Saturday, September 01, 2007

தேக்கா வெட்டவெளியில்

ஞாயிறு இரவுகளில்

விரவியிருக்கும்

வெளிநாட்டு ஊழியர்களின்

கனவுகளின் காலடித்தடம்.


விடுமுறையிலும் கூடுதல் பணி.


கடல்தாண்டி வந்த உடலைச்

சுமந்தபடி

தேங்கி நிற்கும்

குடும்பத்தின் குரல்களைக்

கேட்டவாறு அமரும்

புல்வெளியில்

நண்பர்களுடன்


ஓவர்ஸ்டே, வொர்க் பர்மிட்,

எஸ்பாஸ், சுய பாகம்,

முகவர் வாங்கிய முன் பணம்,

ஏமாந்து போன நண்பன்,

நெருங்கிய உறவின் மரணம்,

அக்காவின் திருமணம்,

மனைவியின் பிரசவம்,

குழந்தை இப்போது பேசுகிறதாம்,

எல்லாச் சொற்களும்

புல்வெளிதாண்டி

சாலைகளிலும்

நடக்கும்


எவ்வளவு பெரிய மழை

வந்தாலும்

கனவுத் தடங்களை மட்டும்

அவை

அழிப்பதேயில்லை


கனவுகளெல்லாம்

நனவாகட்டும்

என்ற நினைப்பில்

5 comments:

மஞ்சூர் ராசா said...

புலம் பெயர்ந்து அல்லது வெளிநாடுகளில் பணி செய்வோர் அனைவருக்கும் இது பொதுவானது.


அதிக நாள் தங்கல், வேலை அனுமதி, ஆமாம் சாமி

பாண்டித்துரை said...

////////எவ்வளவு பெரிய மழை
வந்தாலும்
கனவுத் தடங்களை மட்டும்
அவை
அழிப்பதேயில்லை//////////

கனவுகளெல்லாம்
நனவாகட்டும்
என்ற நினைப்பில்/////

நீங்களும் நினைப்பிலே என்று முடித்துவிட்டிங்க.
அவங்களும் அப்படித்தான்,
என்ன காலடித்தடங்கள் அதிகமாகி
ஒன்றுடன் ஒன்று மிதிபட்டு
எழ வழியின்றி மடிந்து விடுவதே
என்னை வருந்தச்செய்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்தியர்களை/தமிழர்களை தொட்டு நீங்கள் எழுதிய கவிதை எனது மனதை தொட்டது.

"சிரமங்களுக்கிடையில் சிந்தையெல்லாம் தனது சிங்கார குடும்பத்தை சிந்தித்து" என்று சொன்னால் அது மிகையாகது.

நன்றி,
அன்புடன்,
ஜோதிபாரதி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
சுட்டி இதோ!
http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_26.html

குடந்தை அன்புமணி said...

உறவுகளையும் தாண்டி, பணம் இங்கு பிரதானப்படுத்தப்படும்போது இத்தகைய இழப்புகளை நாம் சந்தித்துதானே ஆக வேண்டியிருக்கிறது. உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.