Thursday, April 24, 2008

வியாழன் விசிட்- ஒன்றேகால் திரைப்படங்கள், புக்கர்விருது, கரீபியன் கடலும் கயானாவும், கொளபொ

ஒரு திரைப்படம்

வேகம்= தொலைவு/ நேரம்

இந்த விதி மாறாது.
கதாநாயகி = ஒரு தாதா அல்லது அரசியல்வாதி (நாயகியின் தந்தை)/ ஏழையான கதாநாயகன்


இன்னும் யாரும் இந்த விதியை பயன்படுத்துவதை தடைசெய்யவில்லை போலிருக்கு, குறைந்த பட்சம் சம்பவங்களையாவது கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம். மக்களை கொஞ்சம் நெனச்சுப்பாருங்க.

கூடல் நகர் படம் பார்த்தேன்.


இந்தக்கதை தெரிந்தவர்கள் நான் சரியாகச் சொல்கிறேனா என்று பார்க்கலாம் அல்லது 'ஒரு ஆறுதல்' பத்திக்குத் தாவி விடலாம்.


பரத்துக்கு இரட்டைவேடம் முதல்முறையாக, சட்டை நிறத்தைத் தவிர வேறு வித்தியாசங்கள் இல்லை. அது கதைக்குத் தேவையாக இருக்கிறது. அதனால் மெய்ப்பாடு வேற்றுமையைக் காட்டவில்லை என்று யாரும் குறை சொல்லமுடியாது.


தம்பி பரத், அரசு மருத்துவமனை பிணக்கிடங்கு ஊழியர் கம் அரசியல்வாதியின் அடியாள் குழு உறுப்பினர்; பாப்பா பாப்பா என்று மரியாதையாக முதலாளி மகளை அழைக்கிறார்.


அண்ணன் பரத் பாரதி நூலகத்தில் வேலை பார்க்கிறார்; சைக்கிளில், பாப்பா கேட்கும் ஜெயகாந்தன், சுஜாதா புத்தகங்களைக் கொடுத்து வருகிறார், அடுத்தடுத்த காட்சிகளில் ஆ.வி. பிரசுரத்தின் காதல் படிக்கட்டுக்கள், (பாத்து தம்பி, வழுக்கிவிழுந்துராதே- அறிவுரை கொடுக்கும் இளவரசு (குழு உறுப்பினர்- வேலை படம் முழுதும் போஸ்டரும் கோந்துமாய்த் இருப்பது- படம் முடிந்த பின்னும் நினைவில் நிற்கிறார். ) ஒரு புளியமரத்தின் கதை (சு.ரா)எல்லாம் கொடுக்கிறார், தம்பி அக்கறையுடன் கோடிட்டு காட்டுவதை அசட்டை செய்கிறார், அவர்தான் அம்மா மெச்சும் நல்ல பிள்ளை, தம்பி போல் குடி கிடையாது, படம் முழுக்க சாதுவாகவே இருக்கிறார், எதிர்குழுவினர் ஆட்கள் காதலியை கலாட்டா செய்ய வரும்போது அவள் கைபிடித்து வேகமாகத் தப்பி ஓடி காப்பாற்றுகிறார்; சிறிது நேரத்தில் அவர்கள் நெருங்கி வரவும் ஒரு குடிசை வாசலில் கிடக்கும் அம்மிக்குழவியை தூக்கி ஆவேசத்துடன் காட்டுகிறார், இது நம்பும்படியாக இருக்கிறது. ஆண்கள் (காதலர்கள்) காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.


கதாநாயகி பாவனாவின் லட்சியம், நன்றாகப் படித்து (அப்படித்தான் தேவர் மகனில் கமல் சொல்லுவார் என்று ஆசிரியரிடம் சொல்லுகிறார்) சிறந்த ஆசிரியராக திகழவேண்டும், மிளிரவேண்டும், விளங்கவேண்டும் என்று அவ்வப்போது சொல்லுவதாகக் காட்டியிருப்பது நன்றாக இருக்கிறது. (பல படங்களில் எதுக்குடி படிப்பு ,....ஐக் கட்டிக்கிட்டா போதும் என்று கதாநாயகி தோழிகளிடம் சொல்லுவதாக வரும்)
கையைப்பிடித்த ஒருவனின் கரத்தை ஆள் வைத்து காலிசெய்த அப்பாவின் எதிர்வினையையும் மீறி ( இதையும் முன்பே பார்த்திருக்கிறோம்- அதுதான் காதல் என்பதா) காதலிக்கிறார்.

அப்பா, பைக், சைக்கிள் , எதிலும், எங்கும் போகக்கொடுக்கும் சுதந்திரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார். தம்பிப்பாப்பாவிடம் உயிரை வைத்திருக்கிறார்.

அம்மா கவனிக்கவில்லை என்று சொல்லக்கூடாது, அம்மாவுக்கு கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்ளவேண்டும்.
இதெல்லாம் எல்லாபடத்திலும் பார்ப்பதுதான்.




திருமணவீட்டில் சந்தியா பரத் சந்திப்பும், சந்தியாவின் அலம்பலும் சும்மா கலக்குது. சந்தியா கிடைச்ச ரோலை அளவா, மிடுக்கா செஞ்சிருக்காங்க. சந்தியா அப்பா (தம்பி பரத்தின் சக ஊழியர்) மனதில் நிற்கிறார், 18 வருசமா அப்பன் குடியினால அவதிப்பட்டிருக்கேன், நீ குடிப்பியா, எவ்வளவு காசு வச்சிருக்கே, எனக்கு கவரிங் நகை, பகட்டு எதுவும் வேணாம்,....சும்மா சுத்தி வராதே, நான் மோசமானவ, நிறைய பேத்த வெளக்கமாத்தால விளாசிருக்கேன், உனக்கு இங்கிலீசு தெரியுமாயாஅ,...( கோ, கோ, அப்புறம் கோஓஓஓ,... தம்பி பரத், திருப்பரங்குன்றத்தில் வந்து வழி கேட்கும் வெளிநாடுகாரர்களிடம்)


தம்பி பரத், அ. வாதியின் அடியாட்கள் (அண்ணன் பரத் என்று நினைத்து) வேற்றுமை தெரியாமல் அடிக்க, அண்ணனுக்காக அ. வா. யிடம் அவனை ஒண்ணும் பண்ணிடாதீங்க என்று கேட்டபின்பும், அவனை அ. வா போட்டுத்தள்ளிவிட ( பரத்தும், பாவனாவும் ஓடிப்போகும் பாதிவழியிலேயே மடக்கி, பாவனா, முதலில் அதிர்ச்சியடைந்து பின்னர் தானே தூக்கில்,...) அண்ணன் பரத்தின் உடல் பிணக்கிடங்குக்கு வருகையில் துடித்து அவரை சந்திக்க அனுமதி கேட்டு (தன்னை மறைமுகமாக ஆயுதங்களுக்காக சோதனை செய்வதை அறிந்து) எதிர்கட்சிக்காரங்க, நானுன்னு நெனச்சு போட்டுத்தள்ளிடாங்கண்ணே (இவர் எதிர்கட்சிகார ஆள் ஒருவரை செருப்பால் முன்பொருதரம் அடித்திருக்கிறார்) குமுறி, பிணக்கிடங்கிற்கு அவர் ஆறுதல் சொல்ல வருகையில் சந்தியா உள்ளறைக்கதவை வெளிப்பக்கம் தாள்போட அவரையும் இரண்டு அ. ஆ (அடியாட்களை) யும் போட்டுத்தள்ள, இறுதியில் காவல்துறை அவரை வேனில் அழைத்துச்செல்வதுடன் முடிகிறது.



ஒரு ஆறுதல்:


இந்தப்படத்தில் அரசியல்வாதி தன் மனைவியை/மகளை பளிரென்று அடித்து, உதைத்து, பிடித்து தள்ளிவிட்டு, நீ உள்ளே போ தலையிடாதே என்றெல்லாம் கத்துவதில்லை.
காத்து கருப்பை நம்பும் பாவனாவின் பாட்டி அப்பாவியாக இருக்கிறார். நிஜப்பாட்டி இன்னும் கொஞ்சம் சுட்டியாக இருந்திருப்பார்.


சந்தியா ஏட்டறிவு இருப்பவராக காட்டப்படுவதில்லை; பளிச்சென்று பேசுகிறார், காதலினிடம் காதல் இருந்தாலும் தெளிவுடன் இருக்கிறார். குடிகார அப்பனை ஆவேசத்துடன் அடிக்கிறார், ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார், சம்திங் கேட்கும் சிப்பந்தியிடம், எங்களுக்கும் இங்க ஆளு இருக்காங்க, (கம்பவுண்டர் என்று பீலா விட்ட பரத்) தெனாவட்டாக இருக்கிறார் ( அதற்காக ஆளை ஏமாற்றுவதாகவோ, கெட்டவார்த்தைகளை சரளமாக பேசுபவராகவோ அவரைச் சித்தரிக்காததற்கு நன்றி- ) மிக நாகரிமாக பேசுகிறார், எந்த பிரச்சனையும் எதிர்கொள்கிறார், இறுதிக்கட்டத்தில் தம்பி பரத் அண்ணனைபோல் பிணமாக படுத்துகொள்ள, அ.வா, அ. ஆ நுழைந்தவுடன் வெளிப்பக்கம் தாள் போடுகிறார், காதலை காவல்துறை மதுரைக்கு வேனில் அழைத்துச்செல்லும்போது கூடப்போகிறார். அழவில்லை, தைரியமாக இருக்கிறார்.


என் கேள்வி ஒன்றுதான்.



ஆசிரியர் ஆகும் லட்சியத்தையும் அடிக்கடி பரத்திடம் சொல்லும் பாவனா, ( தோழி ஹாஸ்டலுக்கு போய் கம்பைண்ட் ஸ்டடி பண்ணுகிறார்) ஏன் தற்கொலை செய்துகொள்கிறார். அவருக்கு பணம் இருக்கிறது, அப்பாம்மா இருக்கிறார்கள். எல்லார் அன்பும் இருக்கிறது, (காதலனைக்கொன்றார்கள்- அதிர்ச்சியாகத்தான் இருக்கும், கையையே வெட்டிய புண்ணியவான்கள்)



சந்தியாவிற்கு படிப்பு இருப்பதாகத் தெரியவில்லை, பணம், சுத்தமாக இல்லை, குடிசையில் தன்னுடன் இருக்கும் குடிகார அப்பாவுக்கும் (மகள் என்ற பாசத்துடன் இருக்கிறார்) உடல்நிலை மோசம் என்று மருத்துவர் சொல்லிவிட்டார், அம்மா, பாட்டி, தாத்தா யாரும் கிடையாது, அவரை கல்யாணம் செய்ய ஆசைப்படுபவர் கொலைக்குற்றத்திற்றம் செய்திருக்கிறார்.


சந்தியா (கதாபாத்திரம்) எந்த சூழ்நிலையையும் தன்னம்பிக்கையுடன் சமாளிப்பாள். அவளிடம் நாணயம் இருக்கிறது, ( இரவலை உடனே திருப்பித்தருகிறாள்), தைரியம் இருக்கிறது, தனக்கு ஆறுதல் சொல்ல பெண்கள் இல்லையே என்ற கவலை இல்லை, நட்புவட்டம் அமைத்துக்கொள்கிறாள்.


படிப்பறிவு பாவனாவிற்கு என்ன வழியைக் காட்டியது?


இதுதான் யோசிக்கவேண்டியிருக்கிறது.


அடுத்தது கால் திரைப்படம். அவ்வளவுதான் பார்க்கக்கிடைத்தது.


சமூகசேவையில் நாட்டமுள்ள மென்பொருள் மேலாளர் மாதவன், நண்பன் வீட்டிற்குத் தன் பெற்றோரின் திருமணவிழாவிற்கு அழைப்புவிடுக்கச்செல்கிறார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே, மாடியிலிருந்து நண்பன் மனைவி வருகிறாr ( வான்னு சொல்லக்கூடாதா? அதான் வந்தாசுல்ல அப்புறம் என்ன? - புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.)
விழா நாளன்று முதியோர் இல்லத்தில் மாதவன் . ஓரத்து அறையில் ஒளிந்துகொண்டு நண்பனின் பெற்றோர்.

தனிமையில் மாதவனிடம் விக்கி விக்கி நடந்ததைச்சொல்லி அழும் நண்பன்.

நண்பன்:

நீ ஒன்பது மணிக்குதான் எழுந்துக்குற, எங்கம்மாதான் சமையல், வீட்டுவேலை எல்லாம் (கூட்டி மெழுகி) , அப்பா நம்ப குழந்தையை பார்த்துக்குறார், என்ன உனக்கு)


அவன் மனைவி:

அதெல்லாம் தெரியாது, ஒன்னு அவங்க இருக்கணும் இல்ல நான்)



ஒன்னும் வலுவான காரணம் இருக்கறதா தெரியல; அவங்க இருக்கும் வீடு, பெரிய மாடி பங்களா; நண்பனுக்கு வேலை வாங்கிக்கொடுத்ததே மாதவன்தான் என்று சொல்கிறார்கள். அப்படியானால் வீடு?



தொலைக்காட்சியில் பெண்கள் தினம் கொண்டாடுகிறார்கள். சிறப்பு நிகழ்ச்சியில் பெண் முன்னேற்றத்தை, சிறிய பாடலுடன் சின்னத்திரையில் காட்டுகிறார்கள். முதலில் கனிமொழி வருகிறார், அடுத்தது சல்மா, பிறகு தமிழச்சி. அடுத்து விவசாயக்கல்லூரி மாணவி பாவனாவின் நேர்காணல் ( அவர் துறையில் சிறப்பான சாதனை செய்ததற்காக)


பேட்டியின் போது, படிப்பிற்குப்பின் பாவனா, முதலில் கணவனுக்கு நல்ல மனைவியாக இருப்பேன், என் குழந்தைக்கு நல்ல தாயாக இருப்பேன், மாமியார் மாமனாரிடம் நல்ல பெண்ணாக இருப்பேன் என்று சொல்லும்போதே
( பின்னணியில் பிருமாண்டமான பங்களாவில் அம்மா, அப்பா, அண்ணன்கள், அண்ணிகள் (அகல பொற்கரைப்பட்டுசேலைகளுடன்) குழந்தை குட்டிகள் என்று பாசக்கார குடும்பத்தில் வளர்கிறேன் என்று விளக்கத்துடன்) எதேச்சையாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மாதவனிம் முகத்தில் பரவசம் (இந்த வசனம் அவரைக்கவர்ந்துவிட ) பாவனாவைத் தேடிக் கண்டுபிடித்து, நிழலாய்த் துரத்தி,துரத்தி(கால்கேட் புன்னகை மாறாமல்) பேச ஒரு நிமிடம் என்று கெஞ்சுகிறார்.



பாவனாவுக்குப் பிடிக்கவில்லை. மாதவன் விடுவாரா, போடு, ஏகப்பட்ட போன்கால்கள் எல்லா நண்பர்களுக்கும். அப்புறம் என்ன, பாவனாவின் வகுப்பறையில் வந்து சொல்கிறார்கள்.


பாவனாவிற்கு வந்த கடித மூட்டையை, மன்னிக்கவும் மூட்டைகளை, அவிழ்த்தால் பாஸ்கெட்பால் மைதானம் பரப்பு முழுதும் நிறையும் அளவிற்கு முழநீள வாழ்த்து அட்டைகள். மாதவனுக்காக ஒரு நிமிடம் பேச விண்ணப்பித்து வாழ்த்து அட்டை அனுப்பியிருக்கிறார்கள் நண்பர்கள்.

பாவனாவின் தோழிகூட அவரை ஒருமாதிரி பார்க்கிறார்.



அதன் பின் நான் படத்தைப்பார்க்கவில்லை.


அதனால் என்ன? இரண்டாவது பாதியை முழுதும் ஊகிக்காவிட்டாலும், இந்த மேட்டர் மட்டுமாச்சும் எப்படி போயிருக்கும் என்று கூறுகிறேன். இது முற்றிலும் என் சொந்தக் கற்பனையே.


சூழலியல் மீது மிகுந்த அக்கறை கொண்ட பாவனாவிற்கு எ4 அளவு வாழ்த்து அட்டைகள் ஆயிரக்கணக்கில் வந்தது கோபத்தை/வேதனை உண்டுபண்ணியிருக்கும்; அதற்கு விசிறி வீசினால்போல் மாதவன் ஆயிரக்கணக்கான இளைஞர்களை சிபாரிசுக்கு அழைத்து வந்தது, தொடர்ந்து கார்னர் செய்துகொண்டே இருப்பது எரிச்சலைக்கிளப்பி, கா என்று யார் ஆரம்பித்தாலும் ஒரு முறை முறைத்துவிட்டு ஆராய்ச்சித்துறையில் ஈடுபட்டு ஒரு பெரிய விஞ்ஞானியாகி நாட்டிற்கு பெருமை சேர்ப்பார். சரிதானே. அல்லது வேறு புதுமாதிரி ஆனால் வெறுப்பேத்தாத அணுகல் உள்ள வாலிபனை விரும்புவார். தொடர்ந்து தன் துறையிலும் சாதனை புரிவார்.


சரிதானே மக்களே!


படத்தை முழுவதும் பார்த்தவர்கள் முடிந்தால் திரைகதை என்ன என்று சொல்லவும்.


நான் பார்த்த இந்த திரைப்படத்தில் வசனத்தைப் பற்றிச்சொல்லவேண்டும்.


ஒரு உதாரணம்.


மாதவன் அம்மா:

எப்படா திருமணம் செஞ்சுக்கப்போறெ, இன்னும் நாலு வருஷம் போனா, பொண்ணுங்க, அண்ணேன்னு கூப்பிடப்போறாங்க


மாதவன்:

இப்ப எனக்குத் திருமணம் வேண்டாம்மா (இன்னும் பாவனாவைப் பார்க்காததால்)


மற்றொரு காட்சியில் குப்பாயக்கனவான்களுடன் (அதாங்க கோட் சூட்) உரையாடுகிறார்;

பிரும்மாண்டமான ஐந்து நட்சத்திர மென்பொருள் அலுவலகத்தில் ( கண்ணாடித்தரை) உதவியாளர் மாதவனிடம், இதோ உங்கள் பயணச்சீட்டு என்பார்.


படத்தில் ஒரு வார்த்தை மன்னிக்கவும் ஒரு சொல் கூட ஆங்கிலம் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.


வாழ்த்துக்கள் படத்தை எடுத்தவர்களே!


(இதுதான் படத்தின் பெயர்)


ஒரு ஆங்கிலச்சொல்கூட இல்லை. இது செயற்கையாக இருக்கிறதே, என்று எண்ணும்படியாகத்தான் இருக்கு படத்தைப்பார்க்கையில். ஆனால், ஒரு சொல்லை உள்ளே விட்டால், அது டெங்கி கொசுபோல் பல்கிபெருகிவிடும். அப்புறம் தமிழ் நிகழ்ச்சிகளில், மற்று தமிழ் உரையாடல்களில் ஒரு பத்தி பேச்சுக்கு ஒரு வார்த்தை தமிழ் என்று ஆகிவிடும், அப்புறம் அப்படிப் பேசுபவர்களை இந்தப் படத்தை முதலில் பார்க்கச்சொல்லலாம்.


எங்கெங்கோ சென்ற நம் தமிழும் நம் தமிழர்களின் நிலையையும் பற்றிப் பார்ப்போமா?


சும்மா சொல்லவில்லை. கரீபியன் கடலும் கயானாவும் புத்தகத்தைப் படித்த பின் இப்போதாவது படிக்க எடுத்தேனே என்று நினைத்தேன்.

தமிழ் தாய்மொழி ஆனால் எழுதப்படிக்கத் தெரியாது என்பவர்கள் தயவுசெய்து தெரிந்த யாரையாவது பிடித்து வாசிக்கச் சொல்லுங்கள்.


(மாணவர்கள் கூடப்படித்துக்காட்டலாம்)

எளிய நடை, ஆழமான ஆய்வு இரண்டும் கைக்கோர்க்காது என்று யார் சொன்னது.

ஆனால் இது தமாஷ் பண்ணும் நேரமில்லை.

பஹாமாத் தீவுகள், ஜமைக்கா, பிரிட்டிஷ் கயானா, கரீபியன் தீவுகள் இங்கெல்லாம் சென்று ஆய்வு செய்து எழுதப்பட்ட பயணநூல்.


பஞ்சம் பிழைக்கப்போய் அடிமையான தமிழர்களின் நிலை குலை நடுங்குகிறது.


(ஏமாற்றி/ வலுக்கட்டாயமாக)
பிரிட்டன், பிரான்ஸ் இங்கெல்லாம் இருந்த வெள்ளை முதலாளிகள் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் தீவுகளையே சொந்தமாக வைத்திருந்தார்களாம். அடிமை வேலை, விவசாயம் செய்ய வரவழைக்கப்பட்ட கறுப்பர்கள், சீனர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லையாம், (12 கப்பல்களில் அழைத்துச் செல்லப்பட்ட சீனஅடிமைகளில் %90 தற்கொலை செய்துகொண்டார்களாம்) கடுமையான குளிர், பூச்சிகளின் தொல்லை, ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்) உடனே இந்தியர் மீது பார்வையைத் திருப்பினார்களாம்.


தகுதிகள்: எழுதப்படிக்கத் தெரிந்திருக்கக்கூடாது, ஆரோக்கியமான உடற்கட்டு வேண்டும், கலகம் செய்யக்கூடாது- இதற்கு முற்றிலும் பொருந்தியவர்கள் தமிழர்கள். வங்காளிகள்கூடப் போயிருக்கிறார்கள் போலிருக்கு ஆனால் தமிழர்கள்தான் அதிகம்.

காய்ச்சலிலும் வேலைசெய்யாவிட்டால் கசையடி, எந்த நாட்டில் இருக்கிறோம் என்று கூடத் தெரியாது. பெண்கள் நிலை படுபயங்கரம், குழந்தைகள் நிலை கேட்கவே வேண்டாம். குடும்பத்தினரை வெவ்வேறு தீவுகளுக்குப் பிரித்து அனுப்புவது, அடையாளங்களை அழிப்பது, (பெயர் மாற்றப்படுவது, நம்பிக்கைகளை அழிப்பது) பின் மாற்றங்கள் வந்து அவர்கள் தாயகம் திரும்பிவர நினைத்தபோது தந்திரங்களை கையாள்வது,...
குழம்பை இன்னும் கொளம்போ என்கிறார்களாம்.



பயணம் என்றால் ஏதோ உல்லாசப்பயணம் போல் அல்லாமல் வலுக்கட்டாயமாக மறுநடவு செய்யப்பட்ட வேர்களைத் தேடி 1953 ஆம் ஆண்டு ஆறுமாதங்கள் ஆய்வுப்பயணம் செய்த திரு ஏ.கே. செட்டியார் இன்னும் பல பயணநூல்கள்,
.
ஆய்வுப்படங்கள ஆக்கியிருக்கிறார். இவருக்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்ததா, தெரியவில்லை.


கரீபியன் கடலும் கயானாவும்-
வெளியீடு-அகல்

342, டி.டி.கே.சாலை,

இராயப்பேட்டை,
சென்னை 600 014
தொலைபேசி 28115584

ஆங், புக்கர் விருது என்று எழுதியிருந்தேனே, அது இங்கே எங்கே வந்தது?

புக்கர் குடும்பத்தினர், பிரிட்டிஷ் கயானாவில் ஆயிரக்கணக்கான அடிமைகளை வைத்து கரும்புப்பண்ணை நடத்தி வந்தார்களாம். எப்படியிருக்கு பாருங்கள்.

2 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தங்கள் வியாழன் வருகை, திரைப்படங்களைப் பற்றிய சுவாரஸ்யமான அலசலுடன் ஆரம்பித்து, புலம் பெயர்ந்த தமிழர்களைப்பற்றிய உருக்கமான, புதிய செய்திகளுடன் முடித்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள், அருமைச்சகோதரர் சீமான் அவர்களுடைய படமல்லவா? அதனால் தான், தான் பட்டி தொட்டியெல்லாம் பேசுகிற பேச்சுக்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறார். அவர் பாணியில் சொன்னால், ஆச்சர்யப் பட ஒன்றும் இல்லை. ஆங்கிலத்தைப் பயன்படுத்தியிருந்தால் தான் ஆச்சர்யப்படவேண்டும்.

நல்ல பதிவு! மீண்டும் வாழ்த்துக்கள்!!


அன்புடன்,
ஜோதிபாரதி.

Geetha Sambasivam said...

//ஏ.கே. செட்டியார் இன்னும் பல பயணநூல்கள்,
.
ஆய்வுப்படங்கள ஆக்கியிருக்கிறார். இவருக்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்ததா, தெரியவில்லை. //

இல்லை, நல்லா இருக்கு பதிவு, நல்ல ஆழமான கருத்துக்களை வெகு எளிதாய்ச் சொல்லுவதற்கு வாழ்த்துகள்.