Saturday, January 20, 2007

எழுதாத உன் கவிதை

(தமிழீழப் பெண்களின் கவிதைகள்)


எழுதுங்களேன் - நான்
எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்

எராளம்... ஏராளம்
எண்ணங்களை - எழுத
எழுந்துவர முடியவில்லை
எல்லையில்
என் துப்பாக்கி
எழுந்து நிற்பதால்
எழுந்துவர என்னால்
முடியவில்லை
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்!

கப்டன் வானதியின் இந்தக் கவிதையைப் பின் அட்டையில் படித்த எவரும் தமிழீழப் பெண்களின் இந்தக் கவிதைத் தொகுப்பைப் படிக்காமல் இருப்பது கடினம்.


கேப்டன் வானதியின் இந்தக் கவிதை கிரியாஊக்கியாகச் செயல்பட்டு, போரினிடையே கவிஞர் நாதினிக்கு எழுச்சியூட்டி 'எங்கள் கைக்கு வந்த பேனாவுக்கு இனி ஓய்வே இல்லை' என்ற வேகத்தை அவருக்கும் இந்த வரிகளை வாசிப்பவருக்கு அந்த உணர்வையும்
கொடுக்கிறது.



அலையிசையின் 'புரிதல்' கவிதை போரைப் பற்றிய கவிதை, பெண்களின் அந்தரங்க மௌனக்குமுறல் என்ற நிலைகளையெல்லாம் தாண்டி ஒரு புதிய தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்ற உணர்வு இந்த வரிகளைப் படிக்கும் போது ஏற்படுகிறது.


கரிய இருட் போர்வையால்/புவி போர்த்தப் பட்டிருக்க/இரையும்/ உயிரினங்களின் /சலனங்கள் ஒடுங்கி/நிசப்தமாகும் புவி மேற்பரப்பின்/வெற்றுக்கோதாக நான்/................ சன்னதம் கொண்ட /ஊழிக்காற்றால் /சுடர் அணைய /செத்தைக் கதவை நீக்கிப் பார்க்கிறேன்/ தண்ணொளி பரப்பி/மதி கடலில் இருந்து/எழுந்து
வருகிறது/


புதுமையான ஒரு பரிமாணத்தைக் காட்டுகிறது. இந்தத்
தொகுப்பிலுள்ள மிகச் சிறந்த கவிதைகளில் புரிதல் ஒன்று.


செந்தணலின் எப்போது விடியும் என் இரவு மிக மிக நேரடியான ஒரு கவிதை.


நட்சத்திரங்களை வீட்டினுள்/ இருந்தவாறே எண்ணவல்ல - /மாற்றா முடியா வறுமையும்......,/ சிலுவை சுமப்பது நான் மட்டுமல்ல/ ஆணியிலறையப்பட்டுள்ள என் உணர்வுகளும்தான்/ ,...

விடியலுக்காக காத்திருக்கும் உடல், உணர்வு, மனம், பொருளாதாரம் என பன்முகத்தாக்குதல்களுக்கு ஆளாகும் பெண் இலைத்துளிர்களில் பட்டுத் தெரிக்கும் பனித்துளிகளுடன் முரண்படும் தன் ஆறாத
பெருந்தணலின் தீய்க்கும் வெப்பத்தை சித்தரிக்கும் கவிதை.


நான் பறக்கத் துடிக்கிறேன்... ஒடுக்குமுறைகள் என் குரல்வளையை நெரிக்கின்றன, அடக்கு முறைக்கு ஆளான பெண்களின் குமுறல் ஆண்களின் வன்முறைக்கு ஆளான பெண்களின் துயரம், உடலையும் உள்ளத்தையும் மீகாயப்படுத்தினாலும்

'என்னுள் முகை கொண்டுள்ள/
அசைக்கவியலாத ஒளி பொருந்திய / நம்பிக்கை மீது
மட்டும்/ஆணியறைந்திட/எவற்றாலும் முடியவில்லை,

சிதைந்த உடலுள்
நீறு பூத்த நெருப்பாய் உள்ள நம்பிக்கை கனலாய் இருப்பதை எதுவும்
தடுக்க முடியாது என்ற உறுதி இந்த சூழ்நிலையிலும் முகிழ்கிறது
'நம்பிக்கை ஒளி'யில்.


சீரஞ்சீவியின் உயிர்க்கூடொன்றில் உறுதியாய் ஒரு வீடு .

இக்காலக்கட்டத்தில் அமைதியான குடும்பவாழ்க்கைக்கூட கனவு காணவேண்டிய பெண், கட்டாக்காலிகளுக்கு களமாக இருந்த அவள் நிலத்தில் அவள் எழுப்பிய கற்பனை வீடு அவள் மனதின் ஏக்கத்தையும் எல்லோர் நலம்விரும்பும் அவள் கனவையும் மட்டும் காட்டாமல், பின்னொரு நாளில் வீடு அன்னியரின் கணைகளால் துளைக்கப்பட்டபோதும் அங்கமிழந்த அவள் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள்.

சன்னமான உணர்ச்சிகளையும், அழகியலுடன் இயைந்த வாழ்வையும் தேடும் சீரஞ்சீவியின் இக்கவிதை
ஈழப்பெண்களின் நிலையைப் பிரதிபலிக்கிறது.


'நாளையும் நான் வாழ வேண்டும்' அம்புலியின் கவிதை சிலவரிகளே இருந்தாலும் ஈழப்பெண் போராளிகளின் நட்பு, பொறுப்புணர்வு ஆகியவற்றை நேர்மறை சிந்தனையுடன் கூறுகிறது .

என் தோழியின் காவலுக்கு/என்னிழப்பு காரணமாயிருக்கக் கூடாது/நாளையும் நான் வாழ வேண்டும் என்று முடியும்போது மனதை என்னவோ செய்கிறது.


அம்புலியின் 'தேடி அடைவாய்' போர்க்கால நிகழ்வுகள் அழுத்த, தன் வசந்த காலத்தையும், வாழ்வில் இனிமையையும் துப்பாக்கிச் சத்தங்களுக்கிடையில் பிள்ளைக்கு எப்படித்தர இயலும், புதிய வாழ்வு
உன் கரங்களில் பிறக்கட்டும், தாய்மையின் வேதனைக்குரலிலும் நம்பிக்கை ஒளிர்கிறது.


அ. காந்தாவின் 'எந்த மகனுக்காய் என் கால்களை நகர்த்த' கவிதை படிக்கையில் மனம் அதிர்ந்து போகிறது.
சுதாமதியின் 'போரின் நாட்கள்' தாய்மை உணர்வு பொங்கும் மிக மிக மென்மையான ஒரு கவிதை.

கப்டன் ஜனார்த்தனியின் துப்பாக்கி, நகுலாவின் 'பெயரிடாத நட்சத்திரங்கள்' மிக நேரடியான கவிதைகள்.


க. கனிமொழியின் கவிதை, முன்னே
போனவர்/நினைவழுத்த/பரபரக்க/ அலைகளின் நடுவே/எதிரியைத் தேடி /அவள்,.....

ஒரு போராளியின் திசையும் நிகழ்வுகளையும்
வரிசையாகக் குறிப்பிட்டுக்கொண்டே கவிதை வருகையில் , சீறும் அலைகளின்/ சிநேகிதம் தொடரும்/ ஆயினும் ஓர் நாள்/ அதிர்வொன்றோடு/சிநேகிதம் முடியும் என்னும்போது படிப்பவரிடம் தாக்கத்தை உருவாக்குகிறது.
உமாவின் மெழுகுவர்த்தி ஈழப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு வண்ணக் கனவுகளைச் சிதைத்துக் கொண்ட ஒரு சிட்டுக்குருவியின் கதை.


பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் ரௌத்திரம் பழகி பகைவனால் சிறைவைக்கப்பட்ட போதும் சிறிதும் ரகசியங்களை வெளிவிடாது உருகிய மெழுகுவர்த்தியாக புதிய குருவிகளுக்கு பாதை
காட்டிக்கொண்டிருக்கிறது.


எளிமையாகத் தோன்றும் இக்கவிதையில்
சிட்டுக்குருவிக்கு ஆலம்விருட்சத்தின் பலம் இருப்பது ஒரு இறகின் வருடலாகச் சொல்லப்பட்டிருக்கிறது.



மலைமகளின் 'அவள் ஒன்றுக்கும் அசையாள்' 'அம்மா' பெண்களின் வேதனைக்குரல் மரத்துப் போய்விடாமல், உரமேறி உறுதியாய் மாற்றுகிறது நம்பிக்கையூட்டும் சிந்தனைக்கோலங்கள்.


இவரின் 'நேசராச்சியம்' கவிதை எத்தகைய சூழலில் எழுந்தது என்பதை நினைக்கையில் வியக்காமல் இருக்க முடியவில்லை.


செல்வியின் 'தாயகமே தீயெடு' தமிழனுக்கு எழுச்சியூட்டும் குரலாய் ஒலிக்கிறது. கி.கிருபாவின் 'உயிர்ப்பு' குறைந்த வரிகளில் நெழ்ச்சியூட்டும் வரிகள் கொண்டது.

செ.புரட்சிகாவின் 'உன் கரத்தை உயர்த்தி எழு' மற்றும் 'ஓயாத அலை மூன்றில்' நேரடியான கவிதைகள்.


சூரியநிலாவின் 'காலங்களற்ற கடல் ' இத்தொகுப்பிலுள்ள மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று .


இரவு அமையானது/... எல்லோரும் சொல்கின்றார்கள் என்பதனால், என்று அமைதியான குளத்தில்
கல்லெறிந்தாற்போல் துவங்கும் கவிதை இரவே இல்லாதவர்களின் வாழ்வைக் கூறுகையில் நாமும் உடன் பயணிக்கிறோம், வேட்டையாடுவதையும் வேட்டையாடப்படுவதையும் பார்க்கிறோம்,
பயணிக்கிறோம், ...


இப்போது இரவு அமைதியானது/.. கடல் அடிக்கும் ஓசை/
காதுகளுக்கு எட்டாத தூரம் இருக்கலாம்/ஆயினும் பூமிப்பந்தின் பெரும் பகுதி /நீரால் நிறைந்திருக்கின்றது என்பது உண்மை என்று கவிதை நிறைவுறும்போது

நம் மனம் இரவே இல்லாதவர்களின்
வாழ்விலிருந்து இன்னும் விடுபடவில்லை என்று உணர்கிறோம்.

அதுவே இந்தக் கவிதையின் வெற்றி.


சூரியநிலாவின் 'தீயினால் தீயை' மிக நேரடியான ஒரு கவிதை.


'மழைக்காலங்கள்' என்ற கவிதையில், மழை வெறுக்கத்தக்கதாகவே இருக்கின்றது/ எனினும்/ மழையை எவரும் வெறுப்பதில்லை என்ற வரிகள் பளிச்சிடுகின்றன.

மழையை நாங்களும் ரசிக்கக்கூடும், அது எப்போது என்று
கூறும்போது சூரியநிலாவின் விசாலமான மனம் புலனாகிறது.


ம. வாசகியின் காலக்கணக்கு கவிதை புதியதொரு உத்தியில் எழுதப்பட்டிருக்கிறது ஆர்வமூட்டுகிறது. காலமும் பெண்ணும் நடத்தும் கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக உள்ளது. இது போன்ற கவிதைகள் இது போன்ற சூழலில்தான் பிறக்குமோ என்று
எண்ணத்தோன்றுகிறது.


தூயவளின் 'விடைபெறுதல் இல்லாத பிரிவுகள்' நட்புக்காக மலர்ந்த கவிதை. மிக எளிய வரிகளில் சிந்தனையைத் தூண்டுகிறது.



தமிழ்க்கவியின் 'வல்லவன் துணைவி' வான் நிலாவின் 'இருள்விலகும்', தமிழவளின் 'வையகமே காத்திரு' எளிய வரிகளில் சொல்லப்பட்ட கவிதைகள்.


சண்முகநாதன் கலைமகளின் 'பயணம் தொடர்கிறது' கவிதையில் நேற்று உன்னைப் போல்/இன்று உன்னருகில் நான்/ பயணத்தின் பாதையைப் பற்றித் தெரிந்திருந்தும்வலுவான இதயத்துடனும், கந்தகச் சுமையை கட்டியணைத்தபடி புறப்படும் பெண்ணின் குரல் நம் காதுகளில் ஒலிக்கிறது.



கப்டன் ஞானமதியின் 'சமர்ப்பணம்' பயணம் இலக்கை அடையும் என்ற நம்பிக்கை தொனிக்க எழுதி இறுதியில் நமக்கு ஒரு கேள்வியை முன் வைக்கிறார். இதற்கு விடை என்ன?

கனிமொழி பேரின்பராசாவின் 'உனது பெயர் புதுமைப் பெண்' கவிதையைப் படிக்கையில் ஈழப்பெண்கள் வீரப்பெண்களாய் உருமாறுவதும் உயருவதும் நிதானமாகக் காட்டப்படுவதை உணர முடிகிறது.



ஆதிலட்சுமி சிவகுமாரின் 'ஊழியின் முடிவு'
கலவரம், போர் வெடிக்கும்போது எந்த நாடாக இருந்தாலும்
பெண்கள் மீது பாலியல் வன்முறை நடத்துவது மனித இனத்துக்கு வழக்கமாகிவிட்டது. what a shame to mankind. பாதிக்கப்பட்டவரின் குரல் செவிப்பறையைக் கிழிக்கும் போது மரத்துப்போனதாய் பாவனை காட்டமுடியாமல் தவிக்கும் தவிப்பும், அந்த பேய்கள் தின்னும்போது
பெண்ணின் கூக்குரலும்,... வார்த்தைகளால் சொல்லமுடியாத கொடூரம் அரங்கேறி வரும் காலமிது.



தொகுப்பில் கடைசிக்கவிதையாக கப்டன் மனோவின்' கனவல்ல தமிழீழம் நாளை நம் நாடு' அமைந்திருப்பது நல்ல தேர்வு; நல்லதொரு பொழுது ஈழத்திற்கு விடியும்' என்று நேர்மறையாக நம்புகிறது இக்கவிதை.



தமீழப்பெண்களின் கவிதைகள் நேரடியாக அப்பெண்களின் குரல்கள் பேனாவினால் பதிவு செய்யப்பட்டு நம்மை நோக்கி வருகையில் சொல்லொண்ணா வேதனை அனுபவித்து, தோழியாய், தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், தலைவியாய், வெவ்வேறு சூழ்நிலையில் வெவ்வேறு உருக்கொண்டாலும் வீரயுகப் பெண்ணாய்
மலர்ந்திருப்பதையும் காணமுடிகிறது. வீரத்திலும் விவேகம் பொங்கும், நம்பிக்கை ஒளிரும் இவர்களின் குரல்தான் இந்த தமிழீழப் பெண்களின் கவிதைத் தொகுப்பு.



பெண்களின் குமுறல்கள், வீரம், எழுச்சி, போருக்கு இடையே வாழ்வது, வாழ்வே போராகிப் போனது என்ற செய்திகள் இயல்பாகச் சொல்லப்பட்டிருந்தாலும், இதில் அழகியல் கூறுகள் இருக்கின்றன.


புதிய உத்தி காணப்படுகிறது.
குறிப்பாக 'புரிதல்' 'காலங்களற்ற கடல்' கவிதைகள் சொல்லப்பட்ட விதமும் அதன் வரிகள் நவீனக்கவிதையின் அடையாளங்கள்
கொண்டுள்ளதை நாம் அறிகிறோம்.


பெண்களின் போராட்டங்கள், போர்க்காலச் சூழல் இவற்றையும் தாண்டி அழகியல் கூறுகள், புதிய உத்தி, புதிய பரிமாணங்களைக் காட்டுதல் முதலியவற்றைக் கொண்டதாகவும் செயற்கைத்தனம் என்பது
குன்றிமணியளவு கூட இல்லாமல் நிஜத்தின் குரல்கள் இவை என்பதை மறுக்க முடியாது.





புத்தகத்தின் பெயர்: எழுதாத உன் கவிதை(தமிழீழப் பெண்களின் கவிதைகள்)
முதல் பதிப்பு 2001 ஆவணி
கப்டன் வானதி வெளியீடு-01அச்சமைப்பு சந்திரன் பதிப்பகம்புதுக்குடியிருப்புஅட்டையமைப்ப்அந்திவானம் பதிப்பகம்புதுக்குடியிருப்பு
கப்டன் வானதி வெளியீட்டகம்அரசியல்துறை மகளிர்தமிழீழம்விலை உரூபா 125