Friday, July 21, 2006

55 fiction- 4

கண்காட்சி


"அம்மா, அந்த கண்காட்சி நம் ஊருக்கு வந்திருக்கு ப்ளீஸ் போகலாம்மா" ப்ரீத்தி கெஞ்சினாள். போனார்கள். endangered species என்று அறிவிப்பு பலகை கூறியது. உலகில் மொத்தமே ஐந்துதான் இருக்காம். ஒவ்வொரு கண்டத்திலிருந்து ஒரு சாம்பிள் இருக்கிறது. ஜாக்கிரதையாக ஊர் ஊராக அரசு கொண்டுபோகிறதாம் . "எல்லாவற்றுக்குமே இப்போது மருந்து கண்டுபிடிச்சாச்சு; அப்போதெல்லாம் கிடையாது எங்களுக்கெல்லாம் ரொம்ப தொல்லை கொடுத்தது இது" என்ற பாட்டியிடம் பெயர் என்ன என்றாள் ப்ரீத்தி. பெயர் கிடையாது. ஆண் என்று அழைப்பார்கள் என்றாள் அம்மா. ----------------------------------------

Monday, July 03, 2006

நம்பிக்கை குழுமம் அறிவித்த சிறப்புப் பரிசு

நம்பிக்கைக்கு ஒர் அஷ்டவக்ரன்

(அஷ்டவக்ரன்*- எட்டு கோணல்கள் உடைய உடலைக் கொண்டவன்)

காட்சி ஒன்று

இடம் : மிதிலையில் ஒரு முக்கிய வீதி. பன்னிரண்டு வயது அஷ்டவக்ரன் தன் மாமன் சுவேதகேதுவுடன் நடந்து கொண்டிருக்கிறான். வழியில் எதிர்படுகிறார்கள் அரசன் வரும் வழியைச் சீர்படுத்தும் ஊழியர்கள்.
நேரம்: காலை நேரம்
பாத்திரங்கள்: அஷ்டவக்ரன், சுவேதகேது, ராஜாங்க காவலர்கள், பேரரசர் ஜனகர்

காவலன் ஒருவன்: (எரிந்து விழுகிறான்) அடடா, விரைவாக எல்லோரும் நகர்ந்து வழிவிடுங்கள்; பேரரசர் வந்துகொண்டிருப்பது தெரியவில்லையா; மிதிலையில் இன்று நடக்கப்போகும் மாபெரும் யாகத்துக்கு நாங்கள் செல்ல வேண்டும்.

அஷ்டவக்ரன்: ஐயா, பேரரசரே வந்துகொண்டிருந்தாலும் பாதையில் வயோதிகர், வேதம் கற்றோர், கண்பார்வையற்றோர், மாறுபாடான உடலைக் கொண்டோர், பெண்கள், பாரம் சுமப்போர் இவர்களுக்கு வழிவிட்ட பின்னர்தான் அரசனே செல்லவேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

ஜனகர்: (வந்துகொண்டே) இந்தச் சிறுவன் கூறுவது முற்றிலும் உண்மையே;

காட்சி இரண்டு

இடம்: யாகசாலையின் வாயில்
பாத்திரங்கள்: வாயில்காப்போன், அஷ்டவக்ரன், சுவேதகேது, ஜனகர்.
வாயிற்காப்போன் உள்ளே நுழைய முயலும் அஷ்டவக்ரனையும் சுவேதகேதுவையும் தடுக்கிறான்.
வாயில்காப்போன்: நில்லுங்கள்! இங்கு அறியாச் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை; வேதம் கற்ற பெரியவர்கள் மட்டுமே நுழையலாம். உள்ளே உள்ள சான்றோர் உன்னை ஒப்பமாட்டார்கள்.

அஷ்டவக்ரன்: (பணிவாக) ஐயா, நான் அறியாச் சிறுவன் அல்லன்; முறைப்படி வேதாகமத்தைக் கற்றவன். வேதத்தைக் கற்றவர் பிறரின் வயதை வைத்து அவர்கள் திறமையை எடைபோடமாட்டார்கள். எங்களை நீங்கள் தாராளமாக உள்ளே செல்ல அனுமதிக்கலாம்.

வாயில்காப்போன்: (ஏளனத்துடன்) உன் வீண்பெருமையை நிறுத்து. சிறுவனான நீ அதற்குள் வேதங்களைக் கற்றுக்கொண்டுவிட்டாயா? நல்ல வேடிக்கை; நான் தள்ளுவதற்கு முன் நீங்களாகவே வெளியே சென்று விடுங்கள்; பிழைத்தீர்கள் என்று நினைத்துக்கொள்வேன்; வேதம் தெரிந்தவனாம்; உள்ளே செல்லவேண்டுமாம்.

அஷ்டவக்ரன்: ( பொறுமையுடன்) ஐயா, இன்று நான் அரசவைப் பண்டிதரான வந்தி அவர்களைச் சந்திக்க வேண்டும். அரசரிடம் உத்தரவு கேட்டுவிட்டாவது எங்களை நுழையவிடுங்கள்.

வாயில்காப்போன் : (எக்காளத்துடன் சிரிக்கிறான்) அடேய்; ஒரு கூனோ கோணலோ இருந்தாலே பார்க்கச் சகிக்காது; எட்டு கோணல் கொண்ட உடம்புக்கே இந்தத் திமிரா; எல்லோரும் பார்த்துச் சிரிப்பதற்குள் ஓடிவிடு!
அஷ்டவக்கிரன் : என் உடல் அஷ்டகோணலாய் இருக்கலாம்; ஆனால் என் கல்வி நேரானது. நான் உள்ளே,....

அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜனகர் வருகிறார்; அவனை அடையாளம் கண்டு கொள்கிறார்.

ஜனகர்: ஓ, சட்டம் பேசும் சிறுவனா? யாரங்கே! இவனுக்கு சாப்பிட பழங்களும் பட்சணங்களும் கொண்டு வாருங்கள்; (அஷ்டவக்ரனைப் பார்த்து) சிறுவா! நீ திண்பண்டங்களை வாங்கிக்கொண்டுச் செல்; நான் சதஸ¤க்குச் (வாதப்போர்) செல்ல வேண்டும்.

அஷ்டவக்ரன்: அரசே! மன்னியுங்கள்! திண்பண்டங்கள் எனக்குத் தேவையில்லை: பண்டிதர் வந்தியுடன் வாதப்போட்டி புரிய வந்திருக்கிறேன்.

ஜனகர்: (அதிர்ச்சியுடன்) என்ன? மகாப்பண்டிதர் வந்தியுடன் வாதப்போர் புரிய வந்திருக்கிறாயா? சுயநினைவோடுதான் பேசுகிறாயா சிறுவனே? வாதப்போட்டியில் தோற்றவர்கள் எல்லாம் கடலில் தூக்கியெறியப்படவேண்டும் என்பது அவர் எண்ணம். தெரியுமா?

அஷ்டவக்ரன் : (தெளிவான பார்வையுடன்) தெரியும். நல்லொழுக்கமுள்ள ஆனால் முழுமையான பண்டிதர் அல்லாதாரோடு வாதப்போர் புரிந்ததால், பண்டிதர் வந்தி அவர்களை எளிதாக வென்றுவிட்டார். வென்றதுமட்டுமன்றி ஆணவமும் அடைந்து விட்டார். அதனால் தோற்றவர்களை கடலில் எறிந்துவிட வேண்டும் என்று இரக்கமின்றி கூறுகிறார். உண்மையான பாண்டித்யமும் ஞானமும் உள்ளவர்களை அவர் சந்திக்க வேண்டும். அவர்களோடு வாதப்போர் புரிய வேண்டும்.

ஜனகர்: ( வேடிக்கையாக ) நீ வென்றால் தோற்றவர்களை கடலில் எறிய மாட்டாயோ?

அஷ்டவக்ரன்: ( நிதானத்துடன்) மமதை கொள்வதும், அதன் காரணமாய் நேர்மையற்ற தண்டனைகள் வழங்குவதும் ஆத்ம ஞானம் அடைந்தவர்கள் செய்வதில்லை அரசே.

ஜனகர்: ஓ. அவ்வளவு பெரிய மனிதனா நீ. உன் பெற்றோர் யார்? உன்னை அனுமதிப்பதற்கு முன் நீ யார், என்ன, அதையாவது நான் தெரிந்து கொள்ளலாமா? இதோ உன் அருகில் இருப்பவர் யார்? இந்த சிறுவனை நல்வழிப்படுத்தி அவன் தாயாரிடம் நீ அழைத்துச் செல்லக்கூடாதா?

அஷ்டவக்ரன்: அரசே, இவர் என் மாமன்; பெயர் சுவேதகேது; இவரால் பேச இயலாது; துணைக்கு இவரை என் தாயார் என்னுடன் அனுப்பியிருக்கிறார். மகரிஷி உத்தாலகரின் மகள் சுஜாதையின் புதல்வன் நான். என் பெயர் அஷ்டவக்ரன் ; என் தந்தை மகரிஷி உத்தாலகரின் சீடரான ககோலர்.

சுவேதகேது: (அரசரைப் பார்த்துப் புன்னகைக்கிறான்)
ஜனகர்: (ஆச்சரியத்துடன்) ககோலனின் மைந்தனா? உன் தந்தை பண்டிதர் வந்தியிடம் தோற்று கடலில் வீசப்பட்டார் தெரியுமா? எந்த தைரியத்தில் இங்கே வந்திருக்கிறாய்? உன் வம்சத்திற்கு வாரிசு இல்லாமல் போகப்போகிறது. ஏற்கனவே உன் உடல்கோணலால் உன் தாய் அழுதுகொண்டிருப்பாள்; இப்போது உன்னையும் இழக்கப்போகிறாள். ஓடிப்போய் அம்மாவிடம் பத்திரமாய் உட்கார்ந்து கொள் பிள்ளாய்! வாதப்போருக்குத் ஊமைத் துணை!

அஷ்டவக்ரன்: அரசே! என் தந்தை தோற்றார் என்பதால் நானும் தோற்கவேண்டும் என்பதில்லையே. நான் கற்ற வேதாகம அறிவு எனக்கு வெற்றியைத் தேடித்தரும். என் தாயாரின் ஆசியும் எனக்கு உள்ளது. தாங்கள் புறத்தோற்றத்திற்கு கொடுக்கும் முக்கியத்தைவிட ஆன்ம அறிவுக்கு முக்கியத்துவம் தாருங்கள். இந்த வாதப்போரில் கலந்துகொள்ள நான் வனத்திலுள்ள ஆசிரமத்திலிருந்து நகருக்கு நடந்தே பயணித்திருக்கிறேன். பத்து நாட்கள் பயணம், என் உடலமைப்பினால் ஒரு திங்களாக நீண்டாலும் வந்திருக்கிறேன். என் நோக்கம் நிச்சயம் நிறைவேறும். எனக்கு என் பாண்டித்யம் மீது நம்பிக்கை இருக்கிறது. வாய் பேச முடியாது என்றாலும் உடல் உழைப்பும், அறிவும், பிறருக்கு உதவும் மனமும், நிறைந்த தன்னம்பிக்கை உடைய என் மாமனை எளிதாய் ஊமை என்று தாங்கள் பேசுவது பொருத்தமின்றி இருக்கிறது. அவர் என் கண்களுக்கு மனிதனாய்த் தென்படுகிறார்.

ஜனகர்: உன் பேச்சில் ஆணவம் இருக்கிறது.

அஷ்டவக்ரன்: அரசே, தன்னம்பிக்கைக்கும் தற்பெருமைக்கும் ஒரு நூலிழையே இடைவெளி. என்னால் நிச்சயம் முடியும் என்பது தன்னம்பிக்கை; என் ஒருவனால் மட்டுமே முடியும் என்பது ஆணவம். ஆணவத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் நடக்கும் வாதப்போரைத் தாங்கள் காணவேண்டும்.

ஜனகர்: யாரங்கே! வாதப்போர் நடக்கும் இடத்திற்கு இந்தச் சிறுவனை அனுப்புங்கள் நானும் வருகிறேன்.

காட்சி மூன்று

இடம்: வாதப்போர் நடக்கும் அரங்கு.

பாத்திரங்கள்: பேரரசர் ஜனகர், பண்டிதர் வந்தி, அஷ்டவக்ரன், சுவேதகேது.
சுவேதகேது, பார்வையாளர்களுடன் முன் வரிசையில் அமர்ந்துகொண்டு , பேசுபவர்களின் வாயசைப்பைக் கூர்ந்து கவனிக்கிறார்.
ஜனகர் அஷ்டவக்ரனை பண்டிதர் வந்திக்கு அறிமுகப்படுத்துகிறார். வாதப்போர் துவங்குகிறது.

ஜனகர்: அரசவைச் சான்றோரே, என் அருமை மக்களான பார்வையாளர்களே, நீங்களே இந்த வாதப்போரின் நடுவராக இருக்கப்போகிறீர்கள். இந்த வாதப்போரை பொதுமக்களும் கவனித்து வருவதால், அரிய கருத்துக்களை எளிய மொழியில் விளக்கும்மாறு இருதரப்பினர்க்கும் அறிவிக்கிறேன். வாதப்போர் துவங்குகிறது.

பண்டிதர் வந்தியும் அஷ்டவக்ரனும் ஒரு மேடையின் மீது எதிரெதிர் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பண்டிதர் வந்தி மிடுக்குடன் அமர்ந்திருக்கிறார்.
உடல் எட்டுக்கோணல்களாக வளைந்து இருந்தாலும் அஷ்டவக்ரன் தன்னம்பிக்கையுடனும் தெளிவுடனும் காணப்படுகிறான். அவன் கண்களில் அமைதியும் கனிவும் தென்படுகிறது.

வந்தி: ஒருவரை எதைக் கொண்டு எடைபோடவேண்டும்? குலமா? குணமா? பொருளா? பதவியா?

அஷ்டவக்ரன்: குணத்தை வைத்துத்தான். காமம், குரோதம் முதலிய தீய குணங்கள் இல்லாமல், எல்லோரிடத்தும் அன்பு செலுத்துபவன், புலனடக்கம், ஒழுக்கம் முதலியவற்றை எளிதாய் பெறுகிறான்.

வந்தி: உன்னைப்போன்ற சிறுவயதினருக்கோ பெண்களுக்கோ ஞானம் இல்லை என்கிறேன். ஞானம் இருப்பவர்களில் சிலரையாவது உன்னால் சுட்டிக்காட்ட இயலுமா?

அஷ்டவக்ரன்: எமதருமராஜனிடம் போக விரும்பி, ஞானத்தை அறிந்து கொண்ட நசிகேதஸ், ஸ்ரீமன் நாராயணனை எங்கும் நிறைந்தவன் என்று நம்பிய பிரகலாதன், தவவாழ்வைத் தேடிய பாலகன் துருவன், சிறு வயதிலேயே ஞானம் பெற்ற வியாசர், விபாண்டகர், சிவபெருமான் அருளைப் பெற்ற மார்க்கண்டேயன் இவர்களில் சிலர். பெண்மணிகளில் உமையம்மை முதலாக, மைத்ரேயி, கார்க்கி, காத்யாயினி, தட்சப்பிரஜாபதியின் மகள் சுதையின் புத்திரிகளான மேதாவி, தரணி, என்று பல பெண்மணிகள் இருக்கிறார்கள்.

வந்தி: ஆத்மாவின் அழிவுக்குக் காரணமான செயல்கள் என்ன?

அஷ்டவக்ரன்: பேராசை, அகந்தை மற்றும் பிறர் வருந்தும்படியான செயல்களைச் செய்தல்- இவையே ஆத்மாவின் அழிவுக்குக் காரணமாகின்றன.
வந்தி: புலனடக்கத்தின் சிறப்பு என்ன?

அஷ்டவக்ரன்: புலனடக்கம் உடையவன் தன் குற்றங்களை இனங்கண்டு அவற்றைக் களைவதில் முனைவான். புலனடக்கம் உடையவன் பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. நேர்வழி அவனுக்கு மிக எளிதாக இருக்கும். இப்படிப்பட்டவனை எதைக்காட்டியும் கவர முடியாது. சக மனிதன் மட்டுமன்றி சகல ஜீவராசிகளையும் சமமாக பாவிக்கிறான். தன் கடமை அது எதுவாக இருந்தாலும் செவ்வனே செய்ய முயல்வான். தன்னை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்குவதால் ஞானம், நீதி நெறிகள் அவனைத் தேடி வருகின்றன. அவன் எங்கு இருந்தாலும் அவ்விடம் தபோவனத்திற்குச் சமமாகும். புலனடக்கம் இருப்பவன் எந்தக் கஷ்டத்தையும் எளிதாகக் கடந்துவிடுவான்.

வந்தி: பெரிய யாகங்களைச் செய்வதைக் காட்டிலும் சிறந்த புண்ணியங்கள் ஐந்தைக் கூறு.

அஷ்டவக்ரன் : பெற்றோரைப் பேணுதல், கணவனும் மனைவியும் ஒருவரிடம் ஒருவர் தூய அன்பு கொண்டிருத்தல், சகல ஜீவராசிகளிடமும் அன்பைச் செலுத்துதல், நண்பர்களுக்கு உண்மையாய் இருத்தல் மற்றும் பலன் எதிர்பாராது உதவி செய்தல் இவையே சிறந்த ஐந்து புண்ணியங்கள்.

வந்தி: ஆன்மாவின் உள்ளொளியாய் விளங்குவது என்ன?

அஷ்டவக்ரன்: ஆன்மாவின் உள்ளொளியாய் விளங்குவதும் தத்துவங்களின் உட்பொருளாய்த் திகழ்வதும் இந்த உலகத்தை இயக்கும் பரம்பொருளே ஆவார். காலம், நேரம், யாகம், பஞ்சபூதங்கள், சத்தியம், தர்மம் எல்லாம் அவரே. ஆதியும் அந்தமும் இல்லாதவர்.
வந்தி: மந்திர ஜபத்திற்குச் சமமானது எது?

அஷ்டவக்ரன்: எல்லோரிடமும் அன்பு காட்டுவது மந்திர ஜபத்திற்கு ஈடானது.

வந்தி: செல்வத்தில் சிறந்த செல்வம் எது?

அஷ்டவக்ரன்: மன அமைதியும் நிறைவும்.

வந்தி: ஒரு வர்த்தகன் இருக்கிறான். மனநிறைவுடன் வாழ்க்கை நடத்தி வருகிறான். தூர தேசங்களுக்குச் சென்று வியாபாரம் செய்தால் லாபம் வரும் என்று நினைக்கிறான். அவன் எதற்கு இன்னும் பொருள் ஈட்ட வேண்டும்? இதற்கு நீ என்ன சொல்கிறாய்?
அஷ்டவக்ரன்: ஒரு வர்த்தகன் செல்வம் எளிதாய் கிடைக்கிறது என்பதால் ஊதாரித்தனமாக இருக்கக்கூடாது; அதே சமயம் தன்னிடம் உள்ள செல்வம் போதும் என்று நினைத்து செல்வத்தை அலட்சியப்படுத்தத் தேவையில்லை. தானதர்மங்கள், புண்ணிய காரியங்கள் செய்ய செல்வம் அவசியமாகிறது. பொருள் தேடும் முயற்சியை அவன் தாராளமாக தூரதேசங்களில் மேற்கொள்ளலாம்.

வந்தி: பூஜைகளில் சிறந்த பூஜை எது?

அஷ்டவக்ரன்: அதிதி பூஜை

வந்தி: இதோ இவன் கையில் ஒரு சங்கைக் கொடுங்கள். அஷ்டவக்ரா நீ இப்போது பாரம் சுமக்கிறாய் என்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?

அஷ்டவக்ரன்: நிலத்தில் இரண்டு பாதங்கள் இருக்கின்றன; அதன்மீது இரண்டு கணைக்கால்கள் இருக்கின்றன. அவற்றின் மேல் இரண்டு தொடைகள் இருக்கின்றன. அந்த ஆதாரத்தின் மீது வயிறு இருக்கிறது. மார்பு, கைகள், தோள்கள் இவை வயிற்றின் மேல் இருக்கின்றன. அந்தக் கைகளில் ஒன்றில் ஒரு சங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் நீங்கள் என்று உங்களால் நினைக்கப்படும் தேகம் இருக்கிறது. அதே போல் நான் என்று நினைக்கப்படும் தேகத்தில் நான் இருக்கிறேன். நீங்களும், நானும், தேகங்களாய் மாறி நிற்கும் பிறரும், பூமி முதலிய பஞ்சபூதங்களால் சுமக்கப்படுகிறோம்.

சான்றோர்: (ஒருமித்தக் குரலில்)அஷ்டவக்ரருக்கு கேள்வி கேட்க சந்தர்ப்பம் தர வேண்டும்.

பார்வையாளர்கள்: ஆமாம் ஆமாம் ; அவர் மட்டும் ஒரு கேள்வி கேட்டு இந்தப் பண்டிதர் விடை தெரியாமல் விழிக்கட்டும், வாதப்போட்டியில் அஷ்டவக்ரரே வென்றார் என்பது எங்கள் முடிவு.
ஜனகரும் சான்றோரும் ஆமோதிக்கிறார்கள்.சுவேதகேது மகிழ்ச்சி அடைகிறான்.

வந்தி: தாராளமாக; எனக்கு விடை தெரியவில்லை என்றாலோ அல்லது தவறான விடை என்றாலோ அஷ்டவக்ரன் வென்றான் என்று ஒப்புக்கொள்கிறேன். அஷ்டவக்ரா, உனக்கு என்னிடம் கேள்வி கேட்க ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. உம் கேள்.

அஷ்டவக்ரன்: ஒரு போட்டியில் வென்றவர் தோற்றவரிடம் நடந்துகொள்ளும் முறை என்ன? நட்புணர்வுடன் பழக வேண்டும் என்பது என் விடை. தங்கள் விடை என்னவோ?

வந்தி: (முதலில் பதட்டமடைகிறார் பின் தலைகுனிகிறார்)

அஷ்டவக்ரன்: (நிதானத்துடன்) தாங்கள் அவசியம் வனத்தில் உள்ள ஆசிரமத்திற்கு வாருங்கள். தங்கள் குடும்பத்தினரையும் சீடர்களையும் அழைத்து வாருங்கள்; நான் இப்போது விடைபெறுகிறேன்.

சான்றோர்: அன்பு மயமான உலகத்தை தன்னம்பிக்கையுடன் எடுத்துச்சொன்ன அஷ்டவக்ரர் வாழ்க!
சுவேதகேது: (கரவொலி எழுப்புகிறான்)
பார்வையாளர்கள்: வாழ்க! வாழ்க! அஷ்டவக்ரர் வாழ்க!

அஷ்டவக்ரன் தலைநிமிர்ந்து மேடையிலிருந்து மெதுவாக இறங்குகிறான்.

சில நாட்களுக்குப் பின்னர் ஜனக மன்னர் அஷ்டவக்கிரரின் சீடராகிறார். அஷ்டவக்ரரின் உபதேசங்கள் அஷ்டவக்ரகீதை என்று அழைக்கப்படுகிறது. உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்ய வேண்டும். ஆசைகளை விட்டொழிக்க வேண்டும். நேரத்தை வீணாக்கக் கூடாது. நேர்மை, அன்பு, சகிப்புத்தன்மை முதலிய பண்புகள் ஆன்ம உள்ளொளியை அளிக்கும். அஷ்டவக்ரகீதையின் தனிச்சிறப்பு இதில் எந்த ஒரு மதம், கலாச்சாரம், பிரிவினர் பற்றித் தனியாகக் குறிப்பிடப்படவில்லை.

*அஷ்டவக்ரன் தாயின் கருவில் இருந்த போது, தந்தை ககோலர் மந்திரங்கள் கூறுகையில் ஏற்பட்ட தவறான உச்சரிப்பால் சங்கடம் அடைந்து நெளிந்ததான உடல் கோணல்களுடன் உருவாயிற்று என்று கூறப்படுகிறது.