Sunday, November 21, 2010

சாதாரண மனிதன்

இளநீர்க்காயை அப்படியே ஒருபக்கம் வைத்துவிட்டு தேவி ஆயாசத்துடன் உட்கார்ந்துகொண்டாள். வீட்டிலிருந்த மூன்று கத்திகளையும் ஒவ்வொன்றாகப் பயன்படுத்தி, குத்திக்குத்திப்
பார்த்தாகிவிட்டது. எதற்கும் மசியாமல் இருக்கிறது இந்த இளநீர்க்காய்.

டுயிட் , டுயிட்
முன்னறை சன்னலில் மைனாவின் குரல் கேட்டது. வேறொரு சமயமாக இருந்தால் இரண்டு வயது குழந்தை தூரிகா, அம்மா அம்மா என்று மெல்ல விரலை வாய்மேல் வைத்து அவளை எச்சரித்தபடி மெதுவாக அழைத்து வந்து காட்டியிருப்பாள். இல்லை கலகலவென்று சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கும் சமயம் என்றால், அம்மா உன்னைப் பாக்க மைனா வந்திருக்கு என்பாள். இரண்டுக்கும் ஆன சமயம் இது இல்லை. குழந்தை
இத்தனை நேரம் அவள் மடியை விடாமல், அனத்திக்கொண்டிருந்துவிட்டு சிறிது பொழுதுக்கு முன்னர்தான் தூங்கியது. அலுங்காது அதன் சிறிய படுக்கையில் கிடத்தியவள் இப்போது இந்த இளநீருக்காக ஒரு சிறு போராட்டம் நடத்திக்கொண்டிருந்தாள்.விடியற்காலையிலேயே சோர்வுடனும் லேசான காய்ச்சலுடன் இருந்த குழந்தையை அவள் வழக்கமாக செல்லும் வீட்டுக்கருகில் இருந்த மருத்துவர் வாங்'கிடம் பிராம் வண்டியில் குழந்தையை வைத்து அழைத்துக்கொண்டு போனாள். மணல்வாரியாக
இருக்குமோ என்று தோன்றியது. மருத்துவர் பொது சோதனைகள் எல்லாம் செய்துவிட்டு ரோசியோலா தொற்று என்று சொல்லிவிட்டு இரண்டொரு நாளில் தானாக சரியாகிவிடும் என்றவாறு மருந்தை கையோடு கொடுத்திருந்தார். இளநீர் கொடுக்கலாமா என்று கேட்டதற்கு தாராளமாக கொடுங்கள், முடிந்தவரை திரவங்களை சிறு இடைவேளைகளில்
குழந்தை விரும்பும் அளவு கொடுங்கள், இச்சமயத்தில் திடஉணவை குழந்தை அவ்வளவாக
விரும்பாது என்று சொல்லிவிட்டு சில பொதுவான அறிவுரைகளைக் கூறியிருந்தார்.குழந்தையைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு கடைக்குச் செல்ல முடியாது என்பதால் வரும்வழியிலேயே 'ஷாப் அண்ட் சேவ்' இல் நான்கைந்து இளநீர்க்காய்க்களை வாங்கி அப்படியே குழந்தைவண்டியின் அடிக்கூடையில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டாள். நாராயணன் வீட்டுக்குத்தேவையான காய்கறி பழங்கள் முதலியவற்றை வாங்கிப்போட்டுவிட்டுதான் அலுவலக வேலையாக கொரியா சென்றிருந்தான். பொதுவாக ஷாப் அண்ட் சேவ் இல் 'டாப் ஆ·ப் கோகனட்' என்ற வகை கிடைக்கும் அதில் இளநீர்க்காயின் மேல்பகுதியில் உள்ளங்கையளவில் ஒரு சிறு வட்டக்குறி காணப்படும். ஒரு சாதாரணக்கத்தியால் அதை கீறினாலே திறந்துகொண்டுவிடும். சோதனையாக இன்று அந்த வகை இல்லை எப்போதும் கிடைக்கும் மற்றொரு வகையே இருந்தது. எப்படியும் வீட்டில் இருக்கும் கத்தியால் திறந்துவிடலாம் என்று எண்ணியே அதை வாங்கி வந்திருந்தாள்.


குழந்தை காலையில் பாலைக் கண்ணில் பார்த்தாலே வேண்டாம் வேண்டாம் என்றது. பாதி ரொட்டி சாப்பிட்டுவிட்டு போதும் என்றுவிட்டது. அவள் எப்படியோ தாஜா பண்ணி சிறிது குளூக்கோஸ் கலந்த
நீரை புகட்டிவிட்டாள். சிறிது நேரம் கழித்து கண்விழிக்கும்போது எப்படியாவது இளநீரைக் கொடுத்துவிடவேண்டும் என்று அவளும் படாதபாடு பட்டாள், ஒரே இடத்தில் குத்திப்பார்த்தாள், வேறு மென்மையான இடம் தேடி குத்திப்பார்த்தாள் ஒன்றும் பலிக்கவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால் யாரிடம் கேட்பது, அவர்கள் தங்கியிருந்த அடுக்ககத்தின் பதினொரு தளங்கள் மட்டுமல்ல அருகில் இருக்கும் அடுக்ககங்களிலும் காலை பத்துமணிக்கு ஒரு பயங்கரமான மௌனம் கவ்வி விடும். ஒரு தளத்திலாவது மனித நடமாட்டம் காணப்படாது. சிங்கப்பூரில் பெரும்பான்மையான வீடுகள் இப்படித்தானோ என்று தோன்றியது. காலை அவரவர் அலுவலகம், பள்ளிக்கூடம் என்று விடியற்காலையில் கிளம்பிவிட்டால் அவர்கள் அடுக்ககத்தின் மின்தூக்கிக்கு வேலையே இல்லை. மதியம் இரண்டு அல்லது மூன்று மணிக்கு ஏதேனும் பள்ளிக்குழந்தைகள் தென்படுவர். வீட்டில் முதியவர்களோ, பணிப்பெண்களோ இருக்கும் வீடுகளைத் தவிர வேறெல்லாம் வெறிச்சோடிக்கிடக்கும். நான்கைந்து ப்ளோக் தாண்டி நாராயணனின் நண்பர்கள் ராமு மற்று பெஞ்சமின் வீடு உள்ளது. ஆனால்
இந்நேரத்தில் அவர்கள் வீட்டிலும் யாரும் இருக்கமாட்டார்கள். அவளுடைய வேறு சில
நண்பர்கள் சிங்கப்பூரில் வெவ்வேறு வட்டாரங்களில் இருப்பவர்கள். இளநீரைத் திறக்க எங்கு எடுத்துக்கொண்டு ஓடுவது. இதுபோல் சொகுசுக்கடைகளில் வாங்கினால் எங்கு
திறப்பது. ஒருவேளை வீட்டில் பெரிய கத்தி அல்லது அரிவாள் போல் ஏதேனும் இருந்திருந்தால் திறக்க முடியுமோ. என்ன செய்வது, இரண்டு உள்ளங்கை விரல்களையும் நேருக்கு நேராக பொருத்தி வளைத்து நெட்டி முறித்தாள். குத்திக்குத்திப் பார்த்து கைவலிதான் மிச்சம். வேலை ஆகவில்லை. ஒருவேளை கோகனட் ஜூஸ் என்ற பெயரில் கடையில் அலுமினிய டின்களில் அடைத்துவைத்திருந்த இளநீரை வாங்கியிருக்கலாமோ, சே சே, முடிந்தவரை டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் பானங்கள் இதெல்லாம் வாங்குவது வேண்டாம் என்று வைத்திருக்கிறாள். திடீரென்று பக்கத்து ப்ளாட்டின் இரும்புக்கம்பிக்கதவு சாவியால் வேகமாகத் திறக்கப்படும் ஓசை கேட்டது, தொடர்ந்து மரக்கதவு திறக்கும் ஒலியும் பின் கதவு அறைந்து சார்த்தப்படுவதும் அந்த துல்லியமான அமைதியைக் கிழித்துக்கொண்டு கேட்டது. தேவி சட்டென்று எழுந்து நேராக படுக்கையறைக்குச் சென்று தூங்கும் குழந்தை அருகில் அமர்ந்துகொண்டாள்.
அவன்தான், அவனேதான். அவளுக்கு எரிச்சலும் கோபமும் சேர்ந்து வந்தது. அவர்கள் இந்த வீட்டுக்கு வந்தபுதிதில் பக்கத்துவிட்டில் குடியிருந்த சீனக்குடும்பத்துடன் ஓரளவும் முகமன் சொல்லும் அளவுக்கும் ஓரிரு வாக்கியங்கள் வாரயிறுதியில் பேசுவதுமாக இருந்தாள். பெரும்பான்மையான சீனர்கள் குறைவாகப் பேசிக் கடுமையாக உழைப்பவர்கள் என்று ஒரு கருத்தும் அவளுக்கு இருந்தது. இரு மாதங்களுக்கு முன் அந்தக்குடும்பம் வீட்டைக்காலிசெய்துவிட்டு காண்டோமினியத்திற்குச் சென்றபின் திடீரென்று ஒரு நாள் பக்கத்துவீட்டு முன்வாயிலில் ஒரு சீன இளைஞனைப் பார்த்தாள், அப்படியே ஹாங்காங்கில் இருக்கும் அவள் தம்பி கணேசனின் வயது இருக்கும். முழுக்கை சட்டையும் முழுகால்சட்டையும் கழுத்துப்பட்டையும் அணிந்துகொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பிக்கொண்டிருந்தான். வேறு யாரும் வீட்டிலிருப்பதாகத் தெரியவில்லை. அவளே சற்று அமைதியான சுபாவம், பார்த்தவரை சினேகம் செய்துகொண்டு கலகலப்பாகிவிடும் சுபாவம் என்று சொல்லமுடியாது , நாராயணன் அவளைவிட இன்னும் குறைவாகவே பேசுபவன். இதற்கு ஏற்றாற்போல் இங்குள்ள பெரும்பான்மையான வீட்டுமனிதர்களும் தானுண்டு தன்வேலை உண்டு என்று இருப்பவர்கள். மின்தூக்கியில் கூட வெவ்வேறு திசைபார்த்துக்கொண்டு பயணம் செய்யும் அளவிற்குத் தலையிடாதவர்கள். மின்தூக்கியில் ஏறுவதும் இறங்குவதும் கூட பயணம்போல்தான், ஏதேனும் குட்டிக்குழந்தையின் கையசைப்பு இறுக்கத்தைக் குறைக்காதவரை, கனத்த மௌனம் கவ்வும் போதும் ஒவ்வொரு நொடியும் நீண்டதாகத்தோன்றுவது இயல்புதானே. அவனைப்பற்றி கிட்டத்தட்ட மறந்துவிட்டிருந்தாள்.ஒரு ஞாயிறு இரவு, அவள் வாரயிறுதியில் செல்லும் பகுதிநேர முதுகலைவகுப்பு
முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். வீட்டில் தூரிகாவுடன் நாராயணன் இருந்தான். அவர்கள் அடுக்ககத்தின் கீழ்த்தளத்தில் நின்றுகொண்டு, மின்தூக்கியில் அவர்கள் வீடு இருக்கும் பத்தாம் தளத்திற்கு ஏற அவள் உள்ளே நுழைந்தபோது பக்கத்துவிட்டு
இளைஞனும் வேகமாக நுழைந்துகொண்டான். அது மறக்கமுடியாத ஒரு நினைவைத் தரப்போகிறது என்று அவள் அப்போது அறியவில்லை. ஏதோ ஒரு பனியனும் பெர்முடாசும் அணிந்திருந்தான். பெரிய முதுகுப்பை ஒன்றை சுமந்துகொண்டிருந்தான். கதவுகளை மூடச்செய்யும் பொத்தானை அவள் அமுக்க கைநீட்டும்போது தற்செயலாக அவனும் கைநீட்ட, அவன் கையைப் பார்த்த தேவி திடுக்கிட்டுப்போனாள். அவனோ அவளை கவனிக்காமல் அதை அமுக்கிவிட்டு, மின் தூக்கியில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்ததால் பத்து என்று பொறிக்கப்பட்டிருந்த பொத்தானையும் அடுத்து அழுத்தியபோது இன்னும் நன்றாக கவனித்தாள். அவளுக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. உமிழ்நீரை இரண்டுமூன்று முறை விழுங்கிக்கொண்டாள்.
அவன் வலது உள்ளங்கையின் வெளிப்புறத்தில் பெரிய நட்சத்திர வடிவில் ஒரு பெரிய புடைப்பு இருந்தது. அதே கையில் மணிக்கட்டுக்குக்கீழ் சாய்வாக அடுத்தடுத்து மூன்று
நீள் கோடுகள் இருந்தன. கோடுகளா அவை இல்லவே இல்லை. காய்ந்த சுண்டை வத்தல்
அல்லது கோலிகுண்டைவிட ஓரிரு சுற்று சிறிய உருண்டை அளவில் நான்கு உருண்டைகள் வரிசையாக இருந்தன. இதைப்போல் மூன்று வரிசைகள். சிங்கப்பூரில் இளையர்கள் உடலில் வெவ்வேறு விதங்களில் பச்சை குத்திக்கொள்ளுவதை அவள் அறியாதவளல்ல. அவள் வகுப்புத் நண்பர்களுடனான பேச்சு ஒரு முறை இதுபக்கம் திரும்பியபோது, அவள் தோழி இப்போது சிலர் ·பேஷன் என்ற பெயரில் உடலை சிதைத்துக்கொள்ளும் அளவிற்கு கிறுக்காகிவிட்டனர் என்றாள். இது ஏதோ கையில் புண், அல்லது கொப்புளம் அல்ல என்றே அவள் மனதுக்குப் பட்டது. இவன் ஏதோ ஒரு வம்புக்குழுவைச் சேர்ந்தவனாயிருந்தால் என்ன செய்வது என்ற புதிய பயம் அவளைத் தொற்றிக்கொண்டது. அவன் வீட்டில் பெரியவர்கள் யாருமில்லை. இப்போது யோசித்துப்பார்த்தால் ஏதோ ஓரிரு முறை இரண்டு மூன்று இளையர்கள் வாரயிறுதியில் வந்துபோனதுபோல் தோன்றியது. திடீரென்று அவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்பதே மறந்துவிட்டது. பத்தாம் தளம் வந்து, அவன் மின் தூக்கியிலிருந்து இறங்கி போய்விட்டிருக்கிறான். இவளோ பொத்தானைக்கூட அமுக்கத் தோன்றாமல் திக்கித்திருக்க வேறு தளத்தில் யாரோ மின் தூக்கி பொத்தானை அமுக்கியிருப்பார்கள்
போலிருக்கிறது, மின்தூக்கி மீண்டும் தரைத்தளத்தை அடைந்து கதவுகள் திறந்துகொண்டன. அவளுக்கு அறிமுகமில்லா வேறு ஒரு குடும்பத்தினர் தரைத்தளத்தில் நின்றுகொண்டிருந்தனர். மின்தூக்கி திறந்தபோதுதான் அவள் தன்னினைவு பெற்றவளாய் திடுக்கிட்டாள்.
வெளிவரப்பார்த்தவள் மீண்டும் குழம்பி உள்ளே நுழைந்தாள். அவர்கள் ஏழாம் பொத்தானை அமுக்கவும், அவள் மெதுவாக பத்தாம் எண்ணை
வெட்கத்துடனும் படபடப்புடனும் அமுக்கினாள். வழக்கம்போல் யாரும் யாருடனும் பேசவில்லை. வீடு அடைந்ததும் வீட்டுச்சாவி தன்னிடமும் இன்னொன்று இருக்கிறது என்பதையும் மறந்தவளாய் அழைப்புமணியை வேகமாக அழுத்தினாள்.பக்கத்துவீட்டு வாயில் கதவு பூட்டியிருந்தது. சன்னல்கள் வழக்கம்போல் அடைக்கப்பட்டிருந்தன.
நாராயணன் அவள் பேசியதை வழக்கம்போல் பாதிகாதுகொடுத்து கேட்டுவிட்டு, யாரெப்படி இருந்தால் நமக்கென்ன எப்போது வீட்டைப்பூட்டிவைத்திரு, மின்தூக்கியில் யாராவது தெரியாதவர் இருந்தால் ஏறாதே என்று அவளுக்குத் தெரிந்ததையே மீண்டும் சொன்னான்.


அன்றிலிருந்து அவள் நடவடிக்கையில் சில மாற்றங்களை அவளே தெரிவு செய்து கடைபிடித்தாள்.
தூரிகாவுடன் அடுக்ககம் அருகில் இருக்கும் விளையாட்டுப்பூங்காவிற்குச் செல்லும்போதோ, அருகில் கடைக்குச்செல்லும்போதோ, அடுத்தவீட்டு வாயில் பூட்டப்பட்டு வெளியில் யாருமில்லாமல் இருக்கிறதா என்று சன்னல் வழியாக உறுதிசெய்துகொண்டபின்
கிளம்பத்துவங்கினாள். நாளாவட்டத்தில் இதைப்பற்றி அதிகம் கவலைப்படுவதையும் சிந்திப்பதையும் அவளே உணர்ந்துகொண்டாள். எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமே என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டாள். வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் தோழியோ ஏதேனும் வம்பர் கும்பல்காரனாக இருந்துவைக்கப்போகிறான், எதற்கும் விழிப்போடு இரு என்று தன்பங்குக்கு அக்கறையுடன் கூறியிருந்தாள்.


இதன் பின் ஒரு நாள் வீட்டு வாயிலில் சிறு துணி ஸ்டாண்டில் துணிகளை உலர்த்திக்கொண்டிருந்தபோது தூரிகா துணியை பிடித்துக்கொள்ளும் கவ்விகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள், பக்கத்துவீட்டு இளைஞன் வெளியே வருவதைப் பார்த்து தூரிகா, ஹாய் என்று கையசைக்க , திடீரென்று கவனித்த தேவி அவனும் ஹாய் என்று கையசைப்பதைக்கண்டு தூரிகாவுக்கு ஓர் அதட்டுப் போட அவள் அம்மாவை சற்று கவனிக்காதவளாய் இன்னும் இரண்டடி முன்வைத்து ஓட தேவி அவளை இழுத்துப் பிடிக்க முன்னகர, அவன் இட்ஸ் ஓகே, என்றவாறு தூரிகாவைப்பார்த்து அகலப் புன்னகைத்தான். அவன் பற்கள் கண்களில் பட்டபோது தேவி திடுக்கிட்டுப்போய் லேசாக கத்திவிட்டாள், அவன் சாரி என்றவாறு உள்ளே போய்விட்டான். அவனுடைய பல்மேல்வரிசையின் இரண்டு ஓரங்களிலும் ஆங்கில டிராகுலா படங்களில் வருவதுபோது வாயோர இரண்டு பற்கள் உலோக நிறத்திலும் அளவில் பெரியதாயும் நீட்டிக்கொண்டிருந்தன. அவ்வளவுதான். தேவியின் கெடுபிடிகள் அதிகரித்தன. தூரிகா யாரிடமும் குறிப்பாக பக்கத்துவிட்டு இளைஞனும் ஹாய் சொல்லவோ பார்க்கவோ தடை செய்தாள். வாம்பயர் வாம்பயர் (பிசாசு) என்று அது கத்திக்கொண்டு சிரித்தது. முன்னிலும் அதிகமாக இப்போது அவனைச்சந்திக்கும் சூழலைத் தவிர்க்கத் துவங்கினாள். அடுத்தடுத்த
வீடுகளில் வசித்துக்கொண்டு எவ்வளவுதான் தவிர்க்க முடியும்; ஒரு நாள் அவள்
சாமான்களைத் தூக்கிவரும் தள்ளுவண்டியுடன் வந்தபோது, அவன், அவன் வீட்டு வாயிலில் நிற்பதைப்பார்த்துவிட்டு, பதினொன்றாம் தளத்தில் இறங்கி அவன் வீட்டைக்கடக்காமல் ஓரத்து மாடிப்படிகளைப் பயன்படுத்தி ஒருதளம் இறங்கி சாமான்களைப் படாதபாடுடன் தூக்கி தன்
வீட்டுக்கு எடுத்துவந்தாள். மற்றொருநாள் வீட்டைவிட்டு அவள் வெளியே கிளம்பும்போது அவன் மின்தூக்கியிலிருந்து நடந்து வந்துகொண்டிருந்ததைப்பார்த்துவிட்டு விருட்டென்று உள்ளே சென்று பூட்டிக்கொண்டுவிட்டாள். வீட்டையாவது மாற்றித்தொலைக்கலாம் என்றால் நினைத்தபோது
மாற முடியுமா. இப்படியா பக்கத்து வீட்டுக்காரர் வந்து அமைய வேண்டும். அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. கடந்த ஒரு மாதமாக அவனை முற்றிலும் தவிர்த்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டிருந்தாள். திடீரென்று இதுநாள்வரை யாரையும் இப்படி நினைத்ததோ வெறுத்ததோ இல்லை என்று தோன்றியது. உண்மையில் பள்ளி கல்லூரி காலங்களில் கூட கேலிசெய்பவர், அல்லது அலட்டிக்கொள்பவர்களிடம் கடுமையாகக்கூட பேசியதில்லை. சற்று ஒதுங்கி அமைதியாக ஒரு சிறுபுன்னகையுடன் கடந்துபோய்விடுபவளாய் இருந்திருக்கிறாளேயன்றி இப்படி நிஷ்டூரமாக ஒதுக்கியதோ தவிர்த்ததோ இல்லை.அதன்பின் சில நாட்கள் அவள் கனவுகளில் பயங்கர பிசாசுகள் கோரப்பற்களுடன் இடம்பெற்றன. வெளியிடம் செல்லும்போதெல்லாம் மனிதர்களின் கைகளையும் பற்களையும் கவனிக்கத்துவங்கினாள். பழுப்பு பற்கள், வெள்ளைப்பற்கள், மஞ்சள் குளித்த பற்கள், வரிசையாக, வரிசை தப்பி, சிலசமயம் கோணலாக, ஆனால் வேறு யாரும் டிராகுலா பற்கள் கொண்டிருக்கவில்லை என்பதை அறிந்து கொஞ்சம் சமாதானம் அடைந்தாள். பற்கள் மட்டுமன்றி கைகள், புறங்கைகள், மணிக்கட்டுக்குக் கீழ் இதில்தான் எத்தனை விதம், மஞ்சள் தோல்கைகள், செம்பழுப்பு, அடர்பழுப்பு, இளம்பழுப்பு கைகள், விதவிதமாக பச்சை குத்தப்பட்ட கைகள், பல வித கைக்கடிகாரங்கள், பிரேஸ்லெட்டுகள், அணிந்த கைகள்,
திடீரென்று எல்லாக்கைகளும் அவளை நோக்கி பாய்வதுபோல் தோன்றியது. கைகள் வெடித்து கோலிகுண்டுகள் சிதறி ஓடின. என்ன பயங்கரக்கனவு. சிங்கப்பூரில் இத்தகைய சிதைக்கும் விளையாட்டிற்கு அனுமதி இல்லை என்பதால் ஏதேனும் அண்டைநாட்டில் இதற்கு அறுவைச்சிகிச்சை செய்து உலோக அல்லது சிலிக்கோன் உருளைகளை வைத்து தைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு இன்னும் திடுக்கிட்டதுதான்
மிச்சம்.

குழந்தை லேசாக மீண்டும் அசையத் துவங்கிவிட்டது. இந்த இளநீரை எப்படியாவது உடைத்துத் தயாராக வைத்துக்கொண்டால் குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது கொடுக்கலாம். சரியான சமயத்தில் நாராயணன் வேறு ஊரில் இல்லை. பக்கத்துவீடும் சரியில்லை. சரியாக இருந்தால் திறந்துதரச் சொல்லியாவது கேட்டிருக்கலாம். தூரிகா விழித்துக்கொண்டு கழிவறைக்குச் செல்லவேண்டும் என்றதும் அவளுக்கு மீண்டும் கவலை தொற்றிக்கொண்டது.
சிறிது தண்ணீர் கொடுத்தாள், வேண்டாம் என்றது. பழம் எதுவும் தின்னமாட்டேன் என்று சொல்லியும் விட்டது. வாழைப்பழத்திற்கும் ஸ்ட்ராபெரி பழத்திற்கும் பதில் ஆரஞ்சுகளையாவது வாங்கி வைத்திருக்கலாம். பிழிந்து சாறெடுத்தாவது கொடுத்திருக்கலாம். சாதம் கொஞ்சம் தரட்டா என்று அவள் பேசத்துவங்கும் முன்னே வேண்டாம் வேண்டாம் என்று முனகியது. பசியில்லை என்றது. சிறிது க்ளூக்கோஸ் நீரை குடிக்கவைத்தாள். ஒரு பிஸ்கட் தின்றது. மருந்து சாப்பிடவேணுமில்லையா என்று நைச்சியம் செய்து ஒரு இட்லியை எப்படியோ தின்னவைத்தாள். ஜூஸ் குடு என்றது. குளிர்சாதனப்பெட்டியில் தக்காளிப்பழச்சாறு சில்லென்று இருந்தது, அதை லேசாக வெதுவெதுப்பாக்கி தரட்டா என்று கேட்கவும் வேண்டாது தாகமாயிருக்கு ஜூஸ்தா என்று அழத்துவங்கியது. அம்மாவுக்கு இப்ப எப்படி உன்னை விட்டுட்டு கடைக்குப் போக முடியும், வெய்யில் கொளுத்துதுபார் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தாள். இளநீர் குடிக்கிறயா என்று கேட்டாள் , சொல்லிவைத்தாற்போல் வேகமாக தலையை ஆட்டியது. பெரிதாக கேட்டுவிட்டோம் எப்படி கொடுக்கப்போகிறோம், என்று குழப்பம் வேறு தலைவிரித்தாடியது. அம்மா இளநீர், இளநீர் தா என்று கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் மீண்டும் கேட்கத்துவங்கியது.
பக்கத்துவீட்டுக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் ஒரு கையில் இளநீரை எடுத்துக்கொண்டு மறுகையால் சாவியைக்கொண்டு கதவைத்திறந்தாள். பக்கத்துவீட்டு இளைஞன்தான், அலுவலக உடையில் நின்றுகொண்டிருந்தான். எங்கோ ஊருக்குக் கிளம்புகிறான் போலிருக்கிறது. கீழே சூட்கேஸை வைத்துவிட்டு பூட்டத்துவங்கினான். தேவி மின்னலைபோல் வேகமாக ஓடினாள், இளநீரைக்காட்டி, திறக்கமுடியவில்லை என்பதையும், குழந்தைக்கு காய்ச்சல் என்றும் சொன்னாள். அவன் பதில் பேசாமல் தலையை மெல்ல ஆட்டியவாறு கதவை மீண்டும் திறந்து அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.
வெளியே படபடப்புடன் நின்றவள் சட்டென்று தோன்றியவளாய் வீட்டுக்குள் ஓடிச்சென்று ஒரு என்.டியூசி பையில் மீதம் இருக்கும் இளநீர்க்காய்களைப் போட்டு எடுத்துக்கொண்டு ஓடிவந்தாள். பெரிய கத்தி அல்லது அரிவாள் வைத்திருப்பான் போலிருக்கிறது.
கச்சிதமாக சீவியதை எடுத்துவந்தான். அதை வாங்கிக்கொள்வதற்கு முன் மற்றவற்றைத் தான் எடுத்துவந்திருப்பதையும் அதையும் கொஞ்சம் சீவித்தருமாறு கேட்டுக்கொண்டாள். சீவிய இளநீரை தன் வீட்டு முன்னறை மேசையில் அலுங்காமல் வைத்துவிட்டு மீண்டும் ஓடி வந்தாள். இப்போது அவர்கள் அடுக்ககத்தின் கீழ்த்தளத்தில் ஒரு வாடகை டாக்சியின் மின்கொம்பு சத்தம் ஒரு முறை கேட்டது. பொதுவாக சிங்கப்பூரில் மின்கொம்புகளை காடி ஓட்டுனர்கள் ஒலிக்கச்செய்வதில்லை. தீராது என்றால்தான் எப்பவாவது ஒலிக்கச்செய்வார்கள். இந்த
நான்கு ஆண்டுகளில் அவள் ஓரிருமுறையே கேட்டிருக்கிறாள்.
இப்போது இளைஞன் கைத்தொலைபேசியில் அவன் தாய்மொழியில் பேசினான். பின்னர்
அதை கால்சட்டைப்பையில் வைத்துவிட்டு, அவள் கொடுத்த பையை எடுத்துசென்று ஒவ்வொரு இளநீர்க்காயாக சீவிக்கொண்டுவந்து கொடுத்தான். தேவிக்குப் புரிந்துவிட்டது,
வெளியூருக்குச் செல்கிறான் போல, ஒருவேளை விமானநிலையமாகக்கூட இருக்கலாம், அதற்குவந்த கால்டாக்சியின் ஓட்டுனர் தான் அவனைக் காணாததால் அழைத்திருக்கிறார். இதோ வந்த டாக்சியும் போய்விட்டது. இனி அவன் வேறு ஒன்றை அழைக்கவேண்டும். குழந்தை எங்கே என்று கேட்டான். அதற்கு பதில் சொல்லத்தோன்றாதவளாய்
தேவி அவன் கண்களை நேருக்குநேர் பார்க்காமலேயே நன்றி என்றாள். மீண்டும் கைத்தொலைபேசியை எடுத்தான். திரும்பிப்பார்க்காமல் வீட்டினுள் சென்று வழக்கம்போல் பூட்டிக்கொண்டாள்.
தூரிகா ஆவலுடன் இளநீரைக் குடித்தது, அவளை ஒரு கதை சொல்ல கேட்டுவிட்டு, அவள் பாதி சொல்லும்போதே மடியிலேயே தூங்கிப்போனது. குழந்தையை மெல்ல எடுத்து படுக்கையில் படுக்க வைத்தாள். திடீரென்று காலையில் தான் பழச்சாறு தவிர ஏதும் சாப்பிடாதது நினைவுக்கு வந்தது. குழந்தையின் உடல்நிலையைப் பற்றிய கவலை திடீரென்று போய்விட்டது போலத்தோன்றியது. எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. குளிர்சாதனப்பெட்டியில் பத்திரப்படுத்திய இளநீரை ஒரு முறை பார்த்தாள். தொலைபேசி அழைத்தது. அவர்களுடைய குடும்ப நண்பர், அவள் படிக்கும் கல்விச்சாலைப்பற்றி அவருக்கு வேண்டியவர் யாரோ விவரம் ஏதோ கேட்க இவளை அழைத்திருக்கிறார். அவரிடம் பேசி முடித்தபின், ஒரு கையால் தொலைபேசியை வைத்துவிட்டு மறுகையில் வைத்துக்கொண்டிருந்த பால்பாயிண்ட் பேனாவை எடுத்துவைத்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் அவள் இடது மணிக்கட்டுக்குக்கீழ் ஒரு சிறிய பூவின் உருவம் வரையப்பட்டிருந்தது.


உயிரெழுத்து
2010 அக்டோபர்

1 comment:

வினோ said...

கதை அருமை...