை இரண்டு பண்ணிவிடுவார். அவர் அதை எந்த அளவிற்கு வெறுக்கிறாரோ அந்த அளவுக்கு எனக்கு அதை மிகவும் பிடித்தது. அதுவும் இந்த புதிய ப்ளோக் வந்த இரண்டு வருடங்களில் ஒரு கரப்பானைக்கூட நான் பார்த்ததில்லை. அதனால் எனக்கு அதைக் காண ஒரு விதத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தது. அதுக்கு எதாவது சர்க்கரை கிக்கரை தந்திட்டு, மெல்லத் துணியால தூக்கி வெளியில விட்டுவிடலாம்.
சமையலறைக்குள்ளே போனேன். துணியை ஒரு கையிலும் சர்க்கரையை இரண்டு விரல் இடுக்குகளிலும் எடுத்து முன்னறைக்கு வந்தவள் அப்படியே நின்றுவிட்டேன். முன்னறை சோபாவில் ஒரு கரப்பான் பூச்சி வக்கணையாக ஐந்தடி நீளத்தில் உட்கார்ந்திருந்தது.

சட்டென்று கண்களை நன்றாக விரித்து உற்றுப்பார்த்தேன். சற்றுமுன் இங்கிருந்த குட்டிக்கரப்பானா, இல்ல இது வேறயா, வாசல் கிராதிகளை வேறு பூட்டியிருக்கிறேனே, இது எப்படி உள்ளே வந்தது.
ஹலோ
அட யார் சொல்வது, கரப்பானா, ஏன் இப்படி பெரிசாக இருக்கிறது. நேற்று மகள் சொல்லிக்கொடுத்த கணினி விளையாட்டை விடாமல் விளையாடினேனே, கண்ணு கிண்ணு கோளாறு ஆகி, இரண்டிரண்டாக தெரிவதுபோல் ஒருவேளை உருவம் பெரிதாக தெரிகிறதா? இல்லையே காலையிலிருந்து வீட்டுவேலைகளை எல்லாம் ஒழுங்காத்தானே செய்துவந்தேன். இதென்ன கலாட்டா?
வணக்கம், நீங்க திருவாட்டி சந்திரிக்கா தானேகரப்பான்பூச்சி விஸ்வரூபம் எடுத்தது மட்டுமன்றி தமிழிலும் பேசுகிறதே. இதை இப்போதே என் தோழி ரங்கமணியிடம் சொல்லாம் போல் தோன்றுகிறதே, இல்லை ஒருவேளை வாசலில் யாராவது நிற்கிறார்களா,கரப்பானை நன்றாகப்பார்த்தேன். ஒருவேளை ஏதேனும் தமாஷ்நிகழ்ச்சிக்காக இப்படி மெஷின் செய்து அனுப்பியிருக்கிறார்களா? ஐயோ வாசல் கதவுதான் பூட்டியே இருக்கிறதேஉங்களிடம் தான் பேசுகிறேன், வணக்கம் திருவாட்டி சந்திரிக்கா
சே, வணக்கத்திற்கு பதில் வணக்கம் சொல்ல வேண்டாம், நம் பண்பாடு என்ன கலாச்சாரம் என்ன
வணக்கம் கரப்பான், சாரி, திரு....திருமதி....மிஸ் கரப்பான்பூச்சி தட்டுத்தடுமாறி உளறினேன்
திருவாட்டி சந்திரிக்கா, இப்படி திடீரென்று வந்ததற்கு முதலில் மன்னிப்பு கோறுகிறேன்
நீ, .... நீங்கள் உள்ளே நுழைந்ததெப்படி,
தயவுசெய்து நீங்கள் முதலில் அமருங்கள்.
எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன், என் கால்கள் வெடவெட என்று நடுங்கியதை என்னாலே பார்க்கமுடிந்தது. மெருகேற்றிய சாக்லெட் ஹாட்டாக் நிறத்தில் இருந்த கரப்பான் பூச்சியை உற்றுப்பார்த்தேன்


பரவாயில்லை, தைரியமாகவே இருக்கிறீர்கள்நாற்காலியில் தொங்கிக்கொண்டிருந்த என் துவைத்த சாரோங்கை எடுத்து முகத்தை தேவையில்லாமல் துடைத்துக்கொண்டேன்.


கரப்பான்பூச்சி பேச ஆரம்பித்தது.ஒரு சிறு நேர்காணலுக்காக உங்களைத் தேடி வந்துள்ளேன். உங்கள் ஒத்துழைப்பு எங்கள் ஆவணங்களைத் தயார் செய்வதற்கு உதவியாக இருக்கும்.
நீங்கள் இடமாறி வந்துவிட்டீர்கள். பேட்டி கொடுக்கும்படிக்கு நான் பிரபலமான நபர் இல்லை. ஒரு நடுத்தரக்குடும்பத்து பெண்மணி அவ்வளவுதான்கரப்பான் தன் உடலை லேசாக அசைத்தது. பூமியில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மனிதரைத் தேர்ந்தெடுத்து, பின் அவரை நேர்காணல் செய்யவேண்டும். எங்கள் குழுவினருக்கு இடப்பட்ட பணி இது. எனக்கு ,சிங்கப்பூரில், உங்களைக் கண்டு பேச உத்தரவு
அப்படியானால் நீ.....நீங்கள் பூமியைச்சேர்ந்தவரில்லையா?
இல்லை. எனக்கு சுற்றிவளைத்துப் பேசிப் பழக்கமுமில்லை, அது என் அமைப்பிலும் இல்லை. நான் வலாரியாவிலிருந்து வருகிறேன். எங்கள் கப்பல், பூமியின் நிலவான சந்திரனை எடுத்துச்செல்லப்போகிறது. அதற்குமுன் பூமிபுத்திரர்களிடம் சில கேள்விகள் கேட்க நினைத்தோம்

எல்லா நாட்டிற்கும் கரப்பான்பூச்சியை அனுப்பியிருக்கிறார்களா,உங்கள் ஊரில்
இங்கு இந்த உருவம், அமெரிக்காவிற்கு பருந்து உருவில் என் நண்பர் சென்றிருக்கிறார். மற்றொருவர் மனித உருவில் சென்றிருக்கிறார், வேலையைக்கொடுத்துவிட்டார்கள். சிங்கப்பூரில் உள்ள நான்கு மில்லியன் மக்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். வெவ்வேறு கல்விநிலை, பொருளாதார நிலை வாழ்க்கை முறை கொண்ட மனிதர்களை இதற்குத் தேர்ந்தெடுத்துள்ளோம். உங்களைப்பற்றிய விவரங்கள் தெரிந்துகொண்டபின் நான் எடுத்த உருவம் இது. நீங்கள் சந்திரனை இழக்கப்போகிறீர்கள். இதைக்கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?சந்திரனைக் களவாடப் போகிறார்களா, ஏதேனும் வலுத்த நாட்டின் அதிபரிடம் சொன்னாலும் பலன் இருக்கும். இதைக்கேட்டவுடன் என்ன தோன்றுகிறதா? சந்திரனைப்பற்றி எழுதி எழுதி களைத்த கவிஞர்களிடமும், பேசிப்பேசி களைத்த காதலர்களிடம் கேட்டாலாவது உருப்படியாகட் சொல்வார்கள். நான் என்னத்தைச் சொல்ல, சந்திரன் இல்லாவிட்டால் என்ன, மின்சார வசதி இருக்கிறது, அது ஒரு பெரிய இழப்பாக இருக்காது. வேண்டுமானால் கவிஞர்களும் காதலர்களும் கஷ்டப்படலாம்
கடகடவென்ற சிரிப்பொலியுடன் தொடர்ந்து அதன் உடல் அசைவதையுமே நான் கேட்கவும் பார்க்கவும் முடிந்தது. பேசும்போதெல்லாம் அதன் உணர்கொம்புகள் ஆடிக்கொண்டே இருந்தன
எதாவது சாப்பிட குடிக்க கொடுக்கலாமா, என்ன கொடுப்பது, என்ன சாப்பிடுகிறீர்கள், வேறு கிரகம் என்பதால் ஒருவேளை மின்சாரம் அல்லது சூரிய வெளிச்சம் இப்படி எதாவது சாப்பிடுமோஎதுவேண்டுமானாலும் கொடுங்கள்ரைபீனா பழத்தின் சிரப் இருக்கிறது, அதைக் கலந்து கொடுக்கலாம், ஒரு நிமிடம் என்றவாறு எழுந்து போனேன். சமையலறை மேடையின் மேல் இருந்த சிறுப்ளாஸ்டிக் வாங்கில் பிஸ்கட் டப்பாக்களில் ஒன்றைத்திறந்து இரண்டுஎடுத்து ஒரு தாம்பாளத்தில் வைத்துக்கொண்டு வந்தேன். முன்னறைத் தொலைபேசி ஒலித்தது. தோழி ரங்கமணிதான் இந்த நேரத்தில் அழைப்பாள் . வாரம் ஓரிரு முறையாவது நான் பேசிக்கொள்வோம்.
ஹலோ, ..... ஓ என் கணவர் சேகர், இரவுச்சாப்பாடு கூட்டாளியுடனா, நோ ப்ராப்ளம், ....... கையில் பிஸ்கட்டும் ரைபீனாவும் வைத்திருக்கிகிறேன்,... முதலாளி கூப்பிட்டிருக்காராம், செல்லை அணைச்சி வச்சிறப்போறாராம். ...... என்.யூ. எஸ்ஸிலிருந்து காஞ்சு நேரா இன்னிக்கு வந்திருவா,... இல்லை நாளைலேந்துதான் ..... சரி வச்சிடறேன்
அதேநேரத்தில் என் செல் அடித்தது, .... ரங்கமணியாகத்தான் இருக்கும், கரப்பானிடம் சைகை காட்டிவிட்டு படுக்கையறையிலிருந்து மணி அடித்துக்கொண்டிருந்ததை அமைதிபடுத்தி அங்கேயே பேசத்துவங்கினேன், ரங்காதான், .ரங்கா, ஒரு அதிசயம்.. இங்க ஒரு அஞ்சடியில ஒரு கரப்பான்பூச்சி விருந்தாளியா வந்திருக்கு, அதுக்கு ஜூஸ¤ம் பிஸ்கட்டும் கொண்டுபோயிட்டிருக்கேன்னு சொல்லுவோமா,.... குரலை சன்னமாக்கிக்கொண்டேன், ரங்கா இங்க ஒரு கரப்பான்பூச்சி ஹால் சோபாவுல,.என்று ஆரம்பித்தேன், அடுத்த வினாடி.... என் கண்ணெதிரில் கொட்டை எழுத்தில் அச்சடிக்கப்பட்ட தாள் நீட்டப்பட்டது.
'தயவுசெய்து நேர்காணல் முடிந்தபின் சொல்லவும், ரகசியம் காக்கவும்' என்று எழுதப்பட்டிருந்தது. .... திடுக்கிட்டுப்போனேன்.

கரப்பான்தான், இது என்ன மாயவித்தை தெரிந்ததா, சாக்கிரதையாக இருக்கவேண்டும், ஒரு வேளை போலிசுக்கு நான் தகவல் தெரிவிக்க வேண்டுமோ, சிறையிலிருந்து தப்பி வேறு நாட்டுக்கு ஓடிவிட்டதாகக் கூறப்படும் மாஸ் சலாமத்தைக் கண்டுபிடித்தால் ஒரு மில்லியன் யாரோ பெயர் சொல்லாத நபர் தருவாராம், இதுபோல் நிலாத்திருடன் வருவதை சொன்னால் பைத்தியம் என்பார்களோ, செல்லில் போட்டோ பிடித்து வைக்கலாமென்றால், என் செல்லில் அந்த வசதி இல்லை, காமிராவை இந்த காஞ்சு எங்கே வைத்துத் தொலைத்தாள். சென்ற மாதம் கண்பாதுகாப்பு வாரியத்திலிருந்து வீடுவீடாக அடையாள அட்டையுடன் வந்து கண் பாதுகாப்பு பற்றி குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி ஒரு சர்வே எடுக்கிறோம் என்றார்கள், எங்கள் தளத்தில் உள்ள பத்து வீடுகளில் வீட்டிலிருப்பது நானும், திருமதி வோங், மற்றும் திருமதி லீலா வீட்டு பணிப்பெண்கள்தான். வேறு எல்லா வீடுகளும் பகலில் பூட்டியே இருக்கும். மற்ற தளங்களில் இந்த அளவு கூட நடமாட்டம் இருக்குமா தெரியவில்லை. அரைமணிநேரம் பேசிய பின் ஐந்து வெள்ளிக்கு நியாயவிலைக்கடை பற்றுச்சீட்டும், ஒரு டார்ச் பேனாவும் கொடுத்தார்கள். என் அரைமணிநேரத்தை எடுத்துக்கொண்டதற்கு ஈடாம். இது எதாவது கொடுக்குமா, பாவம் வேறு கிரகத்திலிருந்துவேறு வந்திருக்கிறது, நான்தான் அதற்கு எதாவது தரவேண்டும். சாப்பாட்டுக்கடையில் வாங்கித்தரலாமா, வீட்டில் இனிப்பைத் தின்றுவிடுகிறேன் என்று இனிப்பு எதையும் வைத்துக்கொள்ளவில்லைதிருவாட்டி சந்திரிகா, எனக்கு ஏதேனும் தர நீங்கள் விரும்புவதை நினைத்து மிக்க நன்றி. நம் பேச்சைத் தொடர்வோம்

இது என்ன யட்சிணியா, டெலிபதி வித்தையா, மனதில் எண்ணுவதை அப்படியே சொல்கிறதேஉங்கள் எண்ணங்கள் படிக்க ஏதுவான மைண்ட் ரீடர் என்னிடம் இருக்கிறது, இதுவே என் முதல் ஆங்கிலச் சொல்லின் ஊடுநுழைவு என்று நினைக்கிறேன்
என் பேச்சில் ஆங்கில வார்த்தைகள் இருக்கும். தேசிய நூலகத்தையே தமிழ்வாசிப்புக்கு பெரும்பாலும் நம்பியிருக்கும் என் போன்றவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை நூலகம் நடத்தும் பழைய புத்தக விற்பனையே கதி,
பாதகமில்லை, சரி நம் பேச்சைத் தொடர்வோம்,....சரி நீங்கள் ஒற்றுமையாக இருக்கிறீர்களா? இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ஒற்றுமையா, யாருடன் , கணவருடனா, இல்லை எங்கள் இருவரின் சொந்தபந்தங்களுடனா, அண்டைவீட்டினருடனா? சே இதெல்லாம் கேட்க வந்திருக்காது, இந்த கரப்பான்பூச்சி. சிங்கப்பூரின் முக்கிய சொலவடையே இனமத ஒற்றுமைதானே, அதைப்பற்றித்தான் கேட்கிறதோ என்னவோ,
ரொம்ப ஒற்றுமையாகவே இருக்கிறோம், யாரும் எந்த மதத்தைப்பற்றியோ இனத்தைப்பற்றியோ தவறாக பேசவோ எழுதவோ கூடாது
மன்னிக்கவும் நான் நீங்கள் என்றது பூமிவாசிகள் அனைவரையும்தான்.பூமிவாசிகள். சரிதான். ஒரு நாட்டில் வெள்ளம் வந்தால் உடனே பல நாடுகள் உதவிப்பொருள்கள், உதவிக்குழுக்கள் அனுப்பும். இதுபோலத்தான், பூகம்பம் வந்தால், உடனே உதவ எல்லோரும் வருவார்கள்.

அப்படியா, மிக்க மகிழ்ச்சி. ஆமாம் பசி பட்டினி பஞ்சம் உள்ள நாடுகளின் படங்கள் இவை, பாருங்கள் எலும்பும் தோலுமாய் உள்ள மனிதர், உலர்ந்து வெடித்த நிலத்தில் சுருண்டிருக்கிறார். பத்தடி தொலைவில் கழுகு காத்திருக்கிறது. ஒரு பக்கம் அதிக விளைச்சல் என்று பழங்களையும் தானியங்களையும் கொட்டிக்கொண்டிருக்கிறீர்கள், ஆயிரம் கோடிகள், மில்லியன்கள் ஆயுதங்களுக்கும் அணுகுண்டுகளுக்கும் செலவழிக்கிறீர்கள். பாருங்கள், அணுகுண்டு விஷவாயு இவை இரண்டும் இன்னும் பல வினோத ரசாயனங்களால் பாதிப்புக்குள்ளானவர்களின் படங்கள், பஞ்சம் தலைவிரித்தாடும் நாடுகளில் உள்ள குழந்தைகளின் படங்கள்,...

இது என்ன கொடுமை, .... வேண்டாம் தயவு செய்து காட்டாதீர்கள், ..... இது என்ன பயங்கரம் நினைத்தால் சோறுதண்ணி இறங்காது. பொல்லாத பணக்கார நாடுகள் பலவிதக்களில் சுரண்டுகிறார்கள். தனிமனிதர்கள் அல்ல.


தனிமனிதர்களைப்பற்றிச்சொல்கிறேன். முன்பு எப்போதும் இல்லாத அளவு மனித உரிமை மீறல், வன்முறை, பாலியல் வன்முறை இதற்கு ஒவ்வொரு நாட்டிலிருந்தும் புள்ளிவிவரங்கள் எடுத்து கடந்த சில ஆண்டுகளாக கண்காணித்து வருகிறோம். இதில் இனவேறுபாடின்றி ஒற்றுமையாக இருக்கிறீர்கள். சிரிக்கமுடியாத நகைச்சுவை
இவ்வளவு சொல்கிறீர்களே, உங்களால் எளியோருக்கு நல்வாழ்வு அளிக்க முடியுமா, முடியும் என்றால் நிலவென்ன, ஏதேனும் நிலத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்
நிலங்கள், நீர்நிலைகள் எல்லாம் தூய்மையாக வைத்துக்கொண்டிருக்கிறீர்களா
ஆமாம், நாங்கள் ரொம்ப சுத்தம் குப்பை போடுவதற்கென்றே ஒரு தீவை ஒதுக்கிவிட்டோம்
வெகு அழகு. நீங்கள் என்பது சிங்கப்பூரர்கள் மட்டுமல்ல, பூமிவாசிகள் எல்லோரையும் சேர்த்து என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டவேண்டியிருப்பதற்கு மன்னிக்கவும். நாங்கள் கேள்விப்படும் செய்திகள் வேறு மாதிரி இருக்கின்றனவே. நீங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஒரு ஆதிக்கவாதியின் வீட்டின் மின்னணுக்குப்பைகளை ஏமாந்தவர், இளைத்தவர் வீட்டின் கரைப்பகுதியில் கொட்டுவது, அவர்கள் தயாரிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் வலுக்கட்டாயமாக மற்றவர் மீது பயன்படுத்துவது இதெல்லாம் நாசகார வேலையில்லையா, நாங்கள் நிலாவை மட்டும் எடுத்துகொண்டுவிடுகிறோம். பூமியின் சீர்கேடுகளை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறோம். வருங்காலத்தினர் எல்லோரும் எல்லாம் பெறுவார்கள்

தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் ஏதேனும் நல்லது நடக்குமானால் நடக்கட்டும். என்ன, இனி நாங்கள் நிலவைப்பார்க்க முடியாது. இருக்கட்டுமே. நிலாவையும் நட்சத்திரத்தையும் காட்டி யார் குழந்தைகளுக்கு சோறூட்டுகிறார்கள். அதற்குதான் டிவி வந்துவிட்டதே, நிலாவாவது ஒன்னாவது, நான் சிறுமியாக இருக்கும்போது, வானத்தில் எண்ணமுடியாமல் நட்சத்திரங்கள் இருக்கும். அம்மா புடவையை மடிக்க முடியாது, அப்பா பணத்தை எண்ணமுடியாது என்று என் தாத்தா வானத்தையும் நட்சத்திரத்தையும் விடுகதையில் ஒளித்துவைத்து கேட்பார். மற்ற நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை சிங்கப்பூரில் நான் இரவெல்லாம், பல ப்ளோக்குகளின் ஊடாக சன்னல் மூலம் வானத்தில் தேடித்தேடி களைத்துப்போகும் முன் போனால் போகிறது என்று வாரம் ஓரிரு நாட்கள் ஒரு நட்சத்திர தரிசனம் கிடைக்கும்

நன்றி திருவாட்டி சந்திரிக்கா, நேர்காணல் முடிந்தது. இதில் நிலவை எடுத்துக்கொள்ள ஒரு பூமிவாசியாக உங்கள் கையெழுத்தை இந்த விண்ணப்பத்தில் போட்டால் போதும். இதன் ஒளிசிட்டையும், இந்த சீட்டையும் இப்போதே வலாரியாவிற்கு அனுப்பிவிடுவேன். மிக்க நன்றி. பூமிவாசியில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினரின் ஒப்புதல் கிடைத்தால் இன்னும் எங்களுக்கு மனநிறைவு கிடைக்கும். நாங்கள் தேர்ந்தெடுத்தவர்களில் ஒருவரின் கை ஒப்பம்
இருந்தால்கூட போதும், செயல்படுத்திவிடலாம்
என்ன தருவது. என்ன இருக்கு, அவருக்கு ஐம்பத்தைந்து வயதாகிவிட்டதால் மசேம நிதியில் பணம் எடுக்க முடியாது; காஞ்சுவே எங்கள் சமூக நிலையம் தரும் உதவித்தொகையில் படிக்கிறாள். படிப்பு முடிந்த பின் வேலைக்குப்போய் அதன் பாதியை அடைக்கவேண்டும். மகன் தேசிய சேவையில் இருப்பதால் ஏதோ குடும்பம் நடக்கிறது. சாப்பாட்டு கடையில் வேலைபார்த்த காலத்தில் சேர்த்துவைத்ததில் மருத்துவ செலவு போக நூறு வெள்ளி இருக்கிறது. அடுத்த மாதம் ஐம்பதாவது பிறந்த நாளைக்கு பிள்ளைகளுக்கு ஏதேனும் வாங்கிக்கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். நூறு வெள்ளியில் பாதியை ஏதேனும் தர்ம நிதிக்கு கொடுக்கச்சொல்லிவிட்டு, பாக்கி பணத்துக்கு தமிழகத்திலிருந்து நல்ல தமிழ்ப்புத்தகங்கள் வாங்கி அனுப்ப யாரிடமாவது சொல்லலாமா? என்றென்றும் புத்தகங்கள் வீட்டிலேயே இருந்தால் பிள்ளைகள் படிக்க ஏதுவாக இருக்குமேதங்கள் அன்புக்கு மிக்க நன்றி திருவாட்டி சந்திரிக்கா, நிலவைத்தான் எடுத்துக்கொள்ளப்போகிறோமே. இதைவிட இனி என்ன வேண்டும். புத்தகங்களை அனுப்புவதில் ஏதும் பிரச்சனையில்லை. தர்மநிதிக்கு உடனே சேர்ப்பித்துவிட இயலும், ஆனால் அவை இனி பயன்படாது
ஓ, நீங்கள் இதைவிட அதிக அளவில் பண உதவிசெய்வீர்கள், தெரியும்; இருந்தாலும் என்னால் ஆனதைக் கொடுக்கிறேன், தயவு செய்து மறுக்காதீர்கள். சரி, புத்தகங்கள் வேண்டுமானால் நான் தமிழகம் செல்லும் யாரிடமாவது வாங்கிவரச்சொல்கிறேன்
திருவாட்டி சந்திரிக்கா, அவையும் இனி உங்களுக்கு பயன்படா.ஏன் எனக்கு கண் தெரிகிறது. நான் நிறைய புத்தகங்கள் படித்துவருபவள்தானே
திருவாட்டி சந்திரிக்கா, நாங்கள் நிலவை எடுத்துக்கொண்ட பின் ஏற்படும் விளைவுகளை உங்கள் வாழ்க்கையை திசை திருப்பி விடும். சங்கிலித்தொடர் போல் பல சம்பவங்கள் நடக்கும். ஏற்றவற்றங்கள் மறையும்ஏற்றவற்றம் என்றால் ,.....ஆங்கிலத்தில் tides என்பார்களே, பூமியின் ஏற்றவற்றங்களில் பெரும் பங்கு வகிப்பது நிலவுதான். அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துவிடும். பருவநிலை மாறுதல் ஏற்படும், ஆனால் அவை சாதாரண மாறுதலாக இல்லாமல் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரே வாக்கியத்தில் சொல்லவேண்டும் என்றால் பூமி அழிந்துவிடும்.

ஐயோ கடவுளே, நெஞ்சைப்பிடித்துக்கொண்டேன், நாக்கு உலர்ந்தது;பூமி முழுதும் அழிந்துவிடும்; கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு வாருங்கள் திருவாட்டி சந்திரிக்கா
சமையலறைக்கு ஓடினேன். கைகள் நடுங்கின. அப்படியே மேடையில் ஓரம் சாய்ந்துகொண்டேன். என் நெஞ்சு படபடத்ததை என்னாலேயே கேட்க முடிந்தது. கல்லூரியில் இருக்கும் மகளின் முகம், தேசிய சேவையில் இருக்கும் மகன், கணவரின் பிம்பங்கள் தோன்ற, கூடாது, நான் கையெழுத்து போட்டால்தானே, அந்த பேப்பரையே கிழித்துவிடுகிறேன். நன்றாக இருக்கிறது கதை, வலாரியாவாம், நிலவை மட்டும் எடுப்பார்களாம், பூமியே அழிந்துவிடுமாம் ஆறஅமர சொல்கிறார்கள், பின் பக்கத்தில் துணி உலர்த்தியிருக்கும் காலாக்கம்புகளை எடுத்து இந்த கரப்பானை அடித்து நொறுக்கிவிடட்டுமா, ஐயோ அது மனதை வேறு படித்துத்தொலைக்குமே, கெட்டவர் அழிய அப்பாவிகள் உயிரைவிடவேண்டுமா, இது அநியாயம் அக்கிரமம், கூடாது, கூடவே கூடாது, ஒருத்தர் கையெழுத்துப்போட்டால்கூட செயல்படுத்தி விடுவார்களாம்; என்ன துணிச்சல், இவர்கள் யார் நமக்கு சட்டம் பேச, கையெழுத்து போட மாட்டேன் என்று அடித்துச்சொல்லிவிடலாம். அந்தந்த நாட்டின் தலையெழுத்து யார் மாற்ற முடியும், எனக்கென்ன அதிகாரம் இருக்கிறது, நான் என்ன நாட்டின் பிரதம மந்திரியா, இல்லை அதிபரா, இல்லை அப்படி இருப்பவர்கள்தான், வலிய நாடுகளை பகைத்துக்கொள்கிறார்களா, நானா சொன்னேன், அணுகுண்டு போடு, ரசாயனங்களை அப்பாவிகள் மீது சோதித்து பார் என்று அவரவர் தலையெழுத்து, ஏதோ முடிந்ததைக் கொடுக்கலாம். மறுகணம் அந்த பத்து புகைப்படங்கள், ஐயோ கோரம், பயங்கரம், எனக்கு இங்கு என்ன பிரச்சனை, குழாயைத் திறந்தால் தண்ணீர், தொண்ணூறு விழுக்காட்டினருக்கு அரசே வீட்டுவசதிக்கடன், யாருமற்றவருக்கு ஆதரவு இல்லங்கள், வியாதி வராதவரை ஒன்றும் பிரச்சனையில்லை, ஆனாலும் அந்தப் புகைப்படங்கள் மனதை என்னவோ செய்தன, ஒரு நாடு மட்டுமா, பல நாடுகளில்அணுகுண்டு வீச்சுகள் இப்படியா தலைமுறைகளை பாதிக்கும்; விஷவாயுக்கசிவு இவ்வளவு நாசகரமானதா, அந்த பஞ்சப்பரதேசி மனிதன் எதைத்தேடி போகிறான் தெரியுமா, ஐயோ இதற்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்க எனக்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது, கிடைத்திருக்கிறதே, யாருக்கும் கிடைக்காதது எனக்கு கிடைத்திருக்கிறதே, ஒரு கையெழுத்து ஒரு கையெழுத்து மட்டும்


தண்ணீரை கடகடவென்று குடித்துவிட்டு, முன்னறைக்கு ஓடி வந்தேன். வெடுக்கென்று கரப்பானிடமிருந்து விண்ணப்பத்தைப்பிடுங்கி எங்கே கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டேன்.
ஒரு பின்குறிப்பு


மாலையின் சேகர் மாற்று சாவியை மூலம் வீட்டைத் திறந்துகொண்டு வந்தபோது, முன்னறையில் மயங்கிக்கிடந்த சந்திரிக்காவைதண்ணீர் தெளித்து எழுப்பியவுடன் வானத்துல நிலவு தெரியுதா என்று ஏன் கேட்டாள் என்பது சேகருக்குப் புரியவில்லை.