Monday, December 10, 2007

இரண்டு கடிதங்கள்

சிங்கப்பூர் வந்த புதிதில், (1993) ஹெச்.டி.பி. அடுக்ககக் கீழ்த்தளத்தில் உள்ள குடியிருப்பாளர்களின் அஞ்சல் சேமிக்கும் பெட்டியில் நாள்தோறும் வரும்அஞ்சல்களை எடுக்கப் பெட்டியைத் திறக்கும்போது, அதில் ஏராளமான துண்டுபிரசுரங்கள் (flyers) குவிந்திருக்கும்.


வங்கிக் கடிதங்கள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணஅறிவிப்புகள், வீட்டுவசதி வாரியத்திலிருந்து வரும் கடிதங்கள், இதர கடிதங்கள், சின்னஞ்சிறு அறிவிப்புகளைத் தாங்கிய தாள்கள், காணாமல் போன ஒரு வயது ஜிம்மி- பழுப்பு நி¢ற நாய்க்குட்டியைக் கண்டு பிடித்தால் தக்க சன்மானம் கிடைக்கும் ( நீல வண்ணச் சொக்காயும் இளம்பச்சைநிற காலுறையையும் அணிந்திருக்குமாம், உணவுவேளைக்கு முன்பே காணாமல் போயிற்றா , பற்கள் எத்தனை என்ற விவரங்களை குறிப்பிடவில்லை) மகனுக்குப் பள்ளியில் வீட்டுப்பாடம் அதிகமில்லையாம்; கூடுதல் பாடங்கள் ஆங்கிலம், தாய்மொழி, கணக்கு முதலியவை சொல்லித் தர ஆசிரியர் வேண்டுமாம் (ஐந்து வயது சிறுவனுக்கு இதை இன்னும் தெரிவிக்காதலால் அவன் இன்னமும் பந்தடித்துகொண்டிருக்கிறான்)
வீட்டிற்கு சன்னல் மாற்றுகிறோம், சமையலறை அலமாரிகளைப் புதுப்பிப்போம், மேலும், வீட்டின் தரையின் மேற்பகுதி பார்க்கே (மரம்), பளிங்கு, எப்படி வேண்டுமோ நவீனப்பாணியில் மாற்றித்தருவோம், சமையலறை அலமாரிகளை புதுப்பிப்போம், ஐரோப்பிய அடுப்பு, பாத்திரம் கழுவும் தொட்டி, குளியலறைத் தொட்டி, கழிவுக்கோப்பை, வழுகாத தரை, முன்னறை மேல் உள்கூரையழகு (cornice), குளிரூட்டும் பெட்டி, மின் இணைப்புகள், மின்விசிறிகள், நுரைமெத்தைகள், இத்தாலிய ஆசனங்கள், துணி துவைக்கும் ஐப்பான் இயந்திரம், உள்ளறைகளில் சுவரோடு உள்ளொட்டிய அலமாரிகள் என்று வீட்டைத்தவிர சகலத்தையும் சகாய விலையில் மாற்ற உத்திரவாதம் தரும் அங்காடிக்காரர்களின் அன்பும், (வீட்டை வாங்குவதற்கும் விற்பதற்கும் குவியும் விளம்பரங்கள் பற்றியும் எடையைக்குறைக்கும், மேனி எழிலூட்டும் விளம்பரங்கள் பற்றியும் தனியாக பின்னொரு பொழுதில் எழுதுகிறேன்)நாம் விரோதமாகத் தூக்கிப்போட்டாலும் நம் தபால் பெட்டியை தேடிவந்து வந்தனம் செய்யும் அன்பர்கள், அடுத்து கணினி வாங்கு, பியானோ வாங்கு, சாப்பாடு வாங்கு, என்று இரத்த அழுத்தம் வரவழைக்கக் கூடிய %50 தள்ளுபடியில் இன்றே கடைசி என்று நல்லெண்ணத்துடன் நமக்கு நினைவூட்டும் காகிதத்துண்டுகள் தேடிவந்து நம் அஞ்சல்பெட்டியில் அமர்ந்துகொள்ளும்.இப்போது துண்டுச் சீட்டுகள் வருவதை வரவேற்காத கலகக்காரர்களுக்காக, தடுக்க சிறுகதவு செய்தாலும் (வேண்டுமானால் அதைப்பூட்டிக்கொள்ளலாம்) தடுக்க முடியாத சில அஞ்சல்கள் உள்ளன.


உறவினர், நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்கள் அருகிவிட்டது,
எல்லாம் மின் அஞ்சலின் உபயம். அஞ்சலில் தவறிவிட்டது என்று யாரும் கதைகூற இயலாது, வேண்டுமானால் இணையப்பக்கத்தை திறக்க இயலவில்லை, கணினிக்கு உடல்நலம் இல்லை எனலாம். அதற்குத் தடையில்லை.கடிதங்களைப்பார்ப்பது என்பது ஒரு சுவையாரமான செயல்தான் கட்டணம் கட்டச்சொல்லும் கடிதங்களைத் தவிர.


இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல சில துண்டுபிரசுரங்கள் பிடிவாதமாக வந்து கொண்டிருக்கின்றன.


நான் பள்ளிமாணவராக இருந்தகாலத்தில் வரும். அனேகமாக தெரிந்தவர்கள் எல்லோருக்கும் வரும். மஞ்சள் நிற தபால் அட்டையில் எழுதப்பட்டிருக்கும். இது நான் கடவுள் எழுதச்சொல்லி எழுதுவது, இதைப்போல் உடனடியாக 50 கடிதங்கள் கையால் எழுதி ( என் மீது உள்ள கருணையினால் எனக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கை என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன்) எல்லோருக்கும் அனுப்பினால் தேர்வில் முதல்வகுப்பில் வெற்றிதான், மீறி அலட்சியப்படுத்தினால், இந்த வருடம் தோற்றுவிடுவீர்கள் என்று பாசம் கலந்த கண்டிப்புடன் வரும்.


இவ்வாறாக வரும் மஞ்சள் வண்ண அஞ்சல் அட்டைகள் குப்பை, தூசு அள்ளவும், சரிசமமாக நிலத்தில் அமர மறுக்கும் நாற்காலிகளுக்கும், முக்காலிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் என்பதைக் கண்டுபிடித்த பின் என் மனம் உவகையடைந்தது.


பள்ளியில் உடன் பயிலுபவர்களை வினவியதில் அவர்களுக்கும் அக்கறை மடல்கள் வந்துசேர்ந்ததை உறுதிசெய்துகொண்டேன். சிலர் அச்சம்கொண்டு ஞாயிறு முழுவதும் அமர்ந்து எழுதி திங்கள் காலையில் பள்ளிக்கு எதிரில் இருந்த அஞ்சல் பெட்டியில் சேர்த்துவிட்டு, வகுப்பில் முதல்பிள்ளையாக வரும் இன்பக்கனவைக் கண்டவாறே பள்ளியில் வந்து அமர்ந்துவிட்டு அன்று மதியம் நடந்த கணிதத் தேர்வில் கண்களை அடிக்கடி மலர்த்தி கனவைத்தொடர்ந்தனர்.


சொன்னதைக் கேட்காவிட்டாலும் அட்டையை தூக்கி எறியாமல் அதை பயன்படுத்த புதியமுறைகளைப் பற்றி யோசித்து செயல்பட்டதால் என்னிடம் கருணை காட்டப்பட்டது என்பதை என் கணிதத்தேர்வு மதிப்பெண்கள் உறுதிசெய்தன.


பிற்காலத்தில் கல்லூரி படிப்பிற்காக தென் தமிழகத்திலிருந்து நடுவண் தமிழகத்திற்கு நான் குடிபெயர்ந்தாலும் இத்தகைய கருணை மடல்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாகவும் (புதிய முகவரியை சிலரே கண்டுபிடிக்கும் திறமை பெற்றதால்) மெல்ல ஆண்டுக்கு ஒரு முறையாகி, பின் அதுவும் நின்று போனபோது, என் வளர்ச்சியில் நல்லெண்ணம் கொண்ட முகம் தெரியாத அன்பர் என்னை தன் நினைவேட்டிலிருந்து நீக்கிவிட்டதை எண்ணி வருந்தினேன்.சிலபல ஆண்டுகள் கழித்து சிங்கப்பூருக்கு வந்தபோது இந்த இனிய நினைவுகள் உதித்தது எங்ஙனம் என்று கேட்பவருக்கு நேற்று வந்த இரண்டு கடிதங்களைப் பற்றி கூறக்கடமைப்பட்டிருக்கிறேன்.


ஒன்று தட்டச்சு செய்த முகவரியைத் தாங்கிய பிரபல பொரிம்பு (brand) பெயரால்அலங்கரிக்கப்பட்ட உயர்ரக உறை. மற்றொன்று பாலர்பள்ளி மாணவர், பேனாவில் முகவரி எழுதுவதன் மூலம் அவர் ஆங்கிலஅறிவு மற்றும் எழுதும் பயிற்சியும் மேற்கொள்ளவைக்கப்பட்டிருந்தது தெரியும்படியாக ஒரு கடிதம். இதற்கு பொரிம்பு பெயரிட்ட உறை கிடைக்கவில்லை போலும். அதனால் ஒரு தாளில் எழுதி, நான்காக மடித்து மெல்லிய உலோக கம்பியால் அங்கங்கே கவ்வப்பட்டு மூடப்பட்டிருந்தது.உள்ளடக்கம் ஏறத்தாழ ஒன்றுதான்.
அவசர உலகம் அல்லவா, கையால் எழுதி 50, 100 பேருக்கு அனுப்பsசொல்லுவதன் நேரவிரயத்தை அறிந்திருந்த உத்தமர்கள்.
நகலெடுத்து 30 பேருக்கு அனுப்பினால் போதும் என்று கருணையுள்ளத்துடன் எழுதியிருந்தார்கள். எங்களுக்கு அலுவலகப்பணி நிலைக்கவேண்டும், வாந்தி, பேதி, பீதி வராமல் நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும் என்று மிகுந்த அக்கறை கொண்டவர்கள் இவர்களைவிட வேறு யாராக இருக்க இயலும். (இந்த வேண்டுகோளைப் புறக்கணித்ததால், பிற்பகலிலேயே வீண்பழி சுமத்தப்பட்டு சிறைக்குச் சென்றவர், குடும்ப உறவுகள் சிதைக்கப்பட்டவர் பற்றிய சிறுகுறிப்பை கனிவோடு சேர்த்திருந்தனர்)
அனுப்புநர் அடுத்தவரை உற்சாகப்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டவர் என்பது கடிதத்தின் இறுதி பத்தியில் தெரிந்தது. உடனே செயலில் இறங்கிய ஒரு கனவான் லாட்டரி ஒன்றில் சில மில்லியன்கள் வென்ற நற்செய்தியை மறக்காமல் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வுலகத்தினர் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் உலக நன்மைக்காகவே இதை அனுப்புவதாகவும், தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்புமாறு தெரிவித்திருந்தார்.


நண்பர், உறவினர் போன்றோருக்குப் பண்டிகை நாள், பிறந்தநாள், மணநாள், இன்னும் பல சிறப்புடைய நாட்களில் வாழ்த்து அட்டைமட்டுமே அனுப்பவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களை உய்விப்பவர் வேண்டுமல்லவா.இதை எண்ணி மகிழும்போதே இதனினும் குதூகலம் அளிக்கும் ஒன்றை நான் கவனிக்கத் தவறியதை அறிந்தேன்.


இரண்டிலுமே உள்ளூர் அஞ்சலுக்கு மட்டும் என்று எழுதப்பட்ட அஞ்சல்தலைகள் கவனமாக ஒட்டப்பட்டிருந்தன.


நல்லெண்ண விரும்பிகள் சிங்கப்பூரில் எனக்கு வாய்த்திருப்பதை எண்ணி பூரிப்படைந்தேன். மாசுகட்டுப்பாடு மீது உள்ள கரிசனம் காரணமாக தாளின் வெற்றுப்பகுதியை எழுத பயன்படுத்துகிறேன்.


நன்றி: சிங்கப்பூர் தமிழ்முரசு 2000 செப்டம்பர் 19பின்குறிப்பு:
இக்கட்டுரையை எழுதி ஆண்டுகள் ஏழு ஆகியபின் ஒரு நன்னாளில் நண்பர் ஒருவர் மின்மடல் அனுப்பியிருந்தார். அவரது கைபேசியில் குறுந்தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறதாம். உள்ளடக்கம் மேற்குறிப்பிட்ட செய்திதான். 10 பேருக்கு குறுந்தகவல் அனுப்பச்சொல்லுகிறார்களாம்.

Saturday, September 01, 2007

தேக்கா வெட்டவெளியில்

ஞாயிறு இரவுகளில்

விரவியிருக்கும்

வெளிநாட்டு ஊழியர்களின்

கனவுகளின் காலடித்தடம்.


விடுமுறையிலும் கூடுதல் பணி.


கடல்தாண்டி வந்த உடலைச்

சுமந்தபடி

தேங்கி நிற்கும்

குடும்பத்தின் குரல்களைக்

கேட்டவாறு அமரும்

புல்வெளியில்

நண்பர்களுடன்


ஓவர்ஸ்டே, வொர்க் பர்மிட்,

எஸ்பாஸ், சுய பாகம்,

முகவர் வாங்கிய முன் பணம்,

ஏமாந்து போன நண்பன்,

நெருங்கிய உறவின் மரணம்,

அக்காவின் திருமணம்,

மனைவியின் பிரசவம்,

குழந்தை இப்போது பேசுகிறதாம்,

எல்லாச் சொற்களும்

புல்வெளிதாண்டி

சாலைகளிலும்

நடக்கும்


எவ்வளவு பெரிய மழை

வந்தாலும்

கனவுத் தடங்களை மட்டும்

அவை

அழிப்பதேயில்லை


கனவுகளெல்லாம்

நனவாகட்டும்

என்ற நினைப்பில்

Saturday, June 02, 2007

வரவேற்பறையில் ஒரு நிரந்தர பூதம்

அலுத்துக் களைத்து அலுவலகத்திலிருந்து வருகிறீர்கள்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் விரல்களால் பொத்தானை அமுக்குகிறீர்களா?

உங்கள் வீட்டில் ஒருவர் மற்றொருவருடன் அன்றைய நிகழ்ச்சிகளையோ, அனுபவங்களையோ குறித்துப் பேசும் போது வீட்டில் பின்னனி சத்தத்துடன்தான் பேசுவீர்களா?

வீட்டில் பிள்ளைகள் எதாவது ஐயங்களையோ, செய்திகளையோ சொல்லவரும்போது அல்லது சொல்லும்போது அடிக்கடி அப்புறம் ஆகட்டும் என்றோ அல்லது அவர்கள் கண்களைப் பார்க்காமல் தலையை மட்டும் அசைத்து வாயைத் திறந்து வார்த்தைகள் மட்டும் கூறுவீர்களா?


ஒவ்வொரு பாட்டிற்கும் பின்னணி இசை இருப்பது போல் உங்கள் வீட்டில் எல்லா நடவடிக்கைகளும் ஒளித்திரை பின்னணியில்தான் நடக்குமா?

சொல்லமறந்தேவிட்டேன், எடை கூடிக்கொண்டே போகிறது, வரவர கவனமே இல்லை, இந்த வாக்கியங்கள் அடிக்கடி உங்கள் வீட்டில் ஒலிக்கின்றனவா?

இந்தக் கேள்விகளில் ஒரு சிலவற்றிற்கே ஆம் என்று பதில் சொல்லிவிட்டீர்கள் என்றால் பணம், நேரம், பாசம், அக்கறை, மகிழ்ச்சி இவற்றையெல்லாம் உங்களை அறியாமலேயே/அறிந்தே விற்று ஆபத்தை தினந்தோறும் வாங்கி வருகிறீர்கள் என்று அர்த்தம். இச்செய்தி ஆண், பெண் இருபாலார்க்கும் ஆகும்.

பழங்கதை ஒன்றைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்கேயோ கிடந்த புட்டியை ஒருவன் தெரியாமல் திறந்துவிட அதிலிருந்து வெளிப்பட்ட பூதம் வேலை தருவதை நிறுத்தினாய் உன்னை விழுங்கிவிடுவேன் என்று தன்னை விடுவித்தவனைப் பார்த்துக் கூறும். பூதம் நொடியில் வேலைகளை முடித்துவிட்டு தொந்தரவு தர இறுதியில் அலைகளை எண்ணச் செய்தானாம் அந்த மனிதன்.

நம் வீட்டிலும் ஒரு பெரிய மலை விழுங்கி பூதம் இருக்கிறது. தெரிந்தே ஆசையாய் விலை கொடுத்து வாங்கி பற்பல இணைப்புக்களும் கொடுத்து ஆதரித்து வருகிறோம்.

நமக்கு சொந்த வேலை எதாவது பிள்ளைகள் தொந்தரவின்றி செய்ய வேண்டுமா? வெகு சுலபம். பெட்டி எதிரில் சுட்டிகளை உட்கார்த்திவிட்டு நேரத்தினை வெட்டிச் செலவு செய்யக்கூடாது என்று நிகழ்ச்சி முடிந்தபின் சொல்லலாம். இது சரியா?

கதையில் பூதமாவது என்னைப் பயன்படுத்து என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டி தேமேன்னென்று இருந்து கொண்டு சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோர¨யும் இருந்த இடத்திலிருந்தே எப்படி ஆட்டிக் வைக்கிறது.

அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும். வீட்டுப்பணிகள் (ஆண் பெண் இருபாலாரும்தான்) நிகழ்ச்சிகளுக்கு இடையே (விடுமுறை என்றால் இன்னும் சிறிது கூட) நடக்கும். நடுவில் விளம்பரங்கள் வரும்போது தண்ணீர் குடிப்பதற்கோ அல்லது வேறு எதற்காகவாவதோ போவது நடக்கும். விளம்பர இடைவெளியில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் அப்போதுதான் பேசிக்கொள்வார்கள்.


குழந்தைகள் பார்ப்பார்கள்; சரிதான் பேசாமல் நாமும் இதில் என்னதான் இருக்கிறதென்று பார்க்கலாம் என்று முடிவுசெய்வார்கள். அவர்கள் ஒரு நொடி தயங்கினாலும் திரையில் வரும் காட்சி அல்லது குரல் அவர்களை நல்ல பிள்ளையாய் இழுத்து உட்கார்த்தி வைத்துவிடும்.

அப்புறம் பிள்ளைகளைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்கள் நம்மைப் பின்பற்றுவார்கள்.

பிள்ளைகள் சதா தொலைக்காட்சி பார்க்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வேறு நல்ல பொழுதுபோக்கு அமையவில்லை என்று அர்த்தம் (it means they are not properly engaged otherwise)
பிள்ளையைப் புத்தகம் படிக்கச் சொல்லிவிட்டு நீங்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு கவனம் சிதறிப் போகும்.

எங்கள் வீட்டில் அப்படியெல்லாம் இல்லை என்பவர்கள் மிகக் குறைவே.இவர்களுக்கு இந்தக் கட்டுரை தேவையில்லை.

இதற்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பவர் மட்டும் தொடர்ந்து படிக்கவும். பிடிக்காதவர்கள் என்னைத் திட்டிவிட்டு உங்கள் பணியைத் தொடரவும்.

என்ன செய்யலாம்?

1. தொலைக்காட்சியா? தாராளமாகப் பாருங்கள்/
2. பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்குப் பயன் தரும் நிகழ்ச்சிகள் ஒரு வாரத்தில் எப்போதெல்லாம் வருகின்றன என்று குறித்து வைத்துக் கொண்டு, அதைக் கட்டாயம் பாருங்கள்.
3. பிள்ளைகளுக்கும் அவர்கள் விரும்பும் நிகழ்ச்சியைப் பார்க்க அனுமதியுங்கள் (குறிப்பிட்ட நேரத்தில்)
4. இடையிடையே பிள்ளைகளுடன் நீங்களும் சேர்ந்து பாருங்கள். அப்போதுதான் அது பிள்ளைகள் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியா என்பதை நீங்களும் சிந்திக்கலாம். குழந்தைகள் கேலிச்சித்திரம், குழந்தைகளுக்கான தொடர்கள் என்ற பெயரில் வரும் எல்லா நிகழ்ச்சிகளுமே குழந்தைகளுக்கு ஏற்றவையாக அமைவதில்லை.
5. தரமானதொரு நிகழ்ச்சியை பிள்ளைகளுடன் பார்த்துமுடித்தவுடன் அவரவர் எழுந்து போய் விடாமல் ஓரிரு நிமிடமாவது அது குறித்துப் பேசுங்கள். அவர்கள் கருத்தைக் கேளுங்கள்/
6. நேரமிருந்தால் அவர்களுடன் இன்னும் விரிவாகப் பேசலாம். செய்திகள், நல்ல கருத்துப் பரிமாற்றங்கள், அறிவுக்கும் விருந்தாகும் டிஸ்கவரி சானல், நேஷனல் ஜியோக்ராபி·க், பயணச் நிகழ்ச்சிகள் போன்றவற்றைத் தவிர்த்து விடாதீர்கள்.
7. நிகழ்ச்சி எப்படித் தரப்பட்டது?
8. அதில் பங்கு பெற்றவர் கூறியவற்றைத் தவிர வேறு ஏதேனும் எண்ணம் எழுகிறாதா? நடக்குமா? . எங்காவது இதுபோல் இருக்குமா? உனக்கும் இவற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆசையா? நூலகத்தில் பார்க்கலாமா? இதே விஷயத்தை நாம் எப்படி அணுகலாம்? இதைக் காட்டிலும் புதிய முறை ஏதேனும் இருக்கிறதா? போன்ற கேள்விகள் சிந்தனையைத் தூண்டும்.
9. எல்லாக் கேள்விகளையும் ஒரே நேரத்தில் கேட்காமல் சிலவற்றையாவது கேட்கலாம். அல்லது உங்களுக்கு புதிதாக எதாவது தோன்றினாலும் கேட்கலாம். வன்முறைக் காட்சிகளை அவர்கள் எதிரில் நீங்களும் பார்க்காதீர்கள்.
10. எலி பூனையை மாட்டிவிட்டு அடிபட வைக்கிறதா? இந்த கேலிச்சித்திரம் பிள்ளைகளுக்குத்தேவையா? இது நிஜம் அல்ல என்பதை அவர்கள் பார்க்கும்போதே நீங்களும் பக்கத்தில் இருந்தால்தான் கூற முடியும். நிஜ வாழ்க்கையில் எந்தப் பிராணியையும் வதைப்பது அறத்திற்குப் புறம்பானது என்று கூறுங்கள்.
சில மாதங்களுக்கு முன் சிங்கை தமிழ் முரசு ஆசிரியர் ஒரு பொது இடத்தில் பூனையை சிறுவர்கள் அடித்து இம்சைப் படுத்துவதைக் கண்டும் அவர்தம் பெற்றோர் கண்டிக்கவில்லையே என்று 'நமக்குள்ளே'யில் வருத்தப்பட்டிருந்தார்.
நகைச்சுவை என்ற போர்வையில் சில கேலிச்சித்திரங்கள் வன்முறையைக் கற்பிக்கின்றன. மனிதநேயம், மனிதாபிமானம் முதலியவற்றிற்குச் சவால் விடும் நகைக்ச்சுவையை நாம் ஆதரிக்கலாமா?
அதனால் குழந்தைகள் பார்க்கும் கேலிச்சித்திரங்களைக்கூட தேர்ந்தெடுத்துதான் அவர்களைப் பார்க்கச் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது அதனால்தான் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்தால்தான் அவர்களை நல்ல முறையில் நாம் வழிகாட்ட இயலும்.
திரையில் காட்சிகளாகப் பார்ப்பவை மனதில் எளிதில் பதிந்துவிடுகின்றன.

இது குறித்து உங்கள் கருத்து?

சிங்கை தமிழ்முரசு 2001

Tuesday, March 13, 2007

விடையென்ன எண்ணி விளி

விடுகதை வெண்பா


மூன்றெழுத்துச் சொல்லின் முதலிரண்டு கற்கியாம்

ஆன்றநடு நீங்கிடின் ஆதானே -- சான்றோர்

கடையிரண்டு நீங்கின் கடுங்காற்று என்பர்

விடையென்ன எண்ணி விளி

Saturday, January 20, 2007

எழுதாத உன் கவிதை

(தமிழீழப் பெண்களின் கவிதைகள்)


எழுதுங்களேன் - நான்
எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்

எராளம்... ஏராளம்
எண்ணங்களை - எழுத
எழுந்துவர முடியவில்லை
எல்லையில்
என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்துவர என்னால்
முடியவில்லை
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்!

கப்டன் வானதியின் இந்தக் கவிதையைப் பின் அட்டையில் படித்த எவரும் தமிழீழப் பெண்களின் இந்தக் கவிதைத் தொகுப்பைப் படிக்காமல் இருப்பது கடினம்.


கேப்டன் வானதியின் இந்தக் கவிதை கிரியாஊக்கியாகச் செயல்பட்டு, போரினிடையே கவிஞர் நாதினிக்கு எழுச்சியூட்டி 'எங்கள் கைக்கு வந்த பேனாவுக்கு இனி ஓய்வே இல்லை' என்ற வேகத்தை அவருக்கும் இந்த வரிகளை வாசிப்பவருக்கு அந்த உணர்வையும்
கொடுக்கிறது.அலையிசையின் 'புரிதல்' கவிதை போரைப் பற்றிய கவிதை, பெண்களின் அந்தரங்க மௌனக்குமுறல் என்ற நிலைகளையெல்லாம் தாண்டி ஒரு புதிய தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்ற உணர்வு இந்த வரிகளைப் படிக்கும் போது ஏற்படுகிறது.


கரிய இருட் போர்வையால்/புவி போர்த்தப் பட்டிருக்க/இரையும்/ உயிரினங்களின் /சலனங்கள் ஒடுங்கி/நிசப்தமாகும் புவி மேற்பரப்பின்/வெற்றுக்கோதாக நான்/................ சன்னதம் கொண்ட /ஊழிக்காற்றால் /சுடர் அணைய /செத்தைக் கதவை நீக்கிப் பார்க்கிறேன்/ தண்ணொளி பரப்பி/மதி கடலில் இருந்து/எழுந்து
வருகிறது/


புதுமையான ஒரு பரிமாணத்தைக் காட்டுகிறது. இந்தத்
தொகுப்பிலுள்ள மிகச் சிறந்த கவிதைகளில் புரிதல் ஒன்று.


செந்தணலின் எப்போது விடியும் என் இரவு மிக மிக நேரடியான ஒரு கவிதை.


நட்சத்திரங்களை வீட்டினுள்/ இருந்தவாறே எண்ணவல்ல - /மாற்றா முடியா வறுமையும்......,/ சிலுவை சுமப்பது நான் மட்டுமல்ல/ ஆணியிலறையப்பட்டுள்ள என் உணர்வுகளும்தான்/ ,...

விடியலுக்காக காத்திருக்கும் உடல், உணர்வு, மனம், பொருளாதாரம் என பன்முகத்தாக்குதல்களுக்கு ஆளாகும் பெண் இலைத்துளிர்களில் பட்டுத் தெரிக்கும் பனித்துளிகளுடன் முரண்படும் தன் ஆறாத
பெருந்தணலின் தீய்க்கும் வெப்பத்தை சித்தரிக்கும் கவிதை.


நான் பறக்கத் துடிக்கிறேன்... ஒடுக்குமுறைகள் என் குரல்வளையை நெரிக்கின்றன, அடக்கு முறைக்கு ஆளான பெண்களின் குமுறல் ஆண்களின் வன்முறைக்கு ஆளான பெண்களின் துயரம், உடலையும் உள்ளத்தையும் மீகாயப்படுத்தினாலும்

'என்னுள் முகை கொண்டுள்ள/
அசைக்கவியலாத ஒளி பொருந்திய / நம்பிக்கை மீது
மட்டும்/ஆணியறைந்திட/எவற்றாலும் முடியவில்லை,

சிதைந்த உடலுள்
நீறு பூத்த நெருப்பாய் உள்ள நம்பிக்கை கனலாய் இருப்பதை எதுவும்
தடுக்க முடியாது என்ற உறுதி இந்த சூழ்நிலையிலும் முகிழ்கிறது
'நம்பிக்கை ஒளி'யில்.


சீரஞ்சீவியின் உயிர்க்கூடொன்றில் உறுதியாய் ஒரு வீடு .

இக்காலக்கட்டத்தில் அமைதியான குடும்பவாழ்க்கைக்கூட கனவு காணவேண்டிய பெண், கட்டாக்காலிகளுக்கு களமாக இருந்த அவள் நிலத்தில் அவள் எழுப்பிய கற்பனை வீடு அவள் மனதின் ஏக்கத்தையும் எல்லோர் நலம்விரும்பும் அவள் கனவையும் மட்டும் காட்டாமல், பின்னொரு நாளில் வீடு அன்னியரின் கணைகளால் துளைக்கப்பட்டபோதும் அங்கமிழந்த அவள் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள்.

சன்னமான உணர்ச்சிகளையும், அழகியலுடன் இயைந்த வாழ்வையும் தேடும் சீரஞ்சீவியின் இக்கவிதை
ஈழப்பெண்களின் நிலையைப் பிரதிபலிக்கிறது.


'நாளையும் நான் வாழ வேண்டும்' அம்புலியின் கவிதை சிலவரிகளே இருந்தாலும் ஈழப்பெண் போராளிகளின் நட்பு, பொறுப்புணர்வு ஆகியவற்றை நேர்மறை சிந்தனையுடன் கூறுகிறது .

என் தோழியின் காவலுக்கு/என்னிழப்பு காரணமாயிருக்கக் கூடாது/நாளையும் நான் வாழ வேண்டும் என்று முடியும்போது மனதை என்னவோ செய்கிறது.


அம்புலியின் 'தேடி அடைவாய்' போர்க்கால நிகழ்வுகள் அழுத்த, தன் வசந்த காலத்தையும், வாழ்வில் இனிமையையும் துப்பாக்கிச் சத்தங்களுக்கிடையில் பிள்ளைக்கு எப்படித்தர இயலும், புதிய வாழ்வு
உன் கரங்களில் பிறக்கட்டும், தாய்மையின் வேதனைக்குரலிலும் நம்பிக்கை ஒளிர்கிறது.


அ. காந்தாவின் 'எந்த மகனுக்காய் என் கால்களை நகர்த்த' கவிதை படிக்கையில் மனம் அதிர்ந்து போகிறது.
சுதாமதியின் 'போரின் நாட்கள்' தாய்மை உணர்வு பொங்கும் மிக மிக மென்மையான ஒரு கவிதை.

கப்டன் ஜனார்த்தனியின் துப்பாக்கி, நகுலாவின் 'பெயரிடாத நட்சத்திரங்கள்' மிக நேரடியான கவிதைகள்.


க. கனிமொழியின் கவிதை, முன்னே
போனவர்/நினைவழுத்த/பரபரக்க/ அலைகளின் நடுவே/எதிரியைத் தேடி /அவள்,.....

ஒரு போராளியின் திசையும் நிகழ்வுகளையும்
வரிசையாகக் குறிப்பிட்டுக்கொண்டே கவிதை வருகையில் , சீறும் அலைகளின்/ சிநேகிதம் தொடரும்/ ஆயினும் ஓர் நாள்/ அதிர்வொன்றோடு/சிநேகிதம் முடியும் என்னும்போது படிப்பவரிடம் தாக்கத்தை உருவாக்குகிறது.
உமாவின் மெழுகுவர்த்தி ஈழப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு வண்ணக் கனவுகளைச் சிதைத்துக் கொண்ட ஒரு சிட்டுக்குருவியின் கதை.


பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் ரௌத்திரம் பழகி பகைவனால் சிறைவைக்கப்பட்ட போதும் சிறிதும் ரகசியங்களை வெளிவிடாது உருகிய மெழுகுவர்த்தியாக புதிய குருவிகளுக்கு பாதை
காட்டிக்கொண்டிருக்கிறது.


எளிமையாகத் தோன்றும் இக்கவிதையில்
சிட்டுக்குருவிக்கு ஆலம்விருட்சத்தின் பலம் இருப்பது ஒரு இறகின் வருடலாகச் சொல்லப்பட்டிருக்கிறது.மலைமகளின் 'அவள் ஒன்றுக்கும் அசையாள்' 'அம்மா' பெண்களின் வேதனைக்குரல் மரத்துப் போய்விடாமல், உரமேறி உறுதியாய் மாற்றுகிறது நம்பிக்கையூட்டும் சிந்தனைக்கோலங்கள்.


இவரின் 'நேசராச்சியம்' கவிதை எத்தகைய சூழலில் எழுந்தது என்பதை நினைக்கையில் வியக்காமல் இருக்க முடியவில்லை.


செல்வியின் 'தாயகமே தீயெடு' தமிழனுக்கு எழுச்சியூட்டும் குரலாய் ஒலிக்கிறது. கி.கிருபாவின் 'உயிர்ப்பு' குறைந்த வரிகளில் நெழ்ச்சியூட்டும் வரிகள் கொண்டது.

செ.புரட்சிகாவின் 'உன் கரத்தை உயர்த்தி எழு' மற்றும் 'ஓயாத அலை மூன்றில்' நேரடியான கவிதைகள்.


சூரியநிலாவின் 'காலங்களற்ற கடல் ' இத்தொகுப்பிலுள்ள மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று .


இரவு அமையானது/... எல்லோரும் சொல்கின்றார்கள் என்பதனால், என்று அமைதியான குளத்தில்
கல்லெறிந்தாற்போல் துவங்கும் கவிதை இரவே இல்லாதவர்களின் வாழ்வைக் கூறுகையில் நாமும் உடன் பயணிக்கிறோம், வேட்டையாடுவதையும் வேட்டையாடப்படுவதையும் பார்க்கிறோம்,
பயணிக்கிறோம், ...


இப்போது இரவு அமைதியானது/.. கடல் அடிக்கும் ஓசை/
காதுகளுக்கு எட்டாத தூரம் இருக்கலாம்/ஆயினும் பூமிப்பந்தின் பெரும் பகுதி /நீரால் நிறைந்திருக்கின்றது என்பது உண்மை என்று கவிதை நிறைவுறும்போது

நம் மனம் இரவே இல்லாதவர்களின்
வாழ்விலிருந்து இன்னும் விடுபடவில்லை என்று உணர்கிறோம்.

அதுவே இந்தக் கவிதையின் வெற்றி.


சூரியநிலாவின் 'தீயினால் தீயை' மிக நேரடியான ஒரு கவிதை.


'மழைக்காலங்கள்' என்ற கவிதையில், மழை வெறுக்கத்தக்கதாகவே இருக்கின்றது/ எனினும்/ மழையை எவரும் வெறுப்பதில்லை என்ற வரிகள் பளிச்சிடுகின்றன.

மழையை நாங்களும் ரசிக்கக்கூடும், அது எப்போது என்று
கூறும்போது சூரியநிலாவின் விசாலமான மனம் புலனாகிறது.


ம. வாசகியின் காலக்கணக்கு கவிதை புதியதொரு உத்தியில் எழுதப்பட்டிருக்கிறது ஆர்வமூட்டுகிறது. காலமும் பெண்ணும் நடத்தும் கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக உள்ளது. இது போன்ற கவிதைகள் இது போன்ற சூழலில்தான் பிறக்குமோ என்று
எண்ணத்தோன்றுகிறது.


தூயவளின் 'விடைபெறுதல் இல்லாத பிரிவுகள்' நட்புக்காக மலர்ந்த கவிதை. மிக எளிய வரிகளில் சிந்தனையைத் தூண்டுகிறது.தமிழ்க்கவியின் 'வல்லவன் துணைவி' வான் நிலாவின் 'இருள்விலகும்', தமிழவளின் 'வையகமே காத்திரு' எளிய வரிகளில் சொல்லப்பட்ட கவிதைகள்.


சண்முகநாதன் கலைமகளின் 'பயணம் தொடர்கிறது' கவிதையில் நேற்று உன்னைப் போல்/இன்று உன்னருகில் நான்/ பயணத்தின் பாதையைப் பற்றித் தெரிந்திருந்தும்வலுவான இதயத்துடனும், கந்தகச் சுமையை கட்டியணைத்தபடி புறப்படும் பெண்ணின் குரல் நம் காதுகளில் ஒலிக்கிறது.கப்டன் ஞானமதியின் 'சமர்ப்பணம்' பயணம் இலக்கை அடையும் என்ற நம்பிக்கை தொனிக்க எழுதி இறுதியில் நமக்கு ஒரு கேள்வியை முன் வைக்கிறார். இதற்கு விடை என்ன?

கனிமொழி பேரின்பராசாவின் 'உனது பெயர் புதுமைப் பெண்' கவிதையைப் படிக்கையில் ஈழப்பெண்கள் வீரப்பெண்களாய் உருமாறுவதும் உயருவதும் நிதானமாகக் காட்டப்படுவதை உணர முடிகிறது.ஆதிலட்சுமி சிவகுமாரின் 'ஊழியின் முடிவு'
கலவரம், போர் வெடிக்கும்போது எந்த நாடாக இருந்தாலும்
பெண்கள் மீது பாலியல் வன்முறை நடத்துவது மனித இனத்துக்கு வழக்கமாகிவிட்டது. what a shame to mankind. பாதிக்கப்பட்டவரின் குரல் செவிப்பறையைக் கிழிக்கும் போது மரத்துப்போனதாய் பாவனை காட்டமுடியாமல் தவிக்கும் தவிப்பும், அந்த பேய்கள் தின்னும்போது
பெண்ணின் கூக்குரலும்,... வார்த்தைகளால் சொல்லமுடியாத கொடூரம் அரங்கேறி வரும் காலமிது.தொகுப்பில் கடைசிக்கவிதையாக கப்டன் மனோவின்' கனவல்ல தமிழீழம் நாளை நம் நாடு' அமைந்திருப்பது நல்ல தேர்வு; நல்லதொரு பொழுது ஈழத்திற்கு விடியும்' என்று நேர்மறையாக நம்புகிறது இக்கவிதை.தமீழப்பெண்களின் கவிதைகள் நேரடியாக அப்பெண்களின் குரல்கள் பேனாவினால் பதிவு செய்யப்பட்டு நம்மை நோக்கி வருகையில் சொல்லொண்ணா வேதனை அனுபவித்து, தோழியாய், தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், தலைவியாய், வெவ்வேறு சூழ்நிலையில் வெவ்வேறு உருக்கொண்டாலும் வீரயுகப் பெண்ணாய்
மலர்ந்திருப்பதையும் காணமுடிகிறது. வீரத்திலும் விவேகம் பொங்கும், நம்பிக்கை ஒளிரும் இவர்களின் குரல்தான் இந்த தமிழீழப் பெண்களின் கவிதைத் தொகுப்பு.பெண்களின் குமுறல்கள், வீரம், எழுச்சி, போருக்கு இடையே வாழ்வது, வாழ்வே போராகிப் போனது என்ற செய்திகள் இயல்பாகச் சொல்லப்பட்டிருந்தாலும், இதில் அழகியல் கூறுகள் இருக்கின்றன.


புதிய உத்தி காணப்படுகிறது.
குறிப்பாக 'புரிதல்' 'காலங்களற்ற கடல்' கவிதைகள் சொல்லப்பட்ட விதமும் அதன் வரிகள் நவீனக்கவிதையின் அடையாளங்கள்
கொண்டுள்ளதை நாம் அறிகிறோம்.


பெண்களின் போராட்டங்கள், போர்க்காலச் சூழல் இவற்றையும் தாண்டி அழகியல் கூறுகள், புதிய உத்தி, புதிய பரிமாணங்களைக் காட்டுதல் முதலியவற்றைக் கொண்டதாகவும் செயற்கைத்தனம் என்பது
குன்றிமணியளவு கூட இல்லாமல் நிஜத்தின் குரல்கள் இவை என்பதை மறுக்க முடியாது.

புத்தகத்தின் பெயர்: எழுதாத உன் கவிதை(தமிழீழப் பெண்களின் கவிதைகள்)
முதல் பதிப்பு 2001 ஆவணி
கப்டன் வானதி வெளியீடு-01அச்சமைப்பு சந்திரன் பதிப்பகம்புதுக்குடியிருப்புஅட்டையமைப்ப்அந்திவானம் பதிப்பகம்புதுக்குடியிருப்பு
கப்டன் வானதி வெளியீட்டகம்அரசியல்துறை மகளிர்தமிழீழம்விலை உரூபா 125