கொஞ்ச நாட்களாகவே எனக்கு மனசு சரியில்லை; அம்மாவுக்கு வரவர காது சரியாக கேட்பதேயில்லை;
தனியாகப் போகாதே எதாவது வண்டி கிண்டி மோதிவிடப்போகிறது என்று சித்தி எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்.
என் அப்பா பிரிந்ததிலிருந்து அம்மா தனியாகவே துணிந்து நின்று என்னை வளர்த்து வருகிறார். யாரிடமும் எதுவும் எதிர்பார்த்தது கிடையாது.
அம்மா தைரியசாலி, கடும் உழைப்பாளி.
காது கேட்பது குறைந்து வருவதுதான் எனக்கு கொஞ்சம் கவலை தருகிறது.
அம்மா வெளியே செல்லும்போது வண்டிகள் உரக்க ஹாரன் அடித்தாலும் அல்லது ஓட்டுனர்கள் கூவினாலும் அம்மாவுக்கு காதில் சரியாக விழுவதில்லையே.
நான் கவலைப் பட்டதற்கு ஏதுவாக ஒரு முறை வெளியே செல்லும்போது வழிதவறி போய்விட்டார். ரொம்ப நாழி வரவேயில்லை; ஒரு பக்கம் கவலைப்பட்டேன், மறுபக்கம் என்னையே நான் கொஞ்சம் திட்டிக்கொண்டேன்.
மதிய உணவுக்கு எனக்கு மீன் ரொம்பப் பிடித்திருந்தது, அதுவும் சாதாரண மீன் இல்லை; இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வகை, அதை அவ்வப்போது புதிசாக வாங்கி வரத்தான் அம்மா அடிக்கடி வெளியே போகவேண்டியிருக்கிறது. அது தின்பதற்கு சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும்.
சித்தி சொல்லிக்கொண்டிருந்தார், "இங்கே பக்கத்தில் கிடைக்கும் மீனை பிள்ளைக்கு வாங்கிக்கொடுத்தால் போதாதா, எதற்கு தினமும் தள்ளிப் போய் வாங்கி வரவேண்டும்? ஏ குட்டி, இதெல்லாம் உன் வேலையா?" என்னைச் செல்லமாக முறைத்துப் பார்த்தார்.
ஒரு முறை கடற்கரை அருகில் ஒரு இடத்தில் புதிதாகக் கிடைக்கிறது என்று யாரோ தெரியாமல் சொன்னதைக் கேட்டு வெறும் வயிற்றில் பட்டப்படைக்கிற வெய்யிலில் ஓடி, புடைக்கும் சூரிய ஒளியில் கண்கள் கூசி, காலருகில் இருந்த மீன் வலை கவனிக்காது போய் காலை இசைகேடாக மாட்டிக்கொண்டு காலை விடுவிக்க முடியாமல் திண்டாடி, பின் சில நல்லவர்கள் உதவியாக அம்மா தப்பித்துவிட்டார்.
இன்றும் அம்மாவைக் காணோம். கடவுளே இந்த ஒரு முறை என் அம்மாவைக் காப்பாற்றி விடப்பா. இதோ என்னைப் பார்த்துக்கொள்ள வந்த சித்தி புதுசுபுதுசாக ஏதோ சொல்லி என்னை வேறு கிலி படுத்துகிறார்.
காலம் கெட்டுக்கிடக்கிறதாம், பசி மயக்கத்தில் அம்மா சுருண்டுவிட்டால் யாராவது நாதியற்றவள் என்றோ பிணம் என்றோ நினைத்து அம்மாவின் உடல் உறுப்புக்களை யாராவது எடுத்துவிடாமல் இருக்க வேண்டுமாம்.
கடவுளே இப்படியுமா இருப்பார்கள் இவ்வுலகில்?
சே சே இருக்காது, இருக்கக்கூடாது, இந்தச் சித்தி அனாவசியமாக பீதி அடைகிறார் என்று எனக்கு அடிக்கடி தோன்றும் என்றாலும் அம்மா பத்திரமாக இருக்கவேண்டும் சாமி என்று கடவுளை வேண்டிக்கொண்டேன்.
சாமி எனக்கு இனி அந்த மீன் வேண்டாம் எதுவும் வேண்டாம் என் அம்மாதான் எனக்கு வேண்டும். இந்த ஒரு முறை அம்மா பத்திரமாகத் திரும்ப வேண்டும். சீக்கிரமாக நான் பெரியவனாக வேண்டும். அம்மா வந்து விடணும் சாமி என்று கண்ணை மூடிக்கொண்டு வேண்டிக்கொண்டேன்.
என் பிரார்த்தனை பலித்துவிட்டது. அம்மா பத்திரமாக வந்துவிட்டார். கடவுள் எவ்வளவு நல்லவர். என்னைப் போன்ற சின்னப் பையனின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு விட்டார். அம்மா என்னைத் தடவிக்கொடுத்தார்.
அம்மா வழக்கம்போல் முதலில் சாப்பாடு கண்ணு என்றார். அம்மா, நீங்களும் என்னோடு சாப்பிடுங்கள் என்றேன். சித்தி என் அம்மாவுக்கு வழக்கம்போல் அறிவுரை சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு போய்விட்டார்.
அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டி முடித்தபிறகு அம்மாவின் முதுகைக் கட்டிக்கொண்டேன். முதுகில் காயத்தின் தழும்புகள். எப்போது பட்டுக்கொண்டார் என்று தெரியவேயில்லை. ஓவென்று அழுதேன்.
கண்ணா அழாதே, என்னை யாரும் அடிக்கவில்லை கொஞ்ச நாளைக்கு முன்வெளியே போன போது தேடப்போனபோது ஒரு வண்டியில் துருத்திக்கொண்டிருந்த கூர் பிளாச்சு என்னைக் குத்திவிட்டது என்றார்.
வண்டிகளைப் பார்த்தால் என் நண்பன் ராசு குதிப்பான் குதூகலிப்பான், எனக்கோ கோபம் கோபமாக வருகிறது. "மருந்து போட்டீங்களா அம்மா?" என்றேன். அம்மா சிரித்தார். "சே இப்போதே நான் பெரியவனாகி அம்மாவுக்கு உதவி செய்ய முடியாதா. அம்மாவை தூக்கக்கூட என்னால் முடியவில்லை.
இயற்கை உபாதைகளைத் தவிர அம்மாவுக்கு பிரச்சனையே அம்மாவின் பருத்த உடம்புதான்;
இரண்டு மூன்று நாள் கரையோரமாக விழுந்து கிடந்தால் தன் உடல் எடையாலேயே நசுங்கி திமிங்கிலங்கள் இறந்துவிடும் என்று நீங்கள் படித்திருப்பீர்களே.
தமிழ்சி·பி.காம்2008 புத்தாண்டு மலர்
2 comments:
உங்கள் உடனடி கதை அருமை.
சுற்றி வளைச்சு திமிங்கிலத்தை சொன்னது நன்றாக இருந்தது.
உங்கள் வலைப்பூ புதுப்பொலிவுடன் மிளிர்கிறது!
அன்புடன்,
ஜோதிபாரதி.
பல பதிவுகளில் அடிக்குறிப்புகள்,அவை உங்கள் மீள்பதிவா?
உங்கள் profile பெயர்-மாதங்கி-அழகான் ஒன்று.....
Post a Comment