Thursday, October 06, 2005

துறவியாக மாறிய அரக்கன் (சிறுவர் கதை)

-----மாதங்கி


அமைதிப்பட்டினம் என்ற ஒரு ஊரின் பக்கத்தில் இருந்த ஒரு காட்டில் அரக்கன் ஒருவன் புதிதாக வந்து சேர்ந்தான். அவன் வந்த நாள் முதல் அந்த ஊர் மக்கள் அமைதியை இழக்கலாயினர். காரணம் இதுதான். தோன்றியபோதெல்லாம் அந்த அரக்கன் ஊருக்குள் நுழைவதும் ஊரில் உள்ள ஆடு, மாடு முதலியவற்றையோ, மனிதர்களையோ எடுத்து காட்டிற்குச் சென்று உண்ணுவதுமாக இருந்தான்.
அந்த ஊரில் துறவி ஒருவர் இருந்தார்; அவர் அந்த ஊரில் இன்னொரு பக்கத்தில் உள்ள நதிக்கரை அருகில் இருந்த ஒரு வனத்தில் வசித்து வந்தார். அவரிடம் ஊர்மக்கள் தம் குறையைச் சொல்லி வருந்தவும் உடனே தான் உதவி செய்வதாக வாக்களித்தார் துறவி. அடுத்த முறை அந்த அரக்கன் யாரையாவது பிடிக்க வந்தால் உடனே தன்னிடம் அனுப்புமாறு பகர்ந்தார்.
துறவி அமைதியே உருவானவர். பொறுமையும் சிறந்த தவ ஒழுக்கமும் உடையவர்; அவர் எப்படியும் தங்களைக் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையுடன் ஊர்மக்கள் வீடு திரும்பினர்.
ஓரிரண்டு நாட்களில் அந்த அரக்கன், மாயன் அதுதான் அவன் பெயர், ஆடுமாடுகள் சிலவற்றை பிடிக்க, அவர்கள் துறவியின் வேண்டுகோள்படி அவனை அவரிடம் செல்லுமாறு வேண்டினர்.
மக்களின் புதிய துணிவைக் கண்டு மாயனுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், சரி எப்படியும் நமக்கு உணவு இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் துறவி இருக்கும் வனத்திற்குப் போனான்.
அவனை கண்டுகொண்ட துறவி "வா நண்பனே, உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் " என்று அன்புடன் இயம்பினார்.
தன்னைப் பார்த்தவர்கள் அஞ்சுவதையும் நடுங்குவதையும் கண்டு பழகிய மாயனுக்கு துறவி தனது ஆசிரம வாயிலில் அமர்ந்தவாறு எந்த பதட்டமுமின்றி பேசியது வியப்பைத்தந்தது.
" எனக்கு வரவேற்பா, நான் உங்களை இங்கேயே தின்று விடப்போகிறேன்", மாயன் ஆர்ப்பரித்தான்.
"தாராளமாக நீ என்னை தின்னலாம்; அது ஒன்றுதான் உன்னால் முடியும்; இன்னொன்று உன்னால் முடியாதே " என்றார் புன்னகையுடன்.
"என்ன என்னால் முடியாத இன்னொரு காரியாமா? என்ன அது?"
"நான் சொல்லுவேன், ஆனால் பாவம் நீ திண்டாடி திணறிப் போய்விடுவாய், அதனால் நீ என்னைத் தின்பதே எளிதான வேலை"
"இப்போதே அதை என்னிடம் சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் உங்களை இங்கேயே நசுக்கிவிடுவேன்,என் பலம் உங்களுக்குத் தெரியாதது"
"ஓகோ அப்படியா, சரி உன் பலத்தையும்தான் பார்க்கிறேன்; நீ ஒரு நாள் என்னைப் போன்ற துறவியாக இருந்து பார்; அதற்குண்டான மனவலிமை உனக்கு உள்ளதா"
"பூ, இவ்வளவுதானே, நாளை முழுவது நான் துறவியாக இருக்கிறேன். நீங்கள் எழுந்து கொண்டதிலிருந்து என்னவெல்லாம் செய்வீர்களோ அதை சொல்லித்தந்து கொண்டே இருங்கள். இரவு வந்தவுடன் உங்களை உடனே தின்று விடுவேன்;"
"சரி இன்றிரவு நீ இங்கேயே படுத்துக்கொள்; நாளைகாலை நான் உன்னைத் துயில் எழுப்புகிறேன். நான் செய்யும் எல்லாக் காரியங்களையும் பார்த்துக்கொண்டு அப்படியே செய்ய வேண்டும். எந்த சிறு செயலையும் முடியவில்லை என்று சொல்லக்கூடாது, புரிந்ததா; ஊர் மக்கள் யாராவது வரும் நேரத்தில் மட்டும் திரை மறைவில் நீ இருந்துகொள்"
" ம்,ம், அப்படியே"
"பசியோடு இந்த ஆசிரமத்துள் நுழைந்தாய்; இதோ இந்தக் கனிகளை உண்டு பசியாறி இதோ இந்த இடத்தில் படுத்து உறங்கு; காலை எழுப்புகிறேன்," துறவி பழங்களை அரக்கனிடம் கொடுத்துவிட்டு உண்ணச் சென்றார். மாயனும் தூங்கிவிட்டான்.
சிறிது நேரத்தில் ஊர்மக்களில் சிலர் பயந்தவாறு துறவியின் ஆசிரமம் அருகில் எட்டிப் பார்த்தனர்.
"சுவாமி அரக்கனை வேறு தங்களிடம் அனுப்பிவிட்டோம், அதனால்,....
" நீங்கள் எல்லோரும் நிம்மதியாக உங்கள் இல்லங்களில் உறங்குங்கள் மாயனால் இனி தொல்லை இருக்காது; அவன் இனி யாருக்கும் உபத்திரவம் தர மாட்டான், "
"சுவாமி அவன் போய்விட்டானா ஊரைவிட்டு"
துறவி சிரித்துக்கொண்டே "இறைவன் நம்மை என்று கைவிடமாட்டார்; சென்று உறங்குங்கள், நாளை வழக்கம் போல் வருபவர்கள் வரலாம். இந்த அரக்கன் விஷயத்தை இத்தோடு விட்டுவிடுங்கள்,".மக்கள் துறவியின் வனத்தை விட்டு நீங்கி தங்கள் ஊருக்குள் சென்றுவிட்டனர்.******************
மறுநாள் அதிகாலை துறவி மாயனை எழுப்பினார். காலைக்கடன்களை முடித்துக்கொள்ள அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அதுவரை ஒருநாள் காலைகூட எழுந்து பழகியிராத மாயன் தூக்கக் கலக்கத்துடன், அவர் பின் சென்றான்; அவர் செய்த செயல்கள் அனைத்தையும் செய்யவேண்டுமே.
துறவி காலையில் யோகப்பயிற்சி, செய்தார்; தூய ஆற்றுநீரை அருந்தினார்;
இரவு முதல் நண்பகல் வரை தூங்கி, விழித்தெழுந்ததும் இரையைத் தேடி உண்டுவிட்டு மீண்டும் உறங்கச் செல்லும் அரக்கனுக்கு துறவியின் செயல்கள் வியப்பைத் தந்தன. அவனால் ஒரு சிறு உடற்பயிற்சி கூட செய்ய முடியவில்லை. கழுத்து, இடுப்பு என்று சுளுக்கிக்கொண்டுவிட்டது.
தன்னைப் போன்ற பூதாகரமான உடல் இல்லாத துறவி எந்தவித ஆயாசமும் இன்றி உடற்பயிற்சி செய்த அதிசயத்தை எண்ணி வியந்தான். நதி நீரில் துறவி தன்னை குளிக்கச் சொன்னபோது அரக்கனுக்கு அழுகை வந்துவிட்டது; பின்ன என்னவாம் இந்த பொல்லாத துறவி உணவைப் பற்றி இன்னும் எதும் சொல்லவில்லையே.
குளித்து முடித்து, இறைவனை, வணங்கிய துறவி, பின் ஞாயிறு, நதி, வானம், பூமி, நெருப்பு என்று பஞ்சபூதங்களையும் வணங்க மாயன் சரி எப்படியும் நாளை இந்தத் துறவியை தின்று விடுவோம். தேவைப்பட்டால் கூட ஓரிரு மனிதர்களைத் தின்று விடலாம் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டான்.
எல்லாம் முடிந்த பின், ஆசிரமத்துள் சென்ற துறவி மாயனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்து அவன் கைகளில் இரண்டு கனிகளைக் கொடுத்தார்.
"உணவு வேளை துவங்கிவிட்டது மகனே; இனி பசியாறுவோம்"
" மதிய உணவு எங்கே? யார் கொண்டு வருகிறார்கள்; உள்ளே சென்று எடுத்துவரவேண்டுமா? உணவு உண்ட பின் இந்தப் பழங்களைச் சாப்பிட்டுக் கொள்கிறேன்"
"என் உணவே இதுதான் மகனே"
அரக்கனுக்கு மயக்கமே வந்துவிட்டது; என்ன செய்வது நாளை இந்தத் துறவியைத் தின்று பின் சில மனிதர்கள், ஆடு மாடுகளையும் ஒரு கை பார்க்கவேண்டியதுதான்.
அந்த பழங்கள் அரக்கனுக்கு போதவில்லை. சரி சற்று கண்ணயரலாம் என்றால், அதுவும் முடியாது போலிருக்கிறது. இந்தத் துறவி படுத்துத் தூங்கினால்தானே.
சிறிது நேரத்தில் ஆசிரம வாயிலில் ஊர்மக்கள் சிலர் துறவியைப் பார்ப்பதற்கும் அவரிடம் ஆலோசனை பெறுவதற்கு கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.
சிலர் தங்கள் பிரச்சனைகளை அழுதுகொண்டும், சிலர் சொல்லத் தெரியாமல் திக்கித் திணறி சொல்வதும், சிலர் உணர்ச்சி வயப்பட்டு பேசுவதையும் திரைக்குப் பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருந்த அரக்கனுக்கு துறவி அவர்களை மென்மையான குரலில் ஆறுதல் சொல்வதும், ஆலோசனை சொல்வதும் கேட்க கேட்க, மாயனுக்கு துறவி தன்னை உண்ண வந்தவனிடமும் மென்மையான புன்சிரிப்புடன் பேசியதை நினைத்து வெட்கமாக இருந்தது. தன்னை மட்டும் இந்த மக்கள் தப்பித்தவறி நேரில் கண்டால் நடுநடுங்கி போய்விடுவார்கள். இந்தத் துறவியும் ஆகட்டும் ஆசிரமத்துள் எந்த பொருளும் இல்லை, இந்த நேரத்தில் இப்படியா இருப்பது?
பின்ன என்னவாம், இந்த மக்கள் கொண்டு வந்த ஏராளமான காணிக்கைகளில் துறவி எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை; சில பழங்களை மட்டும் எடுத்துக்கொண்ட அவர் அதையும் அங்கு வந்த குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டார்.
சரி இந்த வேலை ஆயிற்றா, மீண்டும் இறை வணக்கம், ஆசிரம தோட்டத்தை சுத்தப்படுத்துவது, அங்கு சுற்றித் திரிந்த மான், முயல் பசு முதலியவற்று ஏதேனும் அளிப்பது என்று விடாது ஏதோ செய்துகொண்டிருந்த துறவி, மாயனுக்கு சில கிழங்குகள், கனிகளை அளித்தார்.
மீண்டும் மாலை மக்கள் சிலர் துறவியின் ஆலோசனைக்கும் ஆறுதலுக்கும் வந்தார்கள்.
" ஆகா இந்தத் துறவி எவ்வளவு நல்லவர், பொறுமையாக நம் பிரச்சனைகளைக் கேட்டு, ஆறுதலும் ஆலோசனையும் சொல்கிறாரே"
" எவ்வளவு எளிய வாழ்க்கை; உயர்ந்த குணங்கள்"
" கடவுளை மட்டும் நேரில் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தத் துறவி நூறாண்டு காலம் வாழவேண்டும் என்று பிரார்த்திப்பேன்"
" மனிதர்களிடம் மட்டுமா இவருக்கு அன்பு, பறவைகள், விலங்குகளிடம் கூட என்ன கரிசனம்; எந்த ஒரு உயிரையும் கூட இளப்பமாக எண்ணமாட்டார்"
" எல்லோரும் கடவுளின் குழந்தைகள்தான் என்று என்ன பரந்த உணர்வு"
திரைமறைவில் நின்று மக்கள் பேசுவதைக் கேட்ட மாயனுக்கு துறவியின் மேன்மையும், மக்களின் பேச்சுக்களும் மனதில் தைத்தது. இதுவரை அவன் மனிதர்களது பேச்சை அருகில் கேட்டதில்லை ; அவன் ஊருக்குள் காலடி வைத்தால் எல்லோரும் பயந்து ஓட, கையில் அகப்படுபவர்களை அலற அலற தூக்கிக்கொண்டு குகைக்குள் சென்று தின்பது.
மாயனுக்கு தான் எவ்வளவு பெரிய தவறு செய்கிறோம் என்பது மனதோரத்தில் தோன்றியது. இத்துணை நல்லவரை நாளை தின்பதாவது.
" உம் என்ன செய்வது எனக்கு மட்டும் இந்த துறவி போல சக்தி இருந்தால் நம் ஊருக்கு பக்கத்துக் காட்டில் புதிதாக நுழைந்துள்ள அந்த மாயன் அரக்கனை ஒரு நொடியில் அழித்தோ அல்லது நாய் பூனை என்று வேறு உருவத்திற்கோ மாற்றி இருப்பேன்; அவர் அவனைக்கூட கொல்லாமல் திருத்தியிருப்பார்; பார்த்துக்கொண்டேயிரு; அவர் பெரிய மகான்.,"
" என் அருமை தம்பியைத் தின்று விட்டான்" இது ஒருவர்
"உயிருக்குரிரான என் தாயையும் தின்று விட்டான்"
"என் அண்டை வீட்டாரின் குழந்தைகள் இன்று பெற்றோரின்றி இருக்கின்றன; அவந்தான் தன் பசிக்கு அவர்களை இரையாக்கிவிட்டானே,".
" வாயில்லாத சீவன்களான என் பசுக்களும் ஆடுகளும் அவனுக்கு சென்ற வாரம் பலியாகிவிட்டன"
"ஒரு உயிரைக் கொல்கிறானே ஒரு உயிரை அவனால் உண்டாக்க முடியுமா? இதைச் செவிமடுத்த மாயன் உண்மையாகவே திடுக்கிட்டுப் போனான்; ஆம் மனிதர்களையும் மாக்களையும் தின்கிறேனே இவற்றில் எதாவது ஒரு உயிரை என்னால் உண்டாக்க இயலுமா?
மாயனுக்கு பெருத்த அவமானம் ஆகிவிட்டது. இதுநாள்வரை தன்னை எவ்வளவு பெரிய வீரன் என்று மக்கள் அச்சத்தோடு வியந்துகொண்டிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தவன், அவர்கள் அனைவரும் பேசியதைக் கேட்டு வெட்கித் தலை குனிந்தான்; அவர்கள் அனைவரும் சென்ற பிறகு நேராக துறவியின் கால்களில் வீழ்ந்தான்.
"சுவாமி, என் உயிரைப் பறித்துவிடுங்கள்; நான் மகாபாவம் செய்துவிட்டேன்; பலரின் இன்பமான குடும்பத்தையும் அப்பாவி விலங்குகளையும் என் பேராசையால் அழித்துவிட்டேன்; திரைமறைவில் மக்களிடம் நீங்கள் பேசுவதையும், பின்னர் அவர்கள் தங்களுக்குள் அளவளாவுவதைக் கேட்டு விட்டேன்; எத்தனை மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள்; உங்களைப் போய் தின்ன வேண்டும் என்று நினைத்தேனே," கண்ணீரோடு அழுதான்.
துறவி அமைதியுடன் "உன் நேரம் முடிய இன்னும் ஒரு நாழிகை இருக்கிறது மகனே" என்றார் அதே புன்னகையுடன்.
"ஆம் சுவாமி அதற்குள் என்னை மனித உருவிற்கு மாற்றிவிடுங்கள்; இந்த உருவத்தில் நான் சென்றால் மனிதர்களும் குழந்தைகளும் அஞ்சுவார்கள்; நான் செய்த பாவத்திற்கு நான் என் உழைப்பின் மூலம் பிராயசித்தம் செய்துகொள்ள வேண்டும்"
துறவி சொன்ன சொல் தவறாதவர், அவர் உடனே மாயனை மாற்றிவிடவில்லை, அந்த ஒரு நாழிகை நேரம் முடியக் காத்திருந்துவிட்டு பின் மாயனை மனித உருவாக்கினார்.
அன்று முதல் மாயன் மனிதநேயம் மிக்க ஒரு சிறந்த உழைப்பாளியாக மாறினான்.

oooOOOooo

கோகுலம் - செப்டம்பர் 2005

4 comments:

பரஞ்சோதி said...

அருமையான கதை மாதங்கி.

சிறுவர் கதைகளில் கடைசியில் தவறு செய்தவர்கள் திருந்துவது தான் சிறப்பு.

மாதங்கி said...

Thankyou Mr. Paranjothi. This is my first siruvar kathai.

கலை said...

மாதங்கி அன்ரி! இந்த கதை அம்மா எங்கேயோ வாசித்து விட்டு எனக்கு சொல்லியிருந்தா. உங்களுடைய பதிவிலிருந்தா தெரியவில்லை.

மாதங்கி said...

அன்பு அஞ்சலி, இது நான் எழுதிய கதை. கோகுலம் என்ற தமிழ்ப் பத்திரிகையில் செப்டம்பர் மாதம் பிரசுரிக்கப்பட்டது.