Thursday, April 02, 2009

இந்த வியாழன்

நேர்த்தியான திரைக்கதை, , அண்ணித்தல், எல்லாவற்றிற்கும் ஓடுதானா, இப்படியும் நகைச்சுவை


Wendy Wu திரைப்படம் பார்த்தேன். வடஅமெரிக்காவில் வாழும் சீனக் குடும்பத்துப் பெண்ணின் பதின்மக்கனவுகளை அசைத்துப்பார்க்கிறது சீனாவிலிருந்து வந்த புத்த புட்சு சொல்லும் ' நீ உலகைக் காக்க போர்வீரராக அவதாரம் எடுத்தவள் என்ற சொற்கள்.

சீன ஜாலக்குகளையும், மந்திர தந்திரங்களை மட்டுமே நம்பாமல், எளிய நேர்த்தியான திரைக்கதை, நம்பும்படியான உடல்மொழியும், எனக்குப் பிடித்திருந்தது. வழக்கமான டிஸ்னிகதைகளிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது.


மாணிக்கவாசகர் திருவாசகத்தில் அண்ணிப்பான் தாள் வாழ்க என்கிறார்.

அகராதியில் அண்ணம்,அண்ணி எல்லாம் இருக்கிறது அண்ணித்தல் இல்லை. தெளிவுரையில் தித்திப்பான் என்று பொருள் தந்திருக்கிறார் சித்பவானந்தர்.

மதுரகவியாழ்வார் 'அண்ணிக்கும் அமுதுஊறும் என் நாவுக்கே' ('கண்ணி நுண் சிறுதாம்'பில் )என்கிறார்.

இங்கும் தெளிவுரையில் தித்திக்கும் என்று எழுதியிருக்கிறார் ஜெகத்ரட்சகன்.


இதுபற்றி எழுதும் போது அருகண்மையில் என்ற பதம் நினைவுக்கு வந்தது. அருகாமை, அருகண்மை, இவற்றைவிட அருகில் போதுமே பேராசிரியர் நன்னன் கூறுகிறார்.


அண்மையில் ஜெரால்ட் தூரலின் ' எ நியூ நோவா' படித்தேன்.


ஆஸ்திரேலியா, நீயூசிலாந்து, கயானா, கெமரூன் (ஆப்பிரிக்கா) , ரஷ்யா, அஸ்ஸாம், அர்ஜெண்டீனா (அர்ஹன்டினாவா? எதுசரி), பராகுவே இன்னும் பல நாடுகளுக்கு சென்று பல விலங்குகள், பறவை இவற்றுடனான தன அனுபவங்களை புத்தகங்களாக எழுதித்தள்ளியிருக்கிறார். விவரணப்படங்கள், பி.பி.சி, திரைப்படம் எதையும் விட்டுவைக்கவில்லை. கைக்குழந்தைக்குக்கூட விலங்குகள் பற்றிய புத்தகங்கள் தயாரித்திருக்கிறார். புதிய நோவா, கெமரூன், கயானா, அர்.. ....பயணங்கள் பற்றியது. சாகசம் நிறைந்த அனுபவங்களுடன் தான் செய்த தவறுகள், தவர விட்டவை, இவற்றையும் ஆவணப்படுத்தி நம்பகத்தன்மைக்கு அருகில் வருகிறார்.

ஜெரால்ட் தூரல் ஜம்ஷெட்பூரில் பிறந்தவர். அவருடைய ( கவனிக்க -அவரது- என்று எழுதுவது தவறு) ஆங்கில-ஐரிஷ் பெற்றோரும் இந்தியாவில்

பிறந்தவர்கள். தூரலின் சாதனைகள், இணையத்தில் இருக்கின்றன.

குதிரைகள் நடக்கும், ஓடும் வேகத்திற்கு ஏற்ப walk, trot, canter, gallop என்று ஆங்கிலத்தில் சொற்கள் இருப்பதுபோல் தமிழிலும் இருந்திருக்காதா என்ன. அவை என்ன என்று தெரிந்துகொள்ள ஆசை. தமிழார்வலர்கள்தெரிந்தால் சொல்லுங்களேன்.


daft ideas என்ற புத்தகம் நூலகத்தில் படிக்கக்கிடைத்தது. daft என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று அகராதியில் தேடினேன் ( ஆங்கிலம் - தமிழ்) கிடைக்கவில்லை.வினோத சம்பவங்கள் , கொடுநகைச்சுவை வகை சேர்ந்து சில (black jokes என்ற பெயர் என்னவோ எனக்குப் பிடிக்கவில்லை, black க்கு என்ன குறைச்சல்); இருப்பதிலேயே சுவாரசியம் குறைந்த இரண்டை எழுதியிருக்கிறேன். வினோத கண்டுபிடிப்புகள், வினோத வகை சம்பவங்கள், கொள்ளைகள், என்று கண்டபடி எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.

காட்டுக்கு இரண்டு. (அதான் எடுத்துக்காட்டுக்கு இரண்டு)


விலங்குகளின் உரிமை ஆதரவாளர்கள் இருவர், ஜெர்மனியின் கசாப்பு நிலையத்திலிருந்து பன்றிகளை விடுவிக்கப்பார்த்தார்கள். பாய்ந்து வெளியே வந்த 2000 பன்றிகளின் நெரிசலில் இருவரும் மிதிபட்டு மேலுலகு சென்றார்களாம்.

ஒரு கடையில் துப்பாக்கியைக் காட்டி கல்லாவிலிருந்த காசெல்லாம் தர மிரட்டி வாங்கிக்கொண்ட ஒருவன், மதுபான புட்டி ஒன்றைக் கேட்டான். காசாளர் உன்னைப்பார்த்தால் பதினெட்டு ஆகியிருப்பதாகத் தெரியவில்லை, உனக்கு எப்படித்தருவது என்று கேட்க, தன் ஓட்டுனர் உரிமத்தைக் காட்டியிருக்கிறான். உடனே எடுத்துக்கொடுத்த கடைக்காரர் அவன் போனவுடன் அவன் பெயரையும் முகவரியையும் காவல் நிலையத்திற்குத் தெரிவித்தார்.

புத்தகத்தில் என்னைக் கவர்ந்த really daft laws சில


1. க்ளௌசெஸ்டர், இங்கிலாந்து:

வீட்டுரிமை சட்டத்தின்படி வாடகைக்கு அரசு வீடுகளில் குடியிருப்பவர்கள் 30 நாள்களாவது நோடீஸ் தராமல்இறக்கக்கூடாது.


2.டெக்சாஸ், யு.எஸ்.எ.

அண்மையில் மொழியப்பட்ட குற்றவியல் சட்டத்தின் படி, குற்றவாளிகள் தாங்கள் செய்யப்போகும் குற்றம்எப்படிப்பட்டது என்பதை வாய்வார்த்தையாகவோ, எழுத்துமூலமாகவோ குற்றம் செய்வதற்கு 24 மணிநேரத்திற்குமுன் கொடுத்துவிடவேண்டும். யாரிடம்- யாரிடம் செய்யப்போகிறார்களோ, அவர்களிடம்.

3. டென்னஸ்ஸி

தவளைகள் இரவு பதினொரு மணிக்கு மேல் கொரகொரப்பது சட்டவிரோதம்.

4. நியூயார்க் கட்டடத்திலிருந்து குதித்துவிடுபவர்களுக்கு தண்டனை உண்டு. மரணம்.

5. ஆண்கள் ஸ்ட்ராப் இல்லாத கவுன்கள் அணிவது ப்ளோரிடாவில் சட்டவிரோதம்.


என் நண்பர் தெரிவித்த ஒரு டாப்ட் ஐடியா:


விளக்கு, தலைவலி பாம் இவற்றைப் பயன்படுத்தினால்தான் தூக்கமே வரும் என்று %50 உம் , இவற்றின் பெயரைக்கேட்டாலே தூக்கம் போய்விடும் என்று %50 உம் ஆக இரண்டு மனிதக்கூட்டங்கள் இருக்கும்.

கல்யாணம் என்பது எதாவது ஒரு கூட்டத்திலிருந்து ஒரு ஆணும் மறு கூட்டத்திலிருந்து ஒரு பெண்ணும் செய்துகொள்வது ( ஏன் 50% என்று போடவில்லை - யோசிக்கவும்)