நாம் எந்த இடத்தில் இருந்தாலும், அப்புறம் வா என்றாலும், தூங்கிக்கொண்டிருந்தாலும் நம்மை அனுமதி கேட்காமல் புத்தாண்டு வந்தே தீரும்.
பட்டங்கள் பெறப்போகிறேன், வேலை தேடப்போகிறேன், ஊர்சுற்றப்போகிறேன், வகுப்பறையில் ஒழுங்காக கவனிப்பேன், வீண்சண்டைக்குப் போக மாட்டேன், பிள்ளைகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவேன், பணம் சேர்ப்பேன், வீண்பொழுதுபோக்குகளில் நேரத்தை விரயம் செய்ய மாட்டேன், கோபத்தைக் குறைப்பேன், குடி, புகை ஆகியவற்றைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டேன், உண்மையே பேசுவேன் - ஆளாளுக்கு சபதங்கள் எடுத்துத் தள்ளுவார்கள்.
முதல் நாள் நல்ல பிள்ளைகளாக இருப்பார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாக வீரம் குறைந்து பழைய நிலைக்கு போகாமலிருக்க வேண்டுமே.
சபதம் எடுக்காதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா, சுற்றுமுற்றும் பார்த்துக்கேட்டேன்? நான் சப்தம் எடுப்பதில்லை என்று உறுதி பூண்டேன் என்றார் ஒருவர்! இதுவும் ஒரு சபதம்தான் அம்மா/ஐயா! சபதங்கள் எடுத்து ஒரு குறிக்கோளை நோக்கி பயணித்து சாதனை புரிபவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்குநீங்களே உந்துகோல்.
இப்போது நான் சொல்லப்போவது சபதம் எடுத்து தோற்றுப் போனவர்களுக்கு.
பெரிய சாகசங்கள் என்னால் முடியாதே, நான் சராசரி எனக்கு புரட்சி எதுவும் சரிப்பட்டு வராது, நான் என்ன செய்ய வேண்டும்; எதாவது செய்ய வேண்டும் போல் இருக்கிறது ஆனால் தெரியவில்லை என்று நொந்து கொள்பவர்கள் உள்ளார்கள் . கவலைப்பட வேண்டாம்.
என்ன செய்வது என்று கேட்டீர்களே? அப்போதே நீங்கள் உங்களைப்ப் பற்றி யோசிக்கத் துவங்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.
தினசரி வாழ்வில் செய்யக்கூடிய விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்.
இதில் ஒரே நாளில் கோடீஸ்வரராகும் சாகசம், அடுத்த நாளே உலகெங்கும் நீங்கள் யார் என்ற செய்தி பரவும் அபாயம் இல்லை. இதற்கு நிறைய பணம், அசாத்தியத் துணிச்சல் எதுவும் தேவையில்லை.
1. அதிகாலை எழுந்துவிடப் பழகுங்கள்:
அதிகாலை நேரம் உடல், மனம் புத்துணர்வு பெற்று, அந்த நாளைக்கு உங்களைப் புதுப்பிக்க உகந்த நேரம். தூங்கி விரயம் செய்யாதீர்கள். எழுந்து நின்று இன்றைய நாள் மிக இனிதாக இருக்கிறது. எனக்கு எல்லாம் நல்லதே நடக்கும். எதையும் என்னால் சமாளிக்க முடியும் என்று மனதுக்குள் அல்லது முடிந்தால் வாய்விட்டு சொல்லிக்கொள்ளுங்கள்.
2. சுத்தமாக இருங்கள்:
நன்றாகக் குளித்து, சுத்தமாக துவைத்து உலர்த்திய ஆடையை அணியவும். காலை, இரவு, நன்றாக பல் துலக்கி வரவும். தலைமுதல் கால்வரை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். ஒரு பொருளை எடுத்த இடத்தில் வைக்கவும்.
3. உடற்பயிற்சி:
உங்களுக்கு ஏற்றதாக ஏதேனும் ஒரு உடற்பயிற்சியைக் கட்டாயம் தவறாது செய்துவரவும். முறையான உடற்பயிற்சி, மன அழுத்தம், கோபம், மனஇறுக்கம் முதலியவற்றைப் போக்குவதோடு, உற்சாகத்தையும் உடல் உறுதியையும் அளிக்கும் மந்திரக்கோல்.
4. உங்கள் அன்றாடக் கடமை அல்லது பணி:
மாணவரா, வகுப்பில் கவனம் செலுத்தி, அன்றைய பாடங்களை அன்றே படித்து, தேவையானால் எழுதிப்பார்த்து நல்ல முறையில் படிக்கவும். ஐயங்களை ஆசிரியர்/நண்பர்/பெற்றோரிடம் கேட்டுத் தெளியவும். அலுவலகம் செல்பவரா, அன்றைய பணிகளை அன்றே முடித்துவிட்டு, மறுநாள் செய்யவேண்டியவற்றைப் பட்டியலிட்டுத் தயாராக வைத்திருங்கள். உற்சாகத்துடன் சிறப்பாக செய்யுங்கள். இல்லத்தர(சரா/சியா)மறுநாள் பணிகளை முந்திய நாளே திட்டமிட்டுச் செய்யுங்கள். உங்கள் கடமை அல்லது பணி எதுவாயினும் செய்வன திருந்தச் செய்யுங்கள்.
5. நல்ல பொழுதுபோக்கு:
இதில் திரைப்படங்கள் பார்த்துத்தள்ளுவது, என்ன செய்வது என்று புரியாமல் தொலைக்காட்சியில் சேனல் வேட்டை செய்வது, வம்பு அடிப்பது (நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவது அல்ல) பொழுது போகவில்லை என்று சும்மா இருப்பவரை வம்புக்கு இழுப்பது, இரவு 8 மணிநேரம் தூங்கிய பின்னும் பகலில் தூங்குவது, பணத்தைத் தண்டச்செலவு செய்ய என்னவெல்லாம் வழி என்று யோசிப்பது, போரடிக்கிறது என்று வீட்டு அலமாரிகளைக் குடாய்ந்து தின்பது இவை ஆரோக்கியமான பொழுதுபோக்கல்ல. செய்தி கேளுங்கள், நல்ல புத்தகங்கள், இசை, கைவேலை, பிராணிவளர்ப்பு, அகராதி படித்தல், கருத்துரையாடல்கள், நல்ல பேச்சு,.... நூற்றுக்கணக்கானவைகளில் உங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுங்கள். புத்தகங்கள் படிப்பதை அவற்றில் கட்டாயம் சேர்த்துவிடுங்கள். நான் தொலைக்காட்சியை ஒதுக்கச்சொல்லவில்லை. ஒதுக்கினால் நாம் ஒதுக்கப்படுவோம். பார்ப்பதை தேர்ந்தெடுத்துப்பாருங்கள்.
6. கணிப்பொறி பயிலுங்கள்:
இந்திய மேம்பாட்டுச்சங்கம், தேசிய நூலகங்கள், சமூகக் கூடங்கள் பல இடங்களில் எளிமையாக அதிகச் செலவின்றி கற்றுத்தருகிரார்கள். பயன்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டில் கணிப்பொறி இருந்தால், கணவன் - மனைவி- மகள்- மகன் - நண்பர்- உறவினர் யாரையாவது கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்/ உங்களுக்குத் தெரியுமா- வீட்டில் பெரியவர்களுக்குக் கற்றுத்தாருங்கள். வாரத்தில் ஒரு வெளிமனிதருக்காவது உதவுங்கள்.
7. கெட்ட பழக்கம்:
சதா எதையாவது தின்று கொண்டே இருப்பது, மது, புகை போன்ற பழக்கங்களை விட்டு விலகி விடுங்கள்.
8. தன்மையாகப் பேசுங்கள்:
பணிவன்பு, நிதானம், பொறுமை, பிறரைப் புண்படுத்தாத பேச்சு. இவை உங்களுக்கு நல்ல உடல் மற்றும் மனவளத்தை அளிக்கவல்லது.
9. அறுசுவையோடு இன்னும் ஒரு சுவை:
உணவை மிதமாக, சரியான நேரத்தில் உண்ணவும். நல்ல (ஆரோக்கியமான) பதார்த்தங்களைத் தேர்ந்தெடுக்க கற்றுக்கொள்ளுங்கள். ஆசைக்கு உண்ணாமல் ஆரோக்கியத்திற்கு உண்ணுங்கள். சரிவிகித சத்துணவை உண்ணுங்கள். (மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்து, கனிமச்சத்து, நார்ச்சத்து) ஆங்கிலத்துல் பேலன்ஸ்ட் டயட் என்பார்கள். இனிப்பு, காரம், புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உப்பு (சரிதானே)- அறுசுவையோடு கூட ஒரு சுவையை தினமும் ஒவ்வொரு வேளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அதுதான் நகைச்சுவை. நகைச்சுவை உணர்வு இருந்தால் டென்ஷன், படபடப்பு எட்டிப்பார்க்காது. மறந்துவிடாதீர்கள்!
10. ஒத்திப் போடாதீர்கள்:
எதையும் எப்போதும். எது பிடிக்கவில்லை நாளைக்குப் பார்க்கலாம் என்று தள்ளிவிடத் தோன்றுகிறதா. அதை உடனே இன்றே இப்போதே செய்துவிடுங்கள்.
அவ்வளவுதான். இந்த தினசரிப் பணிகளை செவ்வனே செய்யப்பழகுங்கள். வெற்றி வீடு தேடி வரும்.
சிங்கப்பூர் தமிழ்முரசு- 09-01-2001
1 comment:
Too good.. appadiyae jus take a look at my post.. these are a bit simple resolutions to follow..http://chennaicutchery.blogspot.com/2006/01/blog-post.html
Post a Comment