Sunday, March 12, 2006

இனிக்கும் இலக்கியம்

குறிஞ்சிப்பாட்டு


ஞாயிறு அந்தி நேரம்- தமிழிலக்கியத்தை ஞாலத்தில் பரப்பும் காலம். சிந்தனைக்கு விருந்தளிக்கும் சிங்கை வானொலிக்கும் அன்பு நேயர்களுக்கும் என் வணக்கம்.

சங்க இலக்கியத்தின் கண்களான பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகையுள் இன்று பத்துப்பாட்டில் உள்ள குறிஞ்சிப்பாட்டின் இனிமையைப் பருகிடுவோம் வாருங்கள். இதோ கபிலரின் கவித்திறம்.

ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

(பாடலின் ஒரு பகுதி)

தினைப்புனம் காக்கச் சென்ற தலைவியும் தோழியும் தாங்கள் உடுத்தும் தழை உடைக்காகவும் அணியும் மாலைகளுக்காகவும் பலவகை மலர்களைப் பறித்தனர் என்று கூறும் இடத்தில் 99 மலர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு வரியிலும் மும்மூன்று பூக்களாக மாறி மாறி கோக்குமழகு இப்பாமலையாகிய பூமாலையை மணங்கமழச் செய்கிறது. அழகிய குமரியாக மட்டுமன்றி, அறிவின் செல்வியாகவும் தலைவியைக் காட்டத்துடிக்கிறார் புலவர்.

தோழியுடன் சென்ற தலைவி மலையருவியில் நீராடினாள். வேட்டையாடும் பொருட்டு வந்த தலைவனுடைய வேட்டை நாய்கள் மீது அவளுக்கிருந்த அச்சத்தைத் தலைவன் நீக்கினான். புதுப்புனல் வெள்ளத்திலிருந்தும் மதயானையிடமிருந்தும் மங்கையைக் காத்தான். காதல் மலர்ந்தது. நாள்தோறும் சந்திப்பு தொடர்ந்தது. வழியிடை அச்சம் மற்றும் காலந்தாழ்ச்சியினால் சோர்வுற்றாள் தலைவி.

வாரணம் நிறைந்த மலைக்கு - இவள் போகும்
காரணம் என்னவோ?
மெலிவடையும் தலைவி- அவள்
நிலை கண்டுசெவிலிக்கோத் தலைவலி.
வந்திட்டாள் அன்புத் தோழி-
தந்திட்டாள் திருமணச் செய்தி.
தலைவன் தலைவியின்
கரம் பிடிக்க வரம்
கேட்பதை அறிவித்தாள்.

சங்கத் தமிழ்க் கவிதை- இது
காட்டுவதோ புதுப்பாதை.
அகத்திணைச் செய்திகளுக்கு
வழித்துணையாய் வருவது
தொண்ணுற்றொன்பது மலர்கள்.
மிகத் தொன்மையானதொரு பாடல்.
தாவரவியலில் ஒரு தேடல்.
குறிஞ்சிக் கபிலர் இதன் தந்தை
பறித்திடும் மலர்களின் எண்ணிக்கை
தருவதோ விந்தை.

உளவியல் அறிந்திட்ட மேதை
உள்ளத்தில் சொறிவதோ போதை.

பூக்களின் பெயர்களை மிகுதியாகக் கூறுவது கால நீட்டிப்புப் போல் தோன்றுகிறது. கூர்ந்து நோக்கினால் இது தலைவியின் அறிவாற்றலைப் புலப்படுத்துகிறது. தன் களவொழுக்கத்தைத் தோழி முதலில் எடுத்துரைத்தால் செவிலிக்குச் சினம் ஏற்படும் என்று கருதி அவள் சினம் தணிவதற்கும் அறிவியலைத் துணை கொள்கிறாள் தலைவி.

களவியலில் அறிவியலோடு உளவியலும் அமைந்திட்ட குறிஞ்சிப்பாட்டு தமிழுக்கு ஒரு தேனூற்று.

கோபத்தினால் வரும் எதிர்வினையைத் தவிர்க்க, சிக்கலான விடயத்தைக் கூட பிறர் ஏற்றுக்கொள்ளும் வகையில் மேலாண்மைத் திறனுடன் செப்பிடும் வித்தை - அக்காலத்திற்கு மட்டுமன்றி எக்காலத்திற்கும் பொருந்தும் விந்தை.
நம் தினசரி வாழ்வில் சினத்தினைத் தவிர்ப்போம் ,இனிமையைச் சேர்ப்போம். சற்று சிந்தித்து பேசினால், சினத்திற்கு இடமேது. சினம் வந்திட்டால், சிரிப்பு சென்றுவிடுமே! ஆத்திரம் உத்திரத்தைத் தொட்டால், நட்டம் சொல்பவர் கேட்பவர் இருவருக்கும் தானே.

இப்பாடல் எழுந்த காரணம் என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாக இருக்கும்- ஆரிய அரசன் பிரகதத்தன் தமிழ்ச்சுவையை அறிய விழைந்திட்டான். தமிழர்க்கே உரிய அகத்திணையின் சிறப்பை உணர்த்தவும் தமிழ்ச்சுவையை ஊட்டவும் பாரியின் நண்பர் கபிலர் கூறி மகிழ்ந்தக் குறிஞ்சிப்பாட்டு தமிழுக்கு ஒரு தாலாட்டு. திக்கெட்டட்டும் இதன் பேச்சு வியக்கவைக்கும் தமிழின் வீச்சு.

ஆம், ஆரிய அரசன் தமிழின் சிறப்பை அறிந்து உணர்ந்தது மட்டுமன்றி தன் தமிழறிவைப் பெருக்கி குறுந்தொகையில் ஒரு பாடல் இயற்றியிருக்கிறான் என்றால், தமிழராகிய நாம் தமிழை தரணியேற்றா வேண்டுமல்லவா, தமிழருடன் தமிழில் பேசுவோம். நம் அடுத்த தலைமுறைக்கு தமிழிலக்கியங்களைத் தங்கத்தட்டில் வைத்து தந்துமகிழ்வோம்.

இதோ அந்தப் பாடல்பகுதி

ஒண்செங் காந்த ளாம்ப லனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள
மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான்பூங் குடச
மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா
விரிமல ராவிரை வேரல் சூரல்
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்தற்
றாழை தளவ முட்டாட் டாமரை
ஞாழன் மௌவ நறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங் குரலி
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க
மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை
யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந் துவாரம்
தும்பை துழாஅய் சுடாப்பூந் தோன்றி
நந்தி நறவ நறும்புன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி
யாரங் காழ்வை கடியிரும் புன்னை
நரந்த நாக நள்ளிரு ணாறி"


கலாப மயில் பலா மரங்கள் நிறைந்த குறிஞ்சி நிலமே வஞ்சியின் களம். உவமைக்குக் கூட அவள் திணைக்குரிய பொருட்களையே கூறவேண்டும் என்று பகர்ந்துள்ளது தொல்காப்பியம். பிற திணைப் பூக்களின் நாமம் தலைவி கூறக்கேட்பது மாயம்.

முல்லைக்குரிய பிடவம், முல்லை, கொன்றை , தோன்றி தோன்றுகிறது. தாமரை, குவளை, வஞ்சி, காஞ்சி, காயா, மருதம் அருமையான மருதநிலத்தைச் சேர்ந்தவை. நெய்தலும் தாழையும் ஞாழலும் புன்னையும் நெய்தலுக்குரியனவே. குரவம் மரா பாதிரி பாலையைச் சேர்ந்தது கபிலரே. வெவ்வேறு நேரங்களில் பூக்கும் இம்மலர்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள் என்று நாங்கள் அறிவோம்.

அழகு நிறைந்த தலைவி, செறிவுள்ளவளாக மட்டுமல்ல அவளை அறிவுள்ளவளாகவும் காட்டுவது மங்கை போகப்பொருளல்ல என்பதை நாநிலமும் அறியட்டும் என்று நினைத்தீரோ கபிலரே.

ஐந்திணைப் பொருள்களின் அறிவை ,அரிவை பெற்றிருக்கிறாள் என்பதன் மூலம் தலைவியை அவள் அறிவைக்காட்டி அறிமுகப்படுத்தியுள்ள கவிஞர் பெருந்தகையே, இன்றைய இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில் கூட பெண்களாகிய நாங்கள் விழைவது அதுவே. எங்கள் அறிவை முன்னிலைப்படுத்துங்கள். எங்கள் பண்பைப் பகருங்கள். புறத்தோற்றத்தை மட்டும் பார்ப்பதை புறந்தள்ளுங்கள்.

அன்புள்ளங்களே அடுத்தவர் மனமுறிய பேசாமல், மனம் அறியப் பேசுவோம், பெண்மையைப் போற்றுவோம். தமிழைத் தரணியில் ஏற்றுவோம். சிறப்பாக வாழ்வோம் வளர்வோம் வாருங்கள்.

நன்றி
வணக்கம்

இனிக்கும் இலக்கியம் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் வானொலியில் 12.3.06 அன்று மாலை ஒலிபரப்பானது

1 comment:

சிங். செயகுமார். said...

கடந்த நாளில் கடைசியில் கொஞ்சம் கேட்ட ஞாபகம்! கபிலர் மேல் என்னதான் கோபமோ!