Wednesday, March 26, 2008

வியாழன் விசிட் ,...

வியாழன் விசிட் என்று போடலாமா, ம்,. வியாழன் விருந்து அல்லது மருந்து,...எல்லோரும் ஓடிப்போய்விடும் முன் இந்த வியாழன் என்று துவங்கிவிட்டேன்.


ஒரு புதினம், ஒரு கவிதை, கமலா ஆரஞ்சு, மூல்யம்

'கிடங்குத் தெரு' நாவல் படித்தேன். முழுக்க முழுக்க சென்னை கோடவுன் தெருவின் வியாபார நுணுக்கங்களும், அதன் பின் உள்ள மனித மனங்களின் நிழலாட்டமும் இணைந்த வித்தியாசமான பின்னணியில் எழுத்தப்பட்டிருக்கிறது.

எழுதியவர் ஜெகதீஷ்- தமிழினி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.

'ஹவாலா பற்றிய விவரங்கள்-' அட இவ்வளவு விவரமாகவா' என்று ஆச்சரியப்படவைக்கின்றன. இதுவரை யாரும் எழுதாத, பாகிஸ்தானிலிருந்து தமிழகத்திற்கு வசிக்க வந்த சிந்திக்குடும்பங்களின் கதை மிகவும் இயல்பான மொழியில் பின்னப்பட்டிருக்கிறது. தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டியது. பெண்களின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒரே ஆறுதல் ஒரு 85 வயது தாயாரின் பாத்திரம். சும்மா கலக்கியிருக்காங்க.


எனக்குப் பிடித்த கவிதை


குழந்தையின் தோசை


எதனாலோ அந்த தோசையைப்

பிடித்துப்போனது அந்தக் குழந்தைக்கு.

அப்பாவின் கையில் உட்கார்ந்துகொண்டு

அந்த தோசையைச் சுட்டிக்காட்டி

அது தன்னுடையது என்று

முன்பதிவு செய்துகொண்டது.

இதை கவனிக்காமல் அந்த தோசையை

என் பார்சலில் வைத்துக்

கட்டிக் கொடுத்தார் கடைக்காரர்.

மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு

வெளியே வரும்வரை

திருட்டுப் பொருளை வைத்திருப்பதைப் போல்

என் கை நடுங்கிக்கொண்டிருந்தது.


-முகுந்த் நாகராஜன்(ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது)உயிர்மை பதிப்பகம்

ஒரு மேற்கோள்: ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இருமுறை சரியான நேரத்தைக் காட்டுகிறது,..

தொலைக்காட்சியில் ஒரு நேர்காணல் பார்க்க நேர்ந்தது. பேசுபவர் அடிக்கடி, இது மூல்யமா, அது மூல்யமா என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

நர்மதாவின் தமிழ் அகராதியில் மூலம் என்றால், அடிப்பகுதி, கிழங்கு, தொடக்கம்,காரணம், பிற ஒன்று தோன்றுவதற்கான ஆதாரம், மிகுந்தவலியை உண்டாக்கும் சிறு புடைப்புகள், பத்தொன்பதாவது நட்சத்திரம் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது.

மூல்யம் என்ற சொல் மூலையில் கூட இல்லை. (814 பக்கங்கள்)

இதைத்தேடும்போது மூங்கா என்ற சொல் கண்ணில் பட்டது, ஒரு வகை கீரியாம்.

எல்லாவகை கீரிகளையும் கீரி என்றுதான் சொல்லிவந்துள்ளேன். கீரியைத் தனியாகப் பார்த்தால் அது கீரி என்று கண்டுபிடிக்கத் தெரியுமா என்பதே தெரியவில்லை.

பாம்புடன் சண்டை போட்டால், போட வைக்கப்பட்டால், விலங்கியல் தோட்டத்தில் பெயர்பலகை இருந்தால், கீரி என்று கண்டுபிடித்துவிடுவேன்.

மூங்கா வகையின் விலங்கியல் பெயர் தெரியவில்லை. பண்டைய தமிழர்கள் எல்லாவகைகளுக்கு தனித்தனி பெயர் வைத்திருப்பார்கள் என்று வியந்துகொண்டே மூங்காவை மறந்துவிடக்கூடாது என்று நினைத்துகொண்டேன்.

நகுலம், பிலேசயம், அகிபுக்கு, அராவைரி இந்தச் சொற்களுக்கு அரும்பொருள் கீரி என்று இருக்கிறது. இவற்றில் சில வேறு உயிரினங்களையும் குறிக்கின்றன.

தமிழில் மூல்யம் என்று ஒரு சொல் இருக்கிறதா?

தமிழ்ப்பண்டிதர் ஒருவர் அப்படி ஒர் சொல்லே கிடையாது என்று திட்டவட்டமாகச் சொன்னார். ஆனால் பல இடங்களில் இச்சொல்லைக் கேட்டுவருகிறேன். நண்பரிடம் பேசும்போது சொன்னேன். என்னை வினோதமாகப் பார்த்தார். இப்படித்தானே எல்லோரும் சொல்கிறார்கள் என்றார்.

கொட்டாவி போல் இதுவும் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு அனுமதி இன்றி தாவிவிடுமோ? இதன் மூலம் தெரிந்துகொண்டேன், அதன் மூலம் செய்யலாம் என்றெல்லாம் சொல்ல ஏன் தயக்கம். காரணம் மிக எளிது, மூலம் என்றால் பைல்ஸ் வந்துவிடும் அச்சத்தில் மூல்யம் என்ற சொல் ஆட்சி பெற்றுவிட்டதோ என்னவோ?

சீனப்புத்தாண்டு நெருங்கிவிட்டாலே இங்கு, சிங்கப்பூரில் காய்கனிச் சந்தையில் அட்டைப்பெட்டிகளில் ஆரஞ்சுப்பழங்கள், மாண்டரின் ஆரஞ்சு என்ற பெயரில் அடுக்கிவிடுகிறார்கள். நம் கமலா ஆரஞ்சுபோலவே தான் இருக்கிறது.

சீனப்புத்தாண்டின் விவரங்களுக்கும், அன்று செய்ய வேண்டிய/கூடாத செயல்களும் நம்பிக்கைகளும் விக்கிபீடியாவில் ஒரு புத்தகம் போடும் அளவுக்கு இருப்பதால் நான் எழுதவில்லை.

திருநெல்வேலி அல்வா, மங்களூர் போண்டா, இதெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது. யாராவது கமலா ஆரஞ்சின் மூலத்தைச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

6 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மூலம்=>மூல்யம்=>மூலியம் -மருவி உச்சரிக்கிறார்கள். அதை ஒத்துக்கொள்ளவேண்டும். அது சரிதான் என்று வாதாடுவது தவறு.
இதைவிட, பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவரும், பிரபல சூப்பர் ஸ்டார் முன்னால் மத்திய அமைச்சரும் "மொதலாளி" என்று ஒவ்வொருதடவையும் உச்ச்சரிப்பதைப் பார்த்திருக்கிறேன். "மு" அவர்களுக்கு வருவதில்லை போலும்.

நல்ல பதிவு.

அன்புடன்,
ஜோதிபாரதி.

ஆயில்யன் said...

இப்பத்தான் கமலாவேட மூலத்தை கண்டு பிடிக்கற ஆர்வம் வந்துச்சு!

எதோ பெண்ணின் பேராக இருக்ககூடும் என்றிருந்தேன்!
ஆனால் இது மரத்தின் பெயரின் இந்தி சொல்லாம் http://www.hort.purdue.edu/newcrop/CropFactSheets/kamala.html

sury siva said...

'இதன் மூலமாக" என்பதே ' இதன் மூல்யமாக " என உருவாகியிருக்கிறது.
இதன் காரணமாகத்தான் அல்லது இதை முன்னிட்டுத்தான் என்ற பொருளில் சிலர் இச்சொடர்தனைப்
பயன் படுத்துகிறார்கள். மூல்யம் எனும் வடமொழிச்சொல்லுக்குப் பொருளே வேறு. மதிப்பு என்று பொருள்.
அடுத்த பொருள் : கமலா ஆரஞ்சு.
கமல் என்றால் தாமரைப்பூ
ஆரஞ்சுதனை உரித்து உள்ளங்கையில் வைத்துப் பாருங்கள்.
சற்றி நேரத்தில் மலர இருக்கும் தாமரை மொட்டு போலத் தோற்ற மளிக்கவில்லை ?
இதே போல் தான் சாத்துகுடியும் இருக்கும் என்கிறாள் என் மனைவி.
முதன் முதலில் குமாரி கமலா நடித்த நாட்டியமாடிய தமிழ்த்திரைப்படத்தில்
இந்த ஆரஞ்சைக் கையில் வைத்திருக்கார்களோ ! தெரியவில்லையே ?

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வணக்கம் திரு. சுப்புரத்தினம் அய்யா,

//அடுத்த பொருள் : கமலா ஆரஞ்சு.
கமல் என்றால் தாமரைப்பூ
ஆரஞ்சுதனை உரித்து உள்ளங்கையில் வைத்துப் பாருங்கள்.
சற்றி நேரத்தில் மலர இருக்கும் தாமரை மொட்டு போலத் தோற்ற மளிக்கவில்லை ?//

விளக்கம் அருமை. எல்லா ஆரஞ்சு வகைகளும் தாமரை மலர் போல் தான் காட்சியளிக்கும் உரித்து பிளந்தால்.(சீனர்களின் மாண்டரின் ஆரஞ்சு உட்பட) ஏன் அந்த ஒரு ஆரஞ்சுக்கு மட்டும் கமலா தொற்றிக்கொண்டாள்? என்ற கேள்வி எழுகிறது.

இன்னொரு விடயம்,

ஆரஞ்சு = ஆறு + அஞ்சு(ஐந்து) = 11 சுளைகள்

எண்ணிப்பாருங்கள், தமிழின் அழகையும்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

வைகை said...

சுவாரசியமான பக்கம் போலிருக்கிறது. புதிதாக இணைந்திருக்கிறீர்களா? இப்போது வேலை அழைக்கிறது. கட்டாயம் மீண்டும் வந்து வாசிப்பேன். இனி உங்கள் பெயரைக் கண்டதும் விளக்கெரியும்:)(மொழி படம் பார்த்திருப்பீர்கள் அல்லவா?)

Geetha Sambasivam said...

//மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு

வெளியே வரும்வரை

திருட்டுப் பொருளை வைத்திருப்பதைப் போல்

என் கை நடுங்கிக்கொண்டிருந்தது.//
மிக மிக அருமையான தொகுப்புக்கு வாழ்த்துகள்.