அசலா நகலா
எதையும் கண்டுபிடிக்க
முடியாதபடி இருக்கிறது
குளிரூட்டப்பட்ட இந்த
நிலவறைப் பேரங்காடியில்
அங்கங்கே தொட்டிகளில் அமர்த்தப்பட்டிருந்த
மலர்ச்செடிகள்
சென்ற வாரம்
காலியாக இருந்த
மரீன் பரேட்
அலுவலக வரவேற்பறையில்
இன்று திடீரென்று
வீற்றிருக்கிறது
ஒரு திப்பிலிப்பனை
முகமனுடன்
வரவேற்று
ஐயங்களைத் தீர்த்துவைக்கும்
தொலைபேசிக்குரல்
ஏற்கனவே
பதிவுசெய்யப்பட்ட
பதில்களை உடைய
நிரலியால்தான்
என்பது
வேறு ஒரு நாள்
தெரியவருகிறது
காலைச்சுற்றிவரும்
செல்ல நாய்க்குட்டியை
என்னிடம் காட்டி மகிழும்
பக்கத்துவீட்டுச் சிறுவன்
உணவு வில்லைகளை
அதன் வாயில் இட்டு
விசையை அழுத்துகிறான்
வாரத்திற்கு ஒரு முறை
சேமக்கலத்தில்
மின்னேற்றினால் போதும்
என்கிறான்
தாவரவியல் தோட்டத்தில்
லோர்னி பாதையில்
செண்பகச் செடிகளைப்
பார்த்துக்கொண்டிருந்தபோது
புதரடியில்
பச்சை வண்ண ரப்பர்குழாயின்
ஒருபகுதியைப் பார்த்துவிட்டு
கையில் எடுத்தேன்
இந்தக் கவிதை உறைந்துவிட்டது
என்னைப்போல
uyirosai 21-9-2009
3 comments:
வாழ்க்கையின் கோலங்கள் நவநாகரீக உலகில் சடுதியாக மாறிச் செல்கின்றன. அதனை, மிகவும் இயல்பாக சொல்லியிருக்கிறீர்கள் தோழி. வாழ்த்துக்கள்.
வாசிக்கும் ஒவ்வொருவரும் உறையக்கூடும்
பச்சை வண்ண ரப்பர்குழாயின்
ஒருபகுதியைப் பார்த்துவிட்டு
கையில் எடுத்தேன்
இந்தக் கவிதை உறைந்துவிட்டது
என்னைப்போல
///
நாங்களும்தான்
Post a Comment