தினமும்
இரவு எட்டுமணிக்கு
அடுக்ககங்களின் இடையே உள்ள
தரைப்பகுதியில்
மூன்று சக்கர வண்டியை நிறுத்தி
மணி அடிக்கும்
இந்த ஐஸ்கிரீம் விற்பவள்
இன்று முதல்வேலையாக
வண்டியிலிருந்து இறங்கியதும்
கம்பளிச்சட்டையைக் கழற்றி
மடித்து கவனமாக பையினுள்
பொத்துகிறாள்
ஒவ்வொரு தொடர் கொம்பொலிக்கும்
ஒவ்வொரு அடுக்ககமாக
பதினைந்தாவது தளத்திலிருந்து
பரவலாக கீழ்த்தளம் வரை
பார்வையை ஓட்டுகிறாள்
நடுங்கிக்கொண்டும்
ஈரம் சொட்டும் உடைகளோடு
மின்தூக்கியருகில்
விரைபவர்களை
அவள்
தொந்தரவு செய்வதில்லை
இன்றைய எதிர்ப்பார்ப்பை
பூஜ்ஜியத்தில் நிறுத்தினாலும்
ஏதோ ஒரு வீட்டில்
யாரேனும் ஒருவர்
தான் வரவில்லை என்று
நினைத்து
ஏமாற்றம் அடைந்துவிடக்கூடாதே
என்பதனால்
இன்றைக்குமட்டும்
கூடுதலாக
சிலமணித்துளிகள் நிற்கிறாள்
மொழியற்ற மொழியை
உதிர்த்தவாறு
மேலேயிருந்து கையசைக்கும் நபர்
தென்பட்டதும்
சுத்தமாக இருக்கும் வண்டியில்
முன்மேடையை மீண்டும் சுத்தம் செய்கிறாள்
கையுறையை கவனமாக அணிந்துகொண்டு
குளிர்பெட்டகத்தில்
எல்லா வகைகளும் தயாராக இருப்பதை
மீண்டும் உறுதி செய்கிறாள்
வேண்டியதைக்கொடுத்த கையோடு
கைதுடைக்கும் காகிதக் கைக்குட்டையை
ஒன்றுக்கு இரண்டாகத் தருகிறாள்
எந்தவித இருமலோ தும்மலோ
இவர்களுக்கு வராதிருக்கவேண்டும்
என்று ரகசியமாக வேண்டிக்கொள்கிறாள்
அவர்கள் சாப்பிட்டதும் தூக்கிப்போடத்
தயாராக குப்பைப்பையை நீட்டுகிறாள்
நல்ல துணியால்
அழுத்தித் துடைத்து குளிர்ச்சியைப்போக்கிவிட்டு
நீட்டுகிறாள் அவர்கள் கொடுக்கும் பணத்துக்கான
சில்லரைக்காசுகளை
02-04-2010 சொல்வனம்
2 comments:
எந்தவித இருமலோ தும்மலோ
இவர்களுக்கு வராதிருக்கவேண்டும்
என்று ரகசியமாக வேண்டிக்கொள்கிறாள்
////////
இப்ப எல்லாம் வியாபாரத்துல நியாயம் எல்லாம் பார்க்குறது போல தெரியல
பதிவை முன்பே படித்தததாக நினைவு , நான் பின்னுட்டம் இட மறந்துடேனா ?!?!
(வருசத்துக்கு ஒரு பதிவுதானா?)
Post a Comment