Tuesday, January 17, 2006

சில வித்தியாசங்கள்- சில ஒற்றுமைகள்- கவிதை

அன்றும் இன்றும்


அன்று
தலைவன் வருகிறானா என்று பார்த்து
தலைவி கைபட்டு பட்டு
தாழ்ப்பாள் தேய்ந்ததாம்

இன்று
அன்புடையவளுக்கு எஸ்.எம்.எஸ் கொடுத்து
செல்லில் தட்டி தட்டிவிரல் தேய்கிறது
காதலனுக்கு

அன்று
போரில் பசு முதியோர், குழவி
பெண்டிர்- இவரைக் கொல்லார்

இன்று
போரில் முதியோர், குழவி பெண்டிர்
இவரை சித்ரவதை செய்கிறார்

அன்று
நல்லோர் ஒருவருக்காக
எல்லோருக்கும் மழை பெய்தது

இன்று
ஒருவர் மேல் உள்ள சினத்திற்கு
எல்லோர் மேலும் குண்டு மழை

அன்று
அட்சய பாத்திரம் இலவசமாக
எல்லோருக்கும் உணவு தந்தது

இன்று
இரசாயன உரம் இலவசமாக
எல்லோருக்கும் வியாதிகளைத் தருகிறது

அன்று
கொடுத்த வாக்கிற்காக
பிள்ளையை காட்டிற்கு விரட்டினர்

இன்று
வாழ்க்கையில் முன்னேற பிள்ளையை
வெளியூர் அனுப்புகின்றனர்

அன்று
இளம் துறவியாக தொண்டு
செய்தாள் மணிமேகலை

இன்று
இளமையிலேயே தொண்டுக்குத் தன்னை
அற்பணித்தார்அன்னை தெரசா

அன்று
பாக்களும் பண்களும்
ஓலைச்சுவடியில்

இன்று
கவிதைகளும் கதைகளும்
வலைமனையில்

அன்று
அறம் பொருள் இன்பம் வீடு
காப்பியத்தில்

இன்று
பண்பு பணம் பாசம் பக்தி
கணிணியுகத்தில்

அன்று
அன்னை பிதா குரு தெய்வம்
அருள் வழியில்

இன்று
அம்மா அப்பா ஆசிரியர் ஆண்டவன்
அதே வரிசையில்

அன்றும் இன்றும் பல மாற்றங்கள்
அறிவியலில் வரலாற்றில் புவியியலில்

அன்னிய மொழியிலும் அன்னைத் தமிழிலும்
அன்றும் இன்றும் எத்துணை மாற்றங்கள்

அன்றும் இன்றும் ஏன் என்றும் மாறாதிருப்பது
ஊக்கமுள்ள உழைப்பும் உயர்வான நட்பும்

2 comments:

மாதங்கி said...
This comment has been removed by a blog administrator.
ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

test