Monday, December 10, 2007

இரண்டு கடிதங்கள்

சிங்கப்பூர் வந்த புதிதில், (1993) ஹெச்.டி.பி. அடுக்ககக் கீழ்த்தளத்தில் உள்ள குடியிருப்பாளர்களின் அஞ்சல் சேமிக்கும் பெட்டியில் நாள்தோறும் வரும்அஞ்சல்களை எடுக்கப் பெட்டியைத் திறக்கும்போது, அதில் ஏராளமான துண்டுபிரசுரங்கள் (flyers) குவிந்திருக்கும்.


வங்கிக் கடிதங்கள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணஅறிவிப்புகள், வீட்டுவசதி வாரியத்திலிருந்து வரும் கடிதங்கள், இதர கடிதங்கள், சின்னஞ்சிறு அறிவிப்புகளைத் தாங்கிய தாள்கள், காணாமல் போன ஒரு வயது ஜிம்மி- பழுப்பு நி¢ற நாய்க்குட்டியைக் கண்டு பிடித்தால் தக்க சன்மானம் கிடைக்கும் ( நீல வண்ணச் சொக்காயும் இளம்பச்சைநிற காலுறையையும் அணிந்திருக்குமாம், உணவுவேளைக்கு முன்பே காணாமல் போயிற்றா , பற்கள் எத்தனை என்ற விவரங்களை குறிப்பிடவில்லை) மகனுக்குப் பள்ளியில் வீட்டுப்பாடம் அதிகமில்லையாம்; கூடுதல் பாடங்கள் ஆங்கிலம், தாய்மொழி, கணக்கு முதலியவை சொல்லித் தர ஆசிரியர் வேண்டுமாம் (ஐந்து வயது சிறுவனுக்கு இதை இன்னும் தெரிவிக்காதலால் அவன் இன்னமும் பந்தடித்துகொண்டிருக்கிறான்)
வீட்டிற்கு சன்னல் மாற்றுகிறோம், சமையலறை அலமாரிகளைப் புதுப்பிப்போம், மேலும், வீட்டின் தரையின் மேற்பகுதி பார்க்கே (மரம்), பளிங்கு, எப்படி வேண்டுமோ நவீனப்பாணியில் மாற்றித்தருவோம், சமையலறை அலமாரிகளை புதுப்பிப்போம், ஐரோப்பிய அடுப்பு, பாத்திரம் கழுவும் தொட்டி, குளியலறைத் தொட்டி, கழிவுக்கோப்பை, வழுகாத தரை, முன்னறை மேல் உள்கூரையழகு (cornice), குளிரூட்டும் பெட்டி, மின் இணைப்புகள், மின்விசிறிகள், நுரைமெத்தைகள், இத்தாலிய ஆசனங்கள், துணி துவைக்கும் ஐப்பான் இயந்திரம், உள்ளறைகளில் சுவரோடு உள்ளொட்டிய அலமாரிகள் என்று வீட்டைத்தவிர சகலத்தையும் சகாய விலையில் மாற்ற உத்திரவாதம் தரும் அங்காடிக்காரர்களின் அன்பும், (வீட்டை வாங்குவதற்கும் விற்பதற்கும் குவியும் விளம்பரங்கள் பற்றியும் எடையைக்குறைக்கும், மேனி எழிலூட்டும் விளம்பரங்கள் பற்றியும் தனியாக பின்னொரு பொழுதில் எழுதுகிறேன்)நாம் விரோதமாகத் தூக்கிப்போட்டாலும் நம் தபால் பெட்டியை தேடிவந்து வந்தனம் செய்யும் அன்பர்கள், அடுத்து கணினி வாங்கு, பியானோ வாங்கு, சாப்பாடு வாங்கு, என்று இரத்த அழுத்தம் வரவழைக்கக் கூடிய %50 தள்ளுபடியில் இன்றே கடைசி என்று நல்லெண்ணத்துடன் நமக்கு நினைவூட்டும் காகிதத்துண்டுகள் தேடிவந்து நம் அஞ்சல்பெட்டியில் அமர்ந்துகொள்ளும்.



இப்போது துண்டுச் சீட்டுகள் வருவதை வரவேற்காத கலகக்காரர்களுக்காக, தடுக்க சிறுகதவு செய்தாலும் (வேண்டுமானால் அதைப்பூட்டிக்கொள்ளலாம்) தடுக்க முடியாத சில அஞ்சல்கள் உள்ளன.


உறவினர், நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்கள் அருகிவிட்டது,
எல்லாம் மின் அஞ்சலின் உபயம். அஞ்சலில் தவறிவிட்டது என்று யாரும் கதைகூற இயலாது, வேண்டுமானால் இணையப்பக்கத்தை திறக்க இயலவில்லை, கணினிக்கு உடல்நலம் இல்லை எனலாம். அதற்குத் தடையில்லை.



கடிதங்களைப்பார்ப்பது என்பது ஒரு சுவையாரமான செயல்தான் கட்டணம் கட்டச்சொல்லும் கடிதங்களைத் தவிர.


இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல சில துண்டுபிரசுரங்கள் பிடிவாதமாக வந்து கொண்டிருக்கின்றன.


நான் பள்ளிமாணவராக இருந்தகாலத்தில் வரும். அனேகமாக தெரிந்தவர்கள் எல்லோருக்கும் வரும். மஞ்சள் நிற தபால் அட்டையில் எழுதப்பட்டிருக்கும். இது நான் கடவுள் எழுதச்சொல்லி எழுதுவது, இதைப்போல் உடனடியாக 50 கடிதங்கள் கையால் எழுதி ( என் மீது உள்ள கருணையினால் எனக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கை என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன்) எல்லோருக்கும் அனுப்பினால் தேர்வில் முதல்வகுப்பில் வெற்றிதான், மீறி அலட்சியப்படுத்தினால், இந்த வருடம் தோற்றுவிடுவீர்கள் என்று பாசம் கலந்த கண்டிப்புடன் வரும்.


இவ்வாறாக வரும் மஞ்சள் வண்ண அஞ்சல் அட்டைகள் குப்பை, தூசு அள்ளவும், சரிசமமாக நிலத்தில் அமர மறுக்கும் நாற்காலிகளுக்கும், முக்காலிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் என்பதைக் கண்டுபிடித்த பின் என் மனம் உவகையடைந்தது.


பள்ளியில் உடன் பயிலுபவர்களை வினவியதில் அவர்களுக்கும் அக்கறை மடல்கள் வந்துசேர்ந்ததை உறுதிசெய்துகொண்டேன். சிலர் அச்சம்கொண்டு ஞாயிறு முழுவதும் அமர்ந்து எழுதி திங்கள் காலையில் பள்ளிக்கு எதிரில் இருந்த அஞ்சல் பெட்டியில் சேர்த்துவிட்டு, வகுப்பில் முதல்பிள்ளையாக வரும் இன்பக்கனவைக் கண்டவாறே பள்ளியில் வந்து அமர்ந்துவிட்டு அன்று மதியம் நடந்த கணிதத் தேர்வில் கண்களை அடிக்கடி மலர்த்தி கனவைத்தொடர்ந்தனர்.


சொன்னதைக் கேட்காவிட்டாலும் அட்டையை தூக்கி எறியாமல் அதை பயன்படுத்த புதியமுறைகளைப் பற்றி யோசித்து செயல்பட்டதால் என்னிடம் கருணை காட்டப்பட்டது என்பதை என் கணிதத்தேர்வு மதிப்பெண்கள் உறுதிசெய்தன.


பிற்காலத்தில் கல்லூரி படிப்பிற்காக தென் தமிழகத்திலிருந்து நடுவண் தமிழகத்திற்கு நான் குடிபெயர்ந்தாலும் இத்தகைய கருணை மடல்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாகவும் (புதிய முகவரியை சிலரே கண்டுபிடிக்கும் திறமை பெற்றதால்) மெல்ல ஆண்டுக்கு ஒரு முறையாகி, பின் அதுவும் நின்று போனபோது, என் வளர்ச்சியில் நல்லெண்ணம் கொண்ட முகம் தெரியாத அன்பர் என்னை தன் நினைவேட்டிலிருந்து நீக்கிவிட்டதை எண்ணி வருந்தினேன்.



சிலபல ஆண்டுகள் கழித்து சிங்கப்பூருக்கு வந்தபோது இந்த இனிய நினைவுகள் உதித்தது எங்ஙனம் என்று கேட்பவருக்கு நேற்று வந்த இரண்டு கடிதங்களைப் பற்றி கூறக்கடமைப்பட்டிருக்கிறேன்.


ஒன்று தட்டச்சு செய்த முகவரியைத் தாங்கிய பிரபல பொரிம்பு (brand) பெயரால்அலங்கரிக்கப்பட்ட உயர்ரக உறை. மற்றொன்று பாலர்பள்ளி மாணவர், பேனாவில் முகவரி எழுதுவதன் மூலம் அவர் ஆங்கிலஅறிவு மற்றும் எழுதும் பயிற்சியும் மேற்கொள்ளவைக்கப்பட்டிருந்தது தெரியும்படியாக ஒரு கடிதம். இதற்கு பொரிம்பு பெயரிட்ட உறை கிடைக்கவில்லை போலும். அதனால் ஒரு தாளில் எழுதி, நான்காக மடித்து மெல்லிய உலோக கம்பியால் அங்கங்கே கவ்வப்பட்டு மூடப்பட்டிருந்தது.



உள்ளடக்கம் ஏறத்தாழ ஒன்றுதான்.
அவசர உலகம் அல்லவா, கையால் எழுதி 50, 100 பேருக்கு அனுப்பsசொல்லுவதன் நேரவிரயத்தை அறிந்திருந்த உத்தமர்கள்.
நகலெடுத்து 30 பேருக்கு அனுப்பினால் போதும் என்று கருணையுள்ளத்துடன் எழுதியிருந்தார்கள். எங்களுக்கு அலுவலகப்பணி நிலைக்கவேண்டும், வாந்தி, பேதி, பீதி வராமல் நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும் என்று மிகுந்த அக்கறை கொண்டவர்கள் இவர்களைவிட வேறு யாராக இருக்க இயலும். (இந்த வேண்டுகோளைப் புறக்கணித்ததால், பிற்பகலிலேயே வீண்பழி சுமத்தப்பட்டு சிறைக்குச் சென்றவர், குடும்ப உறவுகள் சிதைக்கப்பட்டவர் பற்றிய சிறுகுறிப்பை கனிவோடு சேர்த்திருந்தனர்)
அனுப்புநர் அடுத்தவரை உற்சாகப்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டவர் என்பது கடிதத்தின் இறுதி பத்தியில் தெரிந்தது. உடனே செயலில் இறங்கிய ஒரு கனவான் லாட்டரி ஒன்றில் சில மில்லியன்கள் வென்ற நற்செய்தியை மறக்காமல் குறிப்பிட்டிருந்தார்.




இவ்வுலகத்தினர் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் உலக நன்மைக்காகவே இதை அனுப்புவதாகவும், தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்புமாறு தெரிவித்திருந்தார்.


நண்பர், உறவினர் போன்றோருக்குப் பண்டிகை நாள், பிறந்தநாள், மணநாள், இன்னும் பல சிறப்புடைய நாட்களில் வாழ்த்து அட்டைமட்டுமே அனுப்பவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களை உய்விப்பவர் வேண்டுமல்லவா.



இதை எண்ணி மகிழும்போதே இதனினும் குதூகலம் அளிக்கும் ஒன்றை நான் கவனிக்கத் தவறியதை அறிந்தேன்.


இரண்டிலுமே உள்ளூர் அஞ்சலுக்கு மட்டும் என்று எழுதப்பட்ட அஞ்சல்தலைகள் கவனமாக ஒட்டப்பட்டிருந்தன.


நல்லெண்ண விரும்பிகள் சிங்கப்பூரில் எனக்கு வாய்த்திருப்பதை எண்ணி பூரிப்படைந்தேன். மாசுகட்டுப்பாடு மீது உள்ள கரிசனம் காரணமாக தாளின் வெற்றுப்பகுதியை எழுத பயன்படுத்துகிறேன்.


நன்றி: சிங்கப்பூர் தமிழ்முரசு 2000 செப்டம்பர் 19



பின்குறிப்பு:
இக்கட்டுரையை எழுதி ஆண்டுகள் ஏழு ஆகியபின் ஒரு நன்னாளில் நண்பர் ஒருவர் மின்மடல் அனுப்பியிருந்தார். அவரது கைபேசியில் குறுந்தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறதாம். உள்ளடக்கம் மேற்குறிப்பிட்ட செய்திதான். 10 பேருக்கு குறுந்தகவல் அனுப்பச்சொல்லுகிறார்களாம்.

2 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் நினைவலைகளின் சேமிப்பு.
வீட்டுக்கு என்ன என்ன உபயோக பொருட்கள் தேவைப்படும் என்பதை சொல்லாமல் சொல்லிய சிறப்பு.
நான் தெரிந்துகொண்ட தமிழ் வார்த்தை பொரிம்பு.(Brand)
வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று சமச்சீர் அற்று கிடக்கும் தமிழகத்தில் நடுவண் தமிழகம் எந்த எந்த பகுதிகளை உள்ளடக்கியது.
நல்ல கடிதங்களையும் குப்பை தொட்டியில் போடுவதை தவிர்க்க, கடித பெட்டியில் உள்ளே தாழ்ப்பாள் ஒன்று உள்ளது. அதை போட்டு விட்டால் Unauthorised Ads -களை தடுக்கலாம். ஆனால் வீட்டு கேட்டில் சொருகி வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள்.
இது போன்ற கடிதங்கள், குறுந்தகவல், மின்னஞ்சல்கள் போன்றவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.
Have you received any mails, emails as below?
You are the winner $ 125670000. Please send me the personel details, Bank A/C No. to Credit and etc.

அன்புடன் ஜோதிபாரதி.

Mangai said...

post card, paper
எப்ப டி உபயோகிப்பது என்று சொல்லி விட்டீர்க.

இது போல் இப்போது e-mail வரும் விஷயங்களை என்ன செய்ய?

ரொம்ப easy யான விஷயம் தானே என்று to, cc என்று தெரிந்த பெயருக்கெல்லாம் பட்டென்று அனுப்பி விட்டு திரும்புவதற்குள் நமக்கே யார் மூலமவது திரும்பி வந்து நிற்கிறது.

நமக்கு அவங்கள தான் தெரியும் னு பார்த்தா அவங்களுக்கும் நம்மை தான் தெரியும் போல இருக்கு.
technology மாறினாலும் நாம் மாற மாட்டேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்ய?

ippo ellam SHIFT+DELETE than