Thursday, October 20, 2011

விளையாட்டு

பூங்காவில் விளையாட
அப்பாவுடன் கிளம்பிய சிறுமி
வழியில் ஒரு மரவட்டையைப் பார்க்கிறாள்
அதன் பின்னோடு அவளும் போகிறாள்

தன் குட்டிக்கால்கள் அருகில் தன்
தலை வருமளவுக்குக் குனிந்து
அதனுடன் பேசுகிறாள்

நடைபாதையை விட்டு அது
ஒரு செடியருகில்
சென்றவுடன்
கண்முன் பறந்து சென்ற
ஆந்துப்பூச்சியின் பின்
மூச்சிரைக்க ஓடுகிறாள்

கட்டடத்தின் சுவரில்
ஒரு நத்தையைக் காண்கிறாள்

பாத்தியா அது
தன் வீட்டை
போகுமிடமெல்லாம்
தூக்கிக்கொண்டு போகிறது
அப்பா சொல்லச் சொல்ல
அவள் புன்னகையுடன்
திறந்த வாயுடன்
கண்கள் விரியப்
பார்க்கிறாள்

தன் சிறு விரலால்
அதன் வீட்டைத் தொடுகிறாள்

அது அதன் சாமானையெல்லாம்
எங்கே வச்சுக்கும்
அப்பாவைக் கேட்கிறாள்

ஆமாம் எங்கே வச்சுக்கும்
அப்பா திருப்பிக் கேட்டார்

பந்தைக் கண்முன் நீட்டி
வா போலாம்
அதோ சறுக்குமரம் என்றார் அப்பா

சரி இதுகிட்ட
ஒரு ரகசியம் சொல்லிட்டு வருவேன்
என்று ரகசியம் ஒன்றைச் சத்தமாகச் சொல்லிவிட்டு
அப்பா பின்னால் ஓடுகிறாள்

ஊஞ்சலும் சறுக்குமரமும் பொருத்தப்பட்ட
ரப்பர் தரைக்கு அப்பால்
உள்ள மண்தரையைப் பார்த்துவிட்டு
அங்கே விரைகிறாள்
நத்தைக்கு வீடு கட்ட
கல் எடுக்கப்போறேன்
என்று வேகமாக
கைவிரல்களை மண்ணில் விட்டுக்குடைகிறாள்

அய் ஒரே டர்ட்டி,
கையை குத்திக்கப்போற என்று
அப்பா சொல்வது அவள் காதில் விழவில்லை

இல்லை இப்பவே கல் எடுக்கப்போறேன்
என்று அவள்
விடாப்பிடியாகத் தோண்டுகையில்
அப்பா சுற்றும்முற்றும் பார்க்கிறார்

சட்டை, கன்னம் கை கால் என்று
எங்கும் மண்தீற்றல்களுடன்
இரண்டு கற்களை எடுத்துக்கொண்டு வந்து
இப்பவே வீட்டுக்குப்போய் பச்சை அட்டையை
எடுத்துவரவேண்டும் என்கிறாள் பொறுப்பு வழியும் குரலில்

வீட்டுக்குப்போனதும் அம்மாவிடம்
அப்பா சொன்னார்
இவள் இன்று விளையாடவேயில்லை

அவள் பெரிதாகத் தலையை ஆட்டி
மறுத்துச் சொன்னாள்
இன்றுதான் தான் நன்றாக விளையாடியதாக


Nandri solvanam

3 comments:

stalin wesley said...

நல்ல பதிவு


அது சமந்தமான படம் இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும் .

நன்றி நண்பரே ...

kingofnature said...

100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் அனைத்து புத்தகங்களும் நூல் உலகத்தில்.. தற்போது 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும், 500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் டெலிவரி முற்றிலும் இலவசம்...click me...

Sobia Anton said...

நான் கூட இது போலவே ஒரு பதிவு பதிந்திருக்கின்றேன். ஒரு முறை வாசித்துப் பாருங்களேன். http://siruvarulagu.blogspot.de/2013/05/blog-post_20.html