Wednesday, May 28, 2008

Tuesday, May 13, 2008

எ·ப். கெ. லிம்மின் மூன்றாவது கண்

சிறுகதை



ஜேனட்டின் முன்குறிப்பு:


இந்தக் கதையில் வரும் எ·ப்.கெ. லிம் அவர்களை நான் நேர்காணலுக்காகச் செல்லும்வரை அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. நேரில் பார்த்தபோது அவர் எல்லோரையும் போலவே இருந்தார். மத்திம உயரம், சுத்தமாக வெட்டப்பட்ட தலைமுடி, சிறிய ஆனால் ஊடுறுவும் கண்கள், சுத்தமான கசங்கலில்லா ஆடைகள் ,பளபளக்கும் காலணிகள். அவர் வீட்டில் உரையாடினோம். அவர் நடத்தும் பேக்கரியின் கிளமெண்ட்டிக் கிளையைச் சுற்றிக்காட்டினார்.

ரா·பிள்ஸ் கல்விக்கூடத்தின் முன்னாள் மாணவர், பள்ளி,கல்லூரி படிப்பில் தங்கப்பதக்கங்கள் வாங்கியவர். சிங்கப்பூரின் பிரபல பெரிய உணவு தயாரிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கூடத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பத்தாண்டுகள் இருந்த பின் கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்தமாக பேக்கரி நடத்துகிறார். அவரை நேர்காணல் செய்ய வேண்டும் - என் தலைமையதிகாரி எனக்கு இவ்வளவே கூறியிருந்தார். நான் உற்சாகத்துடன் திரு எ·ப்.கெ.லிம்மைத் தொடர்பு கொண்டபோது, மிகுந்த தயக்கத்திற்குப்பின்னர்தான் ஒப்புதல் தந்தார். மிக மிக நிதானமாகப் பேசினார். நிதானம் என்றால் இதுவரை இத்துணை நிதானத்தை நான் பார்த்ததில்லை. நானும் பத்திரிகைக்கு கொடுக்கவேண்டிய நேர்காணலின் ஒரு நகலை மின்மடல் மூலம் அனுப்பியிருந்தாலும் என்னை ஒரு கேள்வி உறுத்திக்கொண்டிருந்தது. அவருடன் நான் நடந்து சென்றபோது, அவர் பெரும்பாலும் தன் காலணியைப் பார்த்தவாறு நடந்தார். ஒருவேளை அதன் பளபளப்பை உறுதி செய்துகொள்கிறாரோ என்று முதலில் நினைத்தேன். ஆனால் காரணம் அதுவன்று வேறு ஏதோ ஒன்று என்று மனதில்பட்டது. அதுகுறித்து தனியாக அவரிடம் பேசநினைத்து மீண்டும் அவரைச் சந்தித்தேன். இதை அவர் விரும்பினால் ஒழிய வெளியேசொல்லமாட்டேன் என்று சொன்னேன்.என் கைபேசியை அணைத்துவிட்டு கைப்பையில் வைக்கும்போது என் வாலட் (பர்ஸ்) கீழே விழுந்தது. இது உங்கள் ஆண்ட்டி கொடுத்தது அல்லவா என்றார். யு.எஸ்ஸில் லாரா ஆண்ட்டி எனக்கு பரிசளித்த வாலட் அது. ஆண்ட்டி இப்போது உயிரோடு இல்லை. பல மாதங்களுக்குப் பிறகு சென்றவாரம்தான் அதை உள்ளிருந்து எடுத்துப் பயன்படுத்தத் துவங்கியிருந்தேன்.
அவரிடம் கேட்டேன். நீண்ட மௌனத்திற்குப் பின் பேசத்துவங்கினார்.
இனி கதைக்குச் செல்லலாம்: இதோ அவர் வார்த்தைகளில்:



என் இளமைக்காலம், அச்சம், குழப்பம், துணிவு, தனிமை,பாசம் இவற்றின் கலவையாகவே இருந்தது. அப்பா அரசுப்பணியில் முதனிலை அதிகாரி, அம்மா சட்டம் பயின்று சொந்தமாக சட்ட ஆலோசனை நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தார். என் ஆ-மா தான் (பாட்டி) வீட்டில் என்னைப்பார்த்துக்கொண்டிருந்தார்.
வீட்டில் பணிப்பெண் யாருமில்லை. பெற்றோர் இரவு உணவு மட்டும்தான் வீட்டில் உண்பார்கள், அதுவும் சில நாட்கள் மட்டுமே. படிப்பில் முதல் மாணவன், பாட்டியின் செல்லப்பேரன், வெரி கொயட் என்று பள்ளியிலும், அக்கம்பக்கத்தினரும் சொல்வார்கள். மிகக் குறைவான நண்பர்கள். இப்படித்தான் என் இளம் பருவம் இருந்தது.


எனக்கு அப்போது பத்து வயது இருக்கும். ஒரு முறை என் ஆமாவுடன் அவர் தோழி ஒருவர் வீட்டிற்கு போயிருந்தேன். அவர் வீட்டிற்கு ஆமா பலமுறை சென்றிருந்தாலும் நான் அவர்கள் வீட்டிற்குப்போவது அதுவே முதல் முறை. நான் ஒரு புத்தகத்தைக் கையில்எடுத்துக்கொண்டு நகர்ந்தேன்.ஆ-மா தோழியுடன் மாஜோங் விளையாட்டு ஆடத் துவங்கியிருந்தார். இனி சில மணி நேரங்களுக்கு அவர்கள் அதிலேயே மூழ்கிவிடுவார்கள் என்பதை நான் அறிந்திருந்தேன். அவர்கள் வீட்டு பின்புறத்தில் தோட்டம் இருந்தது. வேலி போட்டு வைத்திருந்த அந்த தோட்டத்தைப் பார்க்க எனக்கு ஆவலாக இருந்தது. சிறிய இடமாயிருந்தாலும் ஆமாவின் தோழி அதை மிகச் சுத்தமாக வைத்திருந்தார். பப்பாளி மரத்தில் பல காய்கள் கொத்தாகத் தொங்கிக்கொண்டிருந்தன. அவற்றை எண்ணத்துவங்கினேன். ஏதோ பேச்சுக்குரல் கேட்க, ஆமா அழைக்கிறாரோ என்று திரும்பினேன். பழுப்பு நிற 'சியோங்சாம்' அணிந்த இரு பெண்மணிகள் ஏதோ சுருக்குப் பைகளைக் காணோம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். என் அம்மா வயது இருக்கலாம். அவர்கள் தலையலங்காரம் மிகவும் பழங்காலத்ததாக எனக்குத் தோன்றியது. இருவரில் இடது பக்கம் நின்றிருந்த பெண்மணி மிகவும் கவலையுடன் இருந்தார், என்னைப் பார்த்து, கொஞ்சம் தேடித் தருமாறு வேண்டிக்கொண்டார். சரியென்று, நானும் தேடுகிறேன் என்று கூறியவாறு பின்புறம் இருந்த துடைப்பான், முறம் இவற்றையெல்லாம் திருப்பிப் பார்த்து நானும் தேடத்துவங்கினேன். செடிகளுக்கு உரமிடும் உரக்கூடை, வீடு கழுவும் உதவும் பக்கெட்டுகள், துடைக்கும் துணிகள், தட்டுமுட்டுபொருள்களை போன்றவைதான் அங்கங்கே தட்டுப்பட்டன.


ஆமாவிடன் கேட்டு உதவச்சொல்லலாமே என்று தோன்றியது. ஓடிப்போய் ஆமாவிடம் சொல்ல ஆமா, தோழியுடன் வந்தார்.



அந்தப் பெண்மணிகள் இன்னும் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களைச் சுட்டிக்காட்டினேன். நான் பப்பாளிகளை எண்ணிக்கொண்டிருநதபோது பார்த்தேன் என்றேன். ஆமாவும் தோழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். என்னை உள்ளே அழைத்துச்சென்று ஆமாவின் தோழி உள்ளிருந்து ஒரு தட்டில் துரியான் பழங்களையும், ஒரு கச்சாங் (கடலை) பொட்டலத்தையும் வைத்துக்கொடுத்தார். ஆமா என்னை தன் பக்கத்திலேயே இருத்திக்கொண்டார். என்னிடம் சில கேள்விகள் கேட்டார். ஆமாவிற்கு விளையாட்டில் கவனம் செல்லவில்லை. என்னை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.



என் கண்ணுக்குத் தெரிந்த பெண்மணிகள் ஆமாவிற்கு அவர்தோழிக்கும் தெரியவில்லை என்பதை பின்னர் அறிந்து கொண்டேன். அதன் பின் இரண்டொருமுறை அந்த தோழி வீட்டிற்குப் போகும் வழியில் சில நேரங்களில் முழு உருவமாகவோ, நிழல் உருவமாகவோ, சில மனிதர்கள் என் கண்ணில் தென்படத் துவங்கினர்.
சில நாட்களுக்குப் பின்னர், என் ஆமா என்னை ஒரு சோதிடரிடம் அழைத்துச் சென்றிருந்தார். நான் மருத்துவர் ஆவேனா, ( என் தாத்தா அந்த காலத்து சீன பாரம்பரிய மருத்துவராம்) என் வருங்காலம் எப்படி இருக்கும், எனக்கு எத்தனை பிள்ளைகள், மனைவி, எப்படிப்பட்டவளாக அமைவாள், என்று பற்பல கேள்விகளை தயார்செய்துகொண்டு, என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்.


அன்று நான் அணிந்திருந்த உடை எனக்கு நினைவில்லை, ஆனால் ஆமா மூங்கில்தண்டு நிறத்தில் 'கெபயா' அணிந்திருந்தார். அவருக்குப் பாசாரில் (சந்தையில்) வாங்கிய வேலைப்பாடுகள் கொண்ட மரத்தாலான கொண்டை ஊசியை ஓடிவந்து எடுத்துக்கொடுத்ததுகூட நினைவிருக்கிறது. அந்த சோதிடர் கிரேட்டா ஆயர் பகுதியில் இருந்தார். போகும் வழியில் ஆமா வுடன் பேசிக்கொண்டே வந்தேன். முன்பு அந்த இடத்தில், தூய்மையான தண்ணீர் ஊற்றுக்கள் நிறைய இருந்ததால் சுற்றுவட்டாரத்தில் நிறைய பல இனத்தவரின் வழிபாட்டுத்தலங்கள் இருந்தன என்றும், வண்டியோட்டிகள், மாட்டுவண்டிகளில் நீர் நிரம்பிய அண்டாக்களை ஏற்றி, மற்ற பகுதிகளில் இருந்த மக்களுக்கு விநயோகித்தனர், என்று ஆமா சொல்லிக்கொண்டே வந்தார்.



ஆங், சோதிடர் என்ன சொன்னார் என்று சொல்கிறேன், அவர் ஒன்றும் சொல்லமுடியாது என்று கூறி, கிட்டத்தட்ட எங்களை விரட்டிவிட்டார். ஆமா சோர்ந்து போகவில்லை, என்னை இன்னொரு சோதிடரிடம் அழைத்துச்சென்றார். அவர் ஆமாவிடம் அன்பாகப் பேசினார். ஆனால் எனக்கு சோதிடம் பார்க்க பணிவுடன் மறுத்துவிட்டார்.



ஆமா, மௌனமாக என்னை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். இரவு அம்மா அப்பாவிடம் சொன்னேன். அவர்கள் நாத்திகர்கள் என்றபடியால் இது அவர்களை பாதிக்கவேயில்லை. ஆனால் அன்பின் காரணமாக அவர்கள் ஆமாவிடம் இதுகுறித்து ஏதும் கேட்கவில்லை.



எனக்கோ அப்போதே பள்ளிக்கு ஓடிப்போய் என் யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற ஆவல் இருந்தது. இப்போதோ என் அவசரத்தை நினைத்தால் எனக்கே சிரிப்பாக இருக்கிறது.
நீண்டதூரம் காரோட்டிக்கொண்டு செல்வது என் அன்னைக்கு மிகவும் பிடிக்கும். ஆமாவும், நானும் என் பெற்றோருடன் எங்கள் வீட்டு காரிலேயே அண்டை நாடுகளுக்கு போய் வருவோம். கல்லூரி சென்றபின் நானும் ஓட்டத்துவங்கினேன். ஆமா என் பக்கத்திலும் என் பெற்றோர் பின்பக்கமும் அமர்ந்துகொள்வர். என் அம்மா, அப்பா, நான் என்று மாற்றி மாற்றி ஒட்டுவோம்.


மலாக்கா, சிங்மாய், டோக்கியோ, எங்கு சென்றாலும் இறந்தவர்கள் என் கண்களில் பட்டுக்கொண்டேதான் இருந்தார்கள்.


என் கண்ணுக்குப் புலப்பட்ட எந்த ஆவியுமே என்னை எந்த விதத்திலும் இதுநாள்வரை தொந்தரவு செய்ததில்லை. நான் ஆராய்ச்சித்துறையில் பணிபுரிந்த காலகட்டத்தில் எங்கள் மூத்த அதிகாரி ஒருவர்மூலம், ஆமாவின் தோழி குடியிருந்த பகுதிக்குச் செல்லும் வழி, சிங்கப்பூர், ஜப்பான் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், பிணக்கிடங்காக இருந்தது என்ற செய்தியைத் தெரிந்துகொண்டேன்.


என் அவதானிப்புகள் அதிகமாக ஆக , என் நண்பர்கள் குறைந்துகொண்டே வந்ததுதான் நடந்தது. ஏற்கனவே எனக்கு மிக மிக குறைவான நண்பர்களே, பல்கலையில் இருந்தனர். போததற்கு, முதுகலை இறுதியாண்டில் பயிலும்போது உடன் பயின்ற மாணவனின் தந்தை மாண்டு போனார். விடுப்பு எடுத்துக்கொண்டு அவனுடனே அன்று முழுவதும் இருந்தேன். முக்கியமான சில பத்திரங்களின் தகவல்களும் அவை எங்கே வைக்கப்பட்டிருந்தன என்பதும் தெரியாமல் அவன் தாயார் திண்டாடுவதாகக் கூறினான். மறுநாள் பின் அவன் தந்தையாரை நான் என் சோதனைகூட அறை முகப்பில் பார்த்தேன். அவர் பெட்டகச்சாவி இருக்கும் இடத்தை என்னிடம் கூறியதால், என் நண்பனை உடனே அழைத்து விவரத்தைச் சொன்னேன். நான் சொன்னது சரியான விவரமே என்று அவன் வீடு சென்றதும் உறுதி செய்து எனக்கு நன்றி தெரிவித்தான். அதன் பின் அவன் தந்தையாரின் வேக் நிகழ்விற்குக்கூட (இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கில் உறவினர் நண்பர் கலந்துகொள்ளும் நிகழ்வு) என்னை அழைக்கவில்லை. நான் தொலைபேசியில் ஓரிருமுறை அழைத்தபோது இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ஒருவேளை என்னுடன் நட்பு பாராட்டுவது அவனுக்கு அச்சமாக இருந்திருக்கலாம்.



நெடுஞ்சாலையோரம் நிற்பவர்களையோ, நடப்பவர்களையோ கொஞ்சம் போக்குவரத்தை கவனித்துச்செல்லுமாறு கூறியிருக்கிறேன். அதன் மூலம் அவர்களுக்கு ஏற்படப்போகும் விபத்துக்களைக்கூடத் தவிர்த்திருக்கிறேன். மருத்துவமனைகளுக்குச் செல்லும்போதுகூட என் கண்களில் நிழல் உருவங்கள் தென்பட்டுக்கொண்டே இருந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் தாங்கள் இறந்ததைக்கூட அறியாமல் இருந்தனர். சிலர் ரோட்டிப்பராட்டா சாப்பிட்டுக்கொண்டோ, பீர் அருந்திகொண்டோ இருப்பார்கள். உனக்கு எதாவது சாப்பிட வேண்டுமா என்றுகூட கேட்டிருக்கிறார்கள்.


எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று எனக்கு சலிப்போ, பெருமிதமோ ஏற்பட்டதில்லை. எனக்கு எப்படி இப்படி ஆகிறது என்றோ, மருத்துவரைச் சந்திக்கவேண்டும் என்றோ , நான் நேரம் செலவழித்து ஆராய்ந்ததுமில்லை. இதை உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்றோ புகழுக்கோ, பணத்துக்கோ நான் ஆசைப்பட்டதுமில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக நான் படைக்கப்பட்டிருக்கிறேன். என் பிறந்த தேதி 6-6-1966 மாலை ஆறு மணி ஆறு நிமிடங்கள், நிறைய ஆறு வருகிறது. பதினைந்து வயதிலிருந்து யோகப்பயிற்சி செய்கிறேன். தனியாக நடக்கும் போது சிலசமயம் எனக்குள் நான் பேசிக்கொள்வேன். இப்போது சின்னஞ்சிறு கைபேசியை வைத்துக்கொண்டு பலர் தனியே பேசிக்கொண்டே நடப்பதால், என்னையும் அவ்வாறே எண்ணிக்கொள்ளலாம்.



என்னை ஒரு பெண் டேட் செய்தாள், எங்கள் பணியிடத்தின் வேறொரு பிரிவில் வேலை செய்து வந்தாள். முதல் சந்திப்பு ஒரு உணவகத்திலும், அடுத்த சந்திப்பு புக்கிட் திமா பூங்காவிலும் நிகழ்ந்தது. என் அமைதியான குணம் தன்னைக் கவர்ந்ததாகச் சொன்னாள்.


நான் புத்திசாலித்தனமான ஒரு காரியம் செய்தேன். என் முன் தென்படும் நிழல்மனிதர்களைப் பற்றிஅவளிடம் சொன்னேன். அவர்கள் என்னைத் தொந்தரவு செய்யாவிட்டாலும், அவர்களைத் தவிர்க்க தரையைப் பார்த்து நடக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறேன் என்றும் இன்னும் சில நற்செய்திகளையும் சொன்னேன். அந்த சந்திப்பிற்குப்பின் அவள் என்னோடு தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டாள்.


இந்த 2008 ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களில் உச்சப்பயன்பாட்டை அறிந்து வைத்து பயன்படுத்தும் சிங்கப்பூரில் இப்படியும் ஒரு பிரகிருதியா என்று நினைத்தாளோ என்னவோ. அவள் ஜூரோங் அறிவியல் பூங்கா வளாகத்தில் வேறு வேலைக்குப் போய் விட்டாள் என்று பின்னர் கேள்விப்பட்டேன்.



எனக்கு எந்தப் பெண்ணையும் பார்த்து காதல் உண்டாகவில்லை. காதல் என்பதே ஹார்மோன்களின் சேட்டை என்று ஒரு எழுத்தாளர் கூறியிருந்ததாகப் படித்தேன். மேலும், முழுக்க முழுக்க பாட்டியின் கவனிப்பிலும், வெளியுலகில், ஆம் , இல்லை போன்ற அத்தியாவசியமான பேச்சுக்களிலும், தனிமையிலும் இருந்ததாலோ என்னவோ, பெண்களிடம் பழகும் முறையை நான் அறியவில்லையோ என்னவோ.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், பாட்டி இறந்தபின்னர், ஆராய்ச்சித்துறை வேலையிலிருந்து விலகிக்கொண்டு, பேக்கரி ஒன்றைத்துவங்கினேன். அதன் ஆரம்பக் காலகட்ட பணிகளில் நான் சந்தித்த ஒரு பெண் நல்லதொரு தோழியானாள். அவள் என்னைத் திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினாள். என்னைப் பற்றி சொன்னபோது அவள் குதூகுலம் அடைந்தாள்.அவள் பெயர் ஆ ஹ¤வே. என் ஆமாவின் பெயர். என் கண்களுக்கு அவள் என் ஆமாவைப்போலத் தோன்றினாள். அதனால் அவளை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை.



என் பேக்கரியின் ஏழு கிளைகளிலும் பணிபுரிய அனுபவமுள்ள பணியாளர்களுக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுத்தபோது, ஆட்டிசம், உடல் ஊனம், முதலியவற்றால் பாதிக்கப்பட்ட இளையர் சிலரையும் பணியில் சேர்க்கபோகிறேன் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பயிற்சி கொடுத்து வாழ்வில் காலூன்றவைக்க ஆசைப்படுகிறென் அவர்களுடன் இணைந்துபணிபுரிய வேண்டும் என்றபோது பெரும்பாலானோர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்கள்.


சின்னப்பையனாக நான் வாழ்ந்த காலத்தில் ஆ-மா அவர்கள் அங் கூ குவே, நிலவப்பம் போன்ற பலகாரங்களைச் செய்யும்போது கூட இருந்து, கழுவுவது, பொடிப்பது, அரைப்பது போன்ற வேலைகளை கூடமாட ஒத்தாசை செய்திருக்கிறேன்.


என் பெற்றோர் எப்படி இறந்தார்கள் என்று கேட்கிறீர்களா?


ஒரு விடுமுறை நாளில் பெற்றோருடன் ஜொஹ¤ருக்குக் கிளம்பினேன். நான் தான் ஓட்டினேன். பின் இருக்கையில் என் பெற்றோர் அமர்ந்திருந்தனர். சிங்கப்பூர் எல்லையைக் கடக்கும் முன் கனரக லாரி ஒன்று எங்கள் காரை மோத எனக்குச் சில சிராய்ப்புக்கள். காரின் பின்புறம் நொறுங்கிவிட்டது.


சிங்கப்பூர் இலக்கிய இதழ் 'நாம்' 2008 மார்ச்