Sunday, September 13, 2009

நாகரிக விருந்துகளில்,....

நாகரிக விருந்துகளில்,....



என்றுமே இல்லாத
பதற்றம்
பதுங்கிப்பதுங்கி
வந்தமர்ந்துவிடுகிறது
சாப்பாடு உள்ள
காகிதத் தட்டுகள்
ஏந்திய
புதிய பச்சை நிறக்கோடு போட்ட சட்டை
மாட்டிக்கொண்டுள்ள
தாத்தாவின்
கைகளில்



நூறுபேர் உள்ள இடத்தில்
இருக்கும்
பத்துநாற்காலிகளுக்குப்
போட்டிப்போட
முடிவதில்லை
தனக்கென முதலில்
எடுத்துக்கொள்வது
பழக்கமாகாததால்
இருக்கலாம்



காலி இருக்கைகள் நிறைந்த
நிகழ்ச்சி நடக்கும் அரங்கு
சுவருக்கு அடுத்தபக்கம்தான்
என்றாலும்



அங்கெல்லாம்
சாப்பிடக்கூடாது
அழுக்காகிவிடும்
ஒரு சிறுமியை
அவள் குடும்பத்தினர் யாரோ
மிரட்டிக்கொண்டிருந்ததை வேறு
பார்த்துதொலைத்தாகிவிட்டது




கதைபேசிக்கொண்டும்
சிரித்துக்கொண்டும்
நாசுக்காக உண்ணும்
மகனோ மகளோ
சுட்டிக்காட்டுவதற்கு
முன்பே
வாயோரத்து
சோற்றுப்பருக்கையைச்
சரிசெய்யவேண்டியிருக்கிறது
இன்னும் இரண்டு கவளம்
கூட உள்ளே செல்லாவிட்டாலும்



குடிநீர் எங்கே இருக்கிறது
என்று கண்டுபிடித்துவிட்டாலும்
அதை வைத்துக்கொள்ள
கூடுதல் கரம் ஒன்று
தேவையாய் இருக்கிறது



எங்கிருந்தோ
ஓடிவந்து
பேரனோ பேத்தியோ
தண்ணீர்க் கிண்ணத்தைக்
கொடுக்கும்போது
இதுபோதும் எனத்
தோன்றிவிடுகிறது.


நளினமாகச் சாப்பிடும்போதே
நாய்க்குட்டிபோல் ஓடிவந்து
இரண்டுபேர் கேட்கும்படியாக
நீ கையாலேயே சாப்பிடு
உனக்கு முள்கரண்டி சரிவராது
என்று
மகன் வந்துபோட்ட மிளகாய்த்துண்டு
விக்கலை நிறுத்தப் போதுமானதாக
இருக்கிறது



பரவாயில்லை இதையாவது
கவனித்து பேசுகிறானே
தன்னொத்தவர் கூறுகையில்
கண் வாழ்க்கைத் துணையைத் தேடுகிறது



பாட்டிகளுக்கு
முதல் பந்தியில் சாப்பிட
வாய்ப்புக்கிடைத்ததைவிட
தம் பேச்சை உற்சாகத்துடன்
கேட்க மனிதர்கள் கிடைத்த
மகிழ்சிரிப்பு உணவின் மணத்துடன்
கலக்கிறது



இன்னும் கொஞ்சம்
இருந்திருக்கலாம்
ஏங்குகிறாள்
சூரியன்

நிலக்காட்சிகளைக் காண



சொல்வனம்
4-9-2009

2 comments:

anujanya said...

ரொம்ப நல்லா இருக்கு மாதங்கி.

//புதிய பச்சை நிறக்கோடு போட்ட சட்டை
மாட்டிக்கொண்டுள்ள//

இதில் 'புதிய' மற்றும் 'மாட்டிக் கொண்டுள்ள' என்பதிலேயே தாத்தாவுக்கு நிகழப் போகும் சோகம் தெரிந்து விடுகிறது.

அனுஜன்யா

goma said...

நவநாகரீக உலகத்தில் உண்ணுவது கூட அநாகரிகமாக ஆகி விடுகிறது