Sunday, December 05, 2010

அன்புள்ள நண்பர்களே

என்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு ' மலைகளின் பறத்தல் ' விரைவில் வெளிவர இருக்கிறது என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புடன்
மாதங்கி

Tuesday, November 30, 2010

தாமரைப்பழம் - கவிதை

தாமரைப்பழம் போல் இருக்கிறது
தாத்தாவின் முதுகு என்கிறாள்
சாக்கி



எதையுமே கண்டுபிடிக்கமுடியாத
என் முகக்குறிப்பையும்
என் உடல் மீதுள்ள
கொப்புளங்களையும்
கணக்கிட்டுக்கொண்டே
வருகிறான்
கற்பாறை இடுக்கில்
பூத்த துளிரில் குடிவந்து
பல நூறு ஆண்டுகளுக்குப்பின்
மாபெரும் விருட்சம் ஆன பிறகும்
அதிலேயே வசித்து
அருகிலிருக்கும்
மலையின் குறும்பாறைகளை
உண்டும் வாழும்
ஒரு கிம்புருடன்



அவன் மனித முகத்தையும்
குதிரை உடலையும் கண்டு
குதூகலம் அடைகிறாள் சாக்கி


உன் முதுகில் ஏறிக்கொண்டு
வியாபாரம் செய்தால்
நான் ஒப்பிக்கும்
ஆங்கில வாக்கியங்களையும்
அமெரிக்க வெள்ளியில் நான் போடும்
கணக்குகளையும் விடவும்
வேகமாக வெளிநாட்டுப்பயணிகளைக்
கவர்ந்துவிடலாம்,
முடிவில்லா
டோன்லெ சாப் நதிஏரியை விடவும்
பெரிதான கூட்டம் வந்தாலும்
கவலையில்லை
அண்டை வீட்டுத் தோழர்கள்,
தம்பி தங்கைகள் புடைசுழ
அவரவர் பொருள்களுடன்
சேர்ந்துதான் வாடிக்கையாளரிடம்
செல்வோம்


மூன்று தலையளவு
பெரிய தலையுடன் பிறந்த
என் கடைசித் தம்பியை
அங்கோர் தோம்
நுழைவாயிலோரம் கிடத்திக்கொண்டு
மரச்சாமான்கள் விற்று வரும்
அம்மா இனி கவலைப்பட வேண்டாம்
தாத்தா என்கிறாள்



படகு வலித்த கைகளால்
சாக்கியின்
தலையைத் தடவிக்கொண்டே
பார்க்கிறேன்
தாமரைப்பழங்களின்
முத்துக்களைத் தோண்டித்தின்பதைப்போல்
கொப்புளங்களைத் தின்று கொண்டிருக்கிறான்
இந்த கிம்புருடன்



சாக்கி எல்லோருக்கும்
ஓரு வியப்பைத்தர தன்னை
ஆயத்தப்படுத்திக்கொண்டு
அமர்கிறாள்
படகுவீட்டிலிருந்து
நீரில் இறங்கி
படகுப்பள்ளிக்கு
இவன் நீந்தி வருவதை
எண்ணி சிரித்தவளாய்



(அங்கோர் தோம்- கம்போடியக் கோவில்)
அகநாழிகை
2009.12.01

Monday, November 29, 2010

உன்,..

உன் காசோலையை
உன்னிடமே திருப்பி அனுப்புகிறேன்
வழிச்செலவுக்கு
சிலவார்த்தைகள்

முடிந்தால்

Sunday, November 28, 2010

அந்த மலர்க் கூட்டம்

வீட்டிற்குக் கிளம்பிய தோழியை ஜூரொங் பேருந்து நிலையம் வரை சென்று வழியனுப்ப என் புளோக்கை விட்டு கீழே இறங்கி பேசியவாறு வந்து கொண்டிருந்த போது, "குட் ஆப்டர்நூன் ஆண்ட்டி, ஹவ் ஆர் யூ?" மலர்ந்த முகத்துடன் ஒரு குட்டி மலர்கூட்டம் என்னைப் பார்த்து கேட்க, ஹலோ யங் லேடீஸ், ஐ ஆம் பைன், என்று உற்சாகத்துடன் நான் உரைக்க, அவர்களைக் கடந்து சென்ற பிறகு என் தோழி வசந்தி, என்ன மீனா, இவர்கள் யார், என்று புதிராக வினவினாள்.



"இவர்கள் எல்லாம் எனக்குத் தெரிந்த குழந்தைகள், இதோ அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிப்பவர்கள்," என்றேன்.


நான் ஒன்றும் பள்ளி ஆசிரியரோ பள்ளியில் பெற்றோர் உதவிக்குழுவின் உறுப்பினரோ கிடையாது. என் குழந்தைகளும் வேறு பள்ளியில் படித்துவந்தார்கள். பின் எப்படி இத்தனை பள்ளி மாணவிகள் எனக்கு நட்பாயினர். அது ஒரு சுவையான கதை. சில மாதங்களுக்கு முன் நான் முதுகலைப் பட்டப்படிப்பிற்குச் சேர்ந்து தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்தேன். வீட்டிலே அறையில் படித்துப் படித்து சற்றே சலிப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் எங்கள் அடுக்ககத்தின் கீழ்தளத்தில் சிமெண்ட்டில் செய்து வைக்கப்பட்டிருந்த மேசை நாற்காலியில் அமர்ந்து காற்றாடப் படிக்கலாம் என்று கீழே புத்தகமும் கையுமாக நான் கீழே வந்திறங்கி வசதியாக அமர்ந்து பாடங்களைப் படிக்கத் துவங்கினேன். மணி மதியம் நான்கு இருக்கலாம். என் பிள்ளைகள் மாலை ஆறு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள்.
நான் படிக்கத் துவங்கி பத்து நிமிடங்கள் கூட ஆகியிராது, திடீரென்று ஒரு சிறு ஆரவாரம்; நிமிர்ந்து பார்த்தேன்; ஏழெட்டுப் பெண்குழந்தைகள், பள்ளிச் சீருடையில் என்னை நோக்கி, புத்தகப்பையுடன் வந்து கொண்டிருந்தனர். மலாய், சீன, இந்திய மாணவிகள் என்று கலந்திருந்த நட்பு வட்டம் போலிருந்தது அது.


நான் உட்கார்ந்திருந்த பெஞ்சு ஒரு பெரிய அரை வட்டத்தினதாக இருந்தது. அதன் நடுவில் நான் அமர்ந்துகொண்டிருந்தேன். நான் தொடர்ந்து படிக்கத்துவங்கினேன். அடுத்த இரண்டாவது நிமிடம் ஓர் அதிசயமான சம்பவம் நிகழ்ந்தது. உரத்த குரலில் ஏதோ பேசியவாறு என் இரு புறமும் அப்பெண்கள் சூழ்ந்து அமர்ந்து கொண்டனர். ஒரு வேளை அவர்கள் பள்ளி விட்டவுடன் தினமும் இங்கு வந்து அமர்ந்து பேசுவார்கள் போலிருக்கிறது; சரி, வேறு
எங்காவது போகலாம் என்று நினைத்தேன்.


"ஹேய், வாட் ஆர் யூ ரீடிங்?" என்று அலட்சியமாக கேட்ட பெண்குழந்தைக்கு பதிமூன்று அல்லது பதினான்கு வயது இருக்கலாம். அடுத்த வினாடி மற்றொரு சிறுமி ஒரு வெண்சுருட்டைப் பையிலிருந்து எடுத்து என்னவோ மிகவும் பழக்கமானது போல் பற்றவைத்து என் முகம் அருகில் புகையை விட்டாள்.


அடுத்த வினாடி அங்கிருந்து எழுந்து சென்று
விட வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் விடுத்தேன்.
மனமே சற்று நிதானமாக இரு என்று பரபரத்த என் மனதிற்கு ஒரு சிறு கடிவாளம் போட்டேன். முகத்தில் ஒரு சிறு புன்னகையை வரவழைத்துக்கொண்டேன். எங்களுக்குள்
நிகழ்ந்த உரையாடல் முழுக்க ஆங்கிலம் என்பதால் அதைக் கூடுமானவரையில் தமிழில் உங்களுக்குத் தருகிறேன்.


நான் உற்சாகமான குரலில், "ஹாய் யங் லேடீஸ், நான் பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறேன்; காற்றாடப்
படிக்கலாம் என்றுதான் இங்கு வந்தேன்," நட்போடு புன்னகைத்தேன்.

"அலோ, நான் வின்னி," என்றாள் முதலில் என்னை அதட்டலுடன் விசாரித்த சிறுமி.

சிறுமிகளில் ஓரிருவர் தத்தம் பெயர்களைச் சொல்லி என்னிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். சிலர் ஏதும்
பேசாது இருந்தனர்.

"என்ன, பள்ளி விட்டதும் தோழிகளுடன் சந்தோஷமாக அரட்டையா, " வேடிக்கையாகக் கேட்டேன்.

அப்போது என் முகம் அருகில் புகை ஊதிய சிறுமி சற்று நகர்ந்து கொண்டு வெட்கத்துடன் நெளிந்ததை கவனித்தாலும் பார்க்காததுபோல் இருந்தேன்.

அடுத்து சில நிமிடங்களில் அவர்கள் ஏழு பேரும் தத்தமது பெயரைக் கூறி, தங்கள் வகுப்பு, தங்கள் வீடு எங்கிருக்கிறது என்றெல்லாம் சொல்லி, தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
உயர் நிலை ஒன்று படிக்கிறார்களாம். பள்ளி நேரம் முடிந்த பின் இங்கு அல்லது எதாவது ஓர் இடத்தில் அரட்டை அடித்துவிட்டுத் தான் போவார்களாம்.


என்ன படிக்கிறீர்கள் ?

இலக்கியம்

உங்களுக்குத் திருமணமாகி விட்டதா, கணவர் என்ன செய்கிறார், வேலைக்கு போகிறீர்களா, சரமாரியான கேள்விகள்.


"எங்களுக்குத்தான் வேறு வழியில்லை, நீங்கள் எதற்கு படித்துக் கஷ்டப்படுகிறீர்கள். வேலைநேரத்திற்குப் பின்
ஷாப்பிங், டி.வி. என்று நேரத்தைச் செலவழிக்கலாமே?" இது கேத்தி


"இந்த வயதில் எதற்குப் படிக்கிறீர்கள்"- இது அனிதா

"நான் புகைப்பதை நீங்கள் ஆட்சேபிக்கப் போகிறீர்களா?- செல்வி ஐயத்துடன் கேட்டாள். அவள் பின்னால் இருந்த
ரீகா அடுத்த வெண்சுருட்டை எடுத்துக்கொண்டிருந்தாள்.


"கட்டாயம் ஆட்சேபிக்க மாட்டேன். ஏனென்றால் நீங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை அறியாதவர்கள் அல்ல; உங்களுடன் பேசியதில் நீங்கள் புத்திசாலிக் குழந்தைகள் என்பதை அறிந்து கொண்டேன்; நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பித்தான் இப்படிச் செய்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது, " சிறு புன்னகையுடன் நிதானமாகக் கூறினேன்.


"ஆம், சரிதான், நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் ஆண்ட்டி, என்றார்கள் ரிகானாவும் பர்வீனும். எங்கள் வீட்டில் இன்று காலை பெரிய சண்டை, என்னை அவர்கள் தங்கள் இஷ்டப்படி
நடந்துகொள்ளவேண்டும் என்று கூறுகிறார்கள்; என்ன அநியாயம்
தெரியுமா?" ஒருத்தி பொருமத்துவங்கினாள்.


அவள் மேலே பேசியதிலிருந்து நான், அவர்கள் என்ற அவள் அருமைத்தாயையும் தந்தையையும் குறிப்பிடுகிறாள் என்பதை அறிந்துகொண்டேன்.


"நீ சுதந்திரத்தை எதிர்பார்க்கிறாய் இல்லையா?"


"ஆமாம்," என்று அவள் மட்டுமன்றி எல்லோரும் ஒட்டுமொத்தமாக தலையாட்டினார்கள்.


"எப்போதுபார்த்தாலும் படி, படி, படி, இன்னும் கூடுதல் மதிப்பெண் வாங்கு- தொலைக்காட்சிப் பார்க்காதே, கணினியில் விளையாடிக்கொண்டே இருக்காதே, என்று சதா ஒரு தொணதொணப்பு; அவர்கள் மட்டும் நன்றாக பார்க்கிறார்கள், நாங்கள் துறவி மாதிரி இருக்க வேண்டுமாம்."



"வீட்டில் இருக்கும் நேரம் முழுதும் ஒரே டார்ச்சர்; அவள் இப்படி படிக்கிறாள், இவன் இவ்வளவு மதிப்பெண்
வாங்குகிறான், உனக்கு என்ன கேடு- இன்னும் நிறைய பயிற்சித் தாள் செய்து பழகு; ஆயிரம் கணக்கு போட்டால் தான் நூற்றுக்கு நூறு வாங்கலாம்- இது கேத்தி, வின்னி, செல்வி, பர்வீன், அனிதா, ரீகா, ரீகானா என்று எல்லோரும் ஒட்டு மொத்தமாக மூக்கால் அழுதார்கள்".


"கொஞ்சம் படிப்பைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு வேறு எதாவது பேசலாமா?"


சட்டென்று எல்லார் முகமும் பிரகாசம் அடைந்தது.

"உங்களுக்கு பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள் இல்லையா ஆண்ட்டி?-" ஒரு துடுக்குக்காரியின் கேள்வி.


"இருக்கிறார்கள். உங்கள் வயதுதான், அதனால் தான் உங்களுடன் பேச எனக்கு ஆர்வம் இருக்கிறது"


அதற்குள் இரண்டு இளசுகள் களுக்கென்று சிரித்துக்கொண்டனர். " ஏ, சொல்லாதே, சொல்லாதே", அனிதா


கண்சாடைகாட்டினாள். மற்றொருவள் " ஆண்ட்டி, உங்களை இந்த பெஞ்சில் பார்த்தவுடன், இங்கிருந்து உங்களை அனுப்பிவிட்டுத்தான்
மறு வேலை என்று பேசிக்கொண்டாள் இவள்,"


"அப்படியா? சரி உங்களில் யார் யாருக்கு படிப்பைத் தவிர வேறு விஷயங்களில் அதாவது விளையாட்டு, நாடகம், பாட்டு, ஓவியம்
முதலியவற்றில் ஆர்வமுள்ளது; அதெயெல்லாம் சொல்லுங்கள் பார்க்கலாம்"


"எனக்கு சீன டிபேட்( சொற்களம்) என்றால் உயிர்" -துள்ளினாள் வின்னி.


"இவள் சென்ற ஆண்டு இறுதிச் சுற்று வரை போனாள், கடைசியில் பரிசு கிடைக்கவில்லை தோற்றுவிட்டாள்," என்றாள் பக்கத்திலிருந்த கேத்தி;


பளிச்சென்றிருந்த வின்னியின் முகம் உடனே வாடிச் சோர்ந்து போனது.


"என்ன இறுதி சுற்று வரை சென்றாளா?" குரலில் குதூகலத்துடன் வியப்பையும் வரவழைத்துக்கொண்டேன். வரவழைத்துக்கொண்டேன் என்று சொல்லுவதுகூட சரியன்று, உண்மையிலேயே எனக்கு வியப்பாக இருந்தது;
மேடையில் ஏறினாலே எனக்கு கைகால்கள் மிகவும் உதறல் எடுக்கும். பரவாயில்லை இந்த சிறுமிக்கு நல்ல துணிவுதான்.



"மேடையில் ஏறி பேச முதலில் மேடைதைரியம், வார்த்தைகளை சரியாக பயன்படுத்தும் திறன் எல்லாம் வேண்டும்.
அதிலும் சொற்களம் போன்ற தொடர் பேச்சுப்போட்டியில் நீ இறுதிச்சுற்று வரை வந்துள்ளாய் , நீ பெரிய திறமைசாலிதான் வின்னி; இந்த சிறு வயதில் மூன்று சுற்றுகளில் வென்றிருக்கிறாய் ".




"ஊம், என்ன செய்வது எல்லாம் என் விதி, உங்களைப் போன்ற அம்மா எனக்கு கிடைத்திருக்கக்கூடாதா; நான்
தோற்றுவிட்டு வந்தவுடன் என் அம்மா என்ன சொன்னார்கள் தெரியுமா? எனக்கு தெரியும், நீ சொற்கள பயிற்சி வகுப்புக்குச் சென்றதெல்லாம் வீண்வேலை; முதலில் இந்த வெட்டித்தனத்தை நிறுத்து, படிப்பை ஒழுங்காகப் படி,
என்றார்கள், " என்று கூறி நான் சற்றும் எதிர்பாராத வண்ணம் அழத்துவங்கினாள்.




பதினான்கு வயதுச் சிறுமி பேசுவதைக் கேட்டு நான் முதலில் அதிர்ந்து போனாலும் என் மனம் அந்தக்குழந்தைகாக வருந்தியது நிஜம். தோற்றதற்காக அல்ல, அந்த தோல்வியில் குழந்தைக்கு தோள் கொடுக்க பெற்றோர் தவறலாமா? என்றாலும், நினைத்ததை நான் உடனே சொல்லவில்லை;



சில வினாடிகள் கழித்து நான், "வின்னி, நீ, பரிசு வாங்காத ஏமாற்றத்தில்தான் அம்மா திட்டினார்கள் என்று நினைத்துக்கொண்டு நீ சற்று நேரம் வேறு வேலையில் உன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பாயே, " என்று மென்மையாக கேட்டேன்.




வின்னி தலையை குனிந்துகொண்டாள்; "இல்லை ஆண்ட்டி, நான் அறைக்கதவை அறைந்து சார்த்திவிட்டு, கோபத்தில் கத்திக்கொண்டிருந்தேன்; அப்புறம் என்ன அடிக்கடி சண்டை வருகிறது, இது இல்லை என்றால் அது மொத்தத்தில் எப்படியோ சண்டை எதற்காகவோ வந்துவிடுகிறது ".




"ஊருக்குத்தான் உபதேசம், நான் பல் விளக்காமல் காபி குடித்ததற்கு உடல்நலக்கேடு வரும் என்று என் அப்பா என்னை கன்னத்தில் அறைந்தார். அவர் சங்கிலித்தொடர்போல் புகை பிடிக்கிறார். இது தவறில்லையா? இப்போது நான்
புகைபிடிக்கிறேன், என் அப்பாவால் எதுவும் செய்ய இயலாது" இது ரீகா




"ஒருநாள் ஜாக்கிசான் படத்தின் திரைக்கதையை இவளுடன் பேசிக்கொண்டே இருந்ததால் வீட்டிற்கு நேரம் கழித்துப் போனேன்; நான் ஆனமட்டிலும் கெஞ்சியும் என் அம்மா நம்பவில்லை எவ்வளவு கேவலமாக பேசினார்கள் தெரியுமா நான் ஆண் சினேகிதனுடன் சுற்றிவிட்டு வந்து பொய் சொல்கிறேனாம் ; நட்பு என்றால் என்ன என்பதே, இவர்களுக்குத்
தெரியாது, அப்புறம்தானே ஆண்பெண் வித்தியாசமெல்லாம் " -செல்வியின் கண்ணில் கண்ணீர்.



மாறி மாறி அந்த குழந்தைகள் தங்கள் குமுறல்களை கொட்டக் கொட்ட நான் அதிர்ந்து போனேன். பால்வடியும் இந்த முகங்களுக்குள் இத்தனை போராட்டமா?


"ஆண் நண்பர்களிடம் பழகுவது தவறா ஆண்ட்டி?"


"ஆணோ பெண்ணோ, உங்கள் நெருங்கிய நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் முடிந்தால் அவர்கள்
குடும்பத்தினரையும் உங்கள் பெற்றோருக்குத் தெரிந்திருந்தால் நலம் "


"ஆண்ட்டி எங்களையெல்லாம் கெட்டகாரியம் செய்யும் பெண்கள் என்றுதானே
நினைக்கிறீர்கள் உண்மையைச் சொல்லுங்கள்".



நான் என் முகத்தில் புன்சிரிப்பைத் தவழவிட்டேன்; " உண்மையைச் சொல்லுகிறேன். நான் சொல்லி முடிக்கும் வரை நீங்கள் பொறுமையாக கேட்க வேண்டும்".

"நீங்கள் எல்லோரும் டீசண்டான குழந்தைகள்; புத்திசாலிகள், குறிப்பாக எதையாவது செய்ய வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற வேகம் இருப்பவர்கள், " என்றவாறு மெதுவாக நிறுத்தினேன்.



அவர்கள் முகத்தில் ஆச்சரியம் மட்டுமின்றி ஒரு கெஞ்சுவதுபோல் பார்வை, பாருங்கள் மூன்றாம் மனிதரான நீங்கள்கூட எங்களை சரியாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள், என்பது போல்...
இந்தக் கதையை கேட்கும் நீங்கள் நிச்சயம் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். அந்தக் குழந்தைகளின் கண்களில் புத்தொளியைப் பார்த்தேன்.


"உங்கள் சாதனைக்காக காத்திருப்பது உங்கள் பெற்றோர் மட்டுமல்ல குழந்தைகளே,...".


"நீங்களா ஆண்ட்டி?" -அதே துடுக்குக்காரியின் குறும்பு விடவில்லை


"ஆமாம் பின்னர் இல்லையா? நீங்கள் என் நண்பர்கள் அல்லவா; என்னை விட இன்னும் பெரியது"



"வேறு யார் ஆண்ட்டி, எங்களுக்காக காத்திருப்பது?"


"தோழிகளே நம்நாடுதான் அது. வளமான விதைகளே வளமான விருட்சங்களைத் தரும்; உங்களைப் போன்ற துடிப்பும் ஆர்வமும் உள்ள இளையர்கள் கையில்தானே நாம் சிங்கப்பூர் இருக்கிறது,"



"நான் என்ன செய்துவிட முடியும் ஆண்ட்டி?"


'சொற்களம் என்ற சக்கர வியூகத்துக்குள் நுழைந்த வின்னி நாள் ஒரு பெரிய வழக்கறிஞர் ஆகலாம். பூப்பந்தைப்
பொழுதுபோக்கிற்காக விளையாடும் கேத்தி அதில் தனிக்கவனம் செலுத்தினால், நாடு ஒரு பூப்பந்து தாரகையைப் பெறலாம், மேலும் பூப்பந்து பயிற்றுவிப்பாளராகலாம், இதோ இடையிடையே நகைச்சுவையோடும்
சாதூர்யமாகவும் கேள்வி கேட்கும் அனிதா பத்திரிகை நிருபராகவோ ஆசிரியராகவோ வரலாம். ரீகா மருத்துவராகலாம், செல்வி ஓவியராகலாம் கணிப்பொறியில் கேலிசித்திரங்கள் வடிவமைத்து சிறந்த கலைப்படம் உருவாக்கி விருது வாங்கலாம்,
குறும்படங்கள் எடுக்கலாம், பாட்டில் ஆர்வமுள்ள ரீகானா காராவோக்கே முறையில் இன்னும் பயிற்சிசெய்து பாடகி ஆகலாம், எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வமுள்ள பர்வீன்
சிறந்த எழுத்தாளராகி பல புத்தகங்கள் எழுதலாம்'
அவர்கள் என் மதிப்பீட்டைக் கேட்டு வியந்து போய் பேச்சடைந்து போய்விட்டார்கள்.
"தனித்திறமை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் கட்டாயம் இருக்கும். உங்களது தனித்திறமைகள் உங்களுக்கு தெரிந்திருப்பது உங்கள் கெட்டிக்காரத்தனத்தைக் காட்டுகிறது. அதை வளர்த்துக்கொள்ளுங்கள். படிப்பு என்பது அடித்தளம்; தேவையானால் கூடுதல் பயிற்சிக்குச் செல்ல ஆசிரியர் பெற்றோர் உதவியை
நாடுங்கள், அது உங்களுக்கு ஏற்ற பாதையைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டும்".




"இதோ நான் பார்க்கத்தான் போகிறேன். உங்கள் ஒவ்வொருவரிடமும்
ஒரு சாதனையாளர் இருக்கிறார். அது நமது நாட்டுக்குத் தேவை. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப்பாருங்கள், அவர்களுக்கும் பல தடைகள், அவமானங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சரித்திரம்
படியுங்கள் சரித்திரம் படைப்பீர்கள் இது நிச்சயம். எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.
எந்த இடர் வந்தாலும் அறிவையும் மனதையும் கலந்து ஆலோசித்து முடிவுக்கு வர வேண்டும் ".



"நாங்கள் சாதாரண மாணவிகள் ஆண்ட்டி, நாங்கள் பாடங்களில் தொண்ணூறு நூறு எல்லாம் வாங்கியதில்லை; எழுபது அறுபது சில சமயம் ஐம்பது, சில சமயங்களில் தோற்றுக்கூட இருக்கிறோம் "-இது செல்வி


"சாதனை மாணவி அல்லது மாணவன் என்று யாரும் பிறப்பதில்லை குழந்தைகளே; சாதாரண மாணவிதான் சாதனை மாணவி ஆகிறாள்; என்னால் முடியும், எங்களால் முடியும், நம்மால் முடியும் என்று
நம்புங்கள்; உங்களால் எதுவும் முடியும். மாணவர் சக்தி மகத்தான சக்தி". "நாட்டுக்கு உங்களைப்போன்ற துடிப்பான இளம் கைகள் தேவை தெரியுமா. ஒரு நல்ல நட்பு வட்டத்துள் இருக்கிறீர்கள்; உங்கள் திறமைகளை வளருங்கள். வருங்கால சிங்கப்பூருக்கு நீங்கள் வளம் சேர்க்க வேண்டும்"



"கட்டாயம் ஆண்ட்டி, நான் நாட்டுக்கு பயனுள்ளவர்களாக இருப்போம்", என் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் சொரிந்த அந்த மலர்கூட்டத்தில் நானும் கண்கலங்கிப் போனேன்.



"ஆண்ட்டி, வீட்டில் தினசரி சண்டை வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் வருகிறது, அதற்கு நாங்கள் என்ன செய்வது?"



நிமிர்ந்து பார்க்கிறேன், வாஸ்தவமானக் கேள்விதான்.
இந்தக் குழந்தைகள் என்னிடம் கொட்டிய தங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளை மனதினுள் நினைவு கூர்ந்தேன்.



"உங்கள் அம்மாவும் அப்பாவும் உழைப்பது நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான், வேலைப் பளு காரணமாக அவர்கள் எதாவது கோபத்தில் சொன்னால் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். பெற்றோரிடம் உங்கள் அன்பை அடிக்கடித் தெரிவியுங்கள். உங்கள் அம்மா அப்பாவிற்கு எதாவது ஆபத்து என்றால் எப்படி துடித்துப்போவீர்கள்?"




"சரியாக சொல்கிறீர்கள், ஆண்ட்டி, என் அம்மாவிற்கு சென்ற ஆண்டு விடுமுறையில் ஒரு சிறு அறுவைச்
சிகிச்சை நடந்தபோது நான்தான் பொறுப்பாக வீட்டில் இருந்து தம்பிப்பாப்பாவைப் பார்த்துக்கொண்டேன். என் அம்மா
வீடு திரும்பியவுடன் என்னைக் கட்டிக்கொண்டு அழுதார்கள்-" இது கேத்தி




"உன் அம்மா உங்கள் வீட்டிற்குத் தானே இரவு ஷிப்ட்டை ஏற்றுக்கொண்டு அயராது உழைக்கிறார். உன் தந்தை இரண்டு இடங்களில் பணிபுரிவதாகச் சொன்னாய் ரீகா; உங்களுக்கு கைச்செலவுக்குக் கூட பணம் தாராளமாகக் கொடுக்கப்படுகிறது. அதை புகைப்பதற்கு செலவழிப்பதா, அல்லது நல்ல வழியில் செலவழிப்பதா என்பது உங்கள் கையில் உள்ளது. வளமான விதைகளே வளமான விருட்சங்களைத் தரும்"




"ஆண்ட்டி, இனி நாங்கள் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு செயல்பட போகிறோம்" என்று என்னிடம் உறுதி கூறியது மட்டுமல்லாமல் அடுத்து சில நாட்கள் கழித்து அவர்களை நான் பூங்காவில் சந்தித்த போது ஓடி வந்து தங்களது சிறு சிறு முன்னேற்றங்களைக் கூட தெரிவித்தார்கள். வளமான விதைகள் வளமான விருட்சங்களைத் தரும் என்பது உண்மை ஆண்ட்டி; சரித்திரம் படைப்போம்; சாதனை புரிவோம் என்று அவர்கள் ஒருமித்த குரலில் கூறிய போது அவர்கள் கண்களிலும் அந்த உறுதியைக் கண்டு மனம் பூரித்தேன். இதுதான் நடந்த கதை.




தோழியை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் விரைந்தேன். என் மகள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள். தோழி வந்தபோது பார்க்கத் துவங்கியவள் இன்னுமா அணைக்காமல் இருக்கிறாள், எனக்கு கோபம் சுறுசுறுவென்று தலைக்கு ஏறியது. இத்தனை நேரமா தொலைக்காட்சியா, இதுல காட்டுற அக்கறைய படிப்புல காட்டு, என்று கோபத்துடன் இரைந்துவிட்டு பட்டென்று தொலைக்காட்சியை அணைத்தேன்.

இருப்பது என்று நினைப்பதூஉம்

நான் இருக்கிறேன்
உனக்கு என்கிறேன்
நான் இருக்கப்போவதில்லை

நீயிருக்கிறேன் என்கிறாய்
நீயும் இருக்கப்போவதில்லை


நமக்கு இன்னென்ன
இருக்கின்றன
சொல்லப்படுகிறது
அவையும் இருக்கப்போவதில்லை


இருந்துகொண்டிருக்கும்
இந்தக் கணம்
இல்லாததை
இருப்பதாக்குகிறது

Sunday, November 21, 2010

சாதாரண மனிதன்

இளநீர்க்காயை அப்படியே ஒருபக்கம் வைத்துவிட்டு தேவி ஆயாசத்துடன் உட்கார்ந்துகொண்டாள். வீட்டிலிருந்த மூன்று கத்திகளையும் ஒவ்வொன்றாகப் பயன்படுத்தி, குத்திக்குத்திப்
பார்த்தாகிவிட்டது. எதற்கும் மசியாமல் இருக்கிறது இந்த இளநீர்க்காய்.

டுயிட் , டுயிட்
முன்னறை சன்னலில் மைனாவின் குரல் கேட்டது. வேறொரு சமயமாக இருந்தால் இரண்டு வயது குழந்தை தூரிகா, அம்மா அம்மா என்று மெல்ல விரலை வாய்மேல் வைத்து அவளை எச்சரித்தபடி மெதுவாக அழைத்து வந்து காட்டியிருப்பாள். இல்லை கலகலவென்று சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கும் சமயம் என்றால், அம்மா உன்னைப் பாக்க மைனா வந்திருக்கு என்பாள். இரண்டுக்கும் ஆன சமயம் இது இல்லை. குழந்தை
இத்தனை நேரம் அவள் மடியை விடாமல், அனத்திக்கொண்டிருந்துவிட்டு சிறிது பொழுதுக்கு முன்னர்தான் தூங்கியது. அலுங்காது அதன் சிறிய படுக்கையில் கிடத்தியவள் இப்போது இந்த இளநீருக்காக ஒரு சிறு போராட்டம் நடத்திக்கொண்டிருந்தாள்.



விடியற்காலையிலேயே சோர்வுடனும் லேசான காய்ச்சலுடன் இருந்த குழந்தையை அவள் வழக்கமாக செல்லும் வீட்டுக்கருகில் இருந்த மருத்துவர் வாங்'கிடம் பிராம் வண்டியில் குழந்தையை வைத்து அழைத்துக்கொண்டு போனாள். மணல்வாரியாக
இருக்குமோ என்று தோன்றியது. மருத்துவர் பொது சோதனைகள் எல்லாம் செய்துவிட்டு ரோசியோலா தொற்று என்று சொல்லிவிட்டு இரண்டொரு நாளில் தானாக சரியாகிவிடும் என்றவாறு மருந்தை கையோடு கொடுத்திருந்தார். இளநீர் கொடுக்கலாமா என்று கேட்டதற்கு தாராளமாக கொடுங்கள், முடிந்தவரை திரவங்களை சிறு இடைவேளைகளில்
குழந்தை விரும்பும் அளவு கொடுங்கள், இச்சமயத்தில் திடஉணவை குழந்தை அவ்வளவாக
விரும்பாது என்று சொல்லிவிட்டு சில பொதுவான அறிவுரைகளைக் கூறியிருந்தார்.



குழந்தையைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு கடைக்குச் செல்ல முடியாது என்பதால் வரும்வழியிலேயே 'ஷாப் அண்ட் சேவ்' இல் நான்கைந்து இளநீர்க்காய்க்களை வாங்கி அப்படியே குழந்தைவண்டியின் அடிக்கூடையில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டாள். நாராயணன் வீட்டுக்குத்தேவையான காய்கறி பழங்கள் முதலியவற்றை வாங்கிப்போட்டுவிட்டுதான் அலுவலக வேலையாக கொரியா சென்றிருந்தான். பொதுவாக ஷாப் அண்ட் சேவ் இல் 'டாப் ஆ·ப் கோகனட்' என்ற வகை கிடைக்கும் அதில் இளநீர்க்காயின் மேல்பகுதியில் உள்ளங்கையளவில் ஒரு சிறு வட்டக்குறி காணப்படும். ஒரு சாதாரணக்கத்தியால் அதை கீறினாலே திறந்துகொண்டுவிடும். சோதனையாக இன்று அந்த வகை இல்லை எப்போதும் கிடைக்கும் மற்றொரு வகையே இருந்தது. எப்படியும் வீட்டில் இருக்கும் கத்தியால் திறந்துவிடலாம் என்று எண்ணியே அதை வாங்கி வந்திருந்தாள்.


குழந்தை காலையில் பாலைக் கண்ணில் பார்த்தாலே வேண்டாம் வேண்டாம் என்றது. பாதி ரொட்டி சாப்பிட்டுவிட்டு போதும் என்றுவிட்டது. அவள் எப்படியோ தாஜா பண்ணி சிறிது குளூக்கோஸ் கலந்த
நீரை புகட்டிவிட்டாள். சிறிது நேரம் கழித்து கண்விழிக்கும்போது எப்படியாவது இளநீரைக் கொடுத்துவிடவேண்டும் என்று அவளும் படாதபாடு பட்டாள், ஒரே இடத்தில் குத்திப்பார்த்தாள், வேறு மென்மையான இடம் தேடி குத்திப்பார்த்தாள் ஒன்றும் பலிக்கவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால் யாரிடம் கேட்பது, அவர்கள் தங்கியிருந்த அடுக்ககத்தின் பதினொரு தளங்கள் மட்டுமல்ல அருகில் இருக்கும் அடுக்ககங்களிலும் காலை பத்துமணிக்கு ஒரு பயங்கரமான மௌனம் கவ்வி விடும். ஒரு தளத்திலாவது மனித நடமாட்டம் காணப்படாது. சிங்கப்பூரில் பெரும்பான்மையான வீடுகள் இப்படித்தானோ என்று தோன்றியது. காலை அவரவர் அலுவலகம், பள்ளிக்கூடம் என்று விடியற்காலையில் கிளம்பிவிட்டால் அவர்கள் அடுக்ககத்தின் மின்தூக்கிக்கு வேலையே இல்லை. மதியம் இரண்டு அல்லது மூன்று மணிக்கு ஏதேனும் பள்ளிக்குழந்தைகள் தென்படுவர். வீட்டில் முதியவர்களோ, பணிப்பெண்களோ இருக்கும் வீடுகளைத் தவிர வேறெல்லாம் வெறிச்சோடிக்கிடக்கும். நான்கைந்து ப்ளோக் தாண்டி நாராயணனின் நண்பர்கள் ராமு மற்று பெஞ்சமின் வீடு உள்ளது. ஆனால்
இந்நேரத்தில் அவர்கள் வீட்டிலும் யாரும் இருக்கமாட்டார்கள். அவளுடைய வேறு சில
நண்பர்கள் சிங்கப்பூரில் வெவ்வேறு வட்டாரங்களில் இருப்பவர்கள். இளநீரைத் திறக்க எங்கு எடுத்துக்கொண்டு ஓடுவது. இதுபோல் சொகுசுக்கடைகளில் வாங்கினால் எங்கு
திறப்பது. ஒருவேளை வீட்டில் பெரிய கத்தி அல்லது அரிவாள் போல் ஏதேனும் இருந்திருந்தால் திறக்க முடியுமோ. என்ன செய்வது, இரண்டு உள்ளங்கை விரல்களையும் நேருக்கு நேராக பொருத்தி வளைத்து நெட்டி முறித்தாள். குத்திக்குத்திப் பார்த்து கைவலிதான் மிச்சம். வேலை ஆகவில்லை. ஒருவேளை கோகனட் ஜூஸ் என்ற பெயரில் கடையில் அலுமினிய டின்களில் அடைத்துவைத்திருந்த இளநீரை வாங்கியிருக்கலாமோ, சே சே, முடிந்தவரை டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் பானங்கள் இதெல்லாம் வாங்குவது வேண்டாம் என்று வைத்திருக்கிறாள். திடீரென்று பக்கத்து ப்ளாட்டின் இரும்புக்கம்பிக்கதவு சாவியால் வேகமாகத் திறக்கப்படும் ஓசை கேட்டது, தொடர்ந்து மரக்கதவு திறக்கும் ஒலியும் பின் கதவு அறைந்து சார்த்தப்படுவதும் அந்த துல்லியமான அமைதியைக் கிழித்துக்கொண்டு கேட்டது. தேவி சட்டென்று எழுந்து நேராக படுக்கையறைக்குச் சென்று தூங்கும் குழந்தை அருகில் அமர்ந்துகொண்டாள்.




அவன்தான், அவனேதான். அவளுக்கு எரிச்சலும் கோபமும் சேர்ந்து வந்தது. அவர்கள் இந்த வீட்டுக்கு வந்தபுதிதில் பக்கத்துவிட்டில் குடியிருந்த சீனக்குடும்பத்துடன் ஓரளவும் முகமன் சொல்லும் அளவுக்கும் ஓரிரு வாக்கியங்கள் வாரயிறுதியில் பேசுவதுமாக இருந்தாள். பெரும்பான்மையான சீனர்கள் குறைவாகப் பேசிக் கடுமையாக உழைப்பவர்கள் என்று ஒரு கருத்தும் அவளுக்கு இருந்தது. இரு மாதங்களுக்கு முன் அந்தக்குடும்பம் வீட்டைக்காலிசெய்துவிட்டு காண்டோமினியத்திற்குச் சென்றபின் திடீரென்று ஒரு நாள் பக்கத்துவீட்டு முன்வாயிலில் ஒரு சீன இளைஞனைப் பார்த்தாள், அப்படியே ஹாங்காங்கில் இருக்கும் அவள் தம்பி கணேசனின் வயது இருக்கும். முழுக்கை சட்டையும் முழுகால்சட்டையும் கழுத்துப்பட்டையும் அணிந்துகொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பிக்கொண்டிருந்தான். வேறு யாரும் வீட்டிலிருப்பதாகத் தெரியவில்லை. அவளே சற்று அமைதியான சுபாவம், பார்த்தவரை சினேகம் செய்துகொண்டு கலகலப்பாகிவிடும் சுபாவம் என்று சொல்லமுடியாது , நாராயணன் அவளைவிட இன்னும் குறைவாகவே பேசுபவன். இதற்கு ஏற்றாற்போல் இங்குள்ள பெரும்பான்மையான வீட்டுமனிதர்களும் தானுண்டு தன்வேலை உண்டு என்று இருப்பவர்கள். மின்தூக்கியில் கூட வெவ்வேறு திசைபார்த்துக்கொண்டு பயணம் செய்யும் அளவிற்குத் தலையிடாதவர்கள். மின்தூக்கியில் ஏறுவதும் இறங்குவதும் கூட பயணம்போல்தான், ஏதேனும் குட்டிக்குழந்தையின் கையசைப்பு இறுக்கத்தைக் குறைக்காதவரை, கனத்த மௌனம் கவ்வும் போதும் ஒவ்வொரு நொடியும் நீண்டதாகத்தோன்றுவது இயல்புதானே. அவனைப்பற்றி கிட்டத்தட்ட மறந்துவிட்டிருந்தாள்.



ஒரு ஞாயிறு இரவு, அவள் வாரயிறுதியில் செல்லும் பகுதிநேர முதுகலைவகுப்பு
முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். வீட்டில் தூரிகாவுடன் நாராயணன் இருந்தான். அவர்கள் அடுக்ககத்தின் கீழ்த்தளத்தில் நின்றுகொண்டு, மின்தூக்கியில் அவர்கள் வீடு இருக்கும் பத்தாம் தளத்திற்கு ஏற அவள் உள்ளே நுழைந்தபோது பக்கத்துவிட்டு
இளைஞனும் வேகமாக நுழைந்துகொண்டான். அது மறக்கமுடியாத ஒரு நினைவைத் தரப்போகிறது என்று அவள் அப்போது அறியவில்லை. ஏதோ ஒரு பனியனும் பெர்முடாசும் அணிந்திருந்தான். பெரிய முதுகுப்பை ஒன்றை சுமந்துகொண்டிருந்தான். கதவுகளை மூடச்செய்யும் பொத்தானை அவள் அமுக்க கைநீட்டும்போது தற்செயலாக அவனும் கைநீட்ட, அவன் கையைப் பார்த்த தேவி திடுக்கிட்டுப்போனாள். அவனோ அவளை கவனிக்காமல் அதை அமுக்கிவிட்டு, மின் தூக்கியில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்ததால் பத்து என்று பொறிக்கப்பட்டிருந்த பொத்தானையும் அடுத்து அழுத்தியபோது இன்னும் நன்றாக கவனித்தாள். அவளுக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. உமிழ்நீரை இரண்டுமூன்று முறை விழுங்கிக்கொண்டாள்.
அவன் வலது உள்ளங்கையின் வெளிப்புறத்தில் பெரிய நட்சத்திர வடிவில் ஒரு பெரிய புடைப்பு இருந்தது. அதே கையில் மணிக்கட்டுக்குக்கீழ் சாய்வாக அடுத்தடுத்து மூன்று
நீள் கோடுகள் இருந்தன. கோடுகளா அவை இல்லவே இல்லை. காய்ந்த சுண்டை வத்தல்
அல்லது கோலிகுண்டைவிட ஓரிரு சுற்று சிறிய உருண்டை அளவில் நான்கு உருண்டைகள் வரிசையாக இருந்தன. இதைப்போல் மூன்று வரிசைகள். சிங்கப்பூரில் இளையர்கள் உடலில் வெவ்வேறு விதங்களில் பச்சை குத்திக்கொள்ளுவதை அவள் அறியாதவளல்ல. அவள் வகுப்புத் நண்பர்களுடனான பேச்சு ஒரு முறை இதுபக்கம் திரும்பியபோது, அவள் தோழி இப்போது சிலர் ·பேஷன் என்ற பெயரில் உடலை சிதைத்துக்கொள்ளும் அளவிற்கு கிறுக்காகிவிட்டனர் என்றாள். இது ஏதோ கையில் புண், அல்லது கொப்புளம் அல்ல என்றே அவள் மனதுக்குப் பட்டது. இவன் ஏதோ ஒரு வம்புக்குழுவைச் சேர்ந்தவனாயிருந்தால் என்ன செய்வது என்ற புதிய பயம் அவளைத் தொற்றிக்கொண்டது. அவன் வீட்டில் பெரியவர்கள் யாருமில்லை. இப்போது யோசித்துப்பார்த்தால் ஏதோ ஓரிரு முறை இரண்டு மூன்று இளையர்கள் வாரயிறுதியில் வந்துபோனதுபோல் தோன்றியது. திடீரென்று அவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்பதே மறந்துவிட்டது. பத்தாம் தளம் வந்து, அவன் மின் தூக்கியிலிருந்து இறங்கி போய்விட்டிருக்கிறான். இவளோ பொத்தானைக்கூட அமுக்கத் தோன்றாமல் திக்கித்திருக்க வேறு தளத்தில் யாரோ மின் தூக்கி பொத்தானை அமுக்கியிருப்பார்கள்
போலிருக்கிறது, மின்தூக்கி மீண்டும் தரைத்தளத்தை அடைந்து கதவுகள் திறந்துகொண்டன. அவளுக்கு அறிமுகமில்லா வேறு ஒரு குடும்பத்தினர் தரைத்தளத்தில் நின்றுகொண்டிருந்தனர். மின்தூக்கி திறந்தபோதுதான் அவள் தன்னினைவு பெற்றவளாய் திடுக்கிட்டாள்.
வெளிவரப்பார்த்தவள் மீண்டும் குழம்பி உள்ளே நுழைந்தாள். அவர்கள் ஏழாம் பொத்தானை அமுக்கவும், அவள் மெதுவாக பத்தாம் எண்ணை
வெட்கத்துடனும் படபடப்புடனும் அமுக்கினாள். வழக்கம்போல் யாரும் யாருடனும் பேசவில்லை. வீடு அடைந்ததும் வீட்டுச்சாவி தன்னிடமும் இன்னொன்று இருக்கிறது என்பதையும் மறந்தவளாய் அழைப்புமணியை வேகமாக அழுத்தினாள்.



பக்கத்துவீட்டு வாயில் கதவு பூட்டியிருந்தது. சன்னல்கள் வழக்கம்போல் அடைக்கப்பட்டிருந்தன.
நாராயணன் அவள் பேசியதை வழக்கம்போல் பாதிகாதுகொடுத்து கேட்டுவிட்டு, யாரெப்படி இருந்தால் நமக்கென்ன எப்போது வீட்டைப்பூட்டிவைத்திரு, மின்தூக்கியில் யாராவது தெரியாதவர் இருந்தால் ஏறாதே என்று அவளுக்குத் தெரிந்ததையே மீண்டும் சொன்னான்.


அன்றிலிருந்து அவள் நடவடிக்கையில் சில மாற்றங்களை அவளே தெரிவு செய்து கடைபிடித்தாள்.
தூரிகாவுடன் அடுக்ககம் அருகில் இருக்கும் விளையாட்டுப்பூங்காவிற்குச் செல்லும்போதோ, அருகில் கடைக்குச்செல்லும்போதோ, அடுத்தவீட்டு வாயில் பூட்டப்பட்டு வெளியில் யாருமில்லாமல் இருக்கிறதா என்று சன்னல் வழியாக உறுதிசெய்துகொண்டபின்
கிளம்பத்துவங்கினாள். நாளாவட்டத்தில் இதைப்பற்றி அதிகம் கவலைப்படுவதையும் சிந்திப்பதையும் அவளே உணர்ந்துகொண்டாள். எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமே என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டாள். வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் தோழியோ ஏதேனும் வம்பர் கும்பல்காரனாக இருந்துவைக்கப்போகிறான், எதற்கும் விழிப்போடு இரு என்று தன்பங்குக்கு அக்கறையுடன் கூறியிருந்தாள்.


இதன் பின் ஒரு நாள் வீட்டு வாயிலில் சிறு துணி ஸ்டாண்டில் துணிகளை உலர்த்திக்கொண்டிருந்தபோது தூரிகா துணியை பிடித்துக்கொள்ளும் கவ்விகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள், பக்கத்துவீட்டு இளைஞன் வெளியே வருவதைப் பார்த்து தூரிகா, ஹாய் என்று கையசைக்க , திடீரென்று கவனித்த தேவி அவனும் ஹாய் என்று கையசைப்பதைக்கண்டு தூரிகாவுக்கு ஓர் அதட்டுப் போட அவள் அம்மாவை சற்று கவனிக்காதவளாய் இன்னும் இரண்டடி முன்வைத்து ஓட தேவி அவளை இழுத்துப் பிடிக்க முன்னகர, அவன் இட்ஸ் ஓகே, என்றவாறு தூரிகாவைப்பார்த்து அகலப் புன்னகைத்தான். அவன் பற்கள் கண்களில் பட்டபோது தேவி திடுக்கிட்டுப்போய் லேசாக கத்திவிட்டாள், அவன் சாரி என்றவாறு உள்ளே போய்விட்டான். அவனுடைய பல்மேல்வரிசையின் இரண்டு ஓரங்களிலும் ஆங்கில டிராகுலா படங்களில் வருவதுபோது வாயோர இரண்டு பற்கள் உலோக நிறத்திலும் அளவில் பெரியதாயும் நீட்டிக்கொண்டிருந்தன. அவ்வளவுதான். தேவியின் கெடுபிடிகள் அதிகரித்தன. தூரிகா யாரிடமும் குறிப்பாக பக்கத்துவிட்டு இளைஞனும் ஹாய் சொல்லவோ பார்க்கவோ தடை செய்தாள். வாம்பயர் வாம்பயர் (பிசாசு) என்று அது கத்திக்கொண்டு சிரித்தது. முன்னிலும் அதிகமாக இப்போது அவனைச்சந்திக்கும் சூழலைத் தவிர்க்கத் துவங்கினாள். அடுத்தடுத்த
வீடுகளில் வசித்துக்கொண்டு எவ்வளவுதான் தவிர்க்க முடியும்; ஒரு நாள் அவள்
சாமான்களைத் தூக்கிவரும் தள்ளுவண்டியுடன் வந்தபோது, அவன், அவன் வீட்டு வாயிலில் நிற்பதைப்பார்த்துவிட்டு, பதினொன்றாம் தளத்தில் இறங்கி அவன் வீட்டைக்கடக்காமல் ஓரத்து மாடிப்படிகளைப் பயன்படுத்தி ஒருதளம் இறங்கி சாமான்களைப் படாதபாடுடன் தூக்கி தன்
வீட்டுக்கு எடுத்துவந்தாள். மற்றொருநாள் வீட்டைவிட்டு அவள் வெளியே கிளம்பும்போது அவன் மின்தூக்கியிலிருந்து நடந்து வந்துகொண்டிருந்ததைப்பார்த்துவிட்டு விருட்டென்று உள்ளே சென்று பூட்டிக்கொண்டுவிட்டாள். வீட்டையாவது மாற்றித்தொலைக்கலாம் என்றால் நினைத்தபோது
மாற முடியுமா. இப்படியா பக்கத்து வீட்டுக்காரர் வந்து அமைய வேண்டும். அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. கடந்த ஒரு மாதமாக அவனை முற்றிலும் தவிர்த்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டிருந்தாள். திடீரென்று இதுநாள்வரை யாரையும் இப்படி நினைத்ததோ வெறுத்ததோ இல்லை என்று தோன்றியது. உண்மையில் பள்ளி கல்லூரி காலங்களில் கூட கேலிசெய்பவர், அல்லது அலட்டிக்கொள்பவர்களிடம் கடுமையாகக்கூட பேசியதில்லை. சற்று ஒதுங்கி அமைதியாக ஒரு சிறுபுன்னகையுடன் கடந்துபோய்விடுபவளாய் இருந்திருக்கிறாளேயன்றி இப்படி நிஷ்டூரமாக ஒதுக்கியதோ தவிர்த்ததோ இல்லை.



அதன்பின் சில நாட்கள் அவள் கனவுகளில் பயங்கர பிசாசுகள் கோரப்பற்களுடன் இடம்பெற்றன. வெளியிடம் செல்லும்போதெல்லாம் மனிதர்களின் கைகளையும் பற்களையும் கவனிக்கத்துவங்கினாள். பழுப்பு பற்கள், வெள்ளைப்பற்கள், மஞ்சள் குளித்த பற்கள், வரிசையாக, வரிசை தப்பி, சிலசமயம் கோணலாக, ஆனால் வேறு யாரும் டிராகுலா பற்கள் கொண்டிருக்கவில்லை என்பதை அறிந்து கொஞ்சம் சமாதானம் அடைந்தாள். பற்கள் மட்டுமன்றி கைகள், புறங்கைகள், மணிக்கட்டுக்குக் கீழ் இதில்தான் எத்தனை விதம், மஞ்சள் தோல்கைகள், செம்பழுப்பு, அடர்பழுப்பு, இளம்பழுப்பு கைகள், விதவிதமாக பச்சை குத்தப்பட்ட கைகள், பல வித கைக்கடிகாரங்கள், பிரேஸ்லெட்டுகள், அணிந்த கைகள்,
திடீரென்று எல்லாக்கைகளும் அவளை நோக்கி பாய்வதுபோல் தோன்றியது. கைகள் வெடித்து கோலிகுண்டுகள் சிதறி ஓடின. என்ன பயங்கரக்கனவு. சிங்கப்பூரில் இத்தகைய சிதைக்கும் விளையாட்டிற்கு அனுமதி இல்லை என்பதால் ஏதேனும் அண்டைநாட்டில் இதற்கு அறுவைச்சிகிச்சை செய்து உலோக அல்லது சிலிக்கோன் உருளைகளை வைத்து தைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு இன்னும் திடுக்கிட்டதுதான்
மிச்சம்.





குழந்தை லேசாக மீண்டும் அசையத் துவங்கிவிட்டது. இந்த இளநீரை எப்படியாவது உடைத்துத் தயாராக வைத்துக்கொண்டால் குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது கொடுக்கலாம். சரியான சமயத்தில் நாராயணன் வேறு ஊரில் இல்லை. பக்கத்துவீடும் சரியில்லை. சரியாக இருந்தால் திறந்துதரச் சொல்லியாவது கேட்டிருக்கலாம். தூரிகா விழித்துக்கொண்டு கழிவறைக்குச் செல்லவேண்டும் என்றதும் அவளுக்கு மீண்டும் கவலை தொற்றிக்கொண்டது.
சிறிது தண்ணீர் கொடுத்தாள், வேண்டாம் என்றது. பழம் எதுவும் தின்னமாட்டேன் என்று சொல்லியும் விட்டது. வாழைப்பழத்திற்கும் ஸ்ட்ராபெரி பழத்திற்கும் பதில் ஆரஞ்சுகளையாவது வாங்கி வைத்திருக்கலாம். பிழிந்து சாறெடுத்தாவது கொடுத்திருக்கலாம். சாதம் கொஞ்சம் தரட்டா என்று அவள் பேசத்துவங்கும் முன்னே வேண்டாம் வேண்டாம் என்று முனகியது. பசியில்லை என்றது. சிறிது க்ளூக்கோஸ் நீரை குடிக்கவைத்தாள். ஒரு பிஸ்கட் தின்றது. மருந்து சாப்பிடவேணுமில்லையா என்று நைச்சியம் செய்து ஒரு இட்லியை எப்படியோ தின்னவைத்தாள். ஜூஸ் குடு என்றது. குளிர்சாதனப்பெட்டியில் தக்காளிப்பழச்சாறு சில்லென்று இருந்தது, அதை லேசாக வெதுவெதுப்பாக்கி தரட்டா என்று கேட்கவும் வேண்டாது தாகமாயிருக்கு ஜூஸ்தா என்று அழத்துவங்கியது. அம்மாவுக்கு இப்ப எப்படி உன்னை விட்டுட்டு கடைக்குப் போக முடியும், வெய்யில் கொளுத்துதுபார் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தாள். இளநீர் குடிக்கிறயா என்று கேட்டாள் , சொல்லிவைத்தாற்போல் வேகமாக தலையை ஆட்டியது. பெரிதாக கேட்டுவிட்டோம் எப்படி கொடுக்கப்போகிறோம், என்று குழப்பம் வேறு தலைவிரித்தாடியது. அம்மா இளநீர், இளநீர் தா என்று கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் மீண்டும் கேட்கத்துவங்கியது.




பக்கத்துவீட்டுக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் ஒரு கையில் இளநீரை எடுத்துக்கொண்டு மறுகையால் சாவியைக்கொண்டு கதவைத்திறந்தாள். பக்கத்துவீட்டு இளைஞன்தான், அலுவலக உடையில் நின்றுகொண்டிருந்தான். எங்கோ ஊருக்குக் கிளம்புகிறான் போலிருக்கிறது. கீழே சூட்கேஸை வைத்துவிட்டு பூட்டத்துவங்கினான். தேவி மின்னலைபோல் வேகமாக ஓடினாள், இளநீரைக்காட்டி, திறக்கமுடியவில்லை என்பதையும், குழந்தைக்கு காய்ச்சல் என்றும் சொன்னாள். அவன் பதில் பேசாமல் தலையை மெல்ல ஆட்டியவாறு கதவை மீண்டும் திறந்து அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.
வெளியே படபடப்புடன் நின்றவள் சட்டென்று தோன்றியவளாய் வீட்டுக்குள் ஓடிச்சென்று ஒரு என்.டியூசி பையில் மீதம் இருக்கும் இளநீர்க்காய்களைப் போட்டு எடுத்துக்கொண்டு ஓடிவந்தாள். பெரிய கத்தி அல்லது அரிவாள் வைத்திருப்பான் போலிருக்கிறது.
கச்சிதமாக சீவியதை எடுத்துவந்தான். அதை வாங்கிக்கொள்வதற்கு முன் மற்றவற்றைத் தான் எடுத்துவந்திருப்பதையும் அதையும் கொஞ்சம் சீவித்தருமாறு கேட்டுக்கொண்டாள். சீவிய இளநீரை தன் வீட்டு முன்னறை மேசையில் அலுங்காமல் வைத்துவிட்டு மீண்டும் ஓடி வந்தாள். இப்போது அவர்கள் அடுக்ககத்தின் கீழ்த்தளத்தில் ஒரு வாடகை டாக்சியின் மின்கொம்பு சத்தம் ஒரு முறை கேட்டது. பொதுவாக சிங்கப்பூரில் மின்கொம்புகளை காடி ஓட்டுனர்கள் ஒலிக்கச்செய்வதில்லை. தீராது என்றால்தான் எப்பவாவது ஒலிக்கச்செய்வார்கள். இந்த
நான்கு ஆண்டுகளில் அவள் ஓரிருமுறையே கேட்டிருக்கிறாள்.
இப்போது இளைஞன் கைத்தொலைபேசியில் அவன் தாய்மொழியில் பேசினான். பின்னர்
அதை கால்சட்டைப்பையில் வைத்துவிட்டு, அவள் கொடுத்த பையை எடுத்துசென்று ஒவ்வொரு இளநீர்க்காயாக சீவிக்கொண்டுவந்து கொடுத்தான். தேவிக்குப் புரிந்துவிட்டது,
வெளியூருக்குச் செல்கிறான் போல, ஒருவேளை விமானநிலையமாகக்கூட இருக்கலாம், அதற்குவந்த கால்டாக்சியின் ஓட்டுனர் தான் அவனைக் காணாததால் அழைத்திருக்கிறார். இதோ வந்த டாக்சியும் போய்விட்டது. இனி அவன் வேறு ஒன்றை அழைக்கவேண்டும். குழந்தை எங்கே என்று கேட்டான். அதற்கு பதில் சொல்லத்தோன்றாதவளாய்
தேவி அவன் கண்களை நேருக்குநேர் பார்க்காமலேயே நன்றி என்றாள். மீண்டும் கைத்தொலைபேசியை எடுத்தான். திரும்பிப்பார்க்காமல் வீட்டினுள் சென்று வழக்கம்போல் பூட்டிக்கொண்டாள்.
தூரிகா ஆவலுடன் இளநீரைக் குடித்தது, அவளை ஒரு கதை சொல்ல கேட்டுவிட்டு, அவள் பாதி சொல்லும்போதே மடியிலேயே தூங்கிப்போனது. குழந்தையை மெல்ல எடுத்து படுக்கையில் படுக்க வைத்தாள். திடீரென்று காலையில் தான் பழச்சாறு தவிர ஏதும் சாப்பிடாதது நினைவுக்கு வந்தது. குழந்தையின் உடல்நிலையைப் பற்றிய கவலை திடீரென்று போய்விட்டது போலத்தோன்றியது. எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. குளிர்சாதனப்பெட்டியில் பத்திரப்படுத்திய இளநீரை ஒரு முறை பார்த்தாள். தொலைபேசி அழைத்தது. அவர்களுடைய குடும்ப நண்பர், அவள் படிக்கும் கல்விச்சாலைப்பற்றி அவருக்கு வேண்டியவர் யாரோ விவரம் ஏதோ கேட்க இவளை அழைத்திருக்கிறார். அவரிடம் பேசி முடித்தபின், ஒரு கையால் தொலைபேசியை வைத்துவிட்டு மறுகையில் வைத்துக்கொண்டிருந்த பால்பாயிண்ட் பேனாவை எடுத்துவைத்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் அவள் இடது மணிக்கட்டுக்குக்கீழ் ஒரு சிறிய பூவின் உருவம் வரையப்பட்டிருந்தது.


உயிரெழுத்து
2010 அக்டோபர்

Friday, November 12, 2010

நான் தொலைத்த தேன்சிட்டு

நான் யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவுடன்
முகம் சுளிக்காதவர் யாருமில்லை
என்று
வாம்போவா சாப்பாட்டுக்கடையில்
உன்னிடம் சொன்னேன்
சலசலக்கும் இலைகளின் ஊடே
தீவின் மஞ்சள் கறுப்புத் தேன்சிட்டு
இனிய குரலில் ஆமோதிக்கவும் செய்தது


கவனிக்கவில்லை, .........க்கு
உடல்நலமில்லை அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறேன்
குப்பையைப் போட்டுவிட்டேன்
வெண்சுருட்டைக் கையில் வைத்திருக்கிறேன்
ஊதவில்லை, என் பெயர் சொல்லமாட்டேன்
அபூர்வமாய் என்னை மன்னித்துவிடுங்கள்
அவ்வப்போது முகமன் சொல்லும் தேன்சிட்டுகள்
இவையெல்லாம் சாலையில் நடந்தவாறே பணிபுரியும்
ஒரு சுகாதார அதிகாரிக்குத் தினமும் கிடைக்கும் பரிசுகள்
மறக்கமுடியாத பரிசு என்ன என்பதைத்
தப்பித்தவறிக் கேட்டுவிடாதே
மழை கொட்டும் இந்த விடியலில் அதை மீண்டும் நினைவுகூர
நான் விரும்பவில்லை


இருநூறு வெள்ளியைத் தவிர்க்க
ஒருவன் தலைதெறிக்கச் சாலையில் ஓடி
கிரீச்சிட்டு நிறுத்திய கனரக வாகன சக்கரத்தில் சிக்கி
வீறிட்டபோது
அதிர்ந்து கூவிய தேன்சிட்டை
நான் பிறகு பார்க்கவேயில்லை




2009 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசு சுய ஆட்சி பெற்று 50 ஆண்டுகள்
நிறைவடைந்ததன் நினைவாக ஐம்பது கவிதைகள் நான்கு தேசிய மொழிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட நூலில் இடம்பெற்றது
(Fifty on 50, NAC Singapore)

Tuesday, August 31, 2010

வெளிச்ச இடுக்கில் இந்த ரோஜாச்செடி

மண்சட்டியில்
பத்து பதினைந்து ரோஜாப்பூக்கள்
ஒரே நேரத்தில் பூத்திருந்தன



கண்கொட்டாமல் பார்த்து வருகையில்
எல்லா சாமி படங்களுக்கும்
போதுமானதாக இருக்கும்தான்
வாங்க வேண்டாம்
குரல்
பின்னணியில் ஒலிக்கும்



சாமிக்கு வைக்கலாம்தான்
ஆனால் அங்கிருப்பதைக்காட்டிலும்
இங்கு இன்னும் பொலிவோடு
இருக்கின்றனவே



இடுக்கு வெயில், தண்ணீர்
வேர்ச்சத்து, காற்று
எதற்கும் இணையாகாதே



பக்கத்துவீட்டுக்குக்
கொடுக்கலாம்தான்
அவர்கள் வாங்கிக்கொள்பவர்களாக இல்லை
கொடுப்பவர்களாக அண்மையில்
மாறிவிட்டார்கள்



இலைகளுக்கும் மலர்களுக்கும்
இலவச நிகோட்டின் படலங்கள்
அவ்வப்வோது அளித்துவரும்
உபயதாரர்கள்



பறித்துவிட வேண்டாம்
வேண்டிக்கொண்டாள்
இவைஎதுவும் அறியாத
என் வீட்டிலிருந்த குழந்தை



ஒரு பூ
பள்ளிவளாக காவலருக்காம்
எடுத்துத்துப்போயிருக்கிறாள்
அவருக்கு
நிறைய நேரம் இருக்கிறது
என்றவாறே



இன்று
கருத்த மகரந்தமும்
வெளிறிய இதழ்களும்
காணக்கிடைக்கையில்
பறித்திருக்கலாமோ
சஞ்சலமடைகிறது மனம்



பழுத்த ஜீவரசம்
நாசியில் இனிக்க
உன்மத்தம்
கொள்ளச்செய்கின்றன



தொலைவில்
கண்ணாடி உடலுடன்
சீனத்தாத்தா
பேசிக்கொண்டிருக்கிறார்
மௌனமாய்க்
கேட்டுக்கொண்டிருக்கும்
பூங்கா பெஞ்சுகளுடன்




நன்றி: நாம்

Saturday, July 03, 2010

கவிதை - தொடர்மழை பெய்ந்து ஓய்ந்த ஓரிரவில்

தினமும்
இரவு எட்டுமணிக்கு
அடுக்ககங்களின் இடையே உள்ள
தரைப்பகுதியில்
மூன்று சக்கர வண்டியை நிறுத்தி
மணி அடிக்கும்
இந்த ஐஸ்கிரீம் விற்பவள்
இன்று முதல்வேலையாக
வண்டியிலிருந்து இறங்கியதும்
கம்பளிச்சட்டையைக் கழற்றி
மடித்து கவனமாக பையினுள்
பொத்துகிறாள்

ஒவ்வொரு தொடர் கொம்பொலிக்கும்
ஒவ்வொரு அடுக்ககமாக
பதினைந்தாவது தளத்திலிருந்து
பரவலாக கீழ்த்தளம் வரை
பார்வையை ஓட்டுகிறாள்

நடுங்கிக்கொண்டும்
ஈரம் சொட்டும் உடைகளோடு
மின்தூக்கியருகில்
விரைபவர்களை
அவள்
தொந்தரவு செய்வதில்லை

இன்றைய எதிர்ப்பார்ப்பை
பூஜ்ஜியத்தில் நிறுத்தினாலும்
ஏதோ ஒரு வீட்டில்
யாரேனும் ஒருவர்
தான் வரவில்லை என்று
நினைத்து
ஏமாற்றம் அடைந்துவிடக்கூடாதே
என்பதனால்
இன்றைக்குமட்டும்
கூடுதலாக
சிலமணித்துளிகள் நிற்கிறாள்

மொழியற்ற மொழியை
உதிர்த்தவாறு
மேலேயிருந்து கையசைக்கும் நபர்
தென்பட்டதும்
சுத்தமாக இருக்கும் வண்டியில்
முன்மேடையை மீண்டும் சுத்தம் செய்கிறாள்
கையுறையை கவனமாக அணிந்துகொண்டு
குளிர்பெட்டகத்தில்
எல்லா வகைகளும் தயாராக இருப்பதை
மீண்டும் உறுதி செய்கிறாள்
வேண்டியதைக்கொடுத்த கையோடு
கைதுடைக்கும் காகிதக் கைக்குட்டையை
ஒன்றுக்கு இரண்டாகத் தருகிறாள்

எந்தவித இருமலோ தும்மலோ
இவர்களுக்கு வராதிருக்கவேண்டும்
என்று ரகசியமாக வேண்டிக்கொள்கிறாள்

அவர்கள் சாப்பிட்டதும் தூக்கிப்போடத்
தயாராக குப்பைப்பையை நீட்டுகிறாள்
நல்ல துணியால்
அழுத்தித் துடைத்து குளிர்ச்சியைப்போக்கிவிட்டு
நீட்டுகிறாள் அவர்கள் கொடுக்கும் பணத்துக்கான
சில்லரைக்காசுகளை

02-04-2010 சொல்வனம்