Monday, September 28, 2009

சொக்கட்டான்

சொற்களை தாயமாக்கிவிட்டாய்
குரலிழந்த நான்
என் பங்கு நியாயத்தை இறக்க
முடியாமல்போனேன்
பழமெடுத்து
உன் வெற்றியைப்
பறையறைகிறாய்
இதற்கு
என்னை
அழைத்திருக்கவே
வேண்டாம்
நீ மட்டுமே
நாள் முழுதும்
விருத்தம் எடுக்க


uyirosai 21-9-2009

Wednesday, September 23, 2009

பச்சைப்பாம்பு

அசலா நகலா
எதையும் கண்டுபிடிக்க
முடியாதபடி இருக்கிறது
குளிரூட்டப்பட்ட இந்த
நிலவறைப் பேரங்காடியில்
அங்கங்கே தொட்டிகளில் அமர்த்தப்பட்டிருந்த
மலர்ச்செடிகள்


சென்ற வாரம்
காலியாக இருந்த
மரீன் பரேட்
அலுவலக வரவேற்பறையில்
இன்று திடீரென்று
வீற்றிருக்கிறது
ஒரு திப்பிலிப்பனை



முகமனுடன்
வரவேற்று
ஐயங்களைத் தீர்த்துவைக்கும்
தொலைபேசிக்குரல்
ஏற்கனவே
பதிவுசெய்யப்பட்ட
பதில்களை உடைய
நிரலியால்தான்
என்பது
வேறு ஒரு நாள்
தெரியவருகிறது



காலைச்சுற்றிவரும்
செல்ல நாய்க்குட்டியை
என்னிடம் காட்டி மகிழும்
பக்கத்துவீட்டுச் சிறுவன்
உணவு வில்லைகளை
அதன் வாயில் இட்டு
விசையை அழுத்துகிறான்
வாரத்திற்கு ஒரு முறை
சேமக்கலத்தில்
மின்னேற்றினால் போதும்
என்கிறான்


தாவரவியல் தோட்டத்தில்
லோர்னி பாதையில்
செண்பகச் செடிகளைப்
பார்த்துக்கொண்டிருந்தபோது
புதரடியில்
பச்சை வண்ண ரப்பர்குழாயின்
ஒருபகுதியைப் பார்த்துவிட்டு
கையில் எடுத்தேன்
இந்தக் கவிதை உறைந்துவிட்டது
என்னைப்போல

uyirosai 21-9-2009

Wednesday, September 16, 2009

வகுப்பறைகளைச் சுத்தம் செய்யும் மூதாட்டி

மாற்று ஆடையும்
ஈரமா என்று
ஆயாசத்துடன்
கண்களை மூடினால்
போதும்
செங்குத்தாக அடுக்கப்பட்ட
புத்தகங்களிலிருந்து
கழன்று விழும்
எழுத்துகள்
ஒழுங்கு வரிசையின்றி
முட்டிமோதிக்கொண்டு
தம்தனித்த வாசத்துடன்
மூளைக்குள்
நுழைந்துவிடுகின்றன



தனித்த இரவுகளில்
வரும்
கனவுகளில்
வினாத் தாள்கள்
மீண்டும் மீண்டும் வருகின்றன
அதிலிருக்கும் எழுத்துகள்
அவரிடம்
கமுக்கமாகப் பேசுகின்றன
அவற்றின் நிறம்
ஆழமான
பித்தவெடிப்புகளால்
பிளவுண்ட தன் குதிகால்களில்
காணப்படும் குருதியின்
நிறத்தில் இருக்கிறது



சமன்பாடுகளின்
விளக்கங்களும்
வரைபடங்களும்
அதில்
கேட்கப்படுகின்றன
ஐநூறு சொற்களாலான
நீண்ட கட்டுரை
எழுதுமாறு
பணிக்கப்படுகிறார்



கையெழுத்து மட்டுமே
போடத் தெரியும் என்று
அவர் மன்றாடுவது
அவருக்கே கேட்பதில்லை
எழுத்துகள் முகமூடி
அணிந்துகொண்டுவிட்டதைக்
கண்டு
மை நிரம்பிய
பேனாவை நடுக்கத்துடன்
சுருக்கம் நிறைந்த விரல்களால்
பிடிக்கிறார்



எல்லாக் கேள்விகளுக்கும்
விடை தெரிந்திருப்பது
அதிகமாக்குகிறது
அச்சத்தை




உயிரோசை 7.9.2009

Sunday, September 13, 2009

நாகரிக விருந்துகளில்,....

நாகரிக விருந்துகளில்,....



என்றுமே இல்லாத
பதற்றம்
பதுங்கிப்பதுங்கி
வந்தமர்ந்துவிடுகிறது
சாப்பாடு உள்ள
காகிதத் தட்டுகள்
ஏந்திய
புதிய பச்சை நிறக்கோடு போட்ட சட்டை
மாட்டிக்கொண்டுள்ள
தாத்தாவின்
கைகளில்



நூறுபேர் உள்ள இடத்தில்
இருக்கும்
பத்துநாற்காலிகளுக்குப்
போட்டிப்போட
முடிவதில்லை
தனக்கென முதலில்
எடுத்துக்கொள்வது
பழக்கமாகாததால்
இருக்கலாம்



காலி இருக்கைகள் நிறைந்த
நிகழ்ச்சி நடக்கும் அரங்கு
சுவருக்கு அடுத்தபக்கம்தான்
என்றாலும்



அங்கெல்லாம்
சாப்பிடக்கூடாது
அழுக்காகிவிடும்
ஒரு சிறுமியை
அவள் குடும்பத்தினர் யாரோ
மிரட்டிக்கொண்டிருந்ததை வேறு
பார்த்துதொலைத்தாகிவிட்டது




கதைபேசிக்கொண்டும்
சிரித்துக்கொண்டும்
நாசுக்காக உண்ணும்
மகனோ மகளோ
சுட்டிக்காட்டுவதற்கு
முன்பே
வாயோரத்து
சோற்றுப்பருக்கையைச்
சரிசெய்யவேண்டியிருக்கிறது
இன்னும் இரண்டு கவளம்
கூட உள்ளே செல்லாவிட்டாலும்



குடிநீர் எங்கே இருக்கிறது
என்று கண்டுபிடித்துவிட்டாலும்
அதை வைத்துக்கொள்ள
கூடுதல் கரம் ஒன்று
தேவையாய் இருக்கிறது



எங்கிருந்தோ
ஓடிவந்து
பேரனோ பேத்தியோ
தண்ணீர்க் கிண்ணத்தைக்
கொடுக்கும்போது
இதுபோதும் எனத்
தோன்றிவிடுகிறது.


நளினமாகச் சாப்பிடும்போதே
நாய்க்குட்டிபோல் ஓடிவந்து
இரண்டுபேர் கேட்கும்படியாக
நீ கையாலேயே சாப்பிடு
உனக்கு முள்கரண்டி சரிவராது
என்று
மகன் வந்துபோட்ட மிளகாய்த்துண்டு
விக்கலை நிறுத்தப் போதுமானதாக
இருக்கிறது



பரவாயில்லை இதையாவது
கவனித்து பேசுகிறானே
தன்னொத்தவர் கூறுகையில்
கண் வாழ்க்கைத் துணையைத் தேடுகிறது



பாட்டிகளுக்கு
முதல் பந்தியில் சாப்பிட
வாய்ப்புக்கிடைத்ததைவிட
தம் பேச்சை உற்சாகத்துடன்
கேட்க மனிதர்கள் கிடைத்த
மகிழ்சிரிப்பு உணவின் மணத்துடன்
கலக்கிறது



இன்னும் கொஞ்சம்
இருந்திருக்கலாம்
ஏங்குகிறாள்
சூரியன்

நிலக்காட்சிகளைக் காண



சொல்வனம்
4-9-2009