Thursday, February 23, 2006

நீங்க எப்படிங்க? கொஞ்சம் சொல்லுங்க1.கைக்குழந்தை முதல் மூன்று அல்லது நான்கு வயது குழந்தையின் அம்மா அப்பாவைக் கேட்டால் சொல்வாங்க; "சரியா அஞ்சு மணிக்கு எழுந்து ஊரைக் கூட்டும்";

அடுத்தவர் " அஞ்சா; நீங்க கொடுத்து வச்சவரு; எங்க வீட்டில நாலு மணிக்கு சவுண்ட் கொடுத்தால் அப்புறம் யாரும் தூங்கினாப்பலதான்".

மூன்றாமவரோ " நீங்கல்லாம் ரொம்ப அலட்டறீங்க, எங்க வீட்டு வாண்டு மூணு மணிக்கு எழுந்து கொட்டை பாக்கு மாதிரி விழிச்சுக்கும்; அப்புறம் பாத்ரூம் போறது, பாலைக்குடிக்கிறதுன்னு, தினந்தோறும் தீபாவளிதான்; தூங்கு தூங்குன்னு கதை சொல்லி பாட்டு பாடி, மிரட்டி, நமக்கு தாவு தீர்ந்துரும்; ஆனா பாருங்க அது நல்லா தெம்பா விளையாடும்".

இதை அப்படியே கொஞ்சம் வருஷம் பாஸ்ட் பார்வேர்ட் பண்ணிப்பாருங்க; பையனோ பெண்ணோ பதினஞ்சு இருபது வயது ஆகியிருக்கும். காலைல மணி எட்டுதான் ஆகியிருக்கும்; அதுபாட்டு சிவனேன்னு தூங்கிட்டு இருக்கும்.; அதை நிம்மதி தூங்க விடமாங்க; எழுப்பு எழுப்பு எழுப்பி, பயமுறுத்தி, வருங்காலத்தைக் காட்டி வசைபாடி எழுப்புவாங்க; ஆனா பசங்க எழுந்தாதானே. யாருக்கு ஊதற சங்கோன்னு நல்லா இழுத்து தலையோட போத்திட்டு தூங்கும். சிறிசா இருக்கசொல்ல சீக்கிரம் எழுந்தத்துக்கு பாராட்டினாங்கனா அதுங்க ஏன் எட்டு வரைக்கு இழுத்து போத்திட்டு தூங்கப் பழகுது?

2. அடுத்து இந்த பல்லு விளக்கறது குளிக்கிறதும் பாருங்க; "இப்படி பல்லுதேய், அப்படி பல்லுதேய், வாய ஆன்னு திற, நல்லா அழுத்து இல்லைனாக்க ஓட்ட வந்துரும், நல்லாத் துலக்கு, கண்ணாடியப் பாரு வாயோரத்தில் நுரை இருக்கு; நல்லா அதுல பாத்துகிட்டே விளக்கு, என்ன ஒரு நிமிசத்துல விளக்கிட்டன்னு ஒரு ஆறு ஏழு வயசாறப்போ போட்டு பிடுங்குவாங்க பாருங்க; அதுவும் வேற வழியில்லாம சொன்னபடி ஆடும், இல்லைன்னா அடின்னு வேறு அன்பால கொல்லுவாங்களே.

இதே ஒரு பதினேழு பதினெட்டு வயசுல பாருங்க, அதுங்க பாட்டு அம்மா அப்பா சொல்லித்தந்தபடி நல்லா கண்ணாடிய பாத்து பாத்து தேய்க்கும்; ஆ ன்னு காட்டி தேய்க்கும், ஈஈன்னும் சொல்லிக்கிட்டே தேய்க்கும், அப்படி தேய்ச்சிட்டு பல்லு நல்லா இருக்கா, முகம் சுத்தமா அழகா இருக்கான்னு ஒரு ரெண்டு மூணு வாட்டி கண்ணாடிய பாத்துக்கிட்டே தேய்க்கும்;

இந்த அம்மா அப்பா இருக்காங்களே பாராட்டுவாங்கன்னு நினைக்கிறீங்களா- அது என்ன எத்தனை வாட்டி கண்ணாடிய பாப்ப பொழுதன்னிக்கும் இதே வேலைதான்; சட்டுபுட்டுன்னும் வந்தமா பல்லு விளக்கினமான்னு போய்ட்டே இருக்கணும்ன்னு ஒரு அதட்டு போடுவாங்க பாருங்க, எல்லாம் சத்தமில்லாம ரூமில கைக்கண்ணாடில பாத்துகிட்டே இருக்கும்.


3. அஞ்சு வயசுல குழந்தைங்க குளிக்கற அழகை பாத்திருக்கீங்களா? அப்படி அழகா குளிக்கும்; நல்லா குழாய திறந்து விட்டுட்டு, இல்ல ரொப்பி வச்ச வாளிலேந்து எடுத்து எடுத்து ஊத்திக்கிட்டு, அம்மா வச்சிருக்கிற சோப்பை ஒருநாளைக்கு ஒரு சோப்பு போலிருக்குன்னு நெனச்சுகிட்டு எடுத்து அப்படி தேச்சுதேச்சு தண்ணிய ஊத்தி, நுரை நுரையா செஞ்சு, உடம்பெல்லாம் நல்லா தேய்ச்சு, கால்பாதத்துக்கடியில தேய்ச்சு, பாத்ரூம் தரைல சறுக்கு விளையாட்டு விளையாடி, ஷவர் கிவர் இருந்தா, பாத்ரூம் சுவரெல்லாம் அம்மாவோட ஷாம்புவால மணக்க மணக்க கழுவிவிட்டு, பாத்ரூம் கதவெல்லாம் சுத்தம் செய்து, அப்பாவின் சேவிங் சோப்பும் ப்ரஷ¤ம் எடுத்து தரைய தேச்சு அப்படி சுத்தம் செய்யுங்க-

ஆகா என்ன அழகா குளிச்சுகிட்டே வேலை செய்யறன்னு பாராட்டுவாங்கன்னு நெனக்கிறீங்களா, கிடையவே கிடையாது- நல்ல பூசை, தோசை கிடைக்கும். தோசைன்னா தின்னுற தோசைன்னு நெனச்சுக்காதீங்க. ஆசைப்படி குளிக்கவும் விடமாட்டாங்க; வீட்டு வேலை செய்யவும் விடமாட்டாங்க.

சரி அப்படியே இதெ பாஸ்ட். பார்வர்ட் பண்ணி இருபது வயசுக்கு வந்துருங்க- இதே அம்மா அப்பாதான், குளிப்பா, குளிம்மான்னு விதவிதமா கெஞ்சுவாங்க; அதுங்க தேமேன்னு உட்கார்ந்திருக்கும். புது சோப்பு , ஷவர் எல்லாம் இருக்கும் ஆனா பாவம் அதுங்களுக்கு குளிக்கற ஆசையே போய்டும். வீட்டுல ஒரு துரும்ப எடுத்துப் போடணும், பாத்ரூமையோ வீட்டையோ கழுவணும் அப்படிங்கற எண்ணமே போயிடும். இதுக்கு யாருங்க காரணம்?


4. கடைசிய இந்த சாப்பாடுன்னு ஒண்ணு இருக்கே; அதை வச்சு பசங்களை ஒரு வழியில்லங்க, ஒம்போது வழி பண்ணிடுவாங்க இவங்க; குழந்தைக்கு ஒரு வயசு, ஒண்ணரை வயசு இருக்கும், ஏதோ சீரியல் (தின்ற சீரியலுங்க) கூழு, வேக வச்ச காய், இல்ல அத்தையும் இத்தையும் அரைச்சு கலக்கி ஒண்ணு, பருப்புப்கூழு இல்ல பருப்புசாதம், இட்டிலி அப்படின்னு தின்னுகிட்டே இருக்கமே , இந்தப் பெரியவங்க எல்லாம், நல்லா கலர் கலரா, குழம்பு சாதம், புளிசாதம், கிரேவி, கூட்டு, நான் (நான் இல்லீங்க நான், குல்ச்சா, பரோட்டா அதெல்லாம்) கலர்கலர் கோப்தா உருண்ட, மசாலான்னு வீட்டுலயும் ஹோட்டல்லையும் வெட்டுறாங்களே , அது என்னான்னு பாக்கலாம்னா- சும்மா பாக்கத்தாங்க- அத ஓரக்கண்ணால பாக்கக்கூட விடமாட்டாங்க;

கண்ணு, செல்லம், வெல்லம், இதெல்லாம் ஒடம்புக்கு ஆகாது, உனக்கு பப்பு மம்மு இருக்கு, காரம்- இது வேணாம் அப்படின்னு கதையளக்கறாங்க- அப்ப நீங்க ஏன் சாப்புடறீங்கன்னு கேளுங்க- சொல்ல மாட்டாங்க அவங்களுக்கு ஒரு சேஞ்சு வேணுமாம்- எங்களுக்கு அதே சப்பூன்னு பப்பு மம்மு, ஹோட்டல்ன்னாலும் ஒரு டப்பாவில தூக்கிட்டு வந்துருவாங்க, இல்ல அங்க வந்தும் இட்டிலி தின்னச் சொல்லுவாங்க.


நாங்களும் இந்தக் கொடுமையெல்லாம் சகிச்சுக்கிட்டே அஞ்சு வயசு அக்காவாகவோ ஆறு வயசு அண்ணனாகவோ ஆகிட்டோம்ன்னு வச்சுக்குங்க-அவங்க நெனச்ச அளவுக்கு சாப்படலனா அடி பின்னிடுவாங்க- சாலட் சாப்பிடு, காய் சாப்பிடுன்னு ஒரே ரோதனை;

விதியேன்னு நாங்க சாப்பிடசொல்ல இவங்க தட்டப் பாத்தா, அதுல, அப்பளம், சிப்ஸ் இதெல்லான்தாங்க நிறைய இருக்கு. இவுங்க வளந்துட்டாங்களாம்; அதனால பரவாயில்லையாம். அதுலானதாங்க ஒரு பதினெட்டு வயசுல ஒண்ணு எல்லாத்தையும் வெட்டு வெட்டுவோம், ( எப்பப்பாத்தாலும் தின்னுகிட்டே இருந்தா எப்ப படிக்கறது ன்னு பேக்கிரவுண்ட் வேற) இல்ல எல்லாத்தையும் விட்டுறுவோம்.

இப்படி எத்தனையோ இன்னும் நிறைய மனசுல இருக்குங்க. சொல்ல பயமா இருக்கு, ஆனா இளம் வாலிப சங்கத் தலைவர்ங்கற முறையில உங்களுக்கு நான் சொல்லித்தான் ஆகணும்.

ஆமாம் நீங்க எப்படிப்பட்ட அப்பா அம்மாங்க? கொஞ்சம் சொல்லுங்க.

6 comments:

Seemachu said...

Romba nalla irukku mathangi.. ithanaala thaan vaazhkkai chakkaram-nu solraange..
ithe complaints-ai innum fast forward pannunga...kaalaila ezhunthu kulichu madiyaa Slokam sollalenna enakku vidinjaa maathiri irukkadhu..nnu dialog marupatiyum ultaa aagidum..
adhanaala.. ellame.. oru chakram thaan.

vaazhthukkal.. nalla ezhutareenga..
endrendrum anbudan
seemachu

Muthu said...

மாதங்கி,
நல்லா எழுதறீங்க. நகைச்சுவையாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.

மாதங்கி said...
This comment has been removed by a blog administrator.
மாதங்கி said...
This comment has been removed by a blog administrator.
ezhisai said...

Maathangi, Ithai vida thelivaa
ezhuthi naan padikkavillai.teenage children and parents go through this all the times.
last statement just excellent.

RAMAVATAR said...

வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டி
முதல் பரிசு நீங்கள் அனுப்பிய ப்ளோக் தான்
வாழ்த்துக்கள் !!