Friday, November 11, 2005

55 fiction - 2

முதல் மதிப்பெண்


பள்ளிப்பையை வைத்தவுடன் அம்மா "மார்க் கொடுத்தாச்சா" என்று கேட்டாள். எல்லா பாடத்திலும் நூறு. பாட்டுப்போட்டி, ஓட்டப்பந்தயத்தில் மெடல். அப்பாவும் நீங்களும் ரூமில் பூட்டி தினம் அடிக்க மாட்டீர்களே, நான் விளையாட போகலாமா என்றான். சரி என்று அம்மா சொன்னதும் ஓடினான். கதவைத் தாளிட்டு, ஒளித்து வைத்திருந்த கருவியில், பிரபு, நீ அங்கேயே இரு, இங்கு என் போல் ஒரு ரோபோ போதும்" என்று மாணவ ரகசிய பரிமாற்று திட்டத்தில் செவ்வாய் கிரகத்தில் இருந்த நண்பனுக்கு தகவல் அனுப்பினான்.

Wednesday, November 09, 2005

55 fiction-1

சின்னஞ்சிறுகதை- 55 வார்த்தைகளில்

ஆணா? பெண்ணா?

அரசாங்க ஆஸ்பத்திரியின் பிரசவ வார்ட். வெங்கடராமனும் ஜெயாவும் வாயிலில் கவலையோடு உட்கார்ந்திருந்தார்கள். கடவுளே, இந்த பிரசவத்திலாவது சம்பந்திகள் விருப்பப்படி குழந்தை பிறக்க வேண்டும். அப்போதுதான் புகுந்த வீட்டுக்கு குழந்தையுடன் அழைத்துச் செல்வார்களாம். இல்லாவிட்டால் பிறந்த வீட்டிலேயே இருக்க வேண்டுமாம். சே, என்ன மனிதர்கள். அப்போது, அம்மா " என்ற அலறல் தொடர்ந்து குவா குவா சத்தம். குழந்தை சுத்தம் செய்யப்பட்டு எடுத்துவரப்பட்டது. "மீண்டும் ஆண் குழந்தை நான் என்னம்மா செய்வேன்" படுக்கையில் இருந்த மகன் சீனு ஓவென்று அழுதான்.

Saturday, November 05, 2005

ஒரு காலை வேளையில்

காலை வேளையில்
காப்பி போட்டு
குழந்தைகளை எழுப்பி
குளிக்க வைத்து
கருத்தாய்ச் செய்த சிற்றுண்டியை
சிரிப்புக் கதையுடன் ஊட்டி
தானும் உண்டு
சீருடை அணிவித்து
பள்ளிக்கு அனுப்பி
இரவு ஷிப்டின் அயர்வுடன்
இல்லம் வந்த வாழ்க்கைத் துணைக்கு
வரவேற்பு கொடுத்து
கண்ணயரச் சொல்லிவிட்டு
கடமைக்குக் கிளம்புகிறான்
கண்ணியம் மிக்க
கணவன் ஒருவன்.

வெடிக்காத பட்டாசுகள்

பாமரனுக்கும்

புரியாமல்

படித்தவனுக்கும்

புரியாமல்

பண்டிதனுக்கும்

புரியாமல்

படைத்தவனுக்கு

மட்டுமே

புரியும்

கவிதைகள்

வெடிக்காத

பட்டாசுகள்