Thursday, December 07, 2006

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி

உற்சாகம் கொப்பளிக்கும் முகம்

உழைப்பு என்றால் எனக்கு வெல்லம்
பெண்ணுக்குத் தலை பின்னிவிடுவேன்
சமையல் செய்வேன்

பள்ளிக்கூடத்தில் பாடம் எடுப்பேன்
ரங்கோலி போட்டியில் இந்த ஆண்டும்முதல் பரிசு


பாட்டுகூட கற்றுக்கொள்கிறேன்
ஞாயிற்றுக்கிழமைகளில்

ஒரு முறை
தவறவிட்டக் கேமராவை

சுற்றுலாப்பயணி
ஓடி வந்து
கொடுத்திருக்கிறார்

மறந்துவிட்ட பர்ஸை
ஆட்டோ ஓட்டுனர்
வீடுதேடி வந்து
கொடுத்துவிட்டார்


ஒரு பொருளைக் கூட
இதுவரைத்தொலைத்ததில்லை

பத்தாண்டுகளுக்கு முன்
விபத்தில் இழந்த
என் இடது கையைத் தவிர


Wednesday, September 13, 2006

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?-55 fiction

தமிழ்ச்செல்வன் மனதை நிதானப்படுத்திக்கொண்டான். இப்படி ஆள்அரவம் இல்லாத இடத்தில் வாகனம் ரிப்பேர் ஆகி மாட்டிக்கொண்டாகிவிட்டது. தகவல்தொடர்பு சாதனம் வேலை செய்யவில்லை.

இவ்வளவு பொறுத்தது பெரிசுதான், உணவுதான் இல்லை என்றாகிவிட்டது, மூச்சாவது விட முடிகிறதே, , இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யலாம், வண்டிக்குள்ளேயே இருந்தால் யாராவது பார்க்கமாட்டார்களா?

ஏதோ சத்தம் கேட்டது.

இருவர் அவன் வாகனத்தைப் பார்த்துவிட்டு தங்களுடைய சைக்கிளை நிறுத்திவிட்டு அவனை நோக்கி வந்தார்கள்.

"கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" கேட்டான்.

அந்த வேற்று கிரகவாசிகள் பதில் சொல்லவில்லை; புன்னகைத்தார்கள்.




Wednesday, September 06, 2006

முகவரிகள் தொலைவதில்லை

பெருவிரைவு ரயிலில்
அரை மணி நேரப்
பயணம்;

பரிச்சயம் செய்துகொண்ட
பக்கத்து இருக்கை பெண்மணி
வங்கி அலுவலராம்;

குழந்தைகள்,புத்தகம்
பேச்சு நீண்டது

ஷெண்டன்வே பக்கம்

வந்தால் வங்கிக்கு
வரவேண்டும்விடைபெற்றார்.


ஆறு மாதம்
கழித்து வேறு
வேலையாக அந்தப்
பக்கம் சென்றபோது
வங்கியில் நுழைந்தேன்
உணவு இடைவேளையில்

அந்நியமான பார்வை கண்டு
வழித்துணையாய்
வந்ததை நினைவுபடுத்தியபோதும்

என்னைத் தெரியாமல் போனது
அவருக்கு
இப்ப இங்க வேலை எதுவும்
காலி இல்லை மெல்லிய
புன்னகையோடு சொன்னார்

அதன் பின்
எத்தனையோ பயணங்கள்
என்றாலும் வழித்துணையாய்
வருபவர் முகவரி கொடுத்தால்
வாங்கிக்கொள்ளத்தான் செய்கிறேன்

உயிர்மை 2006 ஆகஸ்ட்



Thursday, August 31, 2006

ஔவை- யார்

சரித்திரத்தின் முதல் ஔவை
சங்ககால ஔவை மூவேந்தரும்
பெரியராய்க் கருதிப் போற்றிட
புறம்அகம் நற்றிணை குறுந்தொகை
அரிய பாடல்களால் சங்கத்தில்
அங்கம் வகித்த பாடினி
தெரிமுகமும் தேவையோ கிமுவில்
தோன்றிய தென்ற லுக்கு


தாமம் தரித்த ஆயுதங்களை
தாமத்துடன் நிறுத்தி வைத்து
யாமே என்று இருமாப்புடன்
எண்ணி இருந்தான் தொண்டைமான்


தொண்டைமானின் செருக்கை அங்கதத்தால்
துண்டாக்கியவர் மழவரின் தூதரானார்
அண்டத்தில் இணக்கம் உண்டானால்
அகிலத்தில் அமைதிஉரு வாகுமென்ற
திண்ணமுடன் பேச்சு தெவிட்டாத
தமிழ்ப்பாட்டு அவர்தம் மூச்சு
வண்ணம் கொண்ட அரியகனி
வெகுமதிக்கு அதியனின் வெகுமதி


வம்பிற்கு வாய்ப்பூட்டினாய்- உன்னை
நம்பியோருக்கும் நல்ல வாய்ப்பு ஊட்டினாய்
நலமறிய நீ நினைத்ததில்லை
மக்களின்நலம் அறியவே நடையாய் நடந்தாய்



நன்னிலை நல்கிய பன்னிரெண்டாம்
நூற்றாண்டின் நலமிகு ஔவையே
மன்னுலகில் யோகத்தில் நிபுணை
மறைதிரு சமயகால ஔவை
பின்னையவள் துதிபாடி அற்புதமாய்
பொன்முடிப்பு இற்றதன் மாயமென்ன
மன்னவன்வியக் கநான்குகோடிபண் பாடிஇரவு
முழுதும் பண்பழகிய பண்பழகி


ஒருகாலில் நாலிலைப்பந் தலடிஎன
உன்னைச் சோதிக்க புதிர்போட
திருமுகம் மலர ஆண்கவியிடம்
சருக்காமல் ஆரையடா சொன்னாய்
சுருக்கமாய் விடுகவிக்கு விடைகூறி
சங்கைத் தீர்த்த அன்பருளே
அருந்தமிழில் அசதிக் கோவையும்
அழகுபந்தன் அந்தாதியும் தந்திட்டாய்


வரும் இன்னலைத்
தீர்க்கவந்தமின்னலே

அன்பருளே


அன்பர் உளே உறையும்

இறைவன் ஒருவனுக்கே
தலைவணங்கி நீ பாடிய
அகவலால்சேரமானுக்கு முன்பே
வேழமுகத்தோனின் ஒருகையால்
கைலாயத்தைமுதலில்
அடைந்ததத்துவஞானியே



தமிழ்பால் கொண்டமுனைப்பால் தன்பால் அன்பால் கட்டுண்டமானிடர்பால் கொண்டதவிப்பால் உருவானமுப்பால் தன்பால் வீட்டுநெறிப்பால் திருவருட்பால் என ஞானப்பால் அருளியஔவைக்குறளைப் படித்தால் புருவங்கள்உயரும் திகைப்பால் யோகத்தின்பால் பெண்களின்அறிவைக் கண்ட களிப்பால் வந்த வியப்பால்





ஒருவனையே வணங்கி
இருவகை அறத்தையே உரைத்து
முக்குற்றம் நீங்க வழி நடத்தி
நானிலம் போற்றஐந்திலக்கணம் அமைய கவிபாடி
அறுவர் உடன் பிறந்த ஐயயே
எழுபிறப்பையும் பாடியுள்ளாய்
எண்வகை யோகங்களை ஏற்றிவைத்தாய்
நவரசம் பொங்க நற்றமிழில் பாடி
பத்துகுற்றம் நீக்கி
பத்தழகு மிளிர பாட்டெழுதி
நூற்றுக்கு ஒருவரேஅவையில் இருக்கத்தக்கவர்
ஆயிரத்தில் ஒருவரேபுலமையுடையவர்
பத்தாயிரத்தில் ஒருவரே வாக்குவன்மையும்பெற்றிருப்பவர் கொடைவள்ளலோகோடியில் ஒருவரே என்று

கம்பரையும்
புகழேந்தியையும்
ஒட்டக்கூத்தரையும்
செயங்கொண்டாரையும்
மன்னரையும்
வைத்துக்கொண்டே
உன்னைத் தவிர வேறு யாரால் கூற இயலும்?



பதியனாய்ப்பிள்ளைகள் மனதில்பதிந்தவர்பதினாறாம் நூற்றாண்டின்புதிய ஔவை


நாவாய்போல் நயமிகு பாக்களைக் நன்றாய்க் கரைசேர்த்தே மக்களிடம்நாவாயை ஆளவும் வேண்டினாய்



தையல் சொல் கேளேல்
தையல் சொல் கேட்காதே என்று தாங்கள்கூறவில்லை
கேள் ஏல் என்றீர்கள்ஏல் என்றால் ஏற்றுக்கொள்வதுஎன்ற நீங்கள் சொல்லியதைநாங்கள் புரிந்துகொள்கிறோம்

வித்தை நன்றாய்விதைத்திட்டால்
வித்தை பலவும்கற்றிடலாம் என்றேஆத்திச்சூடி
கொன்றைவேந்தன்
மூதுரை
நல்வழி என்று நல்வழிகாட்டியநாயகியே


ஆழ அமுக்கி முகக்கினும்
ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி
என்று நீங்கள் கூறியதை
நாங்கள் உலகுக்குஅறிவிக்காததால்
இன்று இதே இயற்பியல்தத்துவத்தை
பின்னாளில்
வேறொருவர் கண்டுபிடித்ததாகப்
படித்துக்கொண்டு வருகிறோம்


ஔவையேஎங்களைமன்னித்துவிடுக
நீ குறித்ததசம எண்களையும்நாங்கள் விட்டுவிட்டோம்வேறொருவருக்குவிட்டுவிட்டோம்

இருக்கையைத் தேடாமல்இருகைவீசிநடைபயின்றாய்
உடலையும்
உள்ளத்தையும்
ஊரையும் காக்க
உன் கருத்துக்களைக்
காதுகொடுத்துகேட்டாலே போதும்


கேளுங்கள் எப்போதும்.

ஔவைஎன்றபெயரில்ஒவ்வொரு காலகட்டத்திலும்எத்துணைஔவையர்
அத்தனைஔவையருக்கும்

மொத்தமாய்வணக்கங்கள்

வெண்பா

கரணம் துணங்கை கழல்நிலை பாவை
குரவை உவகை கபாலம்- கருங்கூத்தாம்
ஈர்த்திடும் கூத்துக்கள் ஏற்றம் அடைந்திடச்
சீர்தூக்கிச் செய்க சிறப்பு

அமுதசுரபி 2006

Monday, August 28, 2006

பலி - நாடகம்

திரை விலகுகிறது

இடம்: பேரரசி கைகேயி பெண்கள் கலாசாலை

பொழுது: பகல் பொழுது.

பாத்திரங்கள்:

பேரரசி கைகேயி, கலாசாலை தலைமையாசிரியர் மற்றும் மேலாண்மைக்குழுவினர்.

காட்சி ஒன்று


கலாசாலையின் நடவடிக்கைகள் முழுதும் ஆராய்ந்து முடித்து திருப்தியுறுகிறாள் கைகேயி.

கைகேயி: "பெண்களுக்கு வாள், வேல்பயிற்சி, தேரோட்டுதல் முதலிய வீர கலைகளை கற்பிக்கும் இக்கலைகோவிலுக்கு பெயரில் மட்டும் மாற்றம் தேவை; இராமன் என்று மாற்றி விடுங்கள்"


மேலாண்மைக் குழுவினர்: "அப்படியே செய்கிறோம் தாயே"

கைகேயி: "நல்லது, மான்யங்கள் தொடர்ந்து வரும்"

கம்பீரத்துடன் தன் ரதத்தில் ஏறி புறப்படுகிறாள் கேகயன் தனயை.


காட்சி இரண்டு

இடம்: அரண்மனை அந்தப்புரம்

பொழுது : பிற்பகல்பாத்திரங்கள்: கைகேயி, மந்தரை

கைகேயியின் அந்தபுரத்தில் அந்தரங்க அறை வாயிலில் மந்தரை நின்றுகொண்டிருக்கிறாள்.

அந்தபுர வாயிலில் தயாராக காத்துக்கொண்டிருந்த சாரதியிடன் ரதத்தை ஒப்படைத்துவிட்டு கைகேயி வருகிறாள்.


கைகேயி: "இப்படியே எத்தனை நேரமாக நின்று கொண்டிருக்கிறாய்; அப்படி என்ன தலை போகிற செய்தி, உன் உடம்பை ஏன் வருத்திக்கொள்கிறாய் மந்தரை?'



மந்தரை: {பதட்டத்துடன்} "தலை போகிற செய்திதான் கண்ணே"


அந்தரங்க அறைக் கதவு சார்த்தப்படுகிறது.கைகேயியும் மந்தரையும் தனிமையில் இருக்கிறார்கள்.
பொன்னாலாகிய அழகிய இரு பதுமைகள் விளக்கு ஏந்தியவாறு நிற்க, மந்திரை உதவியுடன் விளக்குகளை ஏற்றிவிட்டு, வேலைப்பாடுகள் மிகுந்த அழகிய இருக்கையில் அமர்கிறாள்.


கைகேயி: "இப்போது சொல் மந்திரை"

மந்தரை: "கண்மணி, இராமனுக்கு நாளை பட்டாபிஷேகமாம்"

கைகேயி: "மந்தரை என்ன உளறுகிறாய்?"

மந்தரை: "உண்மைதான் மகளே, திடீரென்று இன்று மதியம் அரசவையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது"

கைகேயி: "தசரத சக்ரவர்த்தி என்னைக் கலந்தாலோசிக்காமல் எந்த புதிய அரசாங்க காரியம் நடந்ததில்லையே"

மந்தரை: "கடந்த ஒரு மாதகாலமாக உன்னிடம், மன்னனிடன் சொல்லிவிடு என்று நச்சரித்து கொண்டே இருந்தேன்; உடனே அவசர ஆலோசனை செய்து இந்த வைபவத்தை நிறுத்து".


கைகேயி: "இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக் கூடாது என்பதற்காகத்தானே நல்லதோர் சந்தர்ப்பத்தில் மன்னரிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று காத்திருந்தேன், மந்தரை;"


மந்தரை: "சரயூ நதிக்கரை சோதிடர் கூறிய செய்திகளை மீண்டும் நினைவு கூரவா மகளே?"


கைகேயி: "வேண்டாம், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; குழந்தை இராமனின் ஜாதகம் மிக அற்புதமானது; தெய்வீகமுடையது. சித்திரை மாதம் நவமி திதி, புனர்வஸ¤ நட்சத்திரம். சூரியன், குரு, சுக்ரன், அங்காரகன், சனீஸ்வரன் என்று ஐந்து கிரகங்கள் உச்சம் கடகத்தில் சந்திரன் சுவட்சேத்திரம். ஒரு கிரகம் உச்சத்தில் இருக்கையில் பிறந்தவன் எல்லா ஆபத்துகளையும் அழிக்கிறான்; இரண்டு கிரகம் உச்சத்தில் பிறந்தவன் சிற்றரசன்; மூன்று கிரகம் உச்சத்தில் பிறந்தவன் அரசன்; ஐந்து கிரகம் உச்சத்தில் இருக்கையில் பிறப்பது அபூர்வம். சக்ரவர்த்திகளுக்குகெல்லாம் மேற்பட்டவன்; உலகநாயகன்; உலகிலேயே முதன்மையானவன்; அனைவரது அன்பையும் பெற்றவன், பொறுமைசாலி, தேவர்களும் போற்றும் இயல்பினன், அரிய பெரிய சாதனைகள் படைக்க அவதரித்தவன்,......."..



மந்தரை: "எல்லாமே உண்மை; இதையே எத்தனை முறை சொன்னாலும் உனக்குத் திகட்டாது மகளே; ஆனால் இறுதியில் அவர் விடுத்த எச்சரிக்கை?"




கைகேயி: "ஆம், மந்தரை இப்போது அயோத்தி மாநகரத்திற்கு நேரம் சரியில்லை; அயோத்தியின் அரசருக்கு உயிருக்கு ஆபத்து; அதை இறைவன் அருளால் வென்றாலும் இன்னும் ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகள் அயோத்தியின் மன்னராக இருப்பவர் யாராக இருந்தாலும் துறவியாகத் தான் இருப்பார்; என் மனதுக்கினிய மன்னரை லௌகீகபாதையிலிருந்து திருப்பி நம் ஜனக மன்னரைப் போல் ராஜரிஷியாக மாற்றவேண்டும். விதியை மதியால் வென்று விடலாம் என்று நினைத்தேனே"



மந்தரை: "இப்போது ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை எப்படியாவது இந்த வைபவத்தை நிறுத்த வேண்டும்".




கைகேயி பதில் கூறாது தன் அறையில் வரிசையாக ஓவியரால் வரையப்பட்ட இராமனின் சிறுவயது லீலைகள், சாதனைகள் ஓவியமாக வரையப்பட்டிருந்ததைக் கண்களால் பருகினாள் ; அடுத்து தானே வரைந்த ஓவியச் சுருளை ரகசியப் பேழையிலிருந்து எடுத்துப் பார்த்தாள்
இதோ ஸ்ரீராமன் பட்டாபிஷேக கோலத்தில். அருமை மகள் ஜானகியுடன்; அவளே எழுதியது;



கைகேயி: "என் கனவு நனவாக இன்னும் பல ருதுக்கள் உள்ளன மந்தரா"

கைகேயியை பரிவுடன் ஏறிட்டாள் மந்தரை.



கைகேயி: "மந்தரா நான் சிறிது நேரம் த்யானம் செய்கிறேன்; நீ இங்கேயே இரு".



கைகேயி அந்தரங்க அறையின் மறுபக்கத்தில் மறைவாக சென்று அமர்கிறாள்.



மந்தரைக்கு இருப்பு கொள்ளவில்லை; அங்குமிங்கும் நடக்கிறாள்.
தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள்:


" மன்னர் மேல் அளவு கடந்த அன்பு இந்த கைகேயிக்கு; குடும்ப வாழ்வோ, குழந்தை வளர்ப்போ, ஆன்மீகமோ, தேச பரிபாலனமோ, அரசியல் சதுரங்கமோ போரில் வீரமோ கைகேயிக்கு நிகரில்லை. தலைசிறந்து விளங்கும் இந்த குழந்தைக்கு எதையும் தாங்கும் இருதயத்தையும் நீண்ட ஆயுளையும் நீ தரவேண்டும், இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி வேண்டிக்கொள்கிறாள்.
"இந்தச் சிறுவன் இராமனுக்கு பெரிய சோதனைகள் காத்திருக்கின்றன. சரயூ நதிக்கரை சோதிடர், ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். அயோத்தியின் அரசராக இருப்பவருக்கு பெரிய கண்டம் இருக்கிறது. ஒரு துறவிதான் பதினான்கு வருடங்கள் அயோத்தியை ஆளப்போகிறார். இராமன் இப்பூவுலகையே ஆளுவான். அதில் எந்த வித ஐயமில்லை ஆனால் அதற்கு இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
கடவுளே யார் அந்தத் துறவி? வசிஷ்டரா? அவர் எந்த அரசாங்க காரியத்திலும் தலையிடுவதில்லையே; ஒரு வேளை சுமந்திரரா? இல்லை திடீரென்று விஸ்வாமித்திரர் ராமனையும் இலட்சுமணனையும் காட்டுக்கு என்னுடன் அனுப்பு என்று சிறு குழந்தைகளை கூட்டிச் சென்றது போல், வேறு ஏதேனும் துறவி தீடீரென்று
எனக்கு உன் ராஜ்ஜியத்தைத் தா நான்தான் இனி அயோத்தியின் அரசன் என்று தானம் கேட்பார்களோ.சரி, இந்த அரசருக்கு அரண்மனை ஜோதிடரோ, இல்லை அடிக்கடி ஆசீர்வதிக்கும் எல்லாம் அறிந்த துறவிகளோ ஏதும் சொல்லமாட்டார்களா? விதி அவர்கள் கண்ணை மறைத்துவிட்டதா? தலை சுற்றியது மந்தரைக்கு.



கைகேயி தெளிவுடன் வந்து தன் இருக்கையில் அமர்கிறாள். மந்தரை ஒரு காலை ஒருக்களித்தவாறு தன் கம்பளி ஆசனத்தில் அமர்ந்துகொள்கிறாள்.


கைகேயி: "மந்தரை, சம்பாசுர யுத்தத்தில் நான் செய்திட்ட உதவிக்கு மன்னர் எனக்கு இரு வரங்களை அளித்தார். நினைவிருக்கிறதா?



மந்தரை: "இருக்கிறது தாயே ஆனால் நீதானே எனக்கு எந்த குறையுமில்லை; அதனால் வரங்கள் இப்போது தேவையில்லை என்று கூறிவிட்டாயே".


கைகேயி: "ஆம் மந்தரை; இப்போது என் மகன் இராமனைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக நான் அந்த வரங்களை அளிக்குமாறு மன்னரிடம் வேண்டப்போகிறேன்;
"ஒன்று- எனக்கு முடிசூட்டி நான் பேரரசியாக்கிவிடவேண்டும். அப்போது அரசருக்கு உயிர்பலி என்பதால் நான் ஜோதிடர் கூற்றுப்படி இறந்துவிடுவேன்.இரண்டு- ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குப் போகவேண்டும். ஆரண்யத்தில் அரசனாகவும் இருப்பான். தசரதரும் அவரின் உயிருக்கு உயிரான மனைவியாக நான் இறந்துவிடுவதால் மனதளவில் துறவறம் பூண்டு விடுவார். இராமன் வரும்வரை அவரே ஆளட்டும். என்ன சொல்கிறாய் மந்தரை?".



மந்தரை: "இரண்டாவது வரம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். ஏனெனில் உன் முதல் வரத்தால் நீயே மன்னரின் உயிருக்கு உலை வைத்துவிடுவாய்; உனக்கோ இராமனுக்கோ உயிருக்கு ஆபத்து என்றால் முதலில் உயிரைத் துறப்பார் மன்னர்; நாட்டில் குழப்பம் ஏற்படும். இராமனுக்கு உடனே முடிசூட்டிவிடுவார்கள். அவன் துறவு வாழ்க்கை வாழ்வான். இது சரி வராது வரத்தை மாற்று ; நீ பேரரசியாக ஆனாலும் பின்விளவுகளை நீ எதிர்பார்த்தபடி நடக்காது".




கைகேயி: "சரி அப்போது இப்படி வைத்துக்கொள்கிறேன்; பரதன் நாட்டை ஆள வேண்டும்; இராமன் காட்டிற்கு போக வேண்டும்".



ஆசனத்திலிருந்து மந்தரை திடுக்கிட்டு எழுந்துகொள்கிறாள்.


மந்தரை: "கைகேயி, உனக்கென்ன பைத்தியமா. பரதனின் உயிரை பணயம் வைக்கிறாயே"


கைகேயி: "ஆம் பைத்தியம்தான் மந்தரை; என் மூத்த மகன் இராமன் தீர்காயுளோடு இருக்கவேண்டும். அவனது பிறப்பின் குறிக்கோளை வருங்காலத்தில் நிறைவேற்ற வேண்டும். பூவுலகில் அநீதி பெருகி அழிந்துவிடாதிருக்க என்றால் என் இளைய மகனை பலி கொடுக்கத்தான் வேண்டும்"


.
மந்தரை: "கைகேயி! அப்பாவி பரதன் உயிரை பணயம் வைக்கிறாயே உனக்கு புத்தி பேதலித்துவிட்டதா?. பெற்ற மகனை பாழும் கிணற்றில் தள்ளுகிறாய்"



கைகேயி: "பெற்ற மகனைக் காட்டிலும் எனக்கு உற்ற மகன் இராமன் என்பதை உலகே அறியும் மந்திரை".


மந்தரை: "தெரியுமடி என் கண்ணே".


கைகேயி: "இதுதான் சரியான முடிவு மந்திரை இல்லையென்றால் இராமன் காட்டுக்கு போனால் அடுத்து இருப்பவரின் மூத்தவன், இலக்குவன், அவனே முடிசூடத்தகுந்தவன் என்ற வந்துவிடக்கூடாது; அந்தக்குழந்தையும் தீர்காயுளோடு இருக்க வேண்டும்".


மந்தரை: "நீ இராமனுக்காக உயிரையும் கொடுப்பாய் என்று நான் அறிவேன் ; ஆனால் உன் உயிரினும் மேலான உன் குழந்தையின் உயிரையும் பறித்துக்கொடுப்பாய் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை; அயோத்திக்கு உன்னுடன் வந்ததுமுதல் நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உன் புத்திர பாசத்தை எந்த எல்லையைத் தொடும் என்பதை இன்று அறிகிறேன்".



கைகேயி: "மந்தரை நேர அவகாசம் குறைவாக இருக்கிறது; விரைவில் அரசரை இங்கு வரவழைத்து வரங்களைக் கேட்டுவிடவேண்டும்".



மந்தரை: "கைகேயி உலகில் எந்தத் தாயும் செய்யத் துணியாத தியாகத்தை செய்யப்போகிறாய். ஆனால் உன்னை வளர்த்த அன்னை என்ற முறையில் சொல்கிறேன். உன் தியாகத்தை உலகம் மெச்சாது".





கைகேயி: "மெச்ச வேண்டாம்"


மந்தரை: "உன்னைத் தூற்றும்"


கைகேயி: "தூற்றட்டும்".


மந்தரை: "சான்று கூற சரயூநதிக்கரை ஜோதிடர் இல்லை; பின் விளைவுகளை எண்ணி நதியில் சங்கமமாகி விட்டார்".


கைகேயி: "சாட்சி தேவையில்லை"


மந்தரை: "நானே போய் ஜோதிடர் கூற்றை மன்னரிடம் உன்னை மீறிச் சொல்லிவிட்டால்?"


கைகேயி: "என் மணாளர் உடனே உயிர் துறப்பார்".


மந்தரை: "சுயநலத்துடன் உன் புதல்வனை அரசனாக்கினாய்; சாமர்த்தியமாக வரங்களை தக்க சமயத்தில் பயன்படுத்தினாய் என்று உலகம் பழி சுமத்தும்".


கைகேயி: "பழிசொல்லட்டும்; மந்தரை: "நீ இதுவரை இராமன் இராமன் என்று கொட்டிய பாசம் பொய் என்று உன் தாய்ப்பாசத்திற்கு மாசு கற்பிக்கும்".


கைகேயி: "கற்பிக்கட்டுமே; நான் அஞ்சா நெஞ்சத்தினள் மந்தரை; முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்".


மந்தரை: "கணவனின் அன்பை தவறாகப் பயன் படுத்தினாள் என்றும், கணவனுக்கு இவள் சதி செய்தாலும் செய்வாள் என்று சொல்லும் ".


கைகேயி: "சொல்லட்டுமே;


மந்தரை: "பதினான்கு ஆண்டுகள் கழித்து இராமன் அரசனானபிறகும் கூட இந்த உலகம் உன் தியாகத்தை அறியாது தூற்றுவதை நிறுத்தாது".


கைகேயி: "நிறுத்தவேண்டாம்; என் ஆயுள் முழுக்க அத்தனை தூற்றுமொழிகளையும் கேட்கத் தயாராக உள்ளேன்".


மந்தரை கண்களில் கண்ணீர் பெருகுகிறது; துடைத்துக்கொள்கிறாள்.


கைகேயி: "வைரநெஞ்சம் கொண்ட நீயா அழுகிறாய் மந்தரை?"


மந்தரை: "நீதான் தீரநெஞ்சுடையவள் கண்ணே; அதுதான் துணிவுடன் முடிவுகள் எடுக்கிறாய்""இந்த யுகமட்டுமல்ல கைகேயி, அடுத்துவரும் துவாபர யுகம், கலியுகம் எல்லாம் உன்னைக் கொடியவள், சூனியக்காரி, பாபி என்று சொல்லும். சின்னக்குழந்தைக்கூட உன்னைப் பொல்லாதவள் என்று சொல்லும்".



கைகேயி: " என் மீது கொண்ட அன்பு ஒன்றன் காரணமாகவே நீ சூனியக்காரி, பழிகாரி என்ற பட்டம் சுமக்கப்போகிறேயே".


மந்தரை: "கையேயி"


கைகேயி: "ஆமாம் என் அருமைத் தாயே நீ என்னைக் காண அவசரமாக வந்ததையும் நாம் கதவுகளைத் தாழிட்டுக்கொண்டதையும் வெளியே காத்திருக்கும் சேடியர், காவல் மகளிர் அனைவரும் அறிவார். நீ தவறாகச் சொல்லிக்கொடுத்துதான் நான் மதிகெட்டுப் போனேன் என்ற பழியும் உன்னை வந்து அடையப் போகிறது;



மந்தரை: "எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை என்னைப் பொருத்தவரை நீ நினைத்தது நடக்கவேண்டும். நான் சற்று வெடுக்வெடுக் என்று பேசுவதால் என்னுடன் யாரும் அதிகம் வைத்துக்கொள்ளமாட்டார்கள்".


கைகேயி: "மந்தரா, இன்னொன்று, குழந்தைகள் விளையாடும்போது தெரியாமல் உண்டைகள் பட்டால் நீ இரு இரு உன்னை வேட்டு வைக்கிறேன் என்று மிரட்டுவாயே".



மந்தரை: "சீச்சீ அது சும்மா ஒரு மிரட்டு போடுவேனே தவிர, என் மனதில் வேறு எந்த எண்ணமும் கிடையாது உனக்குத்தான் என் சுபாவம் தெரியுமே கைகேயி".


கைகேயி: "அதையெல்லாம் மக்கள் வருங்காலத்தில் நினைவுகூர்ந்து நீ சதி செய்து விட்டாய் என்ற பழி ஏற்படுத்துவார்கள்".


மந்தரை: "நீ இராமனுக்காக பழி சுமக்கப் போகிறாய்; நான் உனக்காக சுமந்துவிட்டுப் போகிறேன்".


கைகேயி அவசரமாக ஒரு ஓலை நறுக்கில் எழுதி அதன் பேழையில் வைத்து அரக்கால் மூடியை இறுக்க மூடி மந்திரையிடம் கொடுக்கிறாள்.



கைகேயி: "மந்தரை இந்த ஓலையை உடனே சேவகரிடம் கொடுத்து மன்னரிடம் சேர்ப்பிக்கச் சொல்லு அவரை இங்கு வரச்சொல்லி எழுதியிருக்கிறேன்".



மந்தரை வணங்கி விடைபெறுகிறாள்.


கைகேயி தனக்குள் பேசிக்கொள்கிறாள்:



" சிறுவயதில் ராமன் விஸ்வாமித்திரருடன் காட்டுக்கு தம்பியுடன்
போனபோது கூட நான் கலங்கவில்லை; என் மகன் வீரவித்தைகளை கற்கப்போகிறான் என்று பெருமிதத்துடன் இருந்தேன். ஆனால் அது சிலகாலம்தான். அதன் பிறகு நான் இராமனை விட்டு பிரிந்ததேயில்லை. அம்மா அம்மா என்று ஒரு நாளைக்கு பத்து முறை ஓடி வந்து விடுவான். என் குழந்தை காட்டில் பதினான்கு ஆண்டுகள் வாழ வேண்டுமே. பதினான்கு ஆண்டுகள் ஆண்டுகள் மரவுரி தரித்து காய்கனி உண்ணப்போகிறான். குழந்தைக்கு இப்போதுதான் கல்யாணம் ஆகி இருக்கிறது. புது மனைவியுடன் சொர்க்கபுரியான அயோத்தியில் உல்லாசமாய் வாழ முடியாதே. நான் என் கண்மணியை எப்படி பதினாங்கு ஆண்டுகள் பார்க்காமல் இருப்பேன். என் குழந்தையை ஆரண்யத்திற்குப் போகப் போகிறான்; எனக்கு எதற்கு வைரக் குண்டலங்கள், பொன் அணிகள், ரத்தின ஆரங்கள். வீசி எறிகிறாள். பின்னிய கூந்தலில் சூரிய சந்திர பில்லைகள். கூந்தலை அவிழ்க்கிறாள். பட்டாலான ஆடையை கழற்றி பருத்தி ஆடை அணிகிறாள்.


"கண்மணி என் அருமைச் செல்வமே" என்று மஞ்சத்தில் விழுந்து அழுகிறாள்.


{திரை விழுகிறது}





Friday, July 21, 2006

55 fiction- 4

கண்காட்சி


"அம்மா, அந்த கண்காட்சி நம் ஊருக்கு வந்திருக்கு ப்ளீஸ் போகலாம்மா" ப்ரீத்தி கெஞ்சினாள். போனார்கள். endangered species என்று அறிவிப்பு பலகை கூறியது. உலகில் மொத்தமே ஐந்துதான் இருக்காம். ஒவ்வொரு கண்டத்திலிருந்து ஒரு சாம்பிள் இருக்கிறது. ஜாக்கிரதையாக ஊர் ஊராக அரசு கொண்டுபோகிறதாம் . "எல்லாவற்றுக்குமே இப்போது மருந்து கண்டுபிடிச்சாச்சு; அப்போதெல்லாம் கிடையாது எங்களுக்கெல்லாம் ரொம்ப தொல்லை கொடுத்தது இது" என்ற பாட்டியிடம் பெயர் என்ன என்றாள் ப்ரீத்தி. பெயர் கிடையாது. ஆண் என்று அழைப்பார்கள் என்றாள் அம்மா. ----------------------------------------

Monday, July 03, 2006

நம்பிக்கை குழுமம் அறிவித்த சிறப்புப் பரிசு

நம்பிக்கைக்கு ஒர் அஷ்டவக்ரன்

(அஷ்டவக்ரன்*- எட்டு கோணல்கள் உடைய உடலைக் கொண்டவன்)

காட்சி ஒன்று

இடம் : மிதிலையில் ஒரு முக்கிய வீதி. பன்னிரண்டு வயது அஷ்டவக்ரன் தன் மாமன் சுவேதகேதுவுடன் நடந்து கொண்டிருக்கிறான். வழியில் எதிர்படுகிறார்கள் அரசன் வரும் வழியைச் சீர்படுத்தும் ஊழியர்கள்.
நேரம்: காலை நேரம்
பாத்திரங்கள்: அஷ்டவக்ரன், சுவேதகேது, ராஜாங்க காவலர்கள், பேரரசர் ஜனகர்

காவலன் ஒருவன்: (எரிந்து விழுகிறான்) அடடா, விரைவாக எல்லோரும் நகர்ந்து வழிவிடுங்கள்; பேரரசர் வந்துகொண்டிருப்பது தெரியவில்லையா; மிதிலையில் இன்று நடக்கப்போகும் மாபெரும் யாகத்துக்கு நாங்கள் செல்ல வேண்டும்.

அஷ்டவக்ரன்: ஐயா, பேரரசரே வந்துகொண்டிருந்தாலும் பாதையில் வயோதிகர், வேதம் கற்றோர், கண்பார்வையற்றோர், மாறுபாடான உடலைக் கொண்டோர், பெண்கள், பாரம் சுமப்போர் இவர்களுக்கு வழிவிட்ட பின்னர்தான் அரசனே செல்லவேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

ஜனகர்: (வந்துகொண்டே) இந்தச் சிறுவன் கூறுவது முற்றிலும் உண்மையே;

காட்சி இரண்டு

இடம்: யாகசாலையின் வாயில்
பாத்திரங்கள்: வாயில்காப்போன், அஷ்டவக்ரன், சுவேதகேது, ஜனகர்.
வாயிற்காப்போன் உள்ளே நுழைய முயலும் அஷ்டவக்ரனையும் சுவேதகேதுவையும் தடுக்கிறான்.
வாயில்காப்போன்: நில்லுங்கள்! இங்கு அறியாச் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை; வேதம் கற்ற பெரியவர்கள் மட்டுமே நுழையலாம். உள்ளே உள்ள சான்றோர் உன்னை ஒப்பமாட்டார்கள்.

அஷ்டவக்ரன்: (பணிவாக) ஐயா, நான் அறியாச் சிறுவன் அல்லன்; முறைப்படி வேதாகமத்தைக் கற்றவன். வேதத்தைக் கற்றவர் பிறரின் வயதை வைத்து அவர்கள் திறமையை எடைபோடமாட்டார்கள். எங்களை நீங்கள் தாராளமாக உள்ளே செல்ல அனுமதிக்கலாம்.

வாயில்காப்போன்: (ஏளனத்துடன்) உன் வீண்பெருமையை நிறுத்து. சிறுவனான நீ அதற்குள் வேதங்களைக் கற்றுக்கொண்டுவிட்டாயா? நல்ல வேடிக்கை; நான் தள்ளுவதற்கு முன் நீங்களாகவே வெளியே சென்று விடுங்கள்; பிழைத்தீர்கள் என்று நினைத்துக்கொள்வேன்; வேதம் தெரிந்தவனாம்; உள்ளே செல்லவேண்டுமாம்.

அஷ்டவக்ரன்: ( பொறுமையுடன்) ஐயா, இன்று நான் அரசவைப் பண்டிதரான வந்தி அவர்களைச் சந்திக்க வேண்டும். அரசரிடம் உத்தரவு கேட்டுவிட்டாவது எங்களை நுழையவிடுங்கள்.

வாயில்காப்போன் : (எக்காளத்துடன் சிரிக்கிறான்) அடேய்; ஒரு கூனோ கோணலோ இருந்தாலே பார்க்கச் சகிக்காது; எட்டு கோணல் கொண்ட உடம்புக்கே இந்தத் திமிரா; எல்லோரும் பார்த்துச் சிரிப்பதற்குள் ஓடிவிடு!
அஷ்டவக்கிரன் : என் உடல் அஷ்டகோணலாய் இருக்கலாம்; ஆனால் என் கல்வி நேரானது. நான் உள்ளே,....

அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜனகர் வருகிறார்; அவனை அடையாளம் கண்டு கொள்கிறார்.

ஜனகர்: ஓ, சட்டம் பேசும் சிறுவனா? யாரங்கே! இவனுக்கு சாப்பிட பழங்களும் பட்சணங்களும் கொண்டு வாருங்கள்; (அஷ்டவக்ரனைப் பார்த்து) சிறுவா! நீ திண்பண்டங்களை வாங்கிக்கொண்டுச் செல்; நான் சதஸ¤க்குச் (வாதப்போர்) செல்ல வேண்டும்.

அஷ்டவக்ரன்: அரசே! மன்னியுங்கள்! திண்பண்டங்கள் எனக்குத் தேவையில்லை: பண்டிதர் வந்தியுடன் வாதப்போட்டி புரிய வந்திருக்கிறேன்.

ஜனகர்: (அதிர்ச்சியுடன்) என்ன? மகாப்பண்டிதர் வந்தியுடன் வாதப்போர் புரிய வந்திருக்கிறாயா? சுயநினைவோடுதான் பேசுகிறாயா சிறுவனே? வாதப்போட்டியில் தோற்றவர்கள் எல்லாம் கடலில் தூக்கியெறியப்படவேண்டும் என்பது அவர் எண்ணம். தெரியுமா?

அஷ்டவக்ரன் : (தெளிவான பார்வையுடன்) தெரியும். நல்லொழுக்கமுள்ள ஆனால் முழுமையான பண்டிதர் அல்லாதாரோடு வாதப்போர் புரிந்ததால், பண்டிதர் வந்தி அவர்களை எளிதாக வென்றுவிட்டார். வென்றதுமட்டுமன்றி ஆணவமும் அடைந்து விட்டார். அதனால் தோற்றவர்களை கடலில் எறிந்துவிட வேண்டும் என்று இரக்கமின்றி கூறுகிறார். உண்மையான பாண்டித்யமும் ஞானமும் உள்ளவர்களை அவர் சந்திக்க வேண்டும். அவர்களோடு வாதப்போர் புரிய வேண்டும்.

ஜனகர்: ( வேடிக்கையாக ) நீ வென்றால் தோற்றவர்களை கடலில் எறிய மாட்டாயோ?

அஷ்டவக்ரன்: ( நிதானத்துடன்) மமதை கொள்வதும், அதன் காரணமாய் நேர்மையற்ற தண்டனைகள் வழங்குவதும் ஆத்ம ஞானம் அடைந்தவர்கள் செய்வதில்லை அரசே.

ஜனகர்: ஓ. அவ்வளவு பெரிய மனிதனா நீ. உன் பெற்றோர் யார்? உன்னை அனுமதிப்பதற்கு முன் நீ யார், என்ன, அதையாவது நான் தெரிந்து கொள்ளலாமா? இதோ உன் அருகில் இருப்பவர் யார்? இந்த சிறுவனை நல்வழிப்படுத்தி அவன் தாயாரிடம் நீ அழைத்துச் செல்லக்கூடாதா?

அஷ்டவக்ரன்: அரசே, இவர் என் மாமன்; பெயர் சுவேதகேது; இவரால் பேச இயலாது; துணைக்கு இவரை என் தாயார் என்னுடன் அனுப்பியிருக்கிறார். மகரிஷி உத்தாலகரின் மகள் சுஜாதையின் புதல்வன் நான். என் பெயர் அஷ்டவக்ரன் ; என் தந்தை மகரிஷி உத்தாலகரின் சீடரான ககோலர்.

சுவேதகேது: (அரசரைப் பார்த்துப் புன்னகைக்கிறான்)
ஜனகர்: (ஆச்சரியத்துடன்) ககோலனின் மைந்தனா? உன் தந்தை பண்டிதர் வந்தியிடம் தோற்று கடலில் வீசப்பட்டார் தெரியுமா? எந்த தைரியத்தில் இங்கே வந்திருக்கிறாய்? உன் வம்சத்திற்கு வாரிசு இல்லாமல் போகப்போகிறது. ஏற்கனவே உன் உடல்கோணலால் உன் தாய் அழுதுகொண்டிருப்பாள்; இப்போது உன்னையும் இழக்கப்போகிறாள். ஓடிப்போய் அம்மாவிடம் பத்திரமாய் உட்கார்ந்து கொள் பிள்ளாய்! வாதப்போருக்குத் ஊமைத் துணை!

அஷ்டவக்ரன்: அரசே! என் தந்தை தோற்றார் என்பதால் நானும் தோற்கவேண்டும் என்பதில்லையே. நான் கற்ற வேதாகம அறிவு எனக்கு வெற்றியைத் தேடித்தரும். என் தாயாரின் ஆசியும் எனக்கு உள்ளது. தாங்கள் புறத்தோற்றத்திற்கு கொடுக்கும் முக்கியத்தைவிட ஆன்ம அறிவுக்கு முக்கியத்துவம் தாருங்கள். இந்த வாதப்போரில் கலந்துகொள்ள நான் வனத்திலுள்ள ஆசிரமத்திலிருந்து நகருக்கு நடந்தே பயணித்திருக்கிறேன். பத்து நாட்கள் பயணம், என் உடலமைப்பினால் ஒரு திங்களாக நீண்டாலும் வந்திருக்கிறேன். என் நோக்கம் நிச்சயம் நிறைவேறும். எனக்கு என் பாண்டித்யம் மீது நம்பிக்கை இருக்கிறது. வாய் பேச முடியாது என்றாலும் உடல் உழைப்பும், அறிவும், பிறருக்கு உதவும் மனமும், நிறைந்த தன்னம்பிக்கை உடைய என் மாமனை எளிதாய் ஊமை என்று தாங்கள் பேசுவது பொருத்தமின்றி இருக்கிறது. அவர் என் கண்களுக்கு மனிதனாய்த் தென்படுகிறார்.

ஜனகர்: உன் பேச்சில் ஆணவம் இருக்கிறது.

அஷ்டவக்ரன்: அரசே, தன்னம்பிக்கைக்கும் தற்பெருமைக்கும் ஒரு நூலிழையே இடைவெளி. என்னால் நிச்சயம் முடியும் என்பது தன்னம்பிக்கை; என் ஒருவனால் மட்டுமே முடியும் என்பது ஆணவம். ஆணவத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் நடக்கும் வாதப்போரைத் தாங்கள் காணவேண்டும்.

ஜனகர்: யாரங்கே! வாதப்போர் நடக்கும் இடத்திற்கு இந்தச் சிறுவனை அனுப்புங்கள் நானும் வருகிறேன்.

காட்சி மூன்று

இடம்: வாதப்போர் நடக்கும் அரங்கு.

பாத்திரங்கள்: பேரரசர் ஜனகர், பண்டிதர் வந்தி, அஷ்டவக்ரன், சுவேதகேது.
சுவேதகேது, பார்வையாளர்களுடன் முன் வரிசையில் அமர்ந்துகொண்டு , பேசுபவர்களின் வாயசைப்பைக் கூர்ந்து கவனிக்கிறார்.
ஜனகர் அஷ்டவக்ரனை பண்டிதர் வந்திக்கு அறிமுகப்படுத்துகிறார். வாதப்போர் துவங்குகிறது.

ஜனகர்: அரசவைச் சான்றோரே, என் அருமை மக்களான பார்வையாளர்களே, நீங்களே இந்த வாதப்போரின் நடுவராக இருக்கப்போகிறீர்கள். இந்த வாதப்போரை பொதுமக்களும் கவனித்து வருவதால், அரிய கருத்துக்களை எளிய மொழியில் விளக்கும்மாறு இருதரப்பினர்க்கும் அறிவிக்கிறேன். வாதப்போர் துவங்குகிறது.

பண்டிதர் வந்தியும் அஷ்டவக்ரனும் ஒரு மேடையின் மீது எதிரெதிர் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பண்டிதர் வந்தி மிடுக்குடன் அமர்ந்திருக்கிறார்.
உடல் எட்டுக்கோணல்களாக வளைந்து இருந்தாலும் அஷ்டவக்ரன் தன்னம்பிக்கையுடனும் தெளிவுடனும் காணப்படுகிறான். அவன் கண்களில் அமைதியும் கனிவும் தென்படுகிறது.

வந்தி: ஒருவரை எதைக் கொண்டு எடைபோடவேண்டும்? குலமா? குணமா? பொருளா? பதவியா?

அஷ்டவக்ரன்: குணத்தை வைத்துத்தான். காமம், குரோதம் முதலிய தீய குணங்கள் இல்லாமல், எல்லோரிடத்தும் அன்பு செலுத்துபவன், புலனடக்கம், ஒழுக்கம் முதலியவற்றை எளிதாய் பெறுகிறான்.

வந்தி: உன்னைப்போன்ற சிறுவயதினருக்கோ பெண்களுக்கோ ஞானம் இல்லை என்கிறேன். ஞானம் இருப்பவர்களில் சிலரையாவது உன்னால் சுட்டிக்காட்ட இயலுமா?

அஷ்டவக்ரன்: எமதருமராஜனிடம் போக விரும்பி, ஞானத்தை அறிந்து கொண்ட நசிகேதஸ், ஸ்ரீமன் நாராயணனை எங்கும் நிறைந்தவன் என்று நம்பிய பிரகலாதன், தவவாழ்வைத் தேடிய பாலகன் துருவன், சிறு வயதிலேயே ஞானம் பெற்ற வியாசர், விபாண்டகர், சிவபெருமான் அருளைப் பெற்ற மார்க்கண்டேயன் இவர்களில் சிலர். பெண்மணிகளில் உமையம்மை முதலாக, மைத்ரேயி, கார்க்கி, காத்யாயினி, தட்சப்பிரஜாபதியின் மகள் சுதையின் புத்திரிகளான மேதாவி, தரணி, என்று பல பெண்மணிகள் இருக்கிறார்கள்.

வந்தி: ஆத்மாவின் அழிவுக்குக் காரணமான செயல்கள் என்ன?

அஷ்டவக்ரன்: பேராசை, அகந்தை மற்றும் பிறர் வருந்தும்படியான செயல்களைச் செய்தல்- இவையே ஆத்மாவின் அழிவுக்குக் காரணமாகின்றன.
வந்தி: புலனடக்கத்தின் சிறப்பு என்ன?

அஷ்டவக்ரன்: புலனடக்கம் உடையவன் தன் குற்றங்களை இனங்கண்டு அவற்றைக் களைவதில் முனைவான். புலனடக்கம் உடையவன் பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. நேர்வழி அவனுக்கு மிக எளிதாக இருக்கும். இப்படிப்பட்டவனை எதைக்காட்டியும் கவர முடியாது. சக மனிதன் மட்டுமன்றி சகல ஜீவராசிகளையும் சமமாக பாவிக்கிறான். தன் கடமை அது எதுவாக இருந்தாலும் செவ்வனே செய்ய முயல்வான். தன்னை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்குவதால் ஞானம், நீதி நெறிகள் அவனைத் தேடி வருகின்றன. அவன் எங்கு இருந்தாலும் அவ்விடம் தபோவனத்திற்குச் சமமாகும். புலனடக்கம் இருப்பவன் எந்தக் கஷ்டத்தையும் எளிதாகக் கடந்துவிடுவான்.

வந்தி: பெரிய யாகங்களைச் செய்வதைக் காட்டிலும் சிறந்த புண்ணியங்கள் ஐந்தைக் கூறு.

அஷ்டவக்ரன் : பெற்றோரைப் பேணுதல், கணவனும் மனைவியும் ஒருவரிடம் ஒருவர் தூய அன்பு கொண்டிருத்தல், சகல ஜீவராசிகளிடமும் அன்பைச் செலுத்துதல், நண்பர்களுக்கு உண்மையாய் இருத்தல் மற்றும் பலன் எதிர்பாராது உதவி செய்தல் இவையே சிறந்த ஐந்து புண்ணியங்கள்.

வந்தி: ஆன்மாவின் உள்ளொளியாய் விளங்குவது என்ன?

அஷ்டவக்ரன்: ஆன்மாவின் உள்ளொளியாய் விளங்குவதும் தத்துவங்களின் உட்பொருளாய்த் திகழ்வதும் இந்த உலகத்தை இயக்கும் பரம்பொருளே ஆவார். காலம், நேரம், யாகம், பஞ்சபூதங்கள், சத்தியம், தர்மம் எல்லாம் அவரே. ஆதியும் அந்தமும் இல்லாதவர்.
வந்தி: மந்திர ஜபத்திற்குச் சமமானது எது?

அஷ்டவக்ரன்: எல்லோரிடமும் அன்பு காட்டுவது மந்திர ஜபத்திற்கு ஈடானது.

வந்தி: செல்வத்தில் சிறந்த செல்வம் எது?

அஷ்டவக்ரன்: மன அமைதியும் நிறைவும்.

வந்தி: ஒரு வர்த்தகன் இருக்கிறான். மனநிறைவுடன் வாழ்க்கை நடத்தி வருகிறான். தூர தேசங்களுக்குச் சென்று வியாபாரம் செய்தால் லாபம் வரும் என்று நினைக்கிறான். அவன் எதற்கு இன்னும் பொருள் ஈட்ட வேண்டும்? இதற்கு நீ என்ன சொல்கிறாய்?
அஷ்டவக்ரன்: ஒரு வர்த்தகன் செல்வம் எளிதாய் கிடைக்கிறது என்பதால் ஊதாரித்தனமாக இருக்கக்கூடாது; அதே சமயம் தன்னிடம் உள்ள செல்வம் போதும் என்று நினைத்து செல்வத்தை அலட்சியப்படுத்தத் தேவையில்லை. தானதர்மங்கள், புண்ணிய காரியங்கள் செய்ய செல்வம் அவசியமாகிறது. பொருள் தேடும் முயற்சியை அவன் தாராளமாக தூரதேசங்களில் மேற்கொள்ளலாம்.

வந்தி: பூஜைகளில் சிறந்த பூஜை எது?

அஷ்டவக்ரன்: அதிதி பூஜை

வந்தி: இதோ இவன் கையில் ஒரு சங்கைக் கொடுங்கள். அஷ்டவக்ரா நீ இப்போது பாரம் சுமக்கிறாய் என்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?

அஷ்டவக்ரன்: நிலத்தில் இரண்டு பாதங்கள் இருக்கின்றன; அதன்மீது இரண்டு கணைக்கால்கள் இருக்கின்றன. அவற்றின் மேல் இரண்டு தொடைகள் இருக்கின்றன. அந்த ஆதாரத்தின் மீது வயிறு இருக்கிறது. மார்பு, கைகள், தோள்கள் இவை வயிற்றின் மேல் இருக்கின்றன. அந்தக் கைகளில் ஒன்றில் ஒரு சங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் நீங்கள் என்று உங்களால் நினைக்கப்படும் தேகம் இருக்கிறது. அதே போல் நான் என்று நினைக்கப்படும் தேகத்தில் நான் இருக்கிறேன். நீங்களும், நானும், தேகங்களாய் மாறி நிற்கும் பிறரும், பூமி முதலிய பஞ்சபூதங்களால் சுமக்கப்படுகிறோம்.

சான்றோர்: (ஒருமித்தக் குரலில்)அஷ்டவக்ரருக்கு கேள்வி கேட்க சந்தர்ப்பம் தர வேண்டும்.

பார்வையாளர்கள்: ஆமாம் ஆமாம் ; அவர் மட்டும் ஒரு கேள்வி கேட்டு இந்தப் பண்டிதர் விடை தெரியாமல் விழிக்கட்டும், வாதப்போட்டியில் அஷ்டவக்ரரே வென்றார் என்பது எங்கள் முடிவு.
ஜனகரும் சான்றோரும் ஆமோதிக்கிறார்கள்.சுவேதகேது மகிழ்ச்சி அடைகிறான்.

வந்தி: தாராளமாக; எனக்கு விடை தெரியவில்லை என்றாலோ அல்லது தவறான விடை என்றாலோ அஷ்டவக்ரன் வென்றான் என்று ஒப்புக்கொள்கிறேன். அஷ்டவக்ரா, உனக்கு என்னிடம் கேள்வி கேட்க ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. உம் கேள்.

அஷ்டவக்ரன்: ஒரு போட்டியில் வென்றவர் தோற்றவரிடம் நடந்துகொள்ளும் முறை என்ன? நட்புணர்வுடன் பழக வேண்டும் என்பது என் விடை. தங்கள் விடை என்னவோ?

வந்தி: (முதலில் பதட்டமடைகிறார் பின் தலைகுனிகிறார்)

அஷ்டவக்ரன்: (நிதானத்துடன்) தாங்கள் அவசியம் வனத்தில் உள்ள ஆசிரமத்திற்கு வாருங்கள். தங்கள் குடும்பத்தினரையும் சீடர்களையும் அழைத்து வாருங்கள்; நான் இப்போது விடைபெறுகிறேன்.

சான்றோர்: அன்பு மயமான உலகத்தை தன்னம்பிக்கையுடன் எடுத்துச்சொன்ன அஷ்டவக்ரர் வாழ்க!
சுவேதகேது: (கரவொலி எழுப்புகிறான்)
பார்வையாளர்கள்: வாழ்க! வாழ்க! அஷ்டவக்ரர் வாழ்க!

அஷ்டவக்ரன் தலைநிமிர்ந்து மேடையிலிருந்து மெதுவாக இறங்குகிறான்.

சில நாட்களுக்குப் பின்னர் ஜனக மன்னர் அஷ்டவக்கிரரின் சீடராகிறார். அஷ்டவக்ரரின் உபதேசங்கள் அஷ்டவக்ரகீதை என்று அழைக்கப்படுகிறது. உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்ய வேண்டும். ஆசைகளை விட்டொழிக்க வேண்டும். நேரத்தை வீணாக்கக் கூடாது. நேர்மை, அன்பு, சகிப்புத்தன்மை முதலிய பண்புகள் ஆன்ம உள்ளொளியை அளிக்கும். அஷ்டவக்ரகீதையின் தனிச்சிறப்பு இதில் எந்த ஒரு மதம், கலாச்சாரம், பிரிவினர் பற்றித் தனியாகக் குறிப்பிடப்படவில்லை.

*அஷ்டவக்ரன் தாயின் கருவில் இருந்த போது, தந்தை ககோலர் மந்திரங்கள் கூறுகையில் ஏற்பட்ட தவறான உச்சரிப்பால் சங்கடம் அடைந்து நெளிந்ததான உடல் கோணல்களுடன் உருவாயிற்று என்று கூறப்படுகிறது.

Wednesday, June 28, 2006

குழந்தை




பேச்சு குழறல்தான்
நடை தள்ளாடுகிறது,
உள்ளே நுழைந்த
அந்நியரைப்
பார்த்த அதிர்ச்சியில்
உணவைச் சிதறிய போது
மருண்ட பார்வை;
வார்த்தை புரியாது
என்றாலும்
பரிவோடு பேசுகிறேன்
என் வீட்டிலிருக்கும்
தொண்ணூறு வயது
குழந்தையுடன்

Friday, June 09, 2006

காற்றுவெளியில் கலந்திட

தமிழ்மணம் ப்ளாக்கர் மதுமிதா அவர் செய்யும் ஒரு ஆய்வுக்காக இந்தத் தகவல்களைக் கேட்டிருந்தார்.


வலைப்பதிவர் பெயர்: மாதங்கி

வலைப்பூ பெயர்: பெரிதினும் பெரிது கேள்

சுட்டி: http://www.ananyaaabhiajit.blogspot.com

(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: சிங்கப்பூர்

நாடு: சிங்கப்பூர்

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: ஜெயந்தி சங்கர்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்: 31-10-2005

இது எத்தனையாவதுபதிவு: 22

இப்பதிவின் சுட்டி : http://ananyaaabhiajit.blogspot.com/2006/06/blog-post_09.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இது போல் ஒன்று இருக்கிறது என்று
ஜெயந்தி சொன்னார். ஆர்வம் வந்தது; என் படைப்புகளையும் எண்ணங்களையும் வலையேற்றுகிறேன்.

சந்தித்த அனுபவங்கள்: சில

பெற்ற நண்பர்கள்: உண்டு

கற்றவை: தொடர்கிறது

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: எழுதுவது உடனே அரங்கேறுகிறது;
வாசிக்கப்படுகிறது.



இனி செய்ய நினைப்பவை: செய்த பின் சொல்கிறேன்

உங்களைப்பற்றிய
முழுமையான குறிப்பு: வாசிப்பில் ஆர்வம் கொண்ட ஒரு நபர்

சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் (திருச்சி) இளங்கலை வேதியியல். பங்களூரில் வங்கிப்பணி. அதன் பின் திருமணமாகி சிங்கப்பூர் வந்துவிட்டேன். 14 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழார்வத்தால் முதுகலைத் தமிழ் படித்தேன்.( அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) .


உலகில் (அப்படித்தான் சொன்னார்கள்)
முதல் முறையாக தமிழில் நடத்திய
கவிதை ஸ்லாமில் (July 2005-Singapore )
Old Parliament House-World's first Tamil Poetry
Slam) இரண்டாம் பரிசு கொடுத்தார்கள்.
Singapore Indian Fine Arts ல் ரங்கோலிப்
போட்டியில் தங்கப்பதக்கம் (மெய்யாலுமே
24 காரட் தங்கக் காசு கொடுத்தார்கள் )
(1999ல்) . July 2000 இல் நடந்த சமையல்
போட்டியில் (Millenium Healthy Cooking
competition ) எங்கள் வட்டாரத்தில் முதல்
பரிசு கொடுத்தார்கள். ராஜம் (இப்ப
இருக்கா?) கட்டுரைப் போட்டியில்
முதல் பரிசு (1996) கொடுத்தார்கள்.
மங்கையர் மலர் சமையல் போட்டிகளில்
பரிசு கிடைத்தது. ஒரு நவராத்திரி
சிறப்பிதழில் அட்டைப்படத்தில் என்னைப்
(புகைப்படத்தை) போட்டார்கள் . அமரர் கல்கி

நினைவுச் சிறுகதைப் போட்டியில்
2003 ஆம் ஆண்டு மூன்றாம் பரிசு
கொடுத்தார்கள்.

என் சிறுகதைகள் வெளிவந்த இதழ்கள்:
சுமங்கலி, கல்கி, கலைமகள், மங்கையர் மலர், சிங்கப்பூர் தமிழ்முரசு, மலேசிய தமிழ்நேசன், திண்ணை.காம்,தேன்கூடு.காம்

மரபுக்கவிதைகள் மற்றும் புதுக்கவிதை அமுதசுரபியில் வெளிவந்துள்ளன.

கவிதைகள் உயிர்மை, வானகமே வையகமே, தமிழ்ப்பணி, தமிழோவியம்.காம், நிலாச்சாரல்.காம், தமிழ்முரசு (சிங்கை), மங்கையர்மலர், கீற்று.காம்,திசைகள்.காம்,தமிழ் சிஃபி.காம்,
ஆகியவற்றில் வெளிவந்திருக்கின்றன.




பயணக்கட்டுரை ஒன்று திசைகள்.காம் இல் 2006 இல்

வெளிவந்தது

வானொலியில் இருமுறை இனிக்கும் இலக்கியம் நிகழ்ச்சியில் கபிலர், ஔவை இருவரின் பாடலை எடுத்து என் பார்வையில் அவையொட்டி எழுந்த சிந்தனைகளை வழங்கியிருக்கிறேன்.

2005 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் அமோக்கியோ நூலகத்தில் நடத்திய கதையும் காட்சியும் என்ற நிகழ்வில் 40 நிமிடங்கள் உரையாற்றினேன். (பொருள்- எழுத்தாளர் மருத்துவர் லட்சுமி அவர்களின் படைப்புகள்)


2006 மே 1 கவிஞர் பிச்சிக்காடு இளங்கோ அவர்களில் மூன்றுநூல்கள் வெளியீட்டு விழாவில்

'முதல் ஓசை' நூலை (மரபுக்கவிதைகள்) அறிமுகப்படுத்த வாய்ப்பளித்தார்.

சிங்கை கவிமாலை மற்றும்
கவிச்சோலை நிகழ்ச்சிகளில் பரிசு
கொடுத்திருக்கிறார்கள். சென்ற மாதம்
கவிச்சோலை நிகழ்ச்சியில் கவிஞர்
மனுஷ்யபுத்திரன் நடுவராக இருந்து
பரிசு கொடுத்தார். இணையத்தில்
நம்பிக்கை குழுமம் ஆண்டுவிழாப்
போட்டியில் நாடகத்திற்குச் சிறப்புப்
பரிசு கொடுத்தார்கள் (ஜூன் 2006)

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்
30ஆம் ஆண்டுவிழாப் போட்டிகளில்
சிறுகதைப் போட்டியிலும், மரபுக்கவிதைப்
போட்டியிலும் மூன்றாம் பரிசு
கொடுத்தார்கள். (29.07.06)


நவம்பர் 9 2006 இணையத்தில் தமிழ்ச்சங்கம் வலைப்பூ நடத்திய கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு கிடைத்தது. நடுவர் கவிஞர் மு. மேத்தா அவர்கள்.

மலேசிய நாளிதழ் தமிழ்நேசன் 2006 ஆம் ஆண்டு சுதந்திரதினத்தை ஒட்டி நடத்திய சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு கொடுத்தார்கள் (டிசம்பர் 2006)



18.11.2006 அன்று சிங்கப்பூரில் நடந்த கவிஞர் கண்ணதாசன் விழாவில் 5 நிமிடங்கள் கவிதாஞ்சலி படைக்கச் சொன்னார்கள். தலைப்பு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களும் குழந்தைகளும்.

எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின்
நூல்வெளியீட்டு விழாவில் (ஜனவரி2007)
"வாழ்ந்து பார்க்கலாம் வா" நூலாய்வில் பங்குபெற்றேன்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய 2007 ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவை முன்னிட்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு கொடுத்தார்கள்-



அன்புடன் குழுமம் 2007 ஆம் ஆண்டு நடத்திய கவிதைப்போட்டியில் ஆறுதல் பரிசு- நடுவர் திரு. மாலன்.

2007 ஆண்டில் இரு கவியரங்களில் பங்கு பெற்ற அனுபவம் உண்டு. திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் ஏற்பாட்டில் நடந்த பொங்கல் கவியரங்கம் மற்றும் பெண்கள் கவியரங்கம்.

சிங்கப்பூரில் பள்ளிகளில் நடக்கும் போட்டிகள், சொற்போர் ஆகியவற்றில் நடுவராக பணிபுரிந்த அனுபவம் உண்டு.

2007 நவம்பர் தீபத்திருநாள் அன்று "தேசங்கள் எங்கும் தீபாவளி என்ற தலைப்பில் " சிங்கை வானொலி 96.8 இல் கவிதை வாசித்தேன்.

குழந்தைகள் தினத்தை ஒட்டி " பேசும் பொற்சித்திரமே" என்ற தலைப்பு கொடுக்கப்பட்டு
வானொலியில் ஒலிபரப்பினார்கள்.

சென்னை நல்லோர் வட்டம் ஒழுங்கு செய்திருந்த
பாரதம் 2020 க்கு ஆலோசனையும் எனது
பங்களிப்பும்' என்ற தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் என் படைப்பு
பாராட்டுச் சான்றிதழ் பெற்றது.

ஜூன் 1 2008 அன்று என் முதல் கவிதைத் தொகுப்பு 'நாளை பிறந்து இன்று வந்தவள்'
சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் வெளியிடப்பட்டது.

டிசம்பர் 2008 இதழ் வடக்குவாசலில் என் கவிதைகள் பிரசுரிக்கப்பட்டன



















Saturday, May 20, 2006

தேர்தல் 2060

பத்திரிகைகளில் அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து தமிழக மக்கள் தலையைப் பிய்த்துக்கொண்டனர்.


புதிய தேர்தல் விதிமுறைகள்- தேர்தல் 2060

1.ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர் அடுத்த கட்சியின் குறைகளைப் பட்டியலிடாது, தங்கள் கட்சியின் குறைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்.

2. அவரவர் கட்சி பற்றி எத்தனை புகார்கள் எழுகிறதோ அதற்கு தகுந்தாற்போல் சிறப்பு மதிப்பெண் கொடுக்கப்படும்.

3.ஒரு முறை முதலமைச்சர், மந்திரி, எம்.எல்.ஏ முதலிய பதவிகளில் இருந்தவர் மீண்டும் போட்டியிடக்கூடாது. ஆறு மாதத்திலேயே பதவி இழந்தாலும் சரி, அல்லது நன்னடத்தையினால் ஐந்து வருடம் பதவியில்இருந்தாலும் சரி.

4. கிரிமினல் ரெக்கார்ட் இருப்பவர், லஞ்சம், ஊழல் செய்தவர்கள் போட்டியிட முடியாது.

5. எந்தக் கட்சியுமே தனக்கு சொந்தமான ஊடகத்தில் தனது கட்சியின் குறைகளை மட்டுமே கூற வேண்டும்.

6. தங்கள் கட்சியைப் பற்றி அதிகமான புகார்கள் கொடுப்பவர்கள் அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்தலில் நிற்கலாம்.

7. வேட்பாளராக நிற்க விரும்புபவர்கள் எழுத்துத்தேர்வில் 80/100 க்கு குறையாமல் மதிப்பெண் பெறவேண்டும். எழுத்துத் தேர்வின் பாடத்திட்டம் அனுபவ அறிவு, சமூக சீர்திருத்தங்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். எழுதத் தெரியாதவர்களுக்கு வாய்மொழித்தேர்வு நடத்தப்படும். நேர்முகத்தேர்வும் நடக்கும். எல்லாக் கட்சித்தலைவர்களும், ஊடகத்தலைவர்களுக்கு கேள்வி கேட்பதில் பங்கு இருக்கும்.

8. வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு ஆறு மாத அவகாசம் முதலில் கொடுக்கப்படும். அவர் எத்தனைக் குறைகளைத் தீர்க்கிறார் என்பதைப் பொறுத்து அவரது அடுத்த ஆறு மாத கால பதவி நீட்டிப்பு தொடரும்.அதிக குறைகளைத் தீர்ப்பவருக்கு மதிப்பெண் கூடும்.

9. இவர்கள் பெறும் மதிப்பெண் ஒவ்வொரு செமஸ்டருக்கும் நாளிதழில் வரும்.

10. குறைந்த மதிப்பெண் பெறுபவரின் பதவி நீக்கப்படும். அவர்கள் மீண்டும் போட்டியிட இயலாது.

11. ஒவ்வொரு தொகுதியிலும் இரவு 12 மணிக்கு பெண்கள் அல்லது குழந்தைகள் தனியே சென்றால் அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படக்கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் அந்தத் தொகுதி வேட்பாளரின் பதவி பறிக்கப்படும். மதிப்பெண் லிஸ்டில் அடுத்த நிலையில் உள்ளவர் மறுநாளே பதவிக்கு வருவார்.

12. பணிகாலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களின் ரேஷன் அட்டை, வீட்டுத் தொலைக்காட்சி பறிக்கப்படும்.

13. அந்தந்த தொகுதியின் காவல் நிலையத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டு, தினமும் கட்சித்தலைவர்களுக்கு அனுப்பப்படும். உடனடியாக எல்லாப் புகார்களும் கவனிக்கப்படவேண்டும்.

தேர்தல் 2060 ஐ ஒட்டி தேசிய தேர்தல் ஆணையமும் முதலமைச்சரும் அறிவித்திருக்கும் மேலும் சில பொது விதிகள்:

1. சாதி, மதம் முதலிய வார்த்தைகளோ அவைகளின் பெயர்களோ எந்த ஊடகத்திலும் வரக்கூடாது.

2. அனைவரும் ஓட்டு போடவேண்டும். ஓட்டுப் போடத் தவறுபவர்களுக்கு அவர்களின் பெயரை இனி எங்கும் அவர் பயன்படுத்தக் கூடாது. எல்லோரும் அதன்பிறகு அவருக்குக் கொடுக்கப்படும் எண்ணைக்கூறியே அழைக்க வேண்டும்.

3. எந்தத் தொகுதியிலாவது யார் பெயராவது இல்லை என்றாலோ, அல்லது அவரது ஓட்டை யாராவது போட்டுவிட்டார் என்றாலோ உடனடியாக ஒரு ஓட்டுக்கு 100 ஓட்டுக்கள் என்ற முறையில் ஆளும் கட்சியிலிருந்து ஓட்டுக்கள் கழிக்கப்படும்.

4. எல்லாக் கட்சி அலுவலகங்களிலும் வீடியோ காமிராக்கள் பொருத்தப்படும். அதை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தகுந்த சேனலைத் தட்டி வேண்டியபோது பார்த்துக்கொள்ளலாம்.

5. தேர்தல் விளம்பரங்கள் கிடையாது. அரசே வேட்பாளர்களின் பெயர், அவர் கட்சி, அவர் சின்னம் முதலியவற்றை அறிவிக்கும்.

6. தேர்தலை ஒட்டி பொதுக்கூட்டங்களில் பேசுபவர் அவையோருக்கு வணக்கம் என்று மட்டும் சொல்லிவிட்டு அவரவர் கட்சியில் எத்தனை குறைகள் என்ற எண்ணிக்கையை முதலில் சொல்லவேண்டும். அடுத்து அக்குறைகளை மட்டுமே பட்டியலிடவேண்டும். இலவசமாக எதுவும் கொடுக்கக் கூடாது.இவை ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஊடகங்களுக்குப் போய்விடும்.

7. சட்டம் ஒழுங்கு, இவை அரசியல் வாழ்வில் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி மக்களுக்கும் இன்றியமையாததாகக் கருதப்படும். பொது இடங்களில் அசுத்தம் செய்வோர், லஞ்சம் ஊழலில் ஈடுபவோர், கட்சியின் பெயரால் அடித்துக்கொள்வோர் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

ரமி, இலோவைப்பார்த்து சைகை செய்தாள். "ஆயிற்று நம் திட்டத்தின் படி. தமிழகத்தின் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் அவர்கள் உதவியாளர்களுக்கும் போலிஸ்காரர்களுக்கும், எல்லா ஊடகங்களின் தலைவர்களுக்கும் , உதவியாளர்களுக்கும் திட்டமிட்டபடி அவரவர் மூளையில் சில முக்கிய சில்களைச் சேர்த்தாயிற்று. அவர்கள் நினைத்தாலும் ஊழல் பண்ண முடியாது. இனி அவர்களுக்குத் தெரியாத ஒரு வடிவில் உருமாற்று செய்து கொண்டு வேடிக்கையைப் பார்க்கலாம். அதுதான் நம் தலைமையகம் நமக்குக் கொடுத்த வேலை. நமக்கு 5 வாரங்கள், பூமியினருக்கு 5 வருடங்கள்; ஏதேனும் உருப்படுகிற வழி இருக்கிறதா, இல்லையென்றால் நமது தலைவரின் பிரதிநிதிதான் ஆட்சி செய்ய வேண்டும். " என்று ரமி இலோவிற்குத் தெரிவித்தாள்.

பி. கு. இவர்கள் இருவரும் வேறு கிரக வாசிகள்.

Monday, May 08, 2006

மாறியது நெஞ்சம்- சிறுகதை

"நீ என்னதான் சொல்லு ரகு, அவனவனுக்கு வீட்டு வேலைகளை கவனிக்கவே நேரம் போதவில்லை; ஆபீஸ் விட்டு வீடு வர ஒன்பதாகிறது, அதன் பின், குளித்து, சாப்பிட்டு, ஏதோ பத்து நிமிஷம் தொலைக்காட்சி பார்க்கலாம் என்றால் அப்படியே களைப்பினால் தூக்கம் வந்துவிடுகிறது.
பொருளார பின்னடைவினால், அலுவலகத்தில் ஆட்குறைப்பு வேறு செய்துவிட்டபடியால், விடுமுறையான சனிக்கிழமை அன்றும் முழுநாளும் அலுவலகத்தில் கழிந்து விடுகிறது; ஞாயிறுதான் அடித்துப் பிடித்து எழாமல், மெதுவாக எழுந்து, வந்த தபால்களைப் பார்ப்பது, தொலைபேசி, வீட்டுத்தவணை, நீர் மின்சாரக் கட்டணங்களை பார்ப்பது, மகனை இசை, துணைப்பாட வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது என்று போய் விடுகிறது; இத்தனைக்கும் வீட்டுச் சாமான்கள் வாங்குவது, காய்கறிகள், வாங்குவது, சமையல், குழந்தைகளின் படிப்பு இத்தனையும் என் மனைவி பார்த்துக்கொண்டாலும், ஊருக்கு தொலைபேசியில் பேசுவது, நல்ல நாள் கிழமைகளில் நண்பர்கள் வீட்டிற்குச் செல்வது இதுவே பெரிய பாடாயிருக்கும் போது, அக்கம்பக்கத்தினருடன் நல்லுறவு வைத்துக்கொள்ள எல்லாம் எனக்கு நேரமில்லை, போததற்கு மாதாமாதம் வெளியூர் பிரயாணம் வேறு அலுவலகத்தில் வந்து விடுகிறது ,"என்றேன் மதிய உணவு இடைவெளியில்.


ரகு மௌனத்துடன் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தான். நானும் விடவில்லை. "நல்லுறவு என்றால் என்ன சொல்கிறாய், அக்கம்பக்கத்திற்கு உதவி செய்வதா, செய்யலாம்தான்; எனக்கும் கூடாது என்ற எண்ணம் இல்லை; ஆனால் என் வீட்டிற்கே என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அடுத்தவீட்டிற்குச் சென்று, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க முடியுமா; அக்கம்பக்கத்தில் உள்ளவருக்குத் தொந்தரவு தராமல் இருப்பதே இந்த காலத்தில் பெரிய நல்லுறவு தான், உபத்திரவம் கொடுக்காமல் இருப்பதே பெரிய உதவி," என்று முடித்தேன்.

எனக்கு நல்ல வேலை, வீடு, நண்பர்கள் இருக்கிறார்கள். அக்கம்பக்கத்தில் யார் எப்படி இருந்தால் என்ன; அவரவர் வேலையை அவரவர் பார்த்தாலே போதும். அப்படி நான் ஊரில் இல்லாத நேரத்தில் ஏதேனும் அவசரம் ஆபத்துக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்; என் மனைவி அவர்கள் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்தாலே போதுமே.

ரகுவிற்கு நான் நீட்டி முழக்கி விளக்கம் தரக்காரணம் அவன் கேட்ட ஒரு கேள்விதான்; வீடமைப்பு வளர்ச்சிக் கழககத்தின் குடியிருப்புப் பகுதிகளில், மக்கள் தத்தம் இல்லங்களுக்கு மின் தூக்கியில் செல்லும் போது கிட்டத்தட்ட ஐந்து பேர் ஒரே மிந்தூக்கியில் பயணித்தாலும் ஒருவரது முகத்தை மற்றவர் பார்ப்பதில்லை; வெவ்வேறு திசைகளில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அப்படியே தப்பித் தவறி பார்த்தாலும் அதில் உணர்ச்சி என்பது சிறிதுகூட இருப்பதில்லை; தங்களூக்கு வேண்டிய பொத்தானை தாங்களே தட்டிக்கொள்கிறார்கள், வெளி மனிதர்கள் என்றாலும் பரவாயில்லை, ஒரே ப்ளோக்குகளில் வசித்தாலும் இப்படி இருக்கிறதே ; நீ எப்படி அக்கம் பக்கத்தினரும் நல்லுறவு மேற்கொள்கிறாய்" என்று என்னை விளித்திருந்தான்.

ரகுவும் நானும் அலுவலகத்தில் நல்ல நண்பர்கள். வெவ்வேறு இடங்களில் வசித்தாலும், காலை எட்டிலிருந்து இரவு எட்டு வரை ஒரே அலுவலகத்தில் இருப்பதால், மதிய உணவு வேளையில் எதாவது பேசிக்கொள்வோம்; ரகு அவ்வளவாக பேச மாட்டான். என்னை கேள்வி கேட்டு என்னை பேச வைப்பான். இரவு பெருவிரைவு ரயிலில் வீட்டிற்கு வரும்போதும், மதியம் பேசியதையே நினைத்துக்கொண்டிருந்தேன். எங்கள் இல்லம் இருக்கும் தளத்தில் பத்து பன்னிரெண்டு வீடுகள் இருக்கும். மொத்தம் பதினொரு தளங்கள், ஆனால் வாயில் கதவுக்கு எதிர்புறம் ஒரே ஒரு வீடு இருக்கும், டோர் டு டோர் என்பார்களே அந்த முறையில் கட்டப்பட்ட ப்ளாட்டுக்கள். எதிர் வீட்டு குடும்பத்தலைவரை நான் இதுவரை பார்த்ததே கிடையாது, அவர் மனைவிக்கு ஆங்கிலம் தெரியாது, என் மனைவிக்கு மலாய் தெரியாது. என் மனைவி இல்லத்தரசியாக இருப்பதால், காய்கறி வாங்கச் செல்லும்போது, மகனை பள்ளிக்கு இட்டுச்செல்லும் போது, அவ்வப்போது எதிர் வீட்டு அம்மாளைப் பார்ப்பதாகவும், ஹலோ என்று சொல்வார்கள் என்றும் , எங்கள் ஆறுமாத மகளை ஹலோ பேபி, ஸயாங், ஸ்யாங் என்றும் ஏதோ சொல்வார்கள் என்று சொல்லியிருக்கிறாள்.
அவ்வளவே; எங்கள் வீட்டிற்கு நேர் கீழ்தளத்தில் சீனர் குடும்பம் உள்ளது. அவரை நான் ஒரு முறை ஆர். சி செண்டரில் பார்த்திருக்கிறேன். நாங்கள் வேலைக்குப் போவது வருவது எல்லாம் வெவ்வேறு நேரம். எங்கள் ப்ளோக்குக்கு ஒரு முறை வந்து பாருங்கள் அவரவர் வீட்டு வாயில் கதவு மற்றும் இரும்பு கதவு பூட்டியே இருக்கும். வெளியே செல்லும் போது மட்டுமே திறக்கப்படும். யாருக்கும் பழகக் கூடாது என்பதில்லை; சோஷியலைஸ் பண்ண நேரமோ சந்தர்ப்பமோ இல்லை. அப்படியே எதிரில் அவர்கள் வந்தாலும் நானும் சரி அவரும் சரி விறுவிறு என்று நடந்து போய் விடுவோம்.


இப்படியே வாழ்க்கை கழிந்து விடும் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு திருப்புமுனையாக நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.இந்தப் பேச்சு எல்லாம் நடந்து சுமார் ஒரு வருடம் ஆகியிருக்கும்.

இந்த முறை சவுதி, துபாய் பகுதிகளுக்கு எங்கள் அலுவலக கிளைக்கு மேற்பார்வையிட நான் செல்ல வேண்டியிருந்தது. ஒரு வாரம்தான் என்றாலும் அங்கு வெள்ளி விடுமுறை நாள், ஞாயிறு வேலை நாள் என்பதால் இரண்டு ஞாயிறு தொடர்ச்சியாக இருந்துவிட்டு, புதன் இரவு, கிளம்பி, வியாழன் இரவு வந்து சேர்ந்தேன். இரவானபடியால், குழந்தைகள் தூங்கிவிட்டார்கள். வந்து சில நிமிடங்கள் மனைவியிடம் பேசும் போது எப்பேர்பட்ட விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். விஷயம் இதுதான்.எங்கள் வீட்டு வாயில் கதவுக்கு ஒரு மாற்றுச் சாவி எப்போதும் உண்டு. ஒன்று மனைவியிடம் இருக்கும். மற்றொன்று என்னிடம் இருக்கும். நான் ஊருக்குச் செல்லும் போது என் சாவியை என் அலுவலக மேசை இழுப்பறையில் வைத்திருப்பேன். அப்படி என் மனைவி சாவியை தொலைத்துவிட்டால், ரகுவை தொலைபேசியில் அழைக்குமாறு கூறியிருந்தேன்.

இன்று, அதாவது வியாழன் முற்பகல், என் மனைவி சுமார் பதினொன்றரைக்கு என் மகனையும், தள்ளுவண்டியில் மகளையும் அழைத்துக்கொண்டு வாயில் கதவைப் பூட்டியிருக்கிறாள். தள்ளுவண்டியில் என் மகளை- சுமார் ஒன்றரை வயது, உட்கார வைத்துவிட்டு, என் மகனுக்கு வாசலில் போட்டிருந்த காலணி பலகைகளில், பள்ளிக்குச் செல்லும் ஷ¥க்களை அணிவித்து, இருவரையும் அழைத்துக்கொண்டு, கீழ் தளத்தில் பாலர் பள்ளி வேனில் அவனை ஏற்றிவிட்டு, அப்படியே அவள் தோழி வீட்டிற்கு நவராத்திரியை முன்னிட்டு, அவர்கள் வெற்றிலை பாக்கு வாங்கிக்கொள்ள அழைத்திருந்ததால் பிடோக் சென்றிருக்கிறாள். அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு, குழந்தை தூங்கிவிட்டதால், அங்கேயே பேசிக்கொண்டிருந்துவிட்டு, மூன்றரைக்குக் கிளம்பியிருக்கிறாள். நாலரைக்கு மகனது பள்ளி வேன் வரும் போது அப்படியே எங்கள் ப்ளோக் கீழ் தளத்தில் அவனையும் கூட்டிக்கொண்டு வாயில் கதவுக்கு எதிரில் வந்தால், எதிரி வீட்டு மலாய் பெண்மணி அவர்கள் வீட்டு மரக்கதவு திறந்திருக்க, இரும்பு கம்பிகள் கொண்ட கதவை மட்டும் பூட்டியவாறு வீட்டினுள் ஆனால் வாசலை பார்த்தவாறு ஒரு நாற்காலியுடன் உட்கார்ந்திருந்தவர், என் மனைவி வீட்டு வாயிலில் வந்ததைப் பார்த்த அடுத்த வினாடி, க்ரில் கதவைத் திறந்து வெளியே வந்திருந்தவர் என் மனைவியின் கரத்தில் எங்கள் வீட்டு கொத்துச் சாவியைத் திணித்திருக்கிறார்.

என் மனைவி அவரமாக கைப்பையில் தேட அதில் சாவி இல்லை. எதிர் வீட்டு மலாய் பெண்மணி ஆங்கிலம் அறியாதவர், தட்டுத் தடுமாறி, சைகை மூலமாக, ஓரிரு ஆங்கிலசொற்கள் மூலமாக தெரிவித்த விஷயம் இதுதான். வீட்டைப்பூட்டி சாவியை கைப்பையில் மனைவி போட்டிருக்கிறாள். அதற்குள் மகன் ஷ¥ போட அவசரப்படுத்தவே, குழந்தையை தள்ளுவண்டியில் அமர்த்தி , அதற்கு பெல்ட் போட்டுவிட்டு, மகனுக்கு காலணி அணிவித்திருக்கிறாள்.
பிறகு கைப்பையின் ஜிப்பை இழுத்து மூடியிருக்கிறாள். இடைப்பட்ட நேரத்தில் எங்கள் ஒன்றரை வயது மகள், கைப்பையிலிருந்து சாவியை எடுத்து எங்கள் வீட்டு வாயில் கதவில் காலணி பலகை அருகில் அடுக்கியிருந்த செய்தித்தாள் குவியல் மேலே போட்டிருக்கிறாள். அதனால் சாவி விழுந்த ஓசை கேட்கவில்லை. இவர்கள் வெளியே கிளம்பிய சிறிது நேரத்தில் எதிர்வீட்டு அம்மாள் அதிர்ஷடவசமாக தம் வீட்டு வாயில் கதவைத் திறந்து , தங்கள் காலணிப் பலகையை சுத்தம் செய்திருக்கிறார்.
அப்போதே எங்கள் வீட்டுச் சாவியை பார்த்திருக்கிறார். உடனே பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார். என் அலுவலகத் தொலைபேசி எண் அவருக்குத் தெரியாது. மேலும் என் மனைவியிடம் கைத்தொலைபேசியும் கிடையாது. எனவே எதிர் வீட்டில் பூட்டிவிட்டு வெளியே சென்றவர் (அதாவது நாங்கள்) வந்தவுடன் கொடுக்கலாம் என்று சாவியை பத்திரமாக வைத்திருக்கிறார். ஆனால், நாங்கள் வந்துவிட்டோம் என்பதை எப்படி தெரிந்து கொள்வது, அதற்காக, தம் வீட்டுமரக்கதவைப் பூட்டாது, இரும்பு க்ரில் போட்ட கம்பிக் கதவை மட்டும் பூட்டிவிட்டு, வழி மேல் விழி வைத்து காத்திருந்திருக்கிறார்.


முற்பகல் பதினொன்றரையிலிருந்து மாலை நாலேமுக்கால் வரை, சுமார் ஐந்தேகால் மணி நேரம் காத்திருந்திருக்கிறார். இத்தனைக்கும், நாங்கள் உறவினர்களோ நண்பர்களோ அல்ல. எல்லாம் ஒரு மனிதாபிமானம்தான். அவர்கள் நமக்கென்ன என்று எடுக்காமல் விட்டிருந்தால் வீடே களவு போயிருக்கலாம், அல்லது திருடன் உள்ளே ஒளிந்து கொண்டும் இருக்கலாம். எங்கள் வீட்டு வாயிலில் கிடப்பதால், அது எங்கள் வீட்டுச் சாவி என்பதை குழந்தை கூட சொல்லிவிடுமே.

"வாங்க, எதிர்வீட்டு மலாய் ஆண்ட்டிக்கு இரண்டு பேருமாகச் சேர்ந்து நன்றி சொல்லிவிட்டு வருவோம் என்றாள்," என் மனைவி.

நானோ அதிசயித்து போய் உட்கார்ந்திருந்தேன். கல்லூரி செல்லும் இரு பிள்ளைகளின் தாய் அவர், அவருக்கு எத்தனை அவசர வேலைகள் இருந்திருக்கும். அதையெல்லாம் தாண்டி ஐந்து மணி நேரம் வாசலில் கம்பிக் கதவுக்கிடையில் காத்திருந்திருக்கிறார் என்றால், என் மனதை என்னவோ செய்தது. இருவரும் சேர்ந்து நன்றி சொல்லிவிட்டு வந்தோம்.

இப்போதெல்லாம் நான் எங்கள் ப்ளோக் மின்தூக்கியில் பயணிக்கும் போது, எங்கள் கீழ்தளத்தில் உள்ள சீனர், (ஆமாம் ஒரு நாள் அவர் வீட்டுதுணிகள் உலர்த்தும் கம்புகளில் எங்கள் வீட்டுத் துணி விழுந்தபோது, சட்டென்று போய் அறிமுகப்படுத்திக்கொண்டேன்), எதிர் வீட்டு அங்கிள், இவர்களை மட்டுமன்றி நான் அலுவலகம் செல்லுகையில் சரியாக நடைபயிற்சிக்கு வரும் சீனப்பாட்டி, யாரைச் சந்திக்க நேர்ந்தாலும் மலர்ந்த முகத்துடன் முகமன் கூறுகிறேன். சந்தித்து சில நாட்களாகிவிட்டால் நலமாக இருக்கிறீர்களா என்று கூட கேட்கிறேன். நேருக்கு நேர் சந்திக்கும் போது ஒரு வார்தை பேச பணம் தேவையா? இல்லையே மனம்தானே தேவை; அண்டை வீட்டுக்காரர்கள் யாராக இருந்தால்தான் என்ன, வழியில் பார்க்கையில் வெற்றுப்பார்வையுடன் போவதைவிட, நாமே முன்வந்து முகமன் கூறுவது, பணிவன்புடன் நடந்துகொள்வது மனதை மலரச் செய்கிறது என்று அறிந்தேன்

Monday, April 03, 2006

வெண்பா

எது தித்திக்கும் மாம்பழத் தேன்?



இந்தளம், கொல்லி, இனிக்கும் புறநீர்மை

செந்துருத்தி, சீர்மிகு செவ்வழி - மந்திரமாய்

எத்திக்கும் எட்டும் எமது தமிழ்ப்பண்கள்

தித்திக்கும் மாம்பழத் தேன்.


அக்டோபர் 2005 கோப்பில் ஆசிரியப்பா உள்ளது - தலைப்பு முடிச்சு

Sunday, March 12, 2006

இனிக்கும் இலக்கியம்

குறிஞ்சிப்பாட்டு


ஞாயிறு அந்தி நேரம்- தமிழிலக்கியத்தை ஞாலத்தில் பரப்பும் காலம். சிந்தனைக்கு விருந்தளிக்கும் சிங்கை வானொலிக்கும் அன்பு நேயர்களுக்கும் என் வணக்கம்.

சங்க இலக்கியத்தின் கண்களான பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகையுள் இன்று பத்துப்பாட்டில் உள்ள குறிஞ்சிப்பாட்டின் இனிமையைப் பருகிடுவோம் வாருங்கள். இதோ கபிலரின் கவித்திறம்.

ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

(பாடலின் ஒரு பகுதி)

தினைப்புனம் காக்கச் சென்ற தலைவியும் தோழியும் தாங்கள் உடுத்தும் தழை உடைக்காகவும் அணியும் மாலைகளுக்காகவும் பலவகை மலர்களைப் பறித்தனர் என்று கூறும் இடத்தில் 99 மலர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு வரியிலும் மும்மூன்று பூக்களாக மாறி மாறி கோக்குமழகு இப்பாமலையாகிய பூமாலையை மணங்கமழச் செய்கிறது. அழகிய குமரியாக மட்டுமன்றி, அறிவின் செல்வியாகவும் தலைவியைக் காட்டத்துடிக்கிறார் புலவர்.

தோழியுடன் சென்ற தலைவி மலையருவியில் நீராடினாள். வேட்டையாடும் பொருட்டு வந்த தலைவனுடைய வேட்டை நாய்கள் மீது அவளுக்கிருந்த அச்சத்தைத் தலைவன் நீக்கினான். புதுப்புனல் வெள்ளத்திலிருந்தும் மதயானையிடமிருந்தும் மங்கையைக் காத்தான். காதல் மலர்ந்தது. நாள்தோறும் சந்திப்பு தொடர்ந்தது. வழியிடை அச்சம் மற்றும் காலந்தாழ்ச்சியினால் சோர்வுற்றாள் தலைவி.

வாரணம் நிறைந்த மலைக்கு - இவள் போகும்
காரணம் என்னவோ?
மெலிவடையும் தலைவி- அவள்
நிலை கண்டுசெவிலிக்கோத் தலைவலி.
வந்திட்டாள் அன்புத் தோழி-
தந்திட்டாள் திருமணச் செய்தி.
தலைவன் தலைவியின்
கரம் பிடிக்க வரம்
கேட்பதை அறிவித்தாள்.

சங்கத் தமிழ்க் கவிதை- இது
காட்டுவதோ புதுப்பாதை.
அகத்திணைச் செய்திகளுக்கு
வழித்துணையாய் வருவது
தொண்ணுற்றொன்பது மலர்கள்.
மிகத் தொன்மையானதொரு பாடல்.
தாவரவியலில் ஒரு தேடல்.
குறிஞ்சிக் கபிலர் இதன் தந்தை
பறித்திடும் மலர்களின் எண்ணிக்கை
தருவதோ விந்தை.

உளவியல் அறிந்திட்ட மேதை
உள்ளத்தில் சொறிவதோ போதை.

பூக்களின் பெயர்களை மிகுதியாகக் கூறுவது கால நீட்டிப்புப் போல் தோன்றுகிறது. கூர்ந்து நோக்கினால் இது தலைவியின் அறிவாற்றலைப் புலப்படுத்துகிறது. தன் களவொழுக்கத்தைத் தோழி முதலில் எடுத்துரைத்தால் செவிலிக்குச் சினம் ஏற்படும் என்று கருதி அவள் சினம் தணிவதற்கும் அறிவியலைத் துணை கொள்கிறாள் தலைவி.

களவியலில் அறிவியலோடு உளவியலும் அமைந்திட்ட குறிஞ்சிப்பாட்டு தமிழுக்கு ஒரு தேனூற்று.

கோபத்தினால் வரும் எதிர்வினையைத் தவிர்க்க, சிக்கலான விடயத்தைக் கூட பிறர் ஏற்றுக்கொள்ளும் வகையில் மேலாண்மைத் திறனுடன் செப்பிடும் வித்தை - அக்காலத்திற்கு மட்டுமன்றி எக்காலத்திற்கும் பொருந்தும் விந்தை.
நம் தினசரி வாழ்வில் சினத்தினைத் தவிர்ப்போம் ,இனிமையைச் சேர்ப்போம். சற்று சிந்தித்து பேசினால், சினத்திற்கு இடமேது. சினம் வந்திட்டால், சிரிப்பு சென்றுவிடுமே! ஆத்திரம் உத்திரத்தைத் தொட்டால், நட்டம் சொல்பவர் கேட்பவர் இருவருக்கும் தானே.

இப்பாடல் எழுந்த காரணம் என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாக இருக்கும்- ஆரிய அரசன் பிரகதத்தன் தமிழ்ச்சுவையை அறிய விழைந்திட்டான். தமிழர்க்கே உரிய அகத்திணையின் சிறப்பை உணர்த்தவும் தமிழ்ச்சுவையை ஊட்டவும் பாரியின் நண்பர் கபிலர் கூறி மகிழ்ந்தக் குறிஞ்சிப்பாட்டு தமிழுக்கு ஒரு தாலாட்டு. திக்கெட்டட்டும் இதன் பேச்சு வியக்கவைக்கும் தமிழின் வீச்சு.

ஆம், ஆரிய அரசன் தமிழின் சிறப்பை அறிந்து உணர்ந்தது மட்டுமன்றி தன் தமிழறிவைப் பெருக்கி குறுந்தொகையில் ஒரு பாடல் இயற்றியிருக்கிறான் என்றால், தமிழராகிய நாம் தமிழை தரணியேற்றா வேண்டுமல்லவா, தமிழருடன் தமிழில் பேசுவோம். நம் அடுத்த தலைமுறைக்கு தமிழிலக்கியங்களைத் தங்கத்தட்டில் வைத்து தந்துமகிழ்வோம்.

இதோ அந்தப் பாடல்பகுதி

ஒண்செங் காந்த ளாம்ப லனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள
மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான்பூங் குடச
மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா
விரிமல ராவிரை வேரல் சூரல்
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்தற்
றாழை தளவ முட்டாட் டாமரை
ஞாழன் மௌவ நறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங் குரலி
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க
மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை
யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந் துவாரம்
தும்பை துழாஅய் சுடாப்பூந் தோன்றி
நந்தி நறவ நறும்புன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி
யாரங் காழ்வை கடியிரும் புன்னை
நரந்த நாக நள்ளிரு ணாறி"


கலாப மயில் பலா மரங்கள் நிறைந்த குறிஞ்சி நிலமே வஞ்சியின் களம். உவமைக்குக் கூட அவள் திணைக்குரிய பொருட்களையே கூறவேண்டும் என்று பகர்ந்துள்ளது தொல்காப்பியம். பிற திணைப் பூக்களின் நாமம் தலைவி கூறக்கேட்பது மாயம்.

முல்லைக்குரிய பிடவம், முல்லை, கொன்றை , தோன்றி தோன்றுகிறது. தாமரை, குவளை, வஞ்சி, காஞ்சி, காயா, மருதம் அருமையான மருதநிலத்தைச் சேர்ந்தவை. நெய்தலும் தாழையும் ஞாழலும் புன்னையும் நெய்தலுக்குரியனவே. குரவம் மரா பாதிரி பாலையைச் சேர்ந்தது கபிலரே. வெவ்வேறு நேரங்களில் பூக்கும் இம்மலர்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள் என்று நாங்கள் அறிவோம்.

அழகு நிறைந்த தலைவி, செறிவுள்ளவளாக மட்டுமல்ல அவளை அறிவுள்ளவளாகவும் காட்டுவது மங்கை போகப்பொருளல்ல என்பதை நாநிலமும் அறியட்டும் என்று நினைத்தீரோ கபிலரே.

ஐந்திணைப் பொருள்களின் அறிவை ,அரிவை பெற்றிருக்கிறாள் என்பதன் மூலம் தலைவியை அவள் அறிவைக்காட்டி அறிமுகப்படுத்தியுள்ள கவிஞர் பெருந்தகையே, இன்றைய இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில் கூட பெண்களாகிய நாங்கள் விழைவது அதுவே. எங்கள் அறிவை முன்னிலைப்படுத்துங்கள். எங்கள் பண்பைப் பகருங்கள். புறத்தோற்றத்தை மட்டும் பார்ப்பதை புறந்தள்ளுங்கள்.

அன்புள்ளங்களே அடுத்தவர் மனமுறிய பேசாமல், மனம் அறியப் பேசுவோம், பெண்மையைப் போற்றுவோம். தமிழைத் தரணியில் ஏற்றுவோம். சிறப்பாக வாழ்வோம் வளர்வோம் வாருங்கள்.

நன்றி
வணக்கம்

இனிக்கும் இலக்கியம் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் வானொலியில் 12.3.06 அன்று மாலை ஒலிபரப்பானது

Friday, March 10, 2006

ஈவ் டீசிங்கிற்கு தீர்வு உண்டா?- சிறுகதை

வண்டியில் சென்றுகொண்டிருந்த பெண் ஈவ் டீசிங்கிற்கு பலியான செய்தியை நாளிதழில் படித்தபோது சிறு வயதில் படித்த Little Red Riding Hood என்ற கதை நினைவுக்கு வந்தது.

கதையில் ஓநாய் சிறுமியையும் பாட்டியையும் விழுங்கிவிடும்; பின் ஒரு வேடன் ஓநாய் வயிற்றைக்கிழித்து அவர்களை பத்திரமாக வெளியே எடுப்பான். இங்கு,......

சிவப்புத் தொப்பிக்குட்டி


முல்லைவனம் ஒரு அழகிய ஊர். அங்கு சிந்தாமணி என்ற சிறுமி தன் தாயுடன் வசித்து வந்தாள்.

அவள் எந்த வண்ண உடை அணிந்தாலும் சிவப்பு நிறத் தொப்பி ஒன்றை எப்போதும் அணிந்து கொண்டிருப்பாள். அது அவள் பாட்டி அவள் அம்மாவின் தாயார் வெளியூர் சுற்றுலா சென்றபோது அவளுக்காக வாங்கி வந்தது. அது வாங்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அதை அவள் ஒரு போதும் அணியாமல் இருந்ததில்லை. அதனால் அவள் தாய் உட்பட பலரும் அவளை சிவப்புத் தொப்பிக்குட்டி என்று அழைப்பது வழக்கமாகி, அவள் நிஜப்பெயரான சிந்தாமணி எல்லோருக்கும் மறந்துவிட்டது.


ஒரு நாள் மாலை அவர்கள் வீட்டுத்தோட்டத்தில் பட்டாம்பூச்சிகள் பின்னே ஓடியவாறு அவள் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அம்மா கூப்பிடுவதைக்கேட்டு வீட்டிற்குள் ஓடோடி வந்தாள்.

"சிவப்புத் தொப்பிக்குட்டி, உன் பாட்டிக்கு உடம்பு சரியில்லையாம். தெரிந்தவர் மூலம் கேள்விப்பட்டேன்".

"ஐயோ பாவம். என் பாட்டி தனியாக எப்படி கஷ்டப்படுகிறாரோ , நான் வேண்டுமானால் போய் ஏதேனும் உதவி செய்துவிட்டு வரட்டா அம்மா?"

"என் தங்கமே! உனக்குத்தான் எத்தனை நல்ல மனது. நம்மைவிட்டால் பாட்டிக்கு உதவி செய்ய வேறு யார் இருக்கிறார்கள். இதோ பாட்டிக்கு ஒரு சம்படத்தில் ரவைக்கஞ்சியும், சில பழங்களும் ஒரு கூடையில் போட்டுத் தருகிறேன். போய் கொடுத்துவிட்டு வருகிறாயா?"

"ஆகட்டும் அம்மா அப்படியே தோசைமாவு இருந்தால் அதையும் ஒரு டப்பாவில் போட்டுக் கொடுங்கள். நாளை பாட்டி சமையல் செய்ய வேண்டாம் பாருங்கள்"

"என் கண்ணே உனக்கு எத்தனை முன் யோசனை. ஆனால் எனக்கு ஒரு கவலை இருக்கிறது. நம் முல்லைவனத்துக் காட்டைக் கடந்து அல்லவா நீ போக வேண்டும். இப்போதே சாயங்கால வேளையாகிவிட்டது.. நீ சேலையூர் போய் பாட்டியிடம் கொடுத்துவிட்டு வர இரவாகி விடுமே".

"அதனால் என்னம்மா!" நான் என்ன நடந்தா போகப் போகிறேன்?. இது போன்ற வெளி வேலைகளுக்காகக் எனக்கு மிதிவண்டி வாங்கித் தந்திருக்கிறீகள்; அதில் மின்னலெனப் போய்வருவேன்."


"அதற்கில்லை. ஆனால் காட்டுவழிச் செல்லும் போது அந்தப் பொல்லாத ஓநாய் வந்தாலும் நீ திரும்பிப் பார்க்காதே. அது கூட எதுவும் பேசாதே. பாட்டி வீட்டுக்குப் போனோமா வந்தோமா என்று வந்துவிடு. ஆனால் வாலை ஆட்டினால் ஒட்ட நறுக்கிவிடு. அதற்குத் தானே தற்காப்புக்க்கலையைக் கற்றுக் கொள்ளவைத்திருக்கிறேன்."

அம்மா கொடுத்த உணவுப் பொருள்களோடு சிவப்புத் தொப்பிக்குட்டி பாட்டிக்குத் தான் செய்திருந்த ஒரு சிறு அவசர மணியடிக்கும் கருவி, ஒரு பொட்டலத்தில் மிளகாய்ப்பொடி மற்றும் சில சிறு பொருள்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

வரட்டும் அந்தப் பொல்லாத ஓநாய்; எப்போது பார்த்தாலும் தனியாக யாராவது இளம் பெண்கள் வந்தால், அவர்களை கலாட்டா செய்வதே அதற்கு வழக்கமாகிவிட்டது.
போன மாதம் வளர்மதி எப்படி அழுதாள். அதுமட்டுமா, அதற்கு முன்னால் இன்னும் எத்தனை பேருக்குத் தொல்லை கொடுத்திருக்கிறது. எத்தனை முறைதான் காவலரிடம் ஓடுவது;

இதன் கொட்டத்திற்கு முடிவு கட்டத்தான் அவள் ஒரு திட்டம் தயார் செய்திருக்கிறாளே, ஆனால் அதைப் பயன்படுத்த இன்னும் துறைத்தலைவரிடம் அனுமதி பெறவில்லை; அந்த ரகசியம் அவளுக்கும் அவள் அறிவியல் ஆசிரியைக்கும் மட்டுமே தெரிந்தது;

ஓநாய் மீது பொங்கி வந்த கோபத்துடன் தன் வண்டியை வேகமாக ஓட்டிய போதும் அவள் கோபம் தீரவில்லை.

போன முறை பள்ளி ஆராய்ச்சி சாலையிலிருந்து சேலையூர் நூலகத்திற்குச் செல்லும்போது இதே காட்டுப்பகுதியில் அவளைக் கடிக்க அந்த ஓநாய் வந்தது. அப்போது அவளைக் காப்பாற்றியது அவள் கற்ற கலை. ஆம் அவள் களறிப் பயட்டுத் தற்காப்புக்கலையைக் கற்றுக் கொண்டிருந்தாள்.

அவளிடமிருந்து சரியாக அடியும் உதயும் பெற்ற அந்த ஓநாய் வாயில் வந்த ரத்தத்தைத் துடைத்தவாறு நொண்டிக்கொண்டே அவளைத் திரும்பித் திரும்பிப்ப் பார்த்துக்கொண்டே ஓடியதை இப்போது நினைத்துப் பார்த்து ஹாஹாஹ்ஹா என்று பலமாகச் சிரித்தாள்.

காட்டுப் பகுதியில் நடந்துசென்ற வேறு சிலர் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்கள்.

"சிவப்புத் தொப்பிக்குட்டி, என்ன இந்த நேரத்தில் கிளம்புகிறாய்? பாட்டி வீட்டுக்கா போகிறாய்?" அவள் வீட்டிற்குப் பின்புறம் வசித்து வந்த தாத்தா கேட்கவும்,

" ஆமாம் தாத்தா, சேலையூர் பாட்டிக்கு உடம்பு சரியில்லை; அம்மா கொடுத்திருக்கும் கஞ்சியை பாட்டியிடம் கொடுத்துவிட்டு வரப்போகிறேன். நாளைக்குப் பள்ளி இருக்கிறதே. நான் சடுதியில் போய்விட்டு வரவேண்டும்" என்றவாறு வேகமாக வண்டியை ஓட்டினாள்.

"ஓஹோ, போ போ கொடுத்துட்டு திரும்பி வருவே இல்லை. அப்போ நல்லா காடு இருண்டுவிடும்.; ஆட்களும் குறைந்துவிடும்; உன்னை என்ன செய்கிறேன் பாரு! என்னை என்ன அடி அடித்தாய்" பொருமியவாறு அந்தப் பெரிய ஆலமரத்தின் பின் ஒளிந்து கொண்டு முறைத்த அந்த இரு விழிகளை யாரும் கவனிக்கவில்லை.

காட்டைத் தாண்டி சேலையூர் பாட்டி வீடு வந்து சேர்ந்தாள். சோர்வுடன் படுக்கையில் இருந்த பாட்டியைக் கனிவுடன் விசாரித்து ஆதரவுடன் கஞ்சியைப் புகட்டினாள். வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

"பாட்டி உங்களுக்கு ஏதேனும் புத்தகம் படித்துக் காட்டட்டுமா?"

"சிவப்புத் தொப்பிக்குட்டி, நீ இவ்வளவு செய்ய்ததே போதுமடா! நேரத்துடன் வீட்டுக்குப் போய்ச்சேர், அம்மா கவலையுடன் இருப்பாள் இல்லையா?" என்று அன்புடன் கூறி அவள் தலையைத் தடவி, " இரு ; நேற்று கடைத் தெருவில் பணியாரம் வாங்கினேன் ; அப்படியே இருக்கிறது. பையுடன் கூடையில் போடுகிறேன் என்றவாறு கூடையின் அடியில் இருந்த சிறு மிளகாய்ப்பொடிப் பொட்டலத்தை ஏதோ குப்பைக்காகிதம் என்று நினைத்துத் தூரப் போட்டுவிட்டு பணியாரப் பையை உள்ளே வைத்தார்.

சிவப்புத் தொப்பிக்குட்டியும் அதை கவனிக்கவில்லை; "சரி பாட்டி, நான் போய் வருகிறேன். அந்தக் கருவியை நான் சொல்லித் தந்தபடி பயன்படுத்துங்கள்; உங்களுக்கு , மிகவும் பயனுள்ளதாக இருக்கும்."

"ஆங்- சொல்ல மறந்துவிட்டேன் தொப்பிக்குட்டி. நேற்றுக் கடைத்தெருவில் உங்களூர் தீபனைப் பார்த்தேன். உன்னைப் பற்றி அவ்வளவு உயர்வாகச் சொன்னான். இந்த ஆண்டு அறிவியலில் ஆராய்ச்சியில், இளம் அறிவியலாளர் கார்மேகம் நினைவுப் பரிசு உனக்குத்தானாம்."

"அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்; எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கிறது".

"நன்றாய் இருக்கிறது போ. கொக்குக்குத் தன் தலையில் வெண்ணெய் இருப்பது தனக்கே தெரியாதாம். உன்சிறு வயதிலிருந்தே உன் அம்மாவுக்கும் எனக்கும் உன்னைப் பற்றிய கனவுகள் பல. நீ பிறந்தது முதல் உன் ஒவ்வொரு வெற்றிக்கும் சந்தோஷப்படுவோம். ஏதேனும் தவறுகள் நேர்ந்தால் மனம் தளராமல் அதிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொண்டாய் என்று உன் அம்மா கேட்பாள். நீயும் சூட்டிகையுடன் இருக்கிறாய். நீ பெரிய பெரிய சாதனைகள் புரிவாய். நூறாண்டு வாழ்வாய்" என்று வாழ்த்தி விடை கொடுத்தார்.

தொப்பிக்குட்டி உற்சாகத்துடன் , கவிஞர் மணிமேகலையின் ' புதியான கண்டுபிடிப்போம், பொங்கிவா தங்கமே" என்ற பாடலைப் பாடியவாறு காட்டில் நுழைந்தபோது நன்றாக இருட்டி விட்டிருந்தது. இரண்டு மூன்று பேர் நடந்துகொண்டிருந்தனர். வீட்டிற்குச் செல்ல காட்டிலேயே மூன்று பாதைகள் இருந்தன. ஊராட்சி ஒன்றியத்தின் விளக்குகள் ஆங்காங்கே கண்சிமிட்டின.

அம்மா இரவு உணவைத் தனியாகச் சாப்பிடமாட்டார்; அப்பா வேறு பணி காரணமாக வெளியூரில் இரண்டு திங்களாக இருக்கிறார். பேராசிரியர் கண்ணன் நம்பி, சென்ற தேர்வில் அவள் சிறந்து விளங்கியதற்காக அறிவியல் அதிசயங்கள் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்; தன்னிடமே இருக்கும் என்றாலும் அதை உடனே படித்து முடித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் பொங்க அவள் வண்டி மிதிப்பதில் வேகம் காட்டியபோதுதான் அது நடந்தது.

" தொப் தொப் என்று யார் யாரோ குதிக்கும் ஒலி.. அவள் பாதையில் குறுக்கே குதித்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்டாள்".

'ஆ இதோ அந்த ஓநாய்-' அவளைப் பார்த்துக்க்கொண்டே நெருங்க, வேகத்தைக் கூட்டினாள். "ஹாஹ்ஹா" எக்காளச் சிரிப்பு இடப்புறமும் வலப்புறமும் கேட்க, அவளைச் சுற்றி ஒன்றல்ல, நான்கு ஓநாய்கள் நின்று கொண்டிருந்தன.

" ஏய் தொப்பிக்குட்டி, என்ன முழிக்கிறாய்? இதோ இவன் தற்காப்புக்கலையில் வல்லவன், அவன் வேகமாக ஓடுவதில் சிறந்தவன். இவன் எங்கள் நால்வருக்கும் உன்னைப் போலவே வண்டி கொண்டு வந்திருக்கிறான். எப்படி வசதி? ஓடுகிறாயா, இல்லை மிதிவண்டியில் ஏறிக்கொண்டு ஓட்டப்போகிறாயா? நாங்களும் உன்னைச் சுற்றி ஓட்டிக்கொண்டு வருகிறோம்". கெட்ட ஓநாய் மற்ற ஓநாய்களைக் காட்டியவாறு கொக்கரித்தது.

சின்னச் சிவப்புத் தொப்பிக்குட்டிக்கு வியர்த்துக் கொட்டியது. இது அவள் ஓரளவு எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு விரைவில் அல்ல. கள்ள ஓநாய்கள் வண்டியில் ஏறிக்கொண்டு மெல்ல அவளைச் சுற்¨த் துவங்கின.
தொப்பிக்குட்டி, வண்டியிலிருந்து இறங்கவில்லை; "ஓநாயே நீயும் உன் நண்பர்களும் மிகுந்த அறிவாளிகள்; உங்கள் வீரதீர பராக்கிரமத்தை நான் நன்றாகப் புரிந்துகொண்டேன்" என்று பேசியவாறு, தன் வண்டியில் கைக்கருகில் இருந்த ஒரு விசையை அழுத்த அடுத்த வினாடி, அந்த வண்டி புதிய உந்து சக்தி பெற்று பூமியிலிருந்து உயரத் துவங்கியது.

என்ன ஏது என்று ஓநாய்க் கூட்டம் புரிந்து கொள்ளும் முன் சிவப்புத் தொப்பிக்குட்டி இருபது அடி உயரத்திற்கு வண்ண்டியுடன் மேலே போனாள்.

" முட்டாள் ஓநாய்களே! இந்த விசைப்பொறி பெண்கள் மட்டுமே இயக்கக்கூடியது.. வேறு யாரும் விசையை இயக்கினால் மேலே பறந்து காற்றில் ஓடாது. பெண்களுக்கு மட்டுமே உள்ள எஸ்டரோஜன் ஒரு அணு அளவு இருந்தால் மேலே உடனே பறந்துவிடும்படி வடிவமைத்திருக்கிறேன்" என்று சொல்லியவாறு கார்ற்ரில் முல்லைவனம் நோக்கி ஓட்டினாள்.

மஞ்சரி 2006

Sunday, March 05, 2006

அந்த மலர்க்கூட்டம்- சிறுகதை

அந்த மலர்க் கூட்டம்


வீட்டிற்கு கிளம்பிய தோழியை பஸ் நிலையம் வரை கூட செல்ல என் ப்ளோக்கை விட்டு கீழே இறங்கி பேசியவாறு வந்து கொண்டிருந்த போது, "குட் ஆப்டர்நூன் ஆண்ட்டி, ஹவ் ஆர் யூ" மலர்ந்த முகத்துடன் ஒரு குட்டி மலர்கூட்டம் என்னைப் பார்த்து கேட்க, "ஹலோ யங் லேடீஸ், ஐ ஆம் பைன்" என்று உற்சாகத்துடன் நான் உரைக்க, அவர்களைக் கடந்து சென்ற பிறகு என் தோழி வசந்தி," என்ன மீனா, " இவர்கள் யார்" என்று புதிராக வினவினாள்.


"இவர்கள் எல்லாம் எனக்குத் தெரிந்த குழந்தைகள், இதோ அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளி மாணவியர்," என்றேன்.


நான் ஒன்றும் பள்ளி ஆசிரியையோ அல்லது பள்ளியில் பெற்றோர் குழுவின் உறுப்பினரோ கிடையாது. என் குழந்தைகளும் வேறு பள்ளியில் படித்துவந்தார்கள். பின் எப்படி இத்தனை பள்ளி மாணவிகள் எனக்கு நட்பாகினர் அது ஒரு சுவையான கதை.


சில மாதங்களுக்கு முன் நான் முதுகலைப் பட்டப்படிப்பு ஒன்றைத் தபால் மூலம் படித்துக் கொண்டிருந்தேன். வீட்டிலே அறையில் படித்துப் படித்து சற்றே சலிப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் எங்கள் ப்ளோக் கீழ்தளத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மேசை நாற்காலியில் அமர்ந்து காற்றாட படிக்கலாம் என்று கீழே புத்தகமும் கையுமாக நான் கீழே வந்திறங்கி வசதியாக அமர்ந்து பாடங்களைப் படிக்கத் துவங்கினேன்.

மணி மதியம் நான்கு இருக்கலாம். என் பிள்ளைகள் மாலை ஆறு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். நான் படிக்கத் துவங்கி பத்து நிமிடங்கள் கூட ஆகியிராது, திடீரென்று ஒரு சிறு ஆரவாரம் ; நிமிர்ந்து பார்த்தேன், ஏழெட்டு பள்ளி மாணவியர் பள்ளிச் சீறுடையில் என்னை நோக்கி, புத்தகப்பையுடன் வந்து கொண்டிருந்தனர். மலாய், சீன, இந்திய மாணவிகள் என்று கலந்திருந்த நட்பு வட்டம் அது.


நான் உட்கார்ந்திருந்த பெஞ்சு ஒரு பெரிய அரை வட்டத்தினதாக இருந்தது. அதில் நடுவில் நான் அமர்ந்துகொண்டிருந்தேன். நான் தொடர்ந்து படிக்கத்துவங்கினேன். அடுத்த இரண்டாவது நிமிடம் ஒரு அதிசயமான சம்பவம் நிகழ்ந்தது. உரத்த குரலில் ஏதோ பேசியவாறு என் இரு புறமும் மாணவிகள் சூழ்ந்து அமர்ந்து கொண்டனர். ஒரு வேளை அவர்கள் பள்ளி விட்டவுடன் தினமும் இங்கு வந்து அமர்ந்து பேசுவார்கள் போலிருக்கிறது; சரி வேறு எங்காவது போகலாம் என்று நினைத்தேன்.


"ஹேய், வாட் ஆர் யூ ரீடிங்? என்று அலட்சியமாக கேட்ட பெண்குழந்தைக்கு பதிமூன்று அல்லது பதினாங்கு வயது இருக்கலாம். அடுத்த வினாடி மற்றொரு சிறுமி ஒரு சிகரெட்டை பையிலிருந்து எடுத்து என்னவோ மிகவும் பழக்கமானது போல் பற்றவைத்து என் முகம் அருகில் புகையை விட்டாள். அடுத்த வினாடி அங்கிருந்து எழுந்து சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் விடுத்தேன்.


மனமே சற்று நிதானமாக இரு என்று பரபரத்த என் மனதிற்கு ஒரு சிறு கடிவாளம் போட்டேன். முகத்தில் ஒரு சிறு புன்னகையை வரவழைத்துக்கொண்டேன். எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் முழுக்க ஆங்கிலம் என்பதால் அதை தமிழில் உங்களுக்குத் தருகிறேன்.
நான் உற்சாகமான குரலில்," ஹாய் யங் லேடீஸ் ( இளம் பெண்களே) நான் பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறேன்; காற்றாடப் படிக்கலாம் என்றுதான் இங்கு வந்தேன்," நட்போடு புன்னகைத்தேன்.


"அலோ, நான் வின்னி" என்றாள், முதலில் என்னை அதட்டலுடன் விசாரித்த சிறுமி. சிறுமிகளில் ஓரிருவர் தத்தம் பெயர்களைச் சொல்லி என்னிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். சிலர் ஏது பேசாது இருந்தனர்.


"என்ன பள்ளி விட்டது தோழிகளுடன் சந்தோஷமாக அரட்டையா" வேடிக்கையாகக் கேட்டேன்.


அப்போது என் முகம் அருகில் புகை ஊதிய சிறுமி சற்று நகர்ந்து கொண்டு வெட்கத்துடன் நெளிந்ததை கவனித்தாலும் பார்க்காததுபோல் இருந்தேன்.


அடுத்து சில நிமிடங்களில் அவர்கள் ஏழு பேரும் தத்தமது பெயரைக் கூறி, தங்கள் வகுப்பு, தங்கள் வீடு எங்கிருக்கிறது என்றெல்லாம் சொல்லி, தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.


உயர் நிலை ஒன்று படிகக்கிறார்களாம். பள்ளி நேரம் முடிந்த பின் இங்கு அல்லது எதாவது ஒரு இடத்தில் அரட்டை அடித்துவிட்டுத் தான் போவார்களாம்.


"என்ன படிக்கிறீர்கள் ஆண்ட்டி?'


"தமிழ் இலக்கியம்"


உங்களுக்குத் திருமணமாகி விட்டதா, கணவர் என்ன செய்கிறார், வேலைக்கு போகிறீர்களா, சரமாரியான கேள்விகள்."எங்களுக்குத்தான் வேறு வழியில்லை' நீங்கள் எதற்கு படித்துக் கஷ்டப்படுகிறீர்கள். ஷாப்பிங், டி.வி. என்று நேரத்தைச் செலவழிக்கலாமே?" இது கேத்தி.


"திருமணத்திற்கு பின் சிங்கப்பூர் வந்த நீங்கள் ஏன் வேலையைத் தொடரவில்லை?"-இது பர்வீன்


"பரவாயில்லையே குழந்தைகள் சற்று வளர்ந்தபிறகு மேலே படிக்க ஆரம்பித்துவிட்டீர்களே" அனிதா


"நான் புகைப்பதை நீங்கள் ஆட்சேபிக்கப் போகிறீர்களா?"- செல்வி ஐயத்துடன் கேட்டாள். அவள் பின்னால் இருந்த ரீகா அடுத்த சிகரெட்டை எடுத்துக்கொண்டிருந்தாள்.


"கட்டாயம் ஆட்சேபிக்க மாட்டேன். ஏனென்றால் நீங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை அறியாதவர்கள் அல்ல; உங்களுடன் பேசியதில் நீங்கள் புத்திசாலி குழந்தைகள் என்பதை அறிந்து கொண்டேன்; நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பிதான் இப்படிச் செய்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது, "சிறு புன்னகையுடன் நிதானமாகக் கூறினேன்.


"ஆம் சரிதான், நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் ஆண்ட்டி," என்றாள் ரிகானா;

"எங்கள் வீட்டில் இன்று காலை பெரிய சண்டை; என்னை எல்லோரும் தங்கள் இஷ்டப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று கூறுகிறார்கள்; என்ன அநியாயம் தெரியுமா?"


அவள் மேலே பேசியதிலிருந்து நான் எல்லோரும் என்பது அவள் அருமைத்தாயையும் தந்தையையும் குறிப்பிடுகிறாள் என்பதை அறிந்துகொண்டேன்.


"நீ சுதந்திரதை எதிர்பார்க்கிறாய் இல்லையா"


"ஆமாம்' என்று அவள் மட்டுமன்றி எல்லோரும் ஒட்டுமொத்தமாக தலையாட்டினார்கள்.


"எப்போதுபார்த்தாலும் படி, படி, படி, இன்னும் கூடுதல் மதிப்பெண் வாங்கு- தொலைக்காட்சிப் பார்க்காதே, கணினியில் விளையாடிக்கொண்டே இருக்காதே, என்று சதா ஒரு தொணதொணப்பு; அவர்கள் மட்டும் நன்றாக பார்க்கிறார்கள், நாங்கள் துறவி மாதிரி இருக்க வேண்டுமாம்"


"வீட்டில் இருக்கும் நேரம் முழுதும் ஒரே டார்ச்சர்( சித்திரவதை), அவள் இப்படி படிக்கிறாள், இவள் இவ்வளவு மதிப்பெண் வாங்குகிறாள், உனக்கு என்ன கேடு- இன்னும் நிறைய பயிற்சித் தாள் செய்து பழகு ஆயிரம் கணக்கு போட்டால் தான் நூறுறுக்கு நூறு வாங்கலாம்-, இது கேத்தி, வின்னி, செல்வி, பர்வீன், அனிதா, ரீகா, ரீகானா எல்லோரும் ஒட்டு மொத்தமாக மூக்கால் அழுதார்கள்.


"கொஞ்சம் படிப்பைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு வேறு எதாவது பேசலாமா?"


சட்டென்று எல்லார் முகமும் பிரகாசம் அடைந்தது.


"உங்களுக்கு பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள் இல்லையா ஆண்ட்டி?"- ஒரு துடுக்குக்காரியின் கேள்வி.


"இருக்கிறார்கள். உங்கள் வயதுதான், அதனால் தான் உங்களுடன் பேச எனக்கு ஆர்வம் இருக்கிறது.


அதற்குள் இரண்டு இளசுகள் களுக்கென்று சிரித்துக்கொண்டனர். "ஏ, சொல்லாதே அனிதா கண்சாடைகாட்டினாள். மற்றொருவள் " ஆண்ட்டி, உங்களை இந்த பெஞ்சில் பார்த்தவுடன், இங்கிருந்து உங்களை அனுப்பிவிட்டுத்தான் மறு வேலை என்று பேசிக்கொண்டாள் இவள்," என்றாள்.


"உங்களில் யார் யாருக்கு படிப்பைத் தவிர வேறு விஷயங்களில் அதாவது விளையாட்டு, நாடகம், பாட்டு, ஓவியம் முதலியவற்றில் ஆர்வமுள்ளது; அதெயெல்லாம் சொல்லுங்கள் பார்க்கலாம்".


"எனக்கு சீன டிபேட்( சொற்களம்) என்றால் உயிர்" -துள்ளினாள் வின்னி.


"இவள் சென்ற ஆண்டு இறுதிச் சுற்று வரை போனாள், கடைசியில் பரிசு கிடைக்கவில்லை தோற்றுவிட்டாள்," என்றாள் பக்கத்திலிருந்த கேத்தி;


பளிச்சென்றிருந்த வின்னியின் முகம் உடனே வாடி சோர்ந்து போனது.


"என்ன இறுதி சுற்று வரை சென்றாளா?" குரலில் குதூகுலத்துடன் வியப்பையும் வரவழைத்துக்கொண்டேன். வரவழைத்துக்கொண்டேன் என்று சொல்லுவதுகூட சரியன்று உண்மையிலேயே எனக்கு ஆச்சரியமாக இருந்தது;
மேடையில் ஏறினாலே எனக்கு கைகால் மிகவும் உதறல் எடுக்கும். பரவாயில்லை இந்த சிறுமிக்கு நல்ல துணிவுதான். " மேடையில் ஏறி பேச முதலில் மேடை தைரியம், வார்த்தைகளை சரியாக பயன்படுத்தும் திறன் எல்லாம் வேண்டும். அதிலும் சொற்களம் போன்ற தொடர் பேச்சுப்போட்டியில் நீ இறுதி சுற்று வரை வந்துள்ளாய் நீ பெரிய திறமைசாலிதான் வின்னி; இந்த சிறு வயதில் மூன்று சுற்றுக்களில் வென்றிருக்கிறாய்," என்றேன்.


"ஊம், என்ன செய்வது எல்லாம் என் விதி, உங்களைப் போன்ற அம்மா எனக்கு கிடைத்திருக்கக்கூடாதா; நான் தோற்றுவிட்டு வந்தவுடன் என் அம்மா என்ன சொன்னார்கள் தெரியுமா? எனக்கு தெரியும் நீ சொற்கள பயிற்சி வகுப்புக்குச் சென்றதெல்லாம் வீண்வேலை; முதலில் இந்த வெட்டித்தனத்தை நிறுத்து, படிப்பை ஒழுங்காகப் படி என்றார்கள்," என்று கூறி நான் சற்றும் எதிர்பாராத வண்ணம் அழத்துவங்கினாள்.


பதினாஙன்கு வயது சிறுமி பேசுவதை கேட்டு நான் முதலில் அதிர்ந்து போனாலும் என் மனம் அந்தக்குழந்தைகாக வருந்தியது நிசம். தோற்றதற்காக அல்ல அந்த தோல்வியில் குழந்தைக்கு தோள் கொடுக்க பெற்றோர் தவறாலாமா? என்றாலும் நான் நினைத்ததை நான் உடனே சொல்லவில்லை;


சில வினாடிகள் கழித்து நான், "வின்னி, நீ, நான் பரிசு வாங்காத ஏமாற்றத்தில்தான் அம்மா திட்டினார்கள் என்று நினைத்துக்கொண்டு நீ சற்று நேரம் வேறு வேலையில் உன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பாயே," என்று மென்மையாக கேட்டேன்.


வின்னி தலையை குனிந்துகொண்டாள்; "இல்லை ஆண்ட்டி, நான் அறைக்கதவை அறைந்து சார்த்திவிட்டு கோபத்தில் கத்திக்கொண்டிருந்தேன்; அப்புறம் என்ன அடிக்கடி சண்டை வருகிறது, இது இல்லை என்றால் வேறு எதாவது ஒரு விஷயம்".


"ஊருக்குத் தான் உபதேசம், நான் பல் விளக்காமல் காபி குடித்ததற்கு என் அப்பா என்னை கன்னத்தில் அறைந்தார். அவர்கள் புகை பிடிக்கிறார். இது தவறில்லையா; இப்போது நான் புகைபிடிக்கிறேன் என் அப்பாவால் எதுவும் செய்ய இயலாது"- இது ரீகா


"ஒருநாள் சினிமாக் கதையை இவளுடன் பேசிக்கொண்டே இருந்ததில் வீட்டிற்கு நேரம் கழித்துப் போனேன்; நான் ஆனமட்டிலும் கெஞ்சியும் என் அம்மா நம்பவில்லை எவ்வளவு கேவலமாக பேசினார்கள் தெரியுமா நான் ஆண் சினேகிதனுடன் சுற்றிவிட்டு பொய் சொல்கிறேனாம் ; இதோ அது ஒன்றுதான் இனி பாக்கி," -செல்வியின் கண்ணில் கண்ணீர்.


மாறி மாறி அந்த குழந்தைகள் தங்கள் குமுறல்களை கொட்டக் கொட்ட நான் அதிர்ந்து போனேன். பால்வடியும் இந்த முகங்களுக்குள் இத்தனை போராட்டமா?


"ஆண்ட்டி எங்களையெல்லாம் கெட்டகாரியம் செய்யும் பெண்கள் என்றுதானே நினைக்கிறீர்கள் உண்மையைச் சொல்லுங்கள்".


நான் என் முகத்தில் புன்சிரிப்பை தவழவிட்டேன்; "உண்மையைச் சொல்லுகிறேன். நான் சொல்லி முடிக்கும் வரை நீங்கள் பொறுமையாக கேட்க வேண்டும்".
"நீங்கள் எல்லோரும் டீசண்டான குழந்தைகள்; புத்திசாலிகள், குறிப்பாக எதையாவது செய்ய வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற வேகம் இருப்பவர்கள்," என்றவாறு மெதுவாக நிறுத்தினேன்.


அவர்கள் முகத்தில் ஆச்சரியம் மட்டுமின்றி ஒரு கெஞ்சுவதுபோல் பார்வை, பாருங்கள் மூன்றாம் மனிதரான நீங்கள்கூட எங்களைத் தவறாக எடைபோடவில்லை என்பது போல்,...


; இந்தகக் கதையை கேட்கும் நீங்கள் நிச்சயம் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். அந்தக் குழந்தைகளின் கண்களில் புத்தொளியைப் பார்த்தேன். " உங்கள் சாதனைக்காக காத்திருப்பது உங்கள் பெற்றோர் மட்டுமல்ல குழந்தைகளே,...."நீங்களா ஆண்ட்டி?" -அதே துடுக்குக்காரியின் குறும்பு விடவில்லை
"ஆமாம் பின்னர் இல்லையா? நீங்கள் என் நண்பர்கள் அல்லவா; என்னை விட இன்னும் பெரியது;" "வேறு யார் ஆண்ட்டி, எங்களுக்காக காத்திருப்பது?"


"தோழிகளே சிங்கப்பூர் நாடுதான் அது. வளமான விதைகளே வளமான விருட்சங்களைத் தரும்; உங்களைப் போன்ற துடிப்பும் ஆர்வமும் உள்ள இளையர்கள் கையில்தானே நாம் நாளைய சிங்கப்பூர் இருக்கிறது,"


"நான் என்ன செய்துவிட முடியும் ஆண்ட்டி?"


"சொற்களஞ்சியம் என்ற சக்கர வியூகத்தூள் நுழைந்த வின்னி நாள் ஒரு பெரிய வழக்கறிஞர் ஆவாள்.பூப்பந்தை பொழுதுபோக்கிற்காக விளையாடும் கேத்தி அதில் தனிக்கவனம் செலுத்தினால் நாடு ஒரு பூப்பந்து தாரகையைப் பெறலாம், மேலும் பூப்பந்து பயிற்றுவிப்பாளராகலாம், இதோ இடையிடையே நகைச்சுவையோடு கேள்வி கேட்கும் அனிதா பத்திரிகை நிருபராகவோ ஆசிரியராகவோ வரலாம். ரீகா மருத்துவராகலாம், செல்வி ஓவியராகலாம் கணிப்பொறியில் கேலிசித்திரங்கள் வடிவமைத்து சிறந்த கலைப்படம் உருவாக்கி விருது வாங்கலாம், பாட்டில் ஆர்வமுள்ள ரீகானா காராவோக்கே முறையில் வீட்டிலேயே இன்னும் பயிற்சிசெய்து பாடகி ஆகலாம், சமையலில் ஆர்வமுள்ள பர்வீன் சிறந்த சமையல் கலை வல்லுனராகி பல புத்தகங்கள் எழுதலாம்,"


அவர்கள் என் மதிப்பீட்டைக் கேட்டு வியந்து போய் பேச்சடைந்து போய்விட்டார்கள்.


"தனித்திறமை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் கட்டாயம் இருக்கும். உங்களது தனித்திறமைகள் உங்களுக்கு தெரிந்திருப்பது உங்கள் கெட்டிக்காரத்தனத்தைக் காட்டுகிறது. அதை வளருங்கள். படிப்பு என்பது அடித்தளம்; அது உங்களுக்கு தேவையான பாதையைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு வழிகாட்டும்.


இதோ நான் பார்க்கத்தான் போகிறேன். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சாதனையாளர் இருக்கிறார். அது நமது நாட்டுக்குத் தேவை. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப்பாருங்கள், அவர்களுக்கும் பல தடைகள், அவமானங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சரித்திரம் படியுங்கள் சரித்திரம் படைப்பீர்கள் இது நிச்சயம். எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. எந்த இடர் வந்தாலும் அறிவையும் மனதை கலந்து ஆலோசித்து முடிவுக்கு வர வேண்டும்.


"நாங்கள் சாதாரண மாணவிகள் ஆண்ட்டி, நாங்கள் பாடங்களில் தொண்ணூறு நூறு எல்லாம் வாங்கியதில்லை; எழுபது , சில சமயம் ஐம்பது "-இது செல்வி


சாதனை மாணவி அல்லது மாணவன் என்று யாரும் பிறப்பதில்லை குழந்தைகளே; சாதாரண மாணவிதான் சாதனை மாணவி ஆகிறாள்; என்னால் முடியும், எங்களால் முடியும், நம்மால் முடியும் என்று நம்புங்கள்; உங்களால் எதுவும் முடியும். மாணவர் சக்தி மகத்தான சக்தி.
நாட்டுக்கு உங்களைப்போன்ற துடிப்பான இளம் கைகள் தேவை தெரியுமா. ஒரு நல்ல நட்பு வட்டத்துள் இருக்கிறீர்கள்; உங்கள் திறமைகளை வளருங்கள். வருங்கால சிங்கப்பூருக்கு நீங்கள் வளம் சேர்க்க வேண்டும்,".
"கட்டாயம் ஆண்ட்டி நான் நாட்டுக்கு பயனுள்ளவர்களாக இருப்போம். என் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் சொரிந்த அந்த மலர்கூட்டத்தில் நானும் கண்கலங்கிப் போனேன்.


ஆண்ட்டி வீட்டில் தினசரி சண்டை வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் வருகிறது, அதற்கு நாங்கள் என்ன செய்வது?"


நிமிர்ந்து பார்க்கிறேன் வாஸ்தவமானக் கேள்விதான்.இந்தக் குழந்தைகள் என்னிடம் கொட்டிய தங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளை மனதினுள் நினைவு கூர்ந்தேன்.


"உங்கள் அம்மாவும் அப்பாவும் உழைப்பது நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான், வேலைப் பளு காரணமாக அவர்கள் எதாவது கோபத்தில் சொன்னால் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். பெற்றோரிடம் உங்கள் அன்பை அடிக்கடி தெரிவியுங்கள். உங்கள் அம்மா அப்பாவிற்கு எதாவது ஆபத்து என்றால் எப்படி துடித்துப்போவீர்கள்?"


"சரியாக சொல்கிறீர்கள், ஆண்ட்டி, என் அம்மாவிற்கு சென்ற ஆண்டு ஒரு சிறு அறுவைச்சிகிச்சை நடந்தபோது நாந்தான் பொறுப்பாக வீட்டில் இருந்து தம்பிப்பாப்பாவைப் பார்த்துக்கொண்டேன். என் அம்மா வீடு திரும்பியவுடன் என்னைக் கட்டிக்கொண்டு அழுதார்கள்- இது கேத்தி


"உன் அம்மா உங்க வீட்டிற்குத் தானே இரவு ஷிப்பைடை ஏற்றுக்கொண்டு அயராது உழைக்கிறார்.உன் தந்தை இரண்டு இடங்களில் பணிபுரிவதாகச் சொன்னாய் ரீகா; உங்களுக்கு கைச்செலவுக்குக் கூட பணம் கொடுக்கப்படுகிறது. அதை புகைப்பதற்கு பயன் படுத்துவதா, அல்லது நல்ல வழியில் செலவழிப்பதா என்பது உங்கள் கையில் உள்ளது. வளமான விதைகளே வளமான விருட்சங்களைத் தரும்.


"ஆண்ட்டி, இனி நாங்கள் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு செயல்பட போகிறோம்" என்று என்னிடம் உறுதி கூறியது மட்டுமல்லாமல் அடுத்து சில நாட்கள் கழித்து அவர்களை நான் பூங்காவில் சந்தித்த போது ஓடி வந்து தங்களது சிறு சிறு முன்னேற்றங்களைக் கூட தெவித்தார்கள்.

வளமான விதைகள் வளமான விருட்சங்களைத் தரும் என்பது உண்மை ஆண்ட்டி; சரித்திரம் படைப்போம்; சாதனை புரிவோம் " என்று அவர்கள் ஒருமித்த குரலில் கூறிய போது அவர்கள் கண்களிலும் அந்த உறுதியைக் கண்டு மனம் பூரித்தேன்.


தோழியை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் விரைந்தேன். என் மகள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள். தோழி வந்தபோது ஆரம்பித்தவள்- எனக்கு கோபம் சுறுசுறுவென்று தலைக்கு ஏறியது.இத்தனை நேரமா தொலைக்காட்சியா, இதுல காட்டுற அக்கறைய படிப்புல காட்டு, என்று கோபத்துடன் இரைந்துவிட்டு பட்டென்று தொலைக்காட்சியை அணைத்தேன்.

தமிழ் முரசு-நவம்பர்2005