Friday, July 03, 2009

இதுவரை,...

என்னிலிருந்து
எழுந்தது
என்னுடையதில்லையாம்


உன்னுடையதில்லை
ஆனால்
உன்னுடையதாகிக் கொண்டிருக்கிறது


சட்டபுத்தகங்கள்
கர்ஜிக்கின்றன.


கலவரத்தில் நான் தொலைத்தது
உன்னால் கண்டெடுக்கப்பட்டு
நான்கு வருடங்களாக உன்னிடமே
இருந்து வருகிறது


அடுத்த அமரல் வரை
வாரம் ஒரு முறை
உன்னுடையதாக
பிரகடனப்படுத்தப்பட்ட
என்னுடையதை
தரிசனம் செய்யக்காட்டுவாய்
களவாடப்படும்
அச்சப்பின்னல்கள் ஊடே


அமரல்களாலும்
முகதரிசனங்களாலும்
பரிசுகளாலும்
பெற்றுத்தரவியலாத
ஒரு
சொல்
இன்னும்
ஆழத்தைத் தேடி
பூமிக்கடியில்
போய்க்கொண்டிருக்கிறது

8 comments:

priyamudanprabu said...

நமக்கு ஒன்னும் புரியலை
விளக்கினால் மகிழ்வேன்

மாதங்கி said...

பிரியமுடன் பிரபு,
நாளிதழில் கண்ட செய்தி மனதை என்னவோ செய்தது
குஜராத் கலவரத்தில் தன் பெற்றோரைத் தொலைத்து, வேறு குடும்பத்துடன் 2 வயதில் சேர்ந்துவிட்ட குழந்தை, அவர்களுடனே நான்காண்டுகள் வாழ்ந்தபின் பெற்றதாய் தன் குழந்தையை கண்டுபிடித்துவிட்டார்.
வளர்த்தவர் தரவில்லை, நீதிமன்றத்தில் போய், பெற்றவள் போராட, குழந்தை தன் தாயை மறந்துவிட்டது,
அம்மா என்று தெரியவில்லை,.....
இதை நினைத்து நான் எழுதினேன். ஆனால் படிப்பவர்கள் அவரவர் கற்பனை, அனுபவங்களுக்கேற்ப
வேறு ஒரு சூழலாகவோ நிகழ்வாகவோ புரிந்துகொள்ளலாம்.
எனக்கு பிறர் கவிதைகள் புரியாமல் போகும் தருணங்கள் உண்டு. நேர இடைவெளிவிட்டு
மீண்டும் படித்துப்பார்ப்பேன்.
அப்படியும் புரியாமல்
இருப்பவையும் உண்டு. சென்ற ஆண்டு ஒரு கவிதையைப் படித்து தோன்றியது நீண்ட
இடைவெளிக்குப்பின் மீண்டும் படிக்கையில் வேறு விதமாகவும் தோன்றலாம்.

மாதங்கி said...

பிரியமுடன் பிரபு:


மிக்க மகிழ்ச்சி

முதலில் விவாகரத்து ஆன பெண் தன் குழந்தை தந்தைடன் இருப்பதை பற்றி எழுதியது என்று நினைத்தேன்


////
கலவரத்தில் நான் தொலைத்தது
உன்னால் கண்டெடுக்கப்பட்டு
நான்கு வருடங்களாக உன்னிடமே
இருந்து வருகிறது
/////

இதை படித்து விட்டு மீண்டும்

////
என்னிலிருந்து
எழுந்தது
என்னுடையதில்லையாம்
////

என்று படித்த போது கொஞ்சம் புரிந்தது
ஆனாலும் முழுமையாக புரியவில்லை , எதையோ மனதில் வைத்து எழுதியுள்ளதாய் உணர்ந்தேன் . அதனால்தான் கேட்டேன்
விளக்கத்திற்கு நன்றி

"அமரல்" என்பது கொஞ்சம் குழப்பியது

மாதங்கி said...

பிரியமுடன் பிரபு:


ஹா ஹா
எல்லாமே புரிந்துவிட்டால் தேடல் நின்றுவிடும்
புரியாதவை, அறியாதவை, கிடைக்காதவை இவைகள்தான் வாழ்வை நகர்த்துகின்றன
( தத்துவம் இல்லை)

மாதங்கி said...

பிரியமுடன் பிரபு said
என்று முந்திய இரண்டு
பின்னூட்டங்களும்
வந்திருக்கவேண்டும்
என்ன ஆயிற்று தெரியவில்லை

priyamudanprabu said...

./////
பிரியமுடன் பிரபு said
என்று முந்திய இரண்டு
பின்னூட்டங்களும்
வந்திருக்கவேண்டும்
என்ன ஆயிற்று தெரியவில்லை
////


அவை இரண்டும் நான் கூகில் மின்னஞ்சலுக்கு நேரடியாக ரிப்ளே செய்ததால் அப்படி வந்திருக்கலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்கள் விளக்கத்திற்குப் பின் கவிதையை படித்தேன்..அருமை

தேவன் மாயம் said...

ஆரம்பத்திலேயே புரிந்து விட்டது! ஆயினும் விளக்கம் இன்னும் அருமை!